Showing posts with label கைந்நிலை. Show all posts
Showing posts with label கைந்நிலை. Show all posts

Monday, 27 March 2017

கைந்நிலை 58 59 60 Kainnilai 58 59 60

58.         
சுறாஎறி குப்பை சுழலும் கழியுள்
இறாஎறி ஓதம் அலற இரைக்கும்
உறாஅநீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்
பொறாஅவென் முன்கை வளை.
காமம் மிக்க கழிபடர் கிளவி
சுறா மீன் கூட்டம் சுழன்று திரியும் கழிமுகம் அது. அங்கு வீசும் அலை இறா மீன்களை அலறும்படித் தாக்கி வாரி விசிறும். அதன் தலைவன் சேர்ப்பன். அவன் என்னைப் பொருந்தி அணைக்கவில்லை. அணைப்பான் என்று நினைத்துக்கொண்டே இருந்ததால், என் முன்னங்கையில் வளையல்கள் நிற்கவில்லை. கழன்றோடுகின்றன.
                               
59.         
தாழை குருகீனும் தண்ணம் துறைவனை
மாழைமான் நோக்கின் மடமொழி 'நூழை
நுழையும் மடமகன் யார்கொல் என்றன்னை
புழையும் அடைத்தாள் கதவு.
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி படைத்து மொழிந்தது

தாழை மடலில் குருகுப் பறவை முட்டையிடும் குளுமையான துறை அது. அதன் தலைவன் என் துறைவன். அவன் என்னை நாடி என் இல்லத்துக்கே வந்துவிட்டான். அவளை யார் என்று கேட்டு என் தாய் தன் புழக்கடைக் கதவையும் அடைத்துவிட்டாள். “தங்க மான் போன்ற பார்வையால் ஒன்றும் அறியாதவள் போல் மடமொழி பேசுபவளே அவன் யார்” என்று கேட்டு அடைத்துவிட்டாள். | நூழை நுழையும் மடமகள் – போர்க்களத்தில் வீரன் போரிடும் முறைகளில் ஒன்று ‘நூழில்’. இது ‘நூழை’ எனவும் சொல்லப்படும். போர் வீரர்களைப் பந்தாடுவது நூழில் < > நூழை. அவளும் அவனும் கண்களால் பந்தாடிக்கொண்டனர் – நூழை ஆடிக்கொண்டனர்.
                               
60.         
பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி
தென்னவன் கொற்கைக் குருகிரிய மன்னரை
ஓடுபுறம் கண்ட ஒண்தாரான் தேரிதோ
கூடல் அணைய வரவு.
தோழி தலைவிக்குத் தலைவன் வரைவொடு புகுந்தமை சொல்லியது; வினை முற்றி மீண்ட தலைமகன் வரவு அறியச் சொல்லியதூஉம் ஆம்.

மேனியில் படர்ந்திருந்த பொன் போன்ற பசலை நோய் தீர்ந்துவிட்டது. பூங்கொடியே, இதனைக் கேள். தென்னவன் ஆளும் துறைமுகம் கொற்கை. மன்னர்கள் பலர் புறமுதுகு காட்டி ஓடுவதைத் தென்னவன் கண்டவன். அவன் துறையில் என் காதலன் துறைவனின் தேர் வருகிறது. குருகுப் பறவைகள் பறந்தோடும்படி வருகிறது. இதோ, கூடல் நகரம் போல் கூட்டமாகத் திருமணம் செய்துகொள்ள வருகிறான்.


நெய்தல்
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
மொத்தம் 60 வெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று


கைந்நிலை 55 56 57 Kainnilai 55 56 57

55.         
கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன்
நக்காங்கு அசதி நனியாடித் தக்க
பொருகயற் கண்ணினாய் புல்லான் விடினே
இருகையும் நில்லா வளை.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுப்புண்ட தலைமகள் சொல்லியது

அவன் சேர்ப்பன். கொக்குகள் வயிறார உண்ணும் வளைந்த கழிமுகம் ஒன்று கூடும் சேர்ப்பு நிலத்தின் தலைவன். அவன் என்னிடம் பொழுது போக்காக, இனிமையாக உரையாடினான்; அசதியாடினான். கயல் மீன்கள் போரிடுவது போன்று தக்கவாறு அமைந்துள்ள கண்ணினை உடையவளே, அவன் என்னைத் தழுவாமல் விட்டுவிட்டான். அதனால் என் இரண்டு கைகளிலும் வளையல்கள் நிற்கவில்லை. கழன்றோடுகின்றன. – தலைவி தோழியிடம் சொல்கிறாள்.  
                               
56.         
நுரைதரும் ஓதம் கடந்தெமர் தந்த
கருங்கரை வன்மீன் கவரும்புள் ஓப்பின்
புகரில்லேம் யாமிருப்பப் பூங்கழிச் சேர்ப்பன்
நுகர்வனன் உண்டான் நலம்.
[இதன் துறைக் குறிப்பு மறைந்து போயிற்று.]

தந்தையும், அண்ணன்மாரும் ஆகிய எம்மவர் நுரைத்து வரும் அலையைக் கடந்து சென்று கருமணல் கரைக்கு வலிமையான மீன்களைக் கொண்டுவந்தனர். காயவைத்திருக்கும் அந்த மீனைக் கவர வரும் பறவைகளை நான் ஓட்டிக்கொண்டு குற்றமற்றவளாக விளங்கினேன். சேர்ப்பன் அங்கு வந்தான். அவன் பூக்கள் நிறைந்த கழிமுகத்தின் சேர்ப்பு நிலத் தலைவன். என் பெண்மை நலம் எல்லாவற்றையும் சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டான். – தலைவி தோழியிடம் சொல்கிறாள்.
                               
57.         
கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடல் பெண்ணைத்
தடவுக் கிளைபயிரும் தண்கடல் சேர்ப்பன்
நிலவுக் கொடுங்கழி நீந்தும்நம் முன்றில்
புலவுத் திரைபொருத போழ்து.
இரவுக் குறி.......

அன்றில் பறவை தன் வளைந்த வாயால் கவ்விக்கொண்டு பெண் அன்றிலைப் புணரும். மட்டைகள் வெட்டிய பனைமரத்தில் இருந்துகொண்டு தன் பேடையைக் கூவி அழைக்கும். இப்படிப்பட்ட கடல் சார்ந்த சேர்ப்பு நிலம் அது. சேர்ப்பன் அதன் தலைவன். பிறை நிலாப் போல வளைந்தத கழிமுக முற்றத்தில் புலால் நாற்றம் அடிக்கும் கடலலை நிலத்தோடு போரிட்டுக்கொண்டிருந்தபோது என் பெண்மை நலத்தில் நீந்தினான். – தலைவி தோழியிடம் சொல்கிறாள்.  

நெய்தல்
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
மொத்தம் 60 வெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று


கைந்நிலை 52 53 54 Kainnilai 52 53 54

52.         
அன்னையும் இல்கடிந்தாள் யாங்கினியாம் என்செய்கம்
புன்னையங் கானலுள் புக்கிருந்தும் நின்னை
நினையான் துறந்த நெடுங்கழிச் சேர்ப்பற்
குரையேனோ பட்ட பழி

அன்னையும் இல்லத்தில் என்னைக் காவல் காக்கிறாள். இனி எங்கு என்ன செய்வோம்? இன்று புன்னை மரச் சோலைக்கு வந்திருக்கிறோம். இங்கும் அவன் உன்னை நினைக்காமல் விட்டுவிட்டான். இதனால் நேர்ந்த பழியைச் சேர்ப்பனிடம் சென்று சொல்லட்டுமா? அவன் நீண்ட கழிமுகச் சேர்ப்பு நிலத்தின் தலைவன். – தோழி தலைவியை வ்வினவுகிறாள்.
                               
53.         
அலவன் வழங்கும் அடும்பிவர் எக்கர்
நிலவு நெடுங்கானல் நீடார் துறந்தார்
புலவுமீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல் தோழி நமக்கு

அடும்புக் கொடி ஏறிப் படர்ந்திருக்கும் மணல் மேட்டில் நண்டு ஏறி மேய்கிறது. அது நிலா வெளிச்சம் போன்ற மணல்மேடு. இந்தத் துறையில் அவர் நீண்ட நேரம் தங்கவில்லை. உன்னை விட்டுவிட்டுப் போய்விட்டார். புலால் மீன் செல்வக் குவியல் கண்ணைக் கவரும் துறையின் தலைவன் அவன். அவன் நம்மோடு கலந்துகொள்ள மாட்டான் போல் தெரிகிறது, தோழி. – தோழி தலைவியிடம் தெரிவிக்கிறாள்.
                               
54.         
என்னையர் தந்த இறவுணங்கல் யாம்கடிந்து
புன்னையங் கானல் இருந்தேமா பொய்த்தெம்மைச்
சொன்னலம் கூறி நலனுண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம் காணுமாறு
காமம் மிக்க கழிபடர் கிளவி
என் தந்தையும் அண்ணனும் கொண்டுவந்த இறா மீனைப் பறவைகள் கவராவண்ணம் நாம் புன்னைமரக் கானலில் பாதுகாத்துக்கொண்டிருந்தோம். சேர்ப்பன் அங்கு வந்தான். பொய்யாக நல்ல நல்ல சொற்களைக் கூறினான். என் பெண்மை நலத்தை உண்டான். அவனை மீண்டும் நாம் எவ்வாறு காண்போம்? – தலைவி தோழோயை வினவுகிறாள்.  

[44 முதல் 53 வரை துறை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.]

நெய்தல்
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
மொத்தம் 60 வெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று


கைந்நிலை 49 50 51 Kainnilai 49 50 51

49.         
நாவாய் வழங்கு நளிதிரைத் தண்கடலுள்
ஓவா கலந்தார்க்கும் ஒல்லென் இறாக்குப்பை
பாவாரம் சேர்ப்பற் குரையாய் பரியாது
நோயால் நுணுகிய வாறு.

நாவாய்க் கப்பல்கள் வந்துபோகும் கடல். குளிர்ந்த அலை மோதும் குளுமையான கடல். இந்தக் கடலுக்குள் இறா மீன் கும்பல் ஓயாமல் கலந்து ‘ஒல்’ என ஒலிக்கும். நாவாயும் இறாமீனும் பாவிப் பங்குபோட்டுக்கொள்ளும் சேர்ப்பு நிலம் அது. அதன் தலைவன் உன் தலைவன். பாண, அவனுக்குச் சொல். “நீ பரிவிரக்கம் காட்டாததால் நோயால் மெலிந்துள்ளான்” என்று சொல் – தோழி பாணனிடம் சொல்கிறாள்.  
                               
50.         
நெடுங்கடல் தண்சேர்ப்ப நின்னோ டுரையேன்
ஒடுங்கு மடற்பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்
கடுஞ்சூளின் தான்கண்டு கானலுள் மேயும்
தடந்தாள் மடநாராய் கேள்.

நீண்ட கடலோரக் குளிர்ந்த சேர்ப்பு நிலத் தலைவனே, உன்னிடம் எதுவும் சொல்லமாட்டேன். பனைமரத்தில் ஒடுங்கிக்கொண்டிருக்கும் அன்றிலுக்கும் சொல்லமாட்டேன். கருவுற்றுக் கானலில் மேயும் அகன்ற காலடி கொண்ட பெண்-நாரையே, நீயே என் சேர்ப்பனுக்கு எடுத்துச் சொல். – தான் கருவுற்றிருப்பதைத் தலைவி தலைவனுக்கு இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்.  
                               
51.         
மணிநிற நெய்தல் மலர்புரையும் கண்ணாய்
அணிநலம் உண்டிறந்து ()ம்மருளா விட்ட
துணிமுந்நீர்ச் சேர்ப்பற்குத் தூதோடு வந்த
பணிமொழிப் புள்ளே பற.

நீலமணி நிறம் கொண்ட நெய்தல் போன்ற கண்ணை உடையவளே, என் அழகிய பெண்மை நலத்தை உண்ட பின்னர் எனக்கு அருள் செய்யாமல் விட்டுவிட்டுக் கடந்து சென்ற சேர்ப்பனுக்குச் சொல். மும்முனையாகத் துண்டுபட்டுக் கிடக்கும் முந்நீர்ச் சேர்ப்பனுக்குச் சொல். அவனுக்குத் தூதாக வந்து பணிவுடன் பேசும் பறவையே, எதுவும் சொல்ல வேண்டா. பறந்து போய்விடு. – தூதாக வந்த தோழியிடம் தலைவி சொல்கிறாள்.

[44 முதல் 53 வரை துறை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.]

நெய்தல்
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
மொத்தம் 60 வெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று


கைந்நிலை 46 47 48 Kainnilai 46 47 48

46.         
கயநீர்நாய் பாய்ந்தோடும் காஞ்சிநல் ஊரன்
நயமே பலசொல்லி நாணினன் போன்றான்
பயமில்யாழ்ப் பாண பழுதாய கூறாது
எழுநீபோ நீடாது மற்று.

குளத்தில் நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி மரங்கள் மிக்க ஊரின் தலைவன் அவன். நயமாகப் பலவற்றைச் சொல்லி தகாத செயலுக்கு நாணியவன் போலக் காணப்பட்டான். பயன்படாத யாழைக வைத்துக்கொண்டு திரியும் பாண, பழுதுபட்ட செய்திகளைக் கூறாமல் எழுந்து போய்விடு. காலம் தாழ்த்தாமல் எழுந்து போய்விடு.தலைவி சொல்கிறாள்.
                               
47.         
அரக்காம்பல் தாமரை அஞ்செங் கழுநீர்
ஒருக்கார்ந்த வல்லி ஒலித்தாரக் குத்தும்
செருக்கார் வளவயல் ஊரன்பொய் பாண
இருக்கவெம் இல்லுள் வரல்.

செவ்வாம்பல், தாமரை, செங்கழுநீர், அல்லி ஆகிய பூக்களைப் பறித்து எறியும் பெருமை உடைய வளமான வயல்களைக் கொண்டிருக்கும் ஊர்த்தலைவனின் பொய் பேசும் பாணனே, இருப்பதற்காக என் இல்லத்துக்குள் நுழைய வேண்டா. | ஒருக்கு ஆர்ந்த அல்லி – ஒருங்கு நிறைந்திருக்கும் அல்லி | ஒலித்து ஆரக் குத்தும் – செழிப்புடன் நிறைந்து குத்திக் கிடக்கும் | வளத்தால் வயலுக்குச் செருக்கு | வரல் – ‘அல்’ விகுதி பெற்ற எதிர்மறை வினைமுற்று.
                               
48.         
கொக்கார் வளவயல் ஊரன் குளிர்சாந்தம்
மிக்க வனமுலை புல்லான் பொலிவுடைத்தா
தக்கயாழ்ப் பாண தளர்முலையாய் மூத்தமைந்தார்
உத்தரம் வேண்டா வரல்.

கொக்குகள் நிறைந்த வளமான ஊரின் தலைவன் தன் குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பால் என் தலைவியின் அழகிய முலையைத் தழுவவில்லை. அழகியதும், தக்கதுமான யாழை வைத்துக்கொண்டுள்ள பாணனே, என் தலைவி தளர்ந்த முலையை உடையவளாக மூத்து அமைதியுடன் இருக்கிறாள். அவளிடம் ஒப்புதல் விடையை வேண்டி இங்கு வராதே. – தோழி கூறுகிறாள்.


[44 முதல் 53 வரை துறை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.]

மருதம்
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
மொத்தம் 60 வெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று


கைந்நிலை 43 44 45 Kainnilai 43 44 45

43.         
போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத்
தாதவிழ் கோதைத் தகையியலார் தாம்புலப்பர்
ஏதின்மை சொல்லி இருப்பர் பிறர்மகளிர்
பேதைமை தம்மேலே கொண்டு.

அவன் மொட்டு மலரும் தாமரைப் பூக்கள் நிறைந்த துறையை உடைய ஊரின் தலைவன். அவனை, மகரந்தம் சிந்தும் மாலை அணிந்த மகளிர் தனக்கு அளி செய்யவில்லை என்று புலவி கொள்வர். அவனோடு தனக்கு ஏதும் உறவு இல்லை என்று சொல்லிக்கொண்டு இருப்பர். மற்ற பெண்களின் பித்துக்கொள்ளித்தனத்தைத் தன் ஏற்றிக்கொண்டு பிதற்றுவர்.  
                               
44.         
தண்டுறை ஊரன் தடமென் பணைத்தோளாய்
வண்டூது கோதை வகைநாடிக் - கொண்டிருந்து
கோல வனமுலையும் புல்லினான் என்றெடுத்து
சாலவும் தூற்றும் அலர்.

“அகன்ற மென்மையான தோளை உடையவளே! அவன் குளிர்ந்த துறை கொண்ட ஊரின் தலைவன். வண்டு மொய்க்கும் மாலை சூடிக்கொண்டு வக்கணையாக என் அழகான முலையைத் தழுவினான்” என்று மற்றவரிடம் எடுத்துச் சொல்லி அவனை அலர் தூற்றுவர்.
                               
45.         
மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம்
கார்த்தண் கலிவயல் ஊரன் கடிதெமக்குப்
பாத்தில் பயமொழி பண்புபல கூறி
நீத்தல் அறிந்திலேம் இன்று.

பாண, கேள். இப்போது நான் அகவையில் மூத்தவள் ஆகிவிட்டேன். பண்டைய நாளில் நான் இளையவளாக இருந்தேன். அவன் கார்காலத்து நெல் செழித்து வளரும் ஊரன். அப்போது அவன் விரைந்து வந்து என் நலத்தைப் பகிர்ந்துகொண்டான். பயனுள்ள மொழிகளையும், பண்புமொழிகளையும் பலபட எடுத்துரைத்தான். அவன் என்னை விட்டுவிட்டுப் பரத்தையிடம் செல்வான் என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

[44 முதல் 53 வரை துறை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.]

மருதம்
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
மொத்தம் 60 வெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று


Sunday, 26 March 2017

கைந்நிலை 40 41 42 Kainnilai 40 41 42

தாரா | பாம்புக் கழுத்துத் தாரா | தாராப் பறவை
சிவகங்கை மாவட்டத்தில் காணப்படுபவை
40.         
தாரா இரியும் தகைவயல் ஊரனை
வாரான் எனினும் வருமென்று சேரி
புலப்படும் சொல்லுமிப் பூங்கொடி அன்னாள்
கலப்படும் கூடுங்கொல் மற்று
வாயில் வேண்டிய பாணற்குத் தோழி வாயில் மறுத்தது

தாராப் பறவை பறந்தோடும் அழகான வயல் கொண்ட ஊரை உடையவன் அவன். அவன் இப்போது வராவிட்டாலும் என் சேரிக்கு வருவான், புலப்படுவான் என்று ஒரு பூங்கொடி போன்ற பரத்தை சொல்கிறாள். அவன் அவளோடு கலந்திருந்தவன். கூடியிருக்க மாட்டானா?
                               
41.         
பொய்கைநல் ஊரன் திறங்கிளப்ப என்உடையை
அஃதன் றெனினும் அறிந்தேம் யாம்செய்தி
நெறியின் இனியசொல் நீர்வாய் மழலைச்
சிறுவன் எமக்குடைமை யால்.
வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது

பொய்கைகள் நிறைந்த ஊரின் தலைவன் அவன். அவன் திறப்பாடுகளைச் சொல்ல நீ என்ன வைத்திருக்கிறாய்? திறப்பாடுகள் ஒன்றும் இல்லை என்றாலும் எனக்குத் தெரியும்; செய்தியும் அறிவேன். பொய் சொல்லத் தெரியாத மழலை மொழி பேசுபவன் என் மகன் சிறுவன். என் மகன் எனக்குப் போதும்.  
                               
42.         
நீத்தநீர் ஊரன் நிலைமையும் வண்ணமும்
யார்க்குரைத்தி பாண அதனால்யாம் என்செய்தும்
கூத்தனாக் கொண்டு குறைநீ உடையையேல்
ஆட்டுவித்து உண்ணினும் உண்.
வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது

வெள்ள நீர் பாயும் ஊரின் தலைவன் அவன். அவன் நிலைமையும், செய்துகொண்டிருக்கும் செயல் வண்ணமும், பாண, நீ யாருக்குச் சொல்கிறாய்? உண்மையைச் சொன்னால் என்னால் என்ன செய்யமுடியும்? உனக்கு எதாவது குறை இருக்குமாயின் உன் தலைவனைக் கூத்தாடுபவனாக வைத்துக் கூத்தாடச் செய்து அதனால் வரும் வருவாயை உண்டு வேண்டுமானாலும் பிழைத்துக்கொள்.

மருதம்
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
மொத்தம் 60 வெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று


கைந்நிலை 37 38 39 Kainnilai 37 38 39

37.         
கழனி உழவர் கலியஞ்சி ஓடி
தழென மதஎருமை தண்கயம் பாயும்
பழன வயல்ஊரன் பாணஎம் முன்னர்
பொழெனப் பொய்கூறா தொழி.
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது

கழனியில் உழவுத்தொழில் செய்பவர்  எழுப்பும் ஒலியைக் கேட்டு மதம் கொண்ட எருமை ’தழ தழ’ என ஓடிக் குளிர்ந்த நீர்நிலையில் பாயும். இப்படிப் பாயும் பழமையான வயல்கள் நிறைந்த ஊர் அது. என் கணவன் அந்த ஊரன். பாண! அவன் பரத்தையிடம் வாழ்ந்ததை மறைத்து ‘பொழ பொழ’ என்று பொய் கூறுவதை விட்டுவிடு.  
                               
38.         
கயலினம் பாயும் கழனி நல்ஊர
நயமிலேம் எம்மனை இன்றொடு வாரல்
துயிலின் இளமுலையார் தோள்நயந்து வாழ்நின்
குயில்... ... ... கொண்டு.
பரத்தைமாட்டுப் பயின்று வரும் தலைமகனைப் புலந்து, தலைமகள் சொல்லியது
                               
கயல் மீன்கள் பாயும் கழனிவயல் கொண்ட ஊரனே! நான் பயன் இல்லாதவள். என் வீட்டுக்கு வருவதை இன்றோடு நிறுத்திக்கொள். நீ உறங்குவதற்கு இளமையான முலை கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தோளைத் தழுவிக்கொண்டு வாழ்ந்து தொலை.

39.         
முட்ட முதுநீர் அடைகரை மேய்ந்தெழுந்து
தொட்ட வரிவரால் பாயும் புனலூரன்
கட்டலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டெம்மில்
சுட்டி அலைய வரும்.
[இதன் துறைக்குறிப்பு மறைந்துபட்டது.]

பழமையான நீர் முட்டி மோதி அலையும் கரையோரம் மேய்ந்து காலைத் தொடும் வரால் மீன்கள் பாய்ந்தோடும் புனல் நிறைந்த ஊரின் தலைவன் அவன். பரத்தையுடன் வாழ்ந்த அவன் என் தலையில் பூ சூடியிருக்கும் என் மகனைத் தூக்குவது போல என்னைக் கட்டி அணைக்க வருகிறான்.

மருதம்
மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
மொத்தம் 60 வெண்பா
சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு நூல்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி