Showing posts with label ஐங்குறுநூறு. Show all posts
Showing posts with label ஐங்குறுநூறு. Show all posts

Thursday, 4 May 2017

ஐங்குறுநூறு 50 AinguruNuru 491-500

வரவுச் நிறப்பு உரைத்த பத்து

முல்லை


போர் முற்றுப்பெற்று இல்லம் மீண்ட தலைவன் தான் வந்ததன் சிறப்பினை எடுத்துக் கூறியது.

491        
கார்மேகம் இடி முழங்கிய வேளையில் நான் இடைவிடாமல் உன்னை நினைத்து வருந்தினேன்.
நொந்து நொந்து ஊசலாடும் உள்ளத்தோடு
மடந்தாய்
நான் வந்தேன்.
உன் அழகை மீட்டுத் தருவதற்காக வந்தேன்.

கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய,
நொந்து நொந்து உயவும் உள்ளமொடு
வந்தனெம் மடந்தை! நின் ஏர் தர விரைந்தே.

வினை முற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது. 1
492        
அங்கே மயில் உன்னைப் போல அடுவதைப் பார்த்தேன்.
முல்லை உன் நெற்றியைப் போல மணப்பதை உணர்ந்தேன்.
மான் உன்னைப் போல மருண்டு நோக்குவதைப் பார்த்தேன்.
உன் நினைவு வந்தது.
வந்துவிட்டேன்.
நல்ல நெற்றி கொண்ட அரிவைப் பருவத்தவளே
கார் மேகத்தைக் காட்டிலும் விரைவாக வந்துவிட்டேன்.

நின்னே போலும் மஞ்ஞை ஆல, நின்
நல் நுதல் நாறும் முல்லை மலர,
நின்னே போல மா மருண்டு நோக்க,
நின்னே உள்ளி வந்தனென்
நல் நுதல் அரிவை! காரினும் விரைந்தே.

இதுவும் அது. 2

493        
எதிர்த்துப் போரிடும் யானைகள் முழங்கின.
அதற்கு எதிர் முழக்கமாக இடியும் முழங்கிற்று.
அன்பு உள்ளத்துடன் ஆண்மானும், பெண்மானும், குட்டியும் இணக்கமாக வந்தன.
கார் காலம் தொடங்குவதைப் பார்த்தேன்.
வளைந்த உன் தோளும் கைகளும் என் நினைவுக்கு வந்தன.
வந்துவிட்டேன்.

ஏறு முரண் சிறப்ப, ஏறு எதிர் இரங்க,
மாதர் மான் பிணை மறியொடு மறுக,
கார் தொடங்கின்றே காலை
நேர் இறை முன்கை! நின் உள்ளி யாம் வரவே.

இதுவும் அது. 3

494        
வண்டுகள் தேனை உண்டு ஊதின.
தவளைகள் தெவிட்டும் ஒலி கேட்டது.
புறவு நிலத்தில் முல்லை பூத்துக் கிடந்தது.
இவை எனக்கு இன்பத்தை மூட்டின.
உன் குறிப்பு வழி வந்துவிட்டேன்.
இனி, என்னை நினைத்து ஏங்கவேண்டியதில்லை.

வண்டு தாது ஊத, தேரை தெவிட்ட,
தண் கமழ் புறவின் முல்லை மலர,
இன்புறுத்தன்று பொழுதே;
நின் குறி வாய்த்தனம்; தீர்க, இனிப் படரே!

இதுவும் அது. 4

495        
செம்மண் கொண்ட முல்லை நிலத்தில் பல்வகைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன.
தனிமை உணர்வு நீங்கும்படி இனிமையாகத் தோன்றுகின்றன.
பின்னிய உன் கருங்கூந்தலில் பூ முடித்து நலம் புனைய வந்துவிட்டேன்.
என்னை நினைக்கும்போதெல்லாம் அழுத உன் நெஞ்சம் எனக்குத் தெரிந்தது.
முள் போன்று அழகிய பற்களை உடையவளே
நான் வந்துவிட்டேன்.

செந் நில மருங்கில் பல் மலர் தாஅய்,
புலம்பு தீர்ந்து, இனியஆயின, புறவே
பின் இருங் கூந்தல் நல் நலம் புனைய,
உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு,
முள் எயிற்று அரிவை! யாம் வந்தமாறே.

இதுவும் அது. 5

496        
மான்கள் புதரின் மறைவை நாடுகின்றன.
வரகு விளைந்துவிட்டது.
மலையே எதிரொலிக்கும்படி கார்மேகம் முழங்குகிறது.
பெரிதும் ஆசையோடு பார்க்கும் கண்ணை உடையவளே,
உன்னைப் பிரிந்து வாழ்ந்தவர் உன் தோளுக்குத் துணையாக இருக்க வந்துவிட்டார்.
பூ மொட்டுப் போல விரியும் உன் கூந்தலில் பூக்களை விரும்பிச் சூடிக்கொள்ளலாம்.

மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப
மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப,
பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர்
தோள் துணையாக வந்தனர்;
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே.

குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி,
தோழி தலைமகட்குச் சொல்லியது. 6

497        
குறுகிய கூந்தலைப் போலக் கொன்றை கொத்தாக மலர்ந்ததுள்ளன.
உயர்ந்த செம்மண் புற்றுகளிலிருந்து ஈசல்கள் பறக்கின்றன.
விலங்குகள் பசி மறக்கும் அளவுக்கு உண்கின்றன.
இப்படிப்பட்ட வளத்தை உண்டாக்கிக்கொண்டு கார் காலம் தொடங்கிவிட்டது.
பெரிதும் நல்லியல்பை உடைய அரிவை நீ.
போரையே விரும்பும் உன் குருசில் உன்னை விரும்பி வந்துவிட்டார்.

குறும் பல் கோதை கொன்றை மலர,
நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர,
மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே
பேர் இயல் அரிவை! நின் உள்ளிப்
போர் வெங் குருசில் வந்தமாறே.

இதுவும் அது. 9

498        
உன் தோள் அழகு பெற்றுத் திகழ்கிறது.
வளையல்கள் கழலாமல் நிற்கின்றன.
நீண்ட வரிக்கோடுகளை உடைய உன் ஒளி மிக்க கண்கள் அழகு பெற்றுத் திகழ்கின்றன.
யானைப் படையுடன் சென்ற வேந்தன் தன் போர்த் தொழிலை முடித்துக்கொண்டான்.
உன்கணவன் வரையக நாடன்.
போருக்குச் சென்ற அவன் தன் உயர்ந்த தேரில் திரும்பி வந்துவிட்டான்.

தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன;
நீள் வரி நெடுங் கண் வாள் வனப்பு உற்றன
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென,
விரை செலல் நெடுந் தேர் கடைஇ,
வரையக நாடன் வந்தமாறே.

இதுவும் அது. 8

499        
பிடவம் பூ பூத்து, தளவம் பூ மொட்டு விட்டுக் கார்காலம் தோன்றுவதைப் பார்த்தால் அவள் பெரிதும் வருந்துவாள் என்று நினைத்து போர்த்தொழிலுக்குச் சென்ற அவர், உன் காதலர், செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்.
உன் கொஞ்சு மொழியைக் கேட்க வேளண்டுமாம்.
உன் அழகைப் பருகிக்கொண்டே இருக்க வேண்டுமாம்.

பிடவம் மலர, தளவம் நனைய,
கார் கவின் கொண்ட கானம் காணின்,
'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது,
வந்தனரால், நம் காதலர்
அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே.


இதுவும் அது. 9

500        
கொன்றைப் பூ நிறத்தில் உன் கண் பசந்துபோய் இருந்தது.
அது குன்றில் இருக்கும் சுனையில் பூத்திருக்கும் குவளை மலர் போல இப்போது பழைய அழகினைப் பெற்றுத் திகழ்கிறது.
வெற்றி கண்ட போர்ப் பாசறையில் நீடித்திருந்த நீ, வெற்றி கண்ட யானைமீது தோன்றும் நீ, வந்ததனால் அழகினைப் பெற்றுத் திகழ்கிறது.

கொன்றைப் பூவின் பசந்த உண்கண்,
குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல,
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்
வியல் நெடும் பாசறை நீடிய
வய மான் தோன்றல் நீ! வந்தமாறே.

இதுவும் அது. 9

புலவர் – பேயனார்
கி.மு. காலம்
ஐங்குறுநூறு 50 ஆம் பத்து
திணை – முல்லை - 10 ஆம் பத்து
பாடல் – 491-500
வரவுச் நிறப்பு உரைத்த பத்து
அவள் 

ஐங்குறுநூறு 49 AinguruNuru 481-490

தேர் வியங்கொண்ட பத்து

முல்லை


போர் வினை முடிந்த பின்னர் தேரில் இல்லம் மீளும் தலைவன் தன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

481        
வலவ
மூங்கில் போல் சாயல் கொண்ட தோளும் அழகிய வரிகொண்ட அல்குலும் உடைய உன் மனைவியை நினை.
அவளுக்கும் உனக்கும் இருக்கும் காம நோய் தீரவேண்டும்.
பறவை போல் பறக்கும் உன் குதிரைகளைத் தாற்றுக் கோலைப் பயன்படுத்தி விரைந்து ஓட்டுக.

சாய் இறைப் பணைத் தோள், அவ் வரி அல்குல்,
சேயிழை மாதரை உள்ளி, நோய் விட
முள் இட்டு ஊர்மதி, வலவ! நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே.

வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது.
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.

482        
தெரிந்தெடுத்த அணிகலன்களைப் பூண்டவள் உன் மனைவி அரிவை.
அவளுக்கு நீ இன்ப விருந்து தரவேண்டும்.
அதனால், மிகவும் விரைந்து தேரை ஓட்டுக.
பாக
வெற்றி வேல் வேந்தன் வரும் வரையில் காத்திருந்தால் அது ஊழிக்காலம் போல நெடிது காலம் ஆகும்.

தெரிஇழை அரிவைக்குப் பெரு விருந்து ஆக
வல்விரைந்து கடவுமதி பாக! வெள் வேல்
வென்று அடு தானை வேந்தனொடு
நாள் இடைச் சேப்பின், ஊழியின் நெடிதே! 2

483        
ஆறு அழகுடன் திகழும்படி மலர்கள் பூத்துக் கிடக்கின்றன.
வேந்தன் போர்த்தொழிலை முடித்துக்கொண்டான்.
குதிரைகள் விரைந்து பாய்கின்றன.
நீ நம் தேரை அவற்றிற்கு முன் செல்லும்படி ஓட்டுக.
பாக
நல்ல நெற்றி கொண்ட உன் அரிவை மனைவி நலம் பெறவேண்டும் அல்லவா?

ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே;
வேந்து விட்டனனே; மா விரைந்தனவே;
முன்னுறக் கடவுமதி, பாக!
நல் நுதல் அரிவை தன் நலம்பெறவே. 3

484        
வேனில் காலம் கடந்துவிட்டது.
கார் காலம் வந்து மழை பொழிகிறது.
காடு அழகுடன் திகழ்கிறது.
பாக
பெருமிதம் சிறக்க விரைந்து தேரை ஓட்டுக.
மனைவியை மறந்து நீண்ட காலம் தங்கிவிட்டோம்.

வேனில் நீங்கக் கார் மழை தலைஇ,
காடு கவின் கொண்டன்று பொழுது; பாடு சிறந்து
கடிய கடவுமதி, பாக!
நெடிய நீடினம், நேரிழை மறந்தே. 4

485        
அவள் நினைவுத் துன்பம் தீரவேண்டும்.
அவள் பருத்த தோள்களைத் தழுவவேண்டும்.
வலவ
தேரை ஓட்டுக
பூத்துக் கிடக்கும் முல்லை நிலத்தில் விலங்கினங்கள் மருண்டு ஓடும்படி ஓட்டுக.

அரும் படர் அவலம் அவளும் தீர,
பெருந் தோள் நலம்வர யாமும் முயங்க,
ஏமதி, வலவ! தேரே
மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே. 5

486        
பெரிதும் அற்பமான மாலைப் பொழுது இது.
இதனைத் தாங்க முடியாத வருத்தத்துடன் பிரிந்திருக்கும் நம்மை நினைத்துக்கொண்டிருப்பாள் உன் மனைவியும், என் மனைவியும்.
அந்தத் துன்பத்தைப் போக்குவது எப்படி?
தழுவி ஆறுதல் பெறாத அந்த மேம்பட்ட பண்புடையவளைக் காண, சாட்டையால் அடித்து ஓட்டு.
தேரில் பூட்டிய குதிரைகள் பறவைகளைப் போலப் பறக்கட்டும்.
   
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ,
அரும் படர் உழத்தல் யாவது? என்றும்
புல்லி ஆற்றாப் புரையோள் காண
வள்பு தெரிந்து ஊர்மதி, வலவ! நின்
புள் இயல் கலி மாப் பூண்ட தேரே. 6

487        
பிரிந்தவர் நினைக்கும் மாலைப் பொழுது இது.
நெருங்கிய வளையல்களை அணிந்தவள் மகிழும்படி
அறிவுக் கூர்மை உடைய வலவ
தேரை விரைந்து ஓட்டுக.

இது மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே;
செறிதொடி உள்ளம் உவப்ப
மதிஉடை வலவ! ஏமதி தேரே. 7

488        
மேகம் திரண்டு வானம் மழை பொழியத் தொடங்கியுள்ளது.
பெருமை மிக்க காதலி காதலனை நினைக்கும் காலம் இது.
விரிந்த பிடரி மயிர் கொண்டதும் துள்ளிப் பாய்வதுமான நல்ல குதிரையைப் பூட்டி,
நம் ஆசைத் துன்பம் தீர,
தேரை ஓட்டுக.

கருவி வானம் பெயல் தொடங்கின்றே;
பெரு விறல் காதலி கருதும் பொழுதே;
விரி உளை நன் மாப் பூட்டி,
பருவரல் தீர, கடவுமதி தேரே! 8

489        
அரி என்னும் வண்டினம் அழகிய சிறகுகளை உடையது.
அவை மொய்க்கும்படியாக முல்லைப் பூக்கள் மலரும் மாலை வேளை இது.
துன்பத்தில் வருந்தும் பெண்ணின் நெஞ்சம் மகிழ வேண்டும்.
நுண்ணிய புரி முறுக்குக் கொண்ட கடிவாளக் கயிற்றைச் சுண்டி வளம் மிக்க குதிரையை ஓட்டு.
தேர் விரைந்து செல்லட்டும்.

அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப,
மென் புல முல்லை மலரும் மாலை,
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப,
நுண் புரி வண் கயிறு இயக்கி, நின்
வண் பரி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 9

490        
அவள் கொஞ்சும் மொழி என் நினைவுக்கு வருகிறது.
மணி கட்டிய தேரை விரைந்து செலுத்துக.

அம் தீம் கிளவி தான் தர, எம் வயின்
வந்தன்று
.....................................................................................................
ஆய் மணி நெடுந் தேர் கடவுமதி, விரைந்தே. 10


புலவர் – பேயனார்
கி.மு. காலம்
ஐங்குறுநூறு 49 ஆம் பத்து
திணை – முல்லை - 9 ஆம் பத்து
பாடல் – 481-490
தேர் வியங்கொண்ட பத்து


தேரில் செல்லும் தலைவனும், வலவனும் 

Wednesday, 3 May 2017

ஐங்குறுநூறு 48 AinguruNuru 471-480

பாணன் பத்து

முல்லை


 தலைவியைப் பிரிந்து தனித்துத் தொலைநாட்டில் வாழும் தலைவனிடம் பாணன் எடுத்துரைக்கிறான்.

தலைவி இந்தப் பாணனை வேண்டுகிறாள். 

471        
ஒளி மிக்க என் வளையல்கள் கழல்கின்றன.
என் மேனி வாடுகிறது.
கண்ணில் பனி முத்துக்கள் கொட்டுகின்றன.
இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டு அவர் இவள் என் தலைவியை விட்டுவிட்டுப் போய்விட்டார்.
பாண
அவர் தகைமையை இன்னும் பேசிக்கொண்டு வருகிறாய்.
இது சரியா?
தோழி வினவுகிறாள்.

எல் வளை நெகிழ, மேனி வாட,
பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க,
துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்;
அது மற்று உணர்ந்தனை போலாய்
இன்னும் வருதி; என் அவர் தகவே?

பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி,
தோழி சொல்லியது. 1

472        
சீறியாழ் மீட்டுவதில் வல்ல பாண,
உன் தலைவன் குறிப்பிஇட்டுச் சென்ற பருவம் இப்போது வந்து நிற்கிறது.
அவர் என் நிலைமையை நினைக்காவிட்டால் போகட்டும்.
தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லையே என்றாகிலும் அவர் நாணவேண்டாமா?
அவருக்காக நான்தான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

கை வல் சீறியாழ்ப் பாண! நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே;
எம்மின் உணரார்ஆயினும், தம்வயின்
பொய் படு கிளவி நாணலும்
எய்யார் ஆகுதல், நோகோ யானே?

குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவழி, தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. 2

473        
பலரும் புகழும் சிறப்பினை உடையவர் உன் குருசில்.
அவரை நினைத்து அவர் இருக்குமிடத்துக்கு நீ சென்றால்
கொடுமையான நினைவுத் துன்பத்தை எனக்கு உண்டாக்கிய அவரது பொய் வல்லமை பற்றி எடுத்துக் கூறு.
மறந்துவிடாதே.

பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச்
செலவு நீ நயந்தனைஆயின், மன்ற
இன்னா அரும் படர் எம்வயின் செய்த
பொய் வலாளர் போல
கை வல் பாண! எம் மறவாதீமே.

'தலைமகன் பிரிந்த நாட்டில் செல்வேம்' என்ற அவன்
பாணற்குத் தலைமகள் சொல்லியது. 3

474        
அன்று என் நெற்றி மாசு மறுவற்றுச் சுடரும் நெற்றியாக விளங்கியது.
அவர் தன் பெரும் படையுடன் சென்றார்.
தன்மீது சினம் கொண்டோர் கோட்டையை அழித்த செம்மாப்போடு சென்றார்.
சினம் கொண்ட குதிரை பூட்டிய தேரில் சென்றார்.
வழியெங்கும் தூள் பறக்கச் சென்றார்.
அப்படிச் சென்றவரை அழைத்துக்கொண்டு வருவேன் என்கிறான் பாணன்.
பாணனின் இந்த அறிவு மிகவும் நன்று.
தலைவி சொல்கிறாள்.

மை அறு சுடர் நுதல் விளங்க, கறுத்தோர்
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு
கதழ் பரி நெடுந் தேர் அதர் படக் கடைஇச்
சென்றவர்த் தருகுவல் என்னும்;
நன்றால் அம்ம, பாணனது அறிவே!

பிரிவின்கண் ஆற்றாமை கண்டு, 'தூதாகிச் சென்று அவனைக் கொணர்வல்' என்ற பாணன் கேட்பத் தலைமகள் கூறியது. 4

475        
என் வளையல்கள் கலங்குகின்றன.
தோள் வாடுகிறது.
கண் தன் வடிவழகை இழந்துவிட்டது.
இவற்றைப் பார்த்த சீறியாழ்ப் பாணன் பெரிதும் புலம்புகிறான்.
ஆர்வம் கொண்ட என் காதலோடு பிரிந்து செஎன்றவர் போலப் பாணன் இல்லை.
என்மீது அன்பு காட்டுபவனாக இருக்கிறான்.

தொடி நிலை கலங்க வாடிய தோளும்
வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கி,
பெரிது புலம்பினனே, சீறியாழ்ப் பாணன்;
எம் வெங் காதலொடு பிரிந்தோர்
தம்மோன் போலான்; பேர் அன்பினனே.

பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தார் கேட்ப, தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. 5

476        
தொகுதியாகத் திரியும் மேகம் பொழிந்து கார்காலம் எனக் காட்டுகிறது.
இது கார் காலந்தான் எனபதைக் காட்டிக்கொண்டு முல்லைப் பூவும் பூத்துக் குலுங்குக்கின்றன.
பல வகையான ஆனிரைகளை மேய்க்கும் கோவலர் அந்த முல்லைப் பூக்களைப் ‘படலை’ மாலையாகக் கட்டுகின்றனர்.
இது என்மீது அன்பு இல்லாத மாலைக் காலம்.
அன்பு இல்லாத பாணனே
இப்படிப்பட்ட மாலைக்காலம் அவர் சென்ற நாட்டிலும் இஇருக்குமா?

கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப,
பருவம் செய்தன பைங் கொடி முல்லை;
பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும்
அன்பு இல் மாலையும் உடைத்தோ
அன்பு இல் பாண! அவர் சென்ற நாடே?
'
பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே; நீ வேறுபடுகின்றது என்னை?'
என்ற பாணற்குத் தலைமகள் கூறியது. 6
  
477        
பனியில் நனையும் மலர் போன்ற கண்டில் பசலை நோய் பாயந்துள்ளத்து.
வெறுப்பை உண்டாக்கும் துயரத்ததோடு அவரை நினைத்துக் கொண்டு வருந்துகிறாள்.
அவள் நெஞ்சுக்கு உய்தி தரும் துணையாக அவர் இருக்கும் சிறுமலையில் தங்குவாய் ஆயின்
பாண
எம்முடையவர் தேரைக் காணலாம்.
அவ,ருக்கு எடுத்துரைக்கலாம்.

பனி மலர் நெடுங் கண் பசலை பாய,
துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்
கையறு நெஞ்சிற்கு உயவுத் துணை ஆக,
சிறு வரைத் தங்குவைஆயின்,
காண்குவை மன்னால் பாண! எம் தேரே.

தலைமகள்மாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைமகன் கூறியது. 7

478        
நான் இங்குக் காலம் கடத்துகிறேன் என்ற என் கொடுமையை அவள் தூற்றுகிறாள்.
வாடிய முகத்துடன் இருக்கிறாள்.
வேறோன்றை நினைத்துக்கொண்டிருக்கிறாள்.
அவள் என் விருப்பம் மிக்க காதலி.
பிரிவு நோயால் மெலிந்துபோயிருக்கிறாள்.  
பாண
இதனைத் தானே  நீ சொல்கிறாய்.
நானே அறிவேன்.
தலைவன் சொல்க்கிறான்.

'நீடினம்' என்று கொடுமை தூற்றி,
வாடிய நுதலள் ஆகி, பிறிது நினைந்து,
யாம் வெங் காதலி நோய் மிகச் சாஅய்,
சொல்லியது  மதி, நீயே
முல்லை நல் யாழ்ப் பாண! மற்று எமக்கே?

பிரிந்து உறையும் தலைமகன்
தலைமகள் விட்ட தூதாய்ச் சென்ற பாணனை,
 'அவள் சொல்லிய திறம் கூறு' எனக் கேட்டது. 8

479        
பாண
மேலும் சொல்.
நீ சொல்லச் சொல்ல என் காதுகளுக்கு இனிமையாக உள்ளது.
பல நாடுகள் இடைப்பட்ட தொலைவில் இருக்கிறேன்.
அப்படிப்பட்ட என்னிடம் நாள்தோறும் சொல்.
வாடைக் காற்று பனித்துளி கலந்து வீசுகிறது.
தனிமையை எண்ணி நொந்துகொண்டிருக்கிறேன்.
இந்த வேளையில் என் பனிமலர் நெடுங்கண்ணாள் கூறிய செய்திகளை எனக்குச் சொல்.

சொல்லுமதி பாண! சொல்லுதோறு இனிய
நாடு இடை விலங்கிய எம்வயின், நாள்தொறும்,
அரும் பனி கலந்த அருள் இல் வாடை
தனிமை எள்ளும் பொழுதில்,
பனி மலர்க் கண்ணி கூறியது எமக்கே.

தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன்
மாற்றம் கூறக் கேட்ட தலைமகன்,
'இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாக
இன்னும் கூற வேண்டும்' எனக் கூறியது. 9

480        
உனக்கு நான் பாணன் இல்லை.
நீ எனக்குக் குரிசிலும் அல்லை.
உன் காதலி தன் மனையில் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.
ஈர மலரிதழ் போன்ற அவள் கண்கள்  உகுத்த கண்ணீர் கேட்டும் அவளுக்கு அருள் புரியாமல் இருக்ககிறாயே..

நினக்கு யாம் பாணரேம் அல்லேம்; எமக்கு
நீயும் குருசிலை அல்லை மாதோ
நின் வெங் காதலி தன் மனைப் புலம்பி,
ஈர் இதழ் உண்கண் உகுத்த
பூசல் கேட்டும் அருளாதோயே!

தலைமகட்குத் தூதாய்ப் பாசறைக்கண் சென்ற பாணன் தலைமகனை நெருங்கிச் சொல்லியது. 10

அவள்

புலவர் – பேயனார்
கி.மு. காலம்
ஐங்குறுநூறு 48 ஆம் பத்து
திணை – முல்லை - 8 ஆம் பத்து
பாடல் – 471-480
பாணன் பத்து


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி