Showing posts with label கம்பராமாயணம் - படலம். Show all posts
Showing posts with label கம்பராமாயணம் - படலம். Show all posts

Monday, 25 May 2020

கம்பராமாயணம் - அலசல் KambaRamayanam, a study

கம்பராமாயணம் படிப்பதற்குப் பொறுமை வேண்டும்
காரணம், கதை விறுவிறுப்பாக ஓடாது
மேலும் கேள்விப்பட்ட கதை

கம்பராமாயணப் பாடல்களைப் பள்ளியில் படித்தேன்
அதன் சுவை என்னை ஈர்த்தது.

கம்பராமாயணம்

இரு ஒரு பூந்தோட்டம்
ஏறத்தாழ 22,000 தமிழ் மலர்கள் அதில் பூத்துக் கிடக்கின்றன
ஒவ்வொரு மலரின் தேனையும் சுவைத்தேன்
முழுமையாகப் படித்தேன்
எடுத்துக் கூடு கட்டி வைத்திருக்கிறேன்
யார் வேண்டுமானாலும் தேனை எடுத்துக்கொள்ளலாம்

கதை என்று படிக்கலாம்
கடவுள் என்று படிக்கலாம்
தமிழ் என்று படிக்கலாம்

இன உணர்வோடும் படிக்கலாம்
தமிழ்ப் பண்பாட்டு ஊற்றுக்களைப் பருகலாம்

சொன்ன கருத்தே திரும்பத் திரும்ப வரும்
அங்கும் சொற்சுவை மாறுபட்டிருக்கும்

பலவாகப் பெருக்கும் பாடல்கள் பல.
சிலவாகச் சுருக்கும் சொற்கட்டுகள் சில.

அடியேன் தமிழ் என்று படித்தேன்.
என்னைப் போல் பலர் படித்திருக்கலாம்.
தமிழ் என்று படித்த ஓர் அறிஞர் மிகவும் மிகவும் துணிச்சல்காரர்.
மிகைப்பாடல்கள் என்று சிலவற்றைப் பிரித்துக் காட்டியுள்ளார்.
அந்தப் பாடல்கள் சொன்னதையே சொல்லும் பாடல்களாகவோ, வேண்டாத பாடல்களாகவோ, கம்பன் தமிழ்நடை இல்லாமல் இடைக்காலத்தில் செருகப்பட்டவையாக இருப்பதை அடியேனும் கண்டு, பிரித்துக் காட்டிய பெருமகனாரை வணங்குகிறேன்
தேனில் வெல்லப்பாகைக் கலப்பது போல் மிகைப்பாடல்கள் கலக்கப்பட்டுள்ளன. மேலும் சில பாடல்கள் வெல்லப்பாகு என்பது அடியேன் கருத்து.

இராமன் பண்பால் மனிதன்.
ஆரிய இனத்தவன் என்றும் 
செயலால் கடவுள் என்றும் காட்டப்பட்டுள்ளான் 

அடியேன் உள்ளத்தில் பதிந்திருப்பது கம்பன் தமிழே.

வாழிய நலனே    

கம்பராமாயணம் திருமுடி சூட்டு படலம் - KambaRamayanam 6-42 Link

Sunday, 24 May 2020

கம்பராமாயணம் 41. மீட்சிப் படலம் - KambaRamayanam 6-41 Link

10 --- புட்பக விமானத்தில்
20 --- அனைவரும் விமானத்தில்
30 --- கிட்கிந்தை மகளிருடன்
40 --- பரத்துவாசன்
50 --- அயோத்தி நிகழ்வு
60 --- பரதன் கவலை
70 --- தீ
80 --- பரதன் தீயில் இறங்க முனைதல்
90 --- அடையாள மோதிரம்
100 --- அனுமன் பேருரு
110 --- இராமனும் பரதனும்
119 --- மகிழ்வு
மிகைப்பாடல்கள் 
1 --- விமானம் கொள்ளும் இடம்
2 --- வசந்தன் உயிர்வரு படலம்
3 --- வசந்தன் வரலாறு - வேறு வகை
4 --- திரிசடை
5 --- யமன்
6 --- மானுட வடிவம்
7 --- எந்த வாயிலில் என்ன நிகழ்ந்தது
8 --- பாவிகள்
9 --- பாவிக் - 2
10 --- இராமேசுரம் சிவன் கோயில்
11 --- மணல் லிங்கம்
12 --- நடுவில் காசி பன்முக லிங்கம்
13 --- இராமேசுவரம் - பெயர்
14 --- தாரையைத் தழுவியது
15 --- இடம் இடமாகக் காட்டியது
16 --- பரத்துவன்
17 --- போரில் வென்றதன் திறன்
18 --- விருந்து 1
19 --- விருந்து 2
20 --- குகன்
21 --- விருந்து 3
22 --- பரதன்
23 --- விருந்தோடு 
24 --- இராமனுக்கு வரவேற்பு
25 --- நிகழ்வு கூறியது 1
26 --- நிகழ்வு கூறியது 2
27 --- நிழ்வு கூறியது 3
28 --- பரதன் துடிப்பு
29 --- இராமன் வந்தான் 
30 --- முறைப்படி வணங்கல்
31 --- அயோத்தியரும் விமானத்தில்
32 --- மயிர் ஒப்பனை

6 யுத்த காண்டம் 
41. மீட்சிப் படலம்

Monday, 18 May 2020

கம்பராமாயணம் வீடணன் முடி சூட்டு படலம் - KambaRamayanam 6-39

இராமன் தம்பியிடம் கூறினான் 1
சுக்கிரீவன் அனுமன் ஆகியோரையும் உடன் அனுப்பிவைத்தான்
வீடணனுக்கு விதிப்படி முடி சூட்டுக - என்றான் 2
தேவர்களும் அவர்களுடன் சென்றனர் 3

கடல் நீர், தோயம், அரச முடி, அரியணை ஆகியவற்றைத் தேவர்கள் தந்தனர் 4
பிரமன், சிவன் போன்றோரும் மண்டபம் இயற்றினர் 5
வேத விதிமுறையில் இலக்குவன் முடி சூட்டினான் 6
வீடணன் தம்மவரோடு அரியணையில் வீற்றிருந்தான் 7
தேவர், சித்தர், மூவர், முனிவர் - வாழ்த்தினர் 8
வீடணன் அனைவரையும் வணங்கி மரியாதை செய்தான் 9
"இலங்கையைக் காப்பாற்று" என்று இலக்குவன் கூறினான் 10

அனைவரும் இராமனை வணங்கினர் 11
மூவுலகும் தொழ, தேவரின் பெருமை, நீதி, அறத்தின் வழி ஆளுதி - என்று இராமன் வாழ்த்தினான் 12
மற்றும் நீதிகள் பலவற்றைக் கூறினான் 13

மிகைப் பாடல்கள்

மங்கலப் பொருள்களை அனுமன் கொண்டுவந்தான் 4-1
மணிமண்டபம் மணிப்பீடத்தில் முடிசூட்டுவிழா 5-1
நாரதன் முதலானோர் நான்மறை ஓதினர் 5-2
தேவர்கள் வீடணனை நீராட்டினர் 5-3
வேத ஒலி, துந்துமி முழக்கத்துடன் முடிசூட்டு விழா 6-1
முடி சூடிய வீடணன் இராமனைப் பணிந்தான். இராமன் வீடணனை அணைத்துக்கொண்டான் 10-1
நீதியுடன் நடந்துகொள் - என்றான் இராமன் 11-1

"துயர் நீங்கிற்று" என்று சீதையிடம் சொல்லுமாறு அனுமனிடம் இராமன் கூறினான் 13-1

பாடல் 

'வருந்தல், நீதி மனு நெறி யாவையும்
பொருந்து கேள்விப் புலமையினோய்!' எனா,
அருந் தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து,
இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்: 1

'சோதியான் மகன், வாயுவின் தோன்றல், மற்று
ஏது இல் வானர வீரரொடு ஏகி, நீ
ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்.' 2

என்று கூறி, இளவலோடு ஆரையும்
வென்றி வீரன் விடை அருள் வேலையில்,
நின்ற தேவர் நெடுந் திசையோரொடும்
சென்று, தம் தம செய்கை புரிந்தனர். 3

சூழ் கடல் புனலும், பல் தோயமும்,
நீள் முடித் தொகையும், பிற நீர்மையும்,
பாழி துற்று அரி பற்றிய பீடமும்,
தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். 4

வாச நாள் மலரோன் சொல, மான்முகன்
காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு
ஈசனே முதலோர் வியந்து ஏத்திட,
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன். 5

மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர்
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட,
ஐயன் ஆணையினால், இளங் கோளரி
கையினால் மகுடம் கவித்தான் அரோ. 6

கரிய குன்று கதிரினைச் சூடி ஓர்
எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே,
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு
அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. 7

தேவர் பூமழை, சித்தர் முதலினோர்
மேவு காதல் விரை மலர், வேறு இலா
மூவரோடு, முனிவர், மற்று யாவரும்,
நாவில் ஆசி நறை மலர், தூவினார். 8

முடி புனைந்த நிருதர் முதலவன்
அடி வணங்கி இளவலை, ஆண்டை அந்
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து,
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினா: 9

'விலங்கள் நாண மிடைதரு தோளினாய்!
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ
கலங்கலா நெடுங் காவல் இயற்று' எனா,
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான். 10

குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி,
அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும்,
பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத்
திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்: 11

'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம்
பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது,
இருமையே அரசாளுதி, ஈறு இலாத்
தரும சீல!' என்றான் - மறை தந்துளான். 12

பன்னும் நீதிகள் பல் பல கூறி, 'மற்று
உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்!
மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி,
தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான். 13

மிகைப் பாடல்கள்

மாருதிச் செல, மங்கலம் யாவையும்
மாருதிப் பெயர்கொண்டு உடன் வந்தனன்;
வீர விற் கை இளவல் அவ் வீடணன்
வீரபட்டம் என, நுதல் வீக்கினான். 4-1

செய்த மா மணி மண்டபத்தே செழுந்
துய்ய நல் மணிப் பீடமும் தோற்றுவித்து,
எய்து வானவ......................................கம்மி......
.................................................................... 5-1

மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில்
கூவி, ஓம விதிமுறை கொண்டிட,
தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே, 5-2

பொய்யினுக்கு ஒரு வெ..........................
..............................................................
உய் திறத்தினுக்கே உவந்து உம்பர்கள்
கையினின் கலசப் புனல் ஆட்டினார். 5-3

வேத ஓசை விழா ஒலி மேலிட,
நாத துந்துமி எங்கும் நடித்திட,
வேத பாரகர் ஆசி விளம்பிட,
ஆதி தேவர் அலர் மழை ஆர்த்திட, 6-1

வீர மா முடி சூடிய வீடணன்
வீர ராகவன் தாள் இணை மேவிட,
ஆர மார்பொடு அழுந்திடப் புல்லினான்,
ஆரினானும் அறிவரும் ஆதியான். 10-1

'ஆதி நாளில், "அருள் முடி நின்னது" என்று
ஓதினேன்; அவை உற்றுளது; உத்தம!
வேத பாரகம் வேறுளர் யாவரும்
ஓதும் நீதி ஒழுக்கின் ஒழுக்குவாய். 11-1

'"வஞ்சகக் கொடியான் முனம் வவ்விட,
பஞ்சரக் கிளி என்னப் பதைப்பவள்,
நெஞ்சினில் துயர் நீக்கியது" என்று, நீ
அஞ்சனைப் புதல்வா! அருள்வாய்' என்றான். 13-1


6 யுத்த காண்டம் 
39. வீடணன் முடி சூட்டு படலம்

கம்பராமாயணம் மண்டோதரி புலம்புறு படலம் - KambaRamayanam 6-38

இராமன்

இராவணன் வீழ்ந்த பின்னர் இராமன் முன்பு தன்னிடம் வந்து வாழ்த்திய தேவர்களைக் காணச் சென்றான்.

வீடணன்

வீடணன் அண்ணன் உடலிடம் சென்றான் 1
இராவணனுக்கு இறுதிக்ககடன் செய்யுமாறு இராமன் கூறியதை நினைவில் கொண்டான்.

மலைமேல் மலை விழுந்து போல் அண்ணன் மேல் விழுந்தான் 2
தேவர்களும் இரக்கம் கொள்ளுமாறு அரற்றினான் 3

அண்ணாவோ! அண்ணாவோ!
சீதையை மனத்தில் கொண்ட நஞ்சால் மாண்டாயே 4
மற்றொருவன் மனைவியை விரும்புவது பழி - என்றேன். அதனை நினைத்தாயோ 5
இராமன் தோளாற்றலை இன்று உணர்ந்துகொண்டாயோ 6
சிவன், பிரமன் படைகள் பொடியானபோது இராமன் யாவர்க்கும் இறைவன் என்பதை உணர்ந்ததாயோ 7

உன் உயிரை அஞ்சாமல் கொண்டு சென்றது ஆர், அண்ணா 8
மைத்துனனை (சூர்ப்பணகை கணவனை) நீ கொன்றாய் என்று, அவள் உன்னைக் கொன்று பழி தீர்த்துக் கொண்டாளோ 9

சீதையைத் தழுவ உயிர் கொடுத்துப் பழி கொண்ட பித்தா! பார்மகளைத் தழுவினாயோ 10

விதியை மாற்ற முடியுமா - என்று கூறி, கரடி அரசன் சாம்பன் வீடணனைத் தேற்றினான் 11

மண்டோதரி

அரக்கியர் அரற்றுவதனால் கணவன் மாண்டதை அவன் மனைவி மண்டோதரி உணர்ந்துகொண்டாள். அவள் தன் கணவனை நினைத்தோ, மறந்தோ அறியாதவள் 12
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு வாழ்பவள் அவள் 13

அரக்கியர்

அரக்கியர் தம் சிலம்பு அழும்படி விண் வழியில் சென்றனர் 14
கண்ணீர் மல்க வான்வழி வந்தனர் 15
தலையில் அடித்துக்கொண்டு வந்தனர் 16
அழுதிலர், உயிர்த்திலர், ஆவி நீத்திலராய் இராவணன் தலை, கால்களில் விழுந்தனர் 17
ஒருவர் மேல் ஒருவராக அவன் தோள்களில் விழுந்து அழுதனர் 18
இயக்கியர், அரக்கியர், உரகர்-ஏழையர், சித்தியர், விஞ்சை-மங்கையர் தழுவி அழுதனர் 19
எனக்கு உன் வாய்மலரைத் தரவில்லையே! சீதையை இன்னும் மறக்கவில்லையா  என்றனர் 20

மண்டோதரி அரற்றல்

இராவணன் மனைவி மண்டோதரி மலைகளும் மரங்களும் உருகுமாறு அரற்றுகிறாள் 21

'அன்னேயோ! அன்னேயோ! உன் முடித்தலை படித்தலை ஆனது என்னேயோ, என்னேயோ 22

சிவன் மலையைத் தூக்கிய உன்  திருமேனியில், சீதையை மறைத்து வைத்திருக்கும் காதல் எங்கேனும் உள்ளே இருக்குமோ என்று, இராமன் அம்பு உள்ளே புகுந்து  எள்ளளவும் இடமில்லாமல், தேடியதோ 23

ஓர் அம்போ உன் உயிரைப் பருகிற்று 24
சீதை அழகு, அவள் கற்பு, இராவணன் காதல், சூர்ப்பணகை இழந்த மூக்கு, தசரதன் பணியால் காட்டுக்கு வந்தது - பெருந்தவமாக மாறிவிட்டதே 25

யாவர்க்கும் வலியானுக்கு இறுதி உண்டோ என்று எண்ணி ஏமாப்பு கொண்டிருந்தேன். மானுடவன் ஒருவன் வலிமை உள்ளவன் என்று கருதவில்லையே 26

3 கோடி ஆண்டுகள் ஆயுள் பெற்றவனுக்கு அழிவு இல்லை என்று எண்ணியிருந்தேன். சீதை என்னும் பிரை பட்டு பாற்கடல் அழியும் என்று எண்ணவில்லையே 27
மாரன் விளையாடும் இலங்கையை மனிதன் அழித்தானே 28

என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இராவணன் உடலைத் தழுவியவண்ணம் அரற்றியவன் உயிர் நீங்கிவிட்டது 29

எல்லா மங்கையரும் கற்புடை மங்கையரும் மண்டோதரியை வாழ்த்தினர் 30

வீடணன்

வீடணன் மறை விதிப்படி அண்ணன் உடலுக்குத் தீ மூட்டினான் 31
கணவனை எண்ணி மாண்டவளையும் சேர்த்துத் தீ மூட்டினான் 32
மற்றவர்க்கு ஈமக் கடன் செய்த பின் இராமனிடம் போய்ச் சேர்ந்தான் 33

அடுத்து

இறப்பு என்றும் நடப்பதுதான் என்று இராமன் வீடணனைத் தேற்றினான் 34

மிகைப் பாடல்கள்

மனிதன் அம்பு உடலில் ஊடுருவியது என்று நாணி உயிர்விட்டாயோ 5-1
செயற்கருஞ் செயலை நிறைவெற்ற இறைவனை வணங்க உனக்கு 10 தலைகளும், இறைவனைப் போற்ற 10 வாய்களும் உள்ளனவே 7-1
பூசனை செய்ய 20 கைகள் உள்ளனவே 7-2
சீதை உலகினை ஈன்றவள் என்னு அப்போதே சொன்னேனே 28-1
இராமனை நாராயணன் என்றேனே 28-2
உன் உடலில் சந்தனம் தெளித்து, சங்கு ஊதுகிறார்களே 31-1
வேறொருவன் உனக்கு இறுதிக்கடன் செய்கிறானே 31-2

இராமன் தன் தம்பியை அனுப்பி வீடணனுக்கு முடி சூட்டுக என்றான். துணைக்கு அனுமனையும் அனுப்பினான் 34-1

பாடல்

அவ் வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எவ் வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக்
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண,
செவ்வையின் அவர் முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான் 1

'போழ்ந்தென அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால்;
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழிக் கடன் வகுத்தி' என்ன,
தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி
வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலை வீழ்ந்தென்ன 2

ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க,
தேவரும் முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் சேர,
தா அரும் பொறையினான் தன் அறிவினால் தகையத் தக்க
ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகு வாய் ஆர, 3

'உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக்
கண்ணாலே நோக்கவே, போக்கியதே உயிர்; நீயும் களப் பட்டாயே!
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் எண்ணுதியோ? -எண் இல் ஆற்றல்
அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே! 4

'"ஓராதே ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள்மேல் உற்ற காதல்
தீராத வசை" என்றேன்; எனை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோ?-பெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்! 5

'"அன்று எரியில் விழு வேதவதி இவள்காண்; உலகுக்கு ஓர் அன்னை" என்று,
குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; அது மனத்துள் கொள்ளாதே போய்,
உன் தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக் கண்டும், உறவு ஆகாதே
பொன்றினையே! இராகவனார் புய வலியை இன்று அறிந்து, போயினாயே! 6

'மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல்? 7

'வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 8

'"கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்" என்று, அது குறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளோ?
நல்லாரும் தீயாரும் நரகத்தார் சொர்க்கத்தார், நம்பி! நம்மோடு
எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 9

'போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவிய கை பொறாமை கூர,
சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தம் மோயை, தெய்வக் கறிப்ன்
பேர்மகளை, தழுவுவான் உயிர் கொடுத்து, பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார்மகளைத் தழுவினையோ, திசை யானைப் பணை இறுத்த பணைத்த மார்பால்?' 10

என்று ஏங்கி, அரற்றுவான் தனை எடுத்து, சாம்பவனும் எண்கின் வேந்தன்,
'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினர்போல், தேறாது வருந்துதியோ?' என்ன, தேறி
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டள், மயன் பயந்த நெடுங் கண் பாவை. 11

அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,
புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார்,
இனம் தொடர்ந்து உடன் வர, ஏகினாள் என்ப-
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 12

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர்
பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால்-
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. 13

நூபுரம் புலம்பிட, சிலம்பு நொந்து அழ,
கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்;
'ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம்' எனா,
மா புரம் தவிர்ந்து, விண் வழிச் சென்றார் சிலர். 14

அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட,
குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட,
உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக,
மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். 15

தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர்
முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து,
அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன்
மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 16

தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்,
எழு உயர் புயங்களும், மார்பும், எங்கணும்,
குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு
அழுதிலர், உயிர்த்திலர், ஆவி நீத்திலார். 17

வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்,
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்கினார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். 18

இயக்கியர், அரக்கியர், உரகர் ஏழையர்,
மயக்கம் இல் சித்தியர், விஞ்சை மங்கையர்,-
முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள்-தம்
துயக்கு இலா அன்பு மூண்டு, எவரும் சோரவே. 19

'அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர்
திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை;
இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். 20

தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்தென
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள்,
மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து,
இரங்கினள்-மயன் மகள்,-இனைய பன்னினாள்: 21

'அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தவாறு! அரக்கர் வேந்தன்
பின்னேயோ, இறப்பது? முன் பிடித்திருந்த கருத்து அதுவும் பிடித்திலேனோ?
முன்னேயோ விழுந்ததுவும், முடித் தலையோ? படித் தலைய முகங்கள்தானோ?
என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 22

'வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி, மேலும் கீழும்,
எள் இருக்கும் இடம் இன்றி, உயிர் இருக்கும் இடம் நாடி, இழைத்தவாறோ?
"கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும்" எனக் கருதி, உடல் புகுந்து, தடவினவோ ஒருவன் வாளி? 23

'ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்
தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த சரங்களே; போரில் தோற்று,
வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!
ஓர் அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை? மானுடவன் ஊற்றம் ஈதோ! 24

'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்,
ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,
வேந்தர் பிரான், தயரதனார், பணிதன்னால் வெங் கானில் விரதம் பூண்டு
போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! 25

'"தேவர்க்கும், திசைக் கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங் கண் மாற்கும்,
ஏவர்க்கும், வலியானுக்கு என்று உண்டாம் இறுதி?" என ஏமாப்புற்றேன்;
ஆவற்கண் நீ உழந்த அருந் தவத்தின் பெருங் கடற்கும், வரம் என்று ஆன்ற
காவற்கும், வலியான் ஓர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ? 26

'அரை கடை இட்டு அமைவுற்ற கோடி மூன்று ஆயு, பேர் அறிஞர்க்கேயும்
உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல், தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;
திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப் பயனின் பெருமை பார்ப்பேன்.27

'ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும்
வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்; கண் புக்க வேழ வில்லால்,
நார நாள், மலர்க் கணையால், நாள் எல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வரத்தினாலே! 28

என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன்
பொன் தழைத்த பொரு அரு மார்பினைத்
தன் தழைக் கைகளால் தழுவி, தனி
நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 29

வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத்
தான மங்கையரும், தவப் பாலவர்,
ஆன மங்கையரும், அருங் கற்புடை
மான மங்கையர் தாமும், வழுத்தினார். 30

பின்னர், வீடணன், பேர் எழில் தம்முனை,
வன்னி கூவி, வரன்முறையால், மறை
சொன்ன ஈம விதி முறையால் தொகுத்து,
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான். 31

கடன்கள் செய்து முடித்து, கணவனோடு
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெங் கனலுக்கு அவி ஆக்கினான் -
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான். 32

மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து,
உற்ற தீக் கொடுத்து, உண் குறு நீர் உகுத்து,
'எற்றையோர்க்கும் இவன் அலது இல்' எனா,
வெற்றி வீரன் குரை கழல் மேவினான். 33

வந்து தாழ்ந்த துணைவனை, வள்ளலும்,
'சிந்தை வெந் துயர் தீருதி, தெள்ளியோய்!
முந்தை எய்தும் முறைமை இது ஆம்' எனா,
அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 34


மிகைப் பாடல்கள்

'வான் கயிலை ஈசன், அயன், வானவர் கோன், முதல் அமரர் வாழ்த்தி ஏத்த,
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து, வைகிய நீ, தாய் சொல் தாங்கி,
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து, உன்
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட, உளம் நாணினையோ? உயிரும் உண்டோ ? 5-1

'அரு வினை வந்து எய்தியபோது, ஆர் அரசே! உன் தன்
திருவினை நீ பெறுவதற்குத் திருநாமங்களைப் பரவ,
ஒருபது வாய் உள; வணங்க, ஒண் முடி பத்து உள; இறைஞ்ச,
இருபது கை உள; இலங்கை என்னாக வீந்தாயே! 7-1

'அரு வினை வந்தெய்திய போழ்து ஆர் தடுப்பார்? ஆர் அதனை அறிவார்? வீட்டின்
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமைச் சிந்தித்து ஏத்த,
ஒருபது நா உள; வணங்க, ஒண் முடிகள் பத்து உளவே; இறைஞ்ச, மேரு
இருபது கை உள; இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே! 7-2

'அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள்' என்று
உன்னி உரைத்தேன்; உரை கேளாது, உத்தமனே!
பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ? 28-1

'ஆரா அமுதாய் அலை கடலில் கண்வளரும்
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான்;
ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனை;
பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? 28-2

இந்தனத்து அகில் சந்தனம் இட்டு, மேல்
அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து,
எந்த ஓசையும் கீழுற ஆர்த்து, இடை
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்கிட, 31-1

கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து,
உற்ற ஈம வீதியின் உடம்படீஇ,
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர,
மற்ற வீரன் விதியின் வழங்கினான். 31-2

இனைய வீரன் இளவலை நோக்கி, 'நீ
புனையும் நன் முடி சூட்டுதி, போய்' எனா,
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே,
'அனையனோடும் அனுமனைச் சார்க' எனா. 34-1


6 யுத்த காண்டம் 
38. மண்டோ தரி புலம்புறு படலம்

Sunday, 17 May 2020

கம்பராமாயணம் இராவணன் வதைப் படலம் - KambaRamayanam 6-37 Link

10 --- தேர்கள் வந்தன
20 --- மகோதரன் இராமனுடன் பொருது மாண்டான்
30 --- திருமால் படைகள் துணை
40 --- இராவணன் சினத்தில் தெழித்தான்
50 --- இராவணன் தொடுத்த அம்புகள் இராமன் காலடிகளில் விழுந்தன
60 --- கடும்போர் 
70 --- விண்ணில் போர்
80 --- இராமனை அம்பால் மூடினான்
90 --- இராவணன் அம்புகள் இராமனை ஒன்றும் செய்யவில்லை
100 --- படைக்குப் படை - 1
110 --- படைக்குப் படை - 2
120 --- மாயப்படை
130 --- இராவணன் சூலம் வீசினான்
140 --- வேத முதல் காரணன்
150 --- இராவணன் தலை ஒன்று அறுந்தது
160 --- அறுந்த கை ஆயுதம்
170 --- இராவணனை அம்பால் மூடினான்
180 --- தேரோட்டிகள் சொன்னவை
190 --- மயக்கம் தெளிந்த இராவணன்
200 --- இராவணன் வீழ்ந்தான்
215 --- இராவணன் முதுகுப்புண்
மிகைப்பாடல்கள்

கம்ப இராமாயணம் 

6 யுத்த காண்டம் 
37. இராவணன் வதைப் படலம்
Thursday, 14 May 2020

கம்பராமாயணம் இராமன் தேர் ஏறு படலம் - KambaRamayanam 6-36

இந்திரன் தேரில் இராமன்

இராவணன் போருக்கு வரக்கண்ட குரங்குப்படை பூசலிட்டது. அதனைக் கேட்ட இராமன் அஞ்சாதீர் என்று கூறிக்கொண்டு எழுந்திருந்தான் 1
வானவர் துயருக்கு இன்று முடிவு கட்டுவேன் என்றான் 2
அவன் வயத்தில் உலகம் உள்ளதல்லவா 3
வில், வாளி-வட்டில் மாட்டிக்கொண்டான் 4

சிவன் தேர் ஒன்றை இராமனுக்குத் தாருங்கள் என்றான் 5
சிவன் சொன்னபடி இந்திரன் ஆணையிட்டான் 6
மாதலி என்பவன் ‘மகோததி’ என்னும் தேரை ஓட்டிக்கொண்டு வந்தான் 7

7 மலை வலிமை. நிலம் போன்று வலிமையுள்ள சக்கர அச்சு. 8 பாம்புகளின் வலிமை கொண்ட கயிறு. வான் முட்டும் உயரம் கொண்டது அந்தத் தேர் 8

ஆண்டு, நாள், பருவம், திங்கள் ஆகிய இருக்கைத் தட்டுகள். விண்மீன்கள் மணிக்கோவை என அமைக்கப்பட்டது அந்தத் தேர் 9

திசைகள் தேருக்குச் சுவர். மழைமேகங்கள் கொடி. ஆகியன கொண்டது 10
கடல் போன்ற ஒலியுடன் செல்வது 11

அரி வயிற்றில் தோன்றிய அயன் இருக்கை போல் அதன் தாமரைத்தட்டு இருக்கை 12

4 வேத வேள்வி ஓதும் 7 ஒலி, 7 மலை, 7 உலகம், 5 பூதம், 3 தீ, 5 புலன், ஆகியவை முனிவர் செய்யும் ஆவுதியாக அதற்கு அமைந்திருந்தன 13

கரணம் 5, சுடர் 5,  திசை 4, அரணம் 3, உழலும் வாயு 10, பகல் இரவு ஆகியவை அதில் குதிரைகளாகப் பிணிக்கப்பட்டிருந்தன 14

இப்படிப்பட்ட தேரை மாலி ஓட்டிக்கொண்டு வந்தான். இராமனை ஏற்றி நடத்தி எங்களுக்கு வெற்றி தருக என்று இந்திரன் தேரை அனுப்பிவைத்தான் 15

நினைப்பு வேகத்தில் அது வானில் சென்றது 16
மேரு மலை போல, முதல்வர் மூவரின் மானமாக அது இராமனிடம் வந்தது 17

யார், எதற்காக இந்தத் தேர் - என்று இராமன் மாதலியை வினவினான் 18

சிவன், பிரமன் ஆணைப்படி இந்திரன் அனுப்பிவைத்தது என்றான், மாதலி 19
அண்டம் உண்டவன் வயிறு போல் அகன்றது. உன் அம்பை விட விரைந்து செல்ல வல்லது என்றான் 20
நீரிலும் நெருப்பிலும் செல்லக்கூடியது 21
உலகே அழிந்தாலும் அழியாது  22
தேவர்களைக் காக்க இந்திரன் உனக்கு அனுப்பியது என்றான் மாதலி 23

அரக்கர் மாயையோ என இராமன் ஐயுற்றான். குதிரைகள் இவை என்று எண்ணித் தெளிவு பெற்றான் 24
இராமன் தேரோட்டியின் பெயரை வினவ மாதலி என்று அவன் தெரிவித்தான் 25

தேரைப்பற்றி அனுமனையும் இலக்குவனையும் இராமன் வினவினான். இந்திரனுடையதுதான் என்று அவர்கள் கூறினர் 26
அந்தணர் தலையில் கைகூப்பித் தொழுதனர். இராமன் தேரில் ஏறினான் 27

மிகைப் பாடல்கள்

இராமனை முடிப்பேன் என்று இராவணன் எழுந்தபோது இராமன் புன்முறுவல் பூத்தான் 4-1

பாடல்

தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி,
விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர்
அழுந்து பணிமீது அமளி, 'அஞ்சல்' என, அந் நாள்,
எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். 1

கடக் களிறு எனத் தகைய கண்ணன், ஒரு காலன்
விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான்,
'மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம்
இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று' என இசைத்தான். 2

தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின்
பின்னக அசத்த பொருள் இல்லை; பெரியோனை
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ?
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால். 3

புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனலாய மலர் அங்கையின் அடக்கிக்
கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி
வட்டில், புறம் வைத்து, அயல் வயங்குற வரிந்தான். 4

'மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி
ஆண் தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர்,
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர்
ஈண்ட விடுவீர், அமரில்' என்று, அரன் இசைத்தான். 5

தேவர் அது கேட்டு, 'இது செயற்கு உரியது' என்றார்;
ஏவல் புரி இந்திரனும், 'அற்று' என இசைத்தான்;
'மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக்
கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி' என்றான். 6

மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும்
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலந் தேர்;
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில். 7

குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும்,
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும்,
கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின்
வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. 8

ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை என்று
மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில்
பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை
நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின். 9

மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக்
கோது அற வகுத்தது; மழைக் குழுவை எல்லாம்
மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப்
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! 10

மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரித்
தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக்
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து,
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை. 11

பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப்
புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம்
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்,
அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின். 12

வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு
ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும்,
பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர்
மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும், 13

அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும்,
ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும்,
பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை பிணிக்கும்
பொரும் பரிகள் ஆக நனி பூண்டது, பொலந் தேர். 14

வந்ததனை வானவர் வணங்கி, 'வலியோய்! நீ
எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்;
தந்தருள்வை வென்றி' என நின்று, தகை மென் பூச்
சிந்தினர்கள்; மாதலி கடாவி, நன் சென்றான். 15

'வினைப் பகை விசைக் கொடு விசும்பு உருவி, மான
மனத்தின் விசை பெற்றுளது வந்தது' என, வானொடு
அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்;
நினைப்பும் இடை பிற்பட, நிமிர்ந்தது நெடுந் தேர். 16

'அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்;
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்;
நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா;
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ? 17

'என்னை இது நம்மை இடை எய்தல்?' என எண்ணா,
மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, 'வந்தாய்,
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல?' என்றான்;
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்: 18

'முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள்,
அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு
ஒப்பு உடையது; ஊழி திரி நாளும் உலைவு இல்லா
இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது;-எந்தாய்! 19

'அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக்
கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை கோளுற்று
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்;
புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால். 20

'கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால்,
உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்;
விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே,
எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும்-எந்தாய்! 21

'நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும்
பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின்
பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத்
தேரும் உளதே, இது அலால்?-உலகு செய்தோய்! 22

'தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள்,
மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று
ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது' என்றான்,
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். 23

ஐயன் இது கேட்டு, 'இகல் அரக்கர் அகல் மாயச்
செய்கைகொல்?' எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்;
மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட
மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம். 24

'இல்லை இனி, ஐயம்' என எண்ணிய இராமன்,
நல்லவனை, 'நீ உனது நாமம் நவில்க!' என்ன,
'வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர்' எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். 25

மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி,
'நீர் கருதுகின்றதை நிகழ்த்தும்' என, நின்றான்;
ஆரியனை வணங்கி, அவர், 'ஐயம் இலை, ஐயா!
தேர் இது புரந்தரனது' என்றனர், தெளிந்தார். 26

விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப,
தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள,
அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று
எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் - இராமன். 27


மிகைப் பாடல்கள்

இத் தகையன் ஆகி, 'இகல் செய்து, இவனை இன்னே
கொத்து முடி கொய்வென்' என, நின்று எதிர் குறிப்ப,
தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில்,
சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார். 4-1


6 யுத்த காண்டம் 
36. இராமன் தேர் ஏறு படலம்


கம்பராமாயணம் இராவணன் தேர் ஏறு படலம் - KambaRamayanam 6-35

இராவணன் போர்க்களம் வருதல் 

மோதரன் \ மகோதரன் என்பவனை அழைத்து போர்முரசு அறையச் செய்தான். எஞ்சிய படையினர் வருக என்றான். 1
14 கோடி பேர் வந்தனர். அவர்கள் 4 படையினர் 2
ஈசனுக்குப் பூசை செய்து தானம் வழங்கினான் 3
பிரமன் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டான். இந்திரன் கவசம் அணிந்துகொண்டான். 4

வாள், கச்சு - போரணி 5
கருடன் சிறகு போல் கச்சு அணிந்த உடை 6
வாள், உடை, மணி, சதங்கை 7
ஒலி கேட்டு உலகம் நடுங்கும் கழல் 8
20 கைகளில் பூ வளையக் கங்கணம் 9
காதுகளில் குண்டலம் 10
திங்களும் மீனும் போல் முத்தணிகள் 11
முத்துக் குடை 12
பிறைக்குலம் போல் பற்கள் 13
யானை நெற்றி போல் 10 முகம் 14
இருளகற்றும் அணிகலன்கள் 15

பிரமன் தந்த மாலை, பார்வை மகளிர் கண்களாகிய தும்பைப் போர்ப் பூ 16
பூதங்கள் இறந்தாலும் இறவாத தன் புகழாகிய பூ 17
சூடிய கோலத்துடன் தோன்றினான்

நினைத்த வேகத்தில் செல்லும் தேர் வந்தது 18
1000 குதிரை பூட்டிய தேர் 19
பார், நீர், விசும்பு - எங்கும் செல்ல வல்லது 20
காசு \ செம்பால் ஆனது 21

படைக்கருவிகள் வைக்கப்பட்டிருந்த தேர் 22
கண்ணன் நேமி, சிவன் கணிச்சி, பிரமன் குண்டிகைக் கலசம் - வைக்கப்பட்டிருந்தன 23

தேருக்குப் பூசனை செய்து கொடை வழங்கினான் 24
இமையோர் அஞ்சத் தேரில் ஏறினான் 25

இராமனைக் கொன்று சீதையை வயிற்றில் அடித்துக்கொள்ளச் செய்வேன். இன்றேல் என் மனைவி மயன் மகள் அப்படி அடித்துக்கொள்வாள் - என்றான் இராவணன் 26

உலகளந்தவன் உயர்ந்தது போல் தன் தோள்களை உயர்த்தினான் 27
வானம் பிளக்குமாறு தோள்களைத் தட்டிக்கொண்டான் 28
தன் வில்லின் நாணைத் தெறித்தான் 29

கடல் அலைமோதியது 30
அவன் கண்களில் வடவைத் தீ 31

மலையிலும் வானிலும் அதிர்வுகள் 32
அண்டம் பீறிற்று 33
மலைகள் வானில் பறப்பது போல் புழுதி கிளம்ப இராவணன் தேர் வந்தது 34
படையுடன் வருகிறான் என்று வானவர் அஞ்சினர். வீடணன் இராமனிடம் விரைந்தான் 35


மிகைப் பாடல்கள்

இன்றே போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் என்று இராவணன் புறப்பட்டான் 2-1
முனை முறிந்த சிவன் படை மழு, மற்றும் குலிசம், ஆழி ஆகியவற்றைக் கூர்மை செய்துகொண்டான். வச்சிரக் கவசம் அணிந்துகொண்டான் 4-1
சிவன் தேர் போல் இராவணன் தேர் வந்தது 18-1
சிவனே போருக்கு வருவது போல் வந்தான் 27-1

பாடல்

பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ,
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி,
'"ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை
யாதையும் எழுக!" என்று, ஆனை மணி முரசு எற்றுக!' என்றான் 1

எற்றின முரசினோடும் ஏழ்-இரு நூறு கோடி
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித் திண் தேரும்,
சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் தொக்க,
வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று ஆக. 2

ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற
பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் 3

அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர்
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர,
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச்
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான். 4

வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி;
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை
மீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; 5

மறை விரித்தன்ன ஆடுறு மான மாக் கலுழன்
சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி;
முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில்
பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; 6

மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து;
முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ
தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி; 7

உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின்
இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும்
புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி;
சரியுடைச் சுடர் சாய் வலம் சார்வுறச் சாத்தி; 8

நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன்
ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும்
கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி;
தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; 9

கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின்
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க;
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின்
சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; 10

உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின்
துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர;
புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய;
சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ; 11

வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும்
காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும்
மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப் பலவாய்
ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; 12

பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய்
வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம்,
மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு
உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க; 13

ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஒக்கத்
தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க;
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; 14

புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி,
தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித் தலங்கள்
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி,
அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 15

நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த
பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன் பணித்த
வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி;
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; 16

அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை,
நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத் தன்
புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; 17

'வருக, தேர்!' என, வந்தது-வையமும் வானும்
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும், உச்சிச்
சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று எனினும்,
நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். 18

ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன்
பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர்
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் காற்றின்
நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். 19

பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்த
நீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்த
போரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன்
ஊரில் செல்வது; எவ் உலகினும் செல்வது, ஓர் இமைப்பின். 20

எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும்
கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன்
மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும்
அண்டம் விற்கும் நன் காசுஇனம் குயிற்றியது, அடங்க. 21

முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர்
எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா
வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும்
சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. 22

கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து
அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத்
திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் செய்கை
உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் உறையுள். 23

அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,
இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை
நினையின் நீண்டது ஓர் பெருங் கொடை அருங் கடன் நேர்ந்தான் 24

ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்;
வேறு தாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் புலனும்
ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. 25

'மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு
கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்;
அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்;
இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்' என்றான் 26

பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க,
விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப,
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். 27

விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப,
பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் பொன்
தசும்பின் நின்று இடை திரிந்திட, மதி தகை அமிழ்தின்
அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். 28

'நணித்து வெஞ் சமம்' என்பது ஓர் உவகையின் நலத்தால்,
திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் தெறித்தான்;
மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர்
துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். 29

சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க,
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய,
'பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும்
விரித்து எழுந்தனன், அனந்தன்மீது' என்பது ஓர் மெய்யான். 30

தோன்றினான் வந்து-சுரர்களோடு அசுரரே தொடங்கி
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய,
'ஊன்றினான் செரு' என்று உயிர் உமிழ்தர, உதிரம்
கான்று, நாட்டங்கள் வட அனற்கு இரு மடி கனல. 31

உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும்,
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும்,
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும்,
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். 32

'பீறிற்றாம் அண்டம்!' என்பது ஓர் ஆகுலம் பிறக்க,
வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க,
'மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம்
ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?' என எழுந்தார். 33

கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும்,
திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண,
அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும்
கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். 34

'எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக்
கொழுந்து முந்தியது உற்றது; கொற்றவ! குலுங்குற்று
அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி,
விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், விரைவான். 35


மிகைப் பாடல்கள்

ஏழ்-இரு நூறு கோடி எனும் படைத் தலைவரோடும்
ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம்
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன்,
'வாள் அமர் முடிப்பென் இன்றே' என மணித் தவிசு நீத்தான். 2-1

உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை கேள்வன்
அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு ஆழி
முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா
விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான். 4-1

அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை
கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன்,
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக்
கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின், 18-1

ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால்-ஐந்
தும், ஐந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய
இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன்
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான். 27-1


6 யுத்த காண்டம் 
35. இராவணன் தேர் ஏறு படலம்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி