Showing posts with label குற்றாலக்குறவஞ்சி. Show all posts
Showing posts with label குற்றாலக்குறவஞ்சி. Show all posts

Saturday, 24 March 2018

குற்றாலக் குறவஞ்சி 90 Kutralakkuravanji 90

குற்றாலநாதர் கோயில்

வாழ்த்து

கொற்றமதிச் சடையானைக் குறும்பலா உடையானை
வெற்றி மழுப் படையானை விடையானை வாழ்த்துகிறேன். 1

பிறைநிலாச் சடையான்
குறும்பலா அடியில் இருப்பவன்
மழுப்படை உடையவன்
காளைமேல் வருபவன்
அவனை வாழ்த்துகிறேன்        

தாதையிலாத்திருமகனைத் தடமலைக்கு மருமகனை
வேதசங்க வீதியனை வேதியனை வாழ்த்துகிறேன். 2

பெற்றோர் இல்லாப் பிறப்பிலி
மேருமலையான் மருமகன்
வேதசங்கு ஒலிக்கும் வீதியன்
வேதமாக விளங்குபவன்
அவனை வாழ்த்துகிறேன்

தந்திமுகத் தொரு கோனைத் தமிழிலஞ்சி முருகோனை
மைந்தரெனும் இறை யோனை மறையோனை வாழ்த்துகிறேன். 3

ஆனை முகத்தவனையும் தமிழ்ப்பொய்கை முருகனையும் பெற்றவன்
அவனை வாழ்த்துகிறேன்

தீமுகத்திற் பறிகொடுத்த திருமுடிக்கா ஒருமுடியை
மாமனுக்கு வரிசையிட்ட மாமனை நான் வாழ்த்துகிறேன். 4

மாமன் தக்கன் தன் தலையைத் தீயில் இழந்தான்
அதற்காக மருமகன் சிவன் ஆட்டுதலையை அவனுக்குச் சீர்வரிசையாகக் கொடுத்தான்
அவனை வாழ்த்துகிறேன்

காமனுக்கும் பூமனுக்கும் கன்னி தெய்வ யானைக்கும்
மாமனென வேபகரும் வள்ளல்தனை வாழ்த்துகிறேன். 5

காமன், பிரமன், தெய்வயானை என்னும் பெண் ஆகியோருக்கு மாமன் எனப் பெயர் பெற்றவன்  
அவனை வாழ்த்துகிறேன்

நீடுலகெ லாமளந்த நெடியமாலும் அயனும்
தேடரிய திரிகூடச் செல்வனையான் வாழ்த்துகிறேன். 6

திருமாலும் பிரமனும் தேடமுடியாதவனை வாழ்த்துகிறேன்

சித்ரநதி இடத்தானைத் தேனருவித் தடத்தானைச்
சித்ரசபை நடத்தானைத் திடத்தானை வாழ்த்துகிறேன். 7

சித்திர நதிக்கரையில் இருப்பவன்
தேனருவி பாயும் குளக்கரையில் இருப்பவன்
சித்திர சபையில் ஆடுபவன்
அவனை வாழ்த்துகிறேன்

பனகவணி பூண்டவனைப் பத்தர்களை ஆண்டவனை
அனவரத தாண்டவனை ஆண்டவனை வாழ்த்துகிறேன். 8

பாம்பை அணிகலனாக அணிந்தவன்
பத்தர் பெருமக்களை ஆண்டவன்
எப்போதும் தாண்டவ நடனம் ஆடிக்கொண்டிருக்கும் ஆண்டவன்
அவனை வாழ்த்துகிறேன்

அரிகூட அயனாகி அரனாகி அகலாத
திரிகூடப் பரம்பரனைத் திகம்பரனை வாழ்த்துகிறேன். 9

அரி, அயன், அரன் மூவருமாக இருப்பவன்
உருவம் இல்லாதவனாக இருப்பவன்
அவனை வாழ்த்துகிறேன்

சிற்றாற்றங் கரையானைத் திரிகூட வரையானைக்
குற்றாலத் துறைவானைக் குருபரனை வாழ்த்துகிறேன். 10

சிற்றாறு – இதன் கரையில் இருப்பவன்
திரிகூட மலையில் இருப்பவன்
குற்றால அருவியில் இருப்பவன்
குருபரன்
அவனை வாழ்த்துகிறேன்

கடகரியை உரித்தவனை கலைமதியம் தரித்தவனை
வடவருவித் துறையவனை மறையவனை வாழ்த்துகிறேன். 11

மதயானையின் தோலை உரித்தவன்
மதியம் சூடியவன்
வடவருவித் துறையான்
மறையவன்
அவனை வாழ்த்துகிறேன்

ஆதிமறை சொன்னவனை அனைத்துயிர்க்கும் முன்னவனை
மாதுகுழல் வாய்மொழிசேர் மன்னவனை வாழ்த்துகிறேன். 12

முதல்-மறை சொன்னவன்
அனைத்து உயிரினங்களுக்கும் முன்னவன்
குழல்வாய்மொழி என்னும் கோதை சேர்ந்திருக்கும் கொற்றவன்அவனை வாழ்த்துகிறேன்

நூல்நிறை வாழ்த்து

வார்வாழும் தனத்திகுழல் வாய்மொழியம் பிகைவாழி! வதுவை சூட்டும்
தார்வாழி! திரிகூடத் தார்வாழி! குறுமுனிவன் தலைநாட் சொன்ன
பேர்வாழி! அரசர்கள்செங் கோல்வாழி! நன்னகர்ப் பேரால் ஓங்கும்
ஊர்வாழி! குற்றாலத் தலத்தடியார் வாழிநீ டூழி தானே!

அம்பிகை வாழி
அவள் மணமாலை வாழி
திரிகூட மலையான் மாலை வாழி
அகத்தியன் அவனுக்கு இட்ட குற்றாலநாதன் என்னும் பேர் வாழி
அரசன் செங்கோல் வாழி
அவன் கோயில் பெயரால் வழங்கும் ஊர் வாழி
குற்றாலத்தான் அடியவர்கள் வாழி
நீடூழி வாழி

முற்றும்


திருக்குற்றாலக் குறவஞ்சி (பகுதி - 4 சிங்கனும் சிங்கியும்)
இசைப்பாடல்களுடன் பாடப்பட்ட நாடகத் தமிழ் நூல்.
இதனைப் பாடியவர் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர்
இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டு.


குற்றாலக் குறவஞ்சி 89 Kutralakkuravanji 89


வாழ்த்து

சுற்றாத ஊர்தோறும் சுற்றவேண் டாம்புலவீர்
குற்றாலம் என்றொருகாற் கூறினால்வற்றா
வடவருவி யானே மறுபிறவிச் சேற்றில்
நடவருவி யானே நமை.

புலவர்களே
சுற்றாத ஊர்களிலெல்லாம் சுற்றித் திரியவேண்டாம்
குற்றாலம் ஒருமுறை சொன்னால் போதும்
குற்றால வட-அருவியான் மறுபிறவிச் சேற்றில் நடந்துவர நம்மை விடமாட்டான்.                                    

திருக்குற்றாலக் குறவஞ்சி (பகுதி - 4 சிங்கனும் சிங்கியும்)
இசைப்பாடல்களுடன் பாடப்பட்ட நாடகத் தமிழ் நூல்.
இதனைப் பாடியவர் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர்
இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டு.


குற்றாலக் குறவஞ்சி 88 Kutralakkuravanji 88


சிங்கன் சிங்கி உரையாடல் – தொடர்ச்சி

வள்ளிக் கொடியிலே துத்திப்பூப் பூப்பானேன் சிங்கி! காதில்
வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா! 1

வள்ளிக்கொடி போன்ற காதில் துத்திப் பூ பூப்பானேன் – சிங்கன்
கொப்பு – சிங்கி

கள்ளிப்பூப் பூத்தது அதிசயம் அல்லவோ சிங்கி தெற்கு
வள்ளியூ ரார்தந்த மாணிக்கத் தண் டொட்டி சிங்கா! 2

கள்ளிப்பூ அதிசயம் – சிங்கன்
மாணிக்கத் தண்டொட்டி – சிங்கி

வன்னக் குமிழிலே புன்னை அரும்பேது சிங்கி  மண்ணில்
முந்நீர்ச் சலாபத்து முத்துமூக்குத்திகாண் சிங்கா! 3

குமிழ் போன்ற மூக்கில் புன்னை அரும்பு – சிங்கன் வினா
மூக்குத்தி – சிங்கி விடை

சொருகி முடித்ததில் தூக்கணம் ஏதடி சிங்கி! தென்
குருகையூ ரார்தந்த குப்பியும் தொங்கலும் சிங்கா! 4

முடித்த கூந்தலில் தூக்கணங்குருவிக் கூடு?
குப்பி

பொன்னிட்ட மேலெல்லாம் மின்வெட்டிப் பார்ப்பானேன் சிங்கி! இந்த
வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா! 5

அணிகலனில் மின்னல்?
மாணிக்கக் கல்

இந்தப் பணியைநீ பூணப் பொறுக்குமோ சிங்கி! பூவில்
ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக் குங்காண் சிங்கா! 6

இந்த அணிகலன்களை நீ பூண ஊராருக்குப் பொறுக்குமோ?
ஈசர்க்கும் நல்லவர்களுக்கும் பொறுக்கும்

குன்றத்தைப் பார்த்தால் கொடியிடை தாங்குமோ சிங்கி! தன்
கொடிக்குச் சுரைக்காய் கனத்துக் கிடக்குமோ சிங்கா! 7

முலைக்குன்றுகளை கொடியிடை தாங்குமோ?
கொடிக்குச் சுரைக்காய் கணக்குமா?

இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி! நாட்டில்
நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா! 8

இவற்றையெல்லாம் எங்கே படித்தாய்?
நல்லாரைக் கண்டால் எல்லாம் வரும்

பெட்டகப் பாம்பைப் பிடித்தாட்ட வேண்டாமோ சிங்கி? இந்த
வெட்ட வெளியிலே கொடிப்பாம் பாடுமோ சிங்கா! 9

பெட்டிக்குள் இருக்கும் பாம்பை (அல்குல்) பிடித்து ஆட்ட வேண்டாமோ?
வெட்ட வெளியில் பாம்பு ஆடுமோ?

கட்டிக்கொண் டேசற்றே முத்தம் கொடுக்கவா சிங்கி! நடுப்
பட்டப் பகலில் நான் எட்டிக் கொடுப் பேனோ சிங்கா! 10

கட்டி முத்தம் கொடுக்கவா?
பட்டப்பகலில் எட்டிக் காட்டுவேனா?

முட்டப்ப டாமுலை யானையை முட்டவோ சிங்கி! காமம்
மட்டுப் படாவிடில் மண்ணோடே முட்டடா சிங்கா! 11

உன் யானையை முட்டட்டுமா?
காமம் குறையாவிட்டால் மண்ணில் முட்டு.

சேலை உடைதனைச் சற்றே நெகிழ்க்கவோ சிங்கி!சும்மா
நாலுபேர் முன்எனை நாணம் குலையாதே சிங்கா! 12

உன் சேலையை அவிழ்க்கட்டுமா?
நாலு பேர் முன் நாணப்பட வைக்காதே.

பாதம் வருடித் துடைகுத்த வேண்டாமோ சிங்கி? மனப்
போதம் வருடிப்போய்ப் பூனையைக் குத்தடா சிங்கா! 13

உன் பாதத்தை வருடித் துடையைக் குத்த வேண்டாமோ?
அறிவை வருடிக்கொண்டு பூனையைக் குத்து.

நாக்குத் துடிக்குதுன் நல்வாய் இதழுக்குச்  சிங்கி! என்றன்
வாய்க்கு ருசிப்பது மாலைக்கள் அல்லவோ சிங்கி! 14

உன் இதழைச் சுவைக்க என் நாக்கு துடிக்கிறது
வாய்க்கு ருசி தருவது மயக்கம் தரும் கள் அல்லவா

ஒக்கப் படுக்க ஒதுக்கிடம் பார்க்கவோ சிங்கி! பருங்
கொக்குப் படுக்கக் குறியிடம் பாரடா சிங்கா! 15

சேர்ந்து படுத்துக்கொள்ள குறியிடம் பார்க்கட்டுமா
கொக்கு பிடிக்க வழி பாரடா

விந்தைக் காரியுன்னை வெல்லக்கூடாதடி சிங்கி! அது
சந்தேக மோவுன் தலைப்பேனைக் கேளடா சிங்கா! 16

உன்னை வெல்ல முடியாதடி
அது சந்தேகமோ? உன் தலையிலுள்ள பேனைக் கேட்டுப்பார்

தென்னாடெல் லாமுன்னைத் தேடித் திரிந்தேனே சிங்கி! அப்பால்
இந்நாட்டில் வந்தென்னை எப்படி நீகண்டாய் சிங்கா? 17

தென்னாடு முழுவதும் உன்னைத் தேடித் திரிந்தேன்
பின்னர் இந்த நாட்டுக்கு வந்து என்னை எப்படிக் கண்டாய்

நன்னகர் குற்றால நாதரை வேண்டினேன் சிங்கி! மணிப்
பன்னகம் பூண்டாரைப் பாடிக்கொள் வோமடா சிங்கா! 18

குற்றாலநாதரை வேண்டினேன். கிடைத்துவிட்டாய்
நாகம் அணிந்தவரைப் பாடுவோம்

பாடிக்கொள் வாரெவர் ஆடிக்கொள் வாரெவர் சிங்கி! நீதான்
பாடிக்கொண் டாற்போதும் ஆடிக்கொள் வேனடா சிங்கா! 19

யார் பாடுவது? யார் ஆடுவது?
நீ பாடு. நான் ஆடுகிறேன்.

பார்க்கப் பொறுக்குமோ பாவியேன் ஆவிதான் சிங்கி! முன்னே
ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறார்களோ சிங்கா! 20

நீ ஆடுவதை நான் பார்த்துக்கொண்டே சும்மா இருக்கமுடியுமா
சோறு ஆக்குமவரைப் பொறுத்தவர் ஆறும்வரைப் பொறுக்கமாட்டாரோ

திருக்குற்றாலக் குறவஞ்சி (பகுதி - 4 சிங்கனும் சிங்கியும்)
இசைப்பாடல்களுடன் பாடப்பட்ட நாடகத் தமிழ் நூல்.
இதனைப் பாடியவர் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர்
இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டு.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி