Showing posts with label காளமேகப்புலவர். Show all posts
Showing posts with label காளமேகப்புலவர். Show all posts

Monday, 25 July 2016

இம் | காளமேகப்புலவர் KalamekapPulavar 159, 160

திருமலைராயரின் அரசவைப் புலவர் அதிமதுரக் கவிராயரின் பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடியது

பாடல்

அதிமதுரக் கவிராயர் பாடியது

மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோபேச்சென்ன
வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய
கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

மூச்சு விடும் முன்னே முந்நூறும், நானூறும், “ஆச்சு” என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? பேச்சு என்ன வெள்ளக் கவி காளமேகமே நின்னுடைய கள்ளக் கவிக் கடையைக் கட்டு .(159)

காளமேகம் பாடியது

இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்
அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோசும்மா
இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்
பெருங்காள மேகம் பிளாய் . (160)

“இம்” என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் “அம்” என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? சும்மா இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆயின் பெரும் காளமேகம் (கரிய மழைமேகம்) பிளாய் . (59)

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

வீமன் | காளமேகப்புலவர் KalamekapPulavar 158

(என்னைக் காப்பாற்றிவரும்) திருமலைராயன் வீமன் போல வலிமை மிக்கவன். அவன் புகழ் எங்கும் பொங்கி வழிகிறது. அதனைப் பார்த்த பிரமன் தன் இருக்கை தாமரையை விட்டுவிட்டு ஓடிச் சத்திய லோகத்தில் புகுந்துகொண்டான். கையில் சக்கரத்தை உடைய திருமால் பூமியிஇருந்து வானம் தொடும்படி வளர்ந்தான். சிவன் கயிலை மலையில் அமர்ந்து நிலாவைச் சூடிக்கொண்டான். தன் தண்டாயுதத்தால் கடலின் ஆழத்தைப் பார்த்தான்.

பாடல்

வீமனென வலிமிகுந்த திருமலை ராயன்கீர்த்தி வெள்ளம்பொங்கத்
தாமரையி னயனோடிச் சத்திய லோகம் புகுந்தான் சங்கபாணி
பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான் சிவன் கயிலைப்பொருப்பில்
சோமனையுந் தலைக்கணிந்து வடவரைத் தண் டாலாழஞ் சோதித்தானே .(158)

வீமன் என வலி மிகுந்த திருமலைராயன் கீர்த்தி வெள்ளம் பொங்கத் தாமரையின் அயன் ஓடிச் சத்திய லோகம் புகுந்தான் சங்க பாணி பூமி தொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான் சிவன் கயிலைப் பொருப்பில் சோமனையும் தலைக்கு அணிந்து வடவரைத் தண்டால் ஆழம் சோதித்தானே .(158)

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

Sunday, 24 July 2016

பாளை | காளமேகப்புலவர் KalamekapPulavar 157

சாமி தூக்கல்
கயிற்றாறு (கயத்தாறு) என்னும் ஊரிலுள்ள பெருமாளே! பழிகாரா! இது என்ன வேளை என்றால் 16 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. உன்னைச் சுமந்து என் தோளும் முறிந்தது. உன்னை நம்பியவனைக் கூடச் சுமக்கச் செய்தாய். நாளைக்கு உன்னை யார் சும்பபார்? எந்த நாளும் உன் கோயில் நாசமாகப் போகட்டும்.

பாடல்

பாளைமணங் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாராகேள்
வேளையென்றா லிவ்வேளைபதி னாறுநாழிகைக்கு மேலாயிற்றென்
தோளைமுறித் ததுமன்றிநம்பி யானையுங்கூடச் சுமக்கச்செய்தாய்
நாளையினி யார்சுமப்பா ரென்னாளுமுன் கோயினாசந்தானே .(157)

பாளை மணம் கமழுகின்ற கயிற்றாறுப் பெருமாளே பழிகாரா கேள் | வேளை யென்றால் இவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேல் ஆயிற்று என் தோளை முறித்ததும் அன்றி நம்பியானையும் கூடச் சுமக்கச் செய்தாய் நாளை இனி யார் சுமப்பார்  என்னாளும் உன் கோயில் நாசந்தானே .(157)

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

கம்பமத | காளமேகப்புலவர் KalamekapPulavar 156

அன்னத்தின் மேல் பிரமன்
தில்லையில் குடிகொண்டுள்ள கணபதி தள்ளாடி நடக்கும் ஆண்யானை. மதம் கன்னத்தில் ஒழுகும் யானை. அவன் பெரு வயிற்றைக் கண்டு தங்களுக்கு இல்லையே என்று யார் யார் என்ன ஆனார்கள். புலவர் கூறுகிறார். இயல்பாக அவர்களுக்கு இருக்கும் பண்புகளைக் கணபதியைக் கண்டதால் நிகழ்ந்ததாகக் கூறுவது புலவர் கற்பனை. 
 • வானவர்கள் எல்லாம் விழித்துக்கொண்டே இருக்கிறார்கள். 
 • கையில் வேலை உடைய ஆறுமுகன் கண் 12 உடையவன் ஆனான். 
 • பரந்து பாயும் மூன்றாவது கண்ணை உடைய சிவன் நஞ்சை உண்டான். 
 • திருமால் பயந்துபோனான். 
 • உமையம்மை பாதி உடலாகி நிற்கின்றாள். 
 • அழகிய உலகைப் படைப்பதே அவம் என்று பிரமனும் அன்னப்பறவையை விட்டு இறங்காமல் அலைகின்றான்.

பாடல்

கம்பமதக் கடகளிற்றான் தில்லைவாழும் கணபதிதன் பெருவயிற்றைக் கண்டுவாடி
உம்பரெலாம் விழித்திருந்தா ரயில்வேற் செங்கை உடையவறு முகவனுங் கண்ணீ ராறானான்
பம்புசுடர்க் கண்ணனுமோநஞ் சுண்டான்மால் பயமடைந்தா னுமையுமுடல் பாதியானாள்
அம்புவியைப் படைத்திடுவ தவமதேயென் றயனுமன்ன மிறங்காம லலைகின்றானே .(156)

சொல்லோட்டம்

கம்ப மதக் கட களிற்றான் தில்லை வாழும் கணபதி தன் பெருவயிற்றைக் கண்டு வாடி
உம்பர் எலாம் விழித்திருந்தார் அயில் வேல் செங்கை உடைய அறுமுகவனும் கண் ஈ ர் ஆறு ஆனான்
பம்பு சுடர்க் கண்ணனுமோ நஞ்சு உண்டான் மால் பயம் அடைந்தான் உமையும் உடல் பாதி ஆனாள்
அம் புவியைப் படைத்திடுவது அவமதே என்று அயனும் அன்னம் இறங்காமல் அலைகின்றானே .(156)

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

பரவாத | காளமேகப்புலவர் KalamekapPulavar 155

ஆனைமுகன்
தும்பி, கரி, தந்தி, மாதங்கம், இந்து, சிந்துரம், களபம், ஆம்பல், வலஞ்சுழி ஆகிய சொற்கள் யானையையும், ஆனைமுகக் கடவுளையும் குறிக்கும். இதனைப் புலவர் இப்படித் தெளிவுபடுத்துகிறார்.

 • தும்பி பறக்கும். இந்தத் தும்பி பறக்காது | பறவாத தும்பி
 • கரி என்பது சான்று. இந்தக் கரி கருதாத ஒன்று | (வெம் = கொடிய) கருகாத வெங்கரி
 • தந்தி என்பது யாழ் நரம்பு. இதில் பண் புரண்டு இருகும். யானையாகிய தந்தியில் பண் புரண்டு இருகாது | பண் புரண்டே இருகாத தந்தி
 • பெரிய தங்கம் உருகும். இந்த மாதங்கம் உருகாது | உருகாத மாதங்கம்
 • இந்து என்பது நிலா. இது நிலா அன்று | இந்து
 • சிந்துரமாகிய குங்குமம் நெற்றியில் நிறக்கும். யானையாகிய சிந்துரம் நெற்றியில் நிறக்காது | நுதல் நிறவாத சிந்துரம்
 • களபம் என்பது சந்தனம். இது பூசாத களபம் | பூசாக் களபம் 
 • ஆம்பல் சுனையில் பூக்கும். ஆம்பலாகிய யானை சுனையில் பிறக்காது | நெடும் சுனையில் பிறவாத ஆம்பல்
வலஞ்சுழி என்பது சிவபெருமானை வலம்வந்த யானை | வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே(155)

பாடல்

பறவாத தும்பி கருகாத வெங்கரி பண்புரண்டே
இருகாத தந்தி யுருகாத மாதங்கம் இந்துநுதல்
நிறவாத சிந்துரம் பூசாக் களப நெடுஞ்சுனையிற்
பிறவாத வாம்பல் வலஞ்சுழிக் கேவரப் பெற்றனனே(155)

பறவாத தும்பி கருகாத வெங்கரி பண் புரண்டே இருகாத தந்தி உருகாத மாதங்கம் இந்து நுதல் நிறவாத சிந்துரம் பூசாக் களபம் நெடும் சுனையில் பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே(155)

இது கட்டளைக் கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில் தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும் குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில் தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர் கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள் ‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

ஆராயும் | காளமேகப்புலவர் KalamekapPulavar 154

காதல் படுத்திய பாடு | ஆராயும் முத்தமிழ் ஓர் ஆறு. அந்த ஆற்றூரில் இருப்பவள் சோமி. அவளது அழகைக் கண்டு நாராயணன் நீண்ட காதல் மயக்கத்தவன் ஆனான். மற்றைய நான்முகனாகிய பிரம்மாவும் அவளை அடையும்பொருட்டு மடலூரும் மரபினைப் பின்பற்றினான். விண்ணாக இருக்கும் மன்மதனும் தன் உருவத்தை இழந்தான். வானவர் தலைவனான இந்திரன் ஆயிரம் கண் படைத்தவன் ஆனான். (சோமி = அழகி)

பாடல்
ஆராயு முத்தமி ழாற்றூரிற் சோமி யழகுகண்டு
நாரா யணனெடு மாலாகி னான்மற்றை நான்முகனும்
ஓரா யிரமட லூர்ந்தான் விண்மார னுருவழிந்தான்
பேரான வானவர் கோனுங்கண் ணாயிரம் பெற்றனனே .(154)

ஆராயும் முத்தமிழ் ஆற்றூரில் சோமி அழகு கண்டு நாராயணன் நெடு மாலாகினான் மற்றை நான்முகனும் ஓராயிரம் மடலூர்ந்தான் விண் மாரன் உரு அழிந்தான் பேரான வானவர் கோனும் கண் ஆயிரம் பெற்றனனே .(154)

இது கட்டளைக் கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில் தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும் குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில் தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர் கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள் ‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

இருந்தாரை | காளமேகப்புலவர் KalamekapPulavar 153

தலைவன் தன்னிடம் இல்லாதபோது நிலா தீயைப் போல் புறப்பட்டு வந்து காய்கிறதே என்று சொல்லித் தலைவி வருந்துகிறாள்.
சிவபெருமான் பெரிய தாரையாகக் கொட்டும் கங்கையின் கணவன். படமெடுத்துக்கொண்டு ஓங்கும் பாம்பு, ஏழு கடல், பகைவர், தீ, ஆகியவற்றை முன்பு அழித்தவன். முருகனைத் தரும் தந்தையாகிய நாயகன். சுந்தரமூர்த்தி நாயனாரின் தூதன். போரில் அன்று பகைவர் மூவரின் முப்புரத்தில் தீயை இட்டவன். அவன் இட்ட தீ போல மதியம் புறப்பட்டு என்னைக் காய்கிறதே!

பாடல்

இருந்தாரை கேள்வனையோங் குமராவை யெழுபுனலைத்
திருந்தாரை வன்னியைமுன் மடித்தோன்செய்ய வேளைப்பண்டு
தருந்தாதை நாயகன் சுந்தரன்தூதன் சமரிலன்று
பொருந்தார்புரத் திட்டதீப்போன் மதியம் புறப்பட்டதே .(153)

இருந்தாரை கேள்வனை ஓங்கும் அராவை எழு புனலைத் திருந்தாரை வன்னியை முன் மடித்தோன் செய்ய வேளைப் பண்டு தரும் தாதை நாயகன் சுந்தரன் தூதன் சமரில் அன்று பொருந்தார் புரத்து இட்ட தீப்போல் மதியம் புறப்பட்டதே .(153)

இது கட்டளைக் கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில் தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும் குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில் தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர் கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள் ‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

Blog Archive

எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி