Showing posts with label ஏர் எழுபது. Show all posts
Showing posts with label ஏர் எழுபது. Show all posts

Friday, 10 July 2020

ஏர் எழுபது ER ELUPADU 29-30

29 

பத்திவிளைத்து இருந்தெய்வம் பணிவார்க்கும், தற்பரமாம்
முத்திவிளைத் திடும்ஞான முதல்வருக்கும், இன்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும், வல்லவர்க்கும், பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே. 

பத்தி விளைய உரையாற்றுவோர்
தெய்வம் பணிவார் 
முத்தி விளையத் தவம் செய்வோர் 
ஞான முதல்வர் 
உணவு தருவோர் 
வல்லவர் 
ஆகியோர் தரும் விளைச்சல்கள் எல்லாமே 
உழவர் விளைச்சல் இல்லாவிட்டால் விளையாது 

30 

மறைமயங்காது, அருள்விளங்கும் மதிமயங்காது, திறல்வேந்தர்
இறைமயங்கா, மனுநெறியும் இனமயங்கா, யாவர்க்கும்
நிறைமயங்காது, ஒருநாளும் நிலைமயங்காது, உலகமெல்லாம்
முறைமயங்கா, அவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே

உழவர் விதைத்த பயிர் முளைகள் நெருக்கமாக மயங்காமல் வளர்ந்தால் 
மறைகள், அருள் தரும் எண்ணம், இறை வழங்கும் நிலை, மனுநெறி, மக்களின் நிறையுடைமை, உலக முறைமை 
எதுவும் மயக்கம் இல்லாமல் இருக்கும் 

ஏர் எழுபது ER ELUPADU 27-28

27 

அடுத்திறக்கிப் பெருங்கூடை அளவுபட வேஎருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தாம் இடையிடையே
கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேல்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே! - 27

எருவைப் பெரிய கூடையில் தூக்கி வருவர் 
தலையிலுள்ள கூடையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு
எரு அளவாகப் பரந்து நிலத்தில் இறங்கும்படி 
உடலை விரைவாக எவ்விச் சுழற்றுவர் 
கொஞ்சமாக இருக்கும்போது இறக்கிக் குனிந்து கையால் விசிறுவர்  
எரு விழுந்த நிலத்தைத் தொழுவர். 
பிறர் பழித்தால் ஏற்றுக்கொள்வர். 

வெறுப்பதெல்லாம் பொய்யினையே, வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெல்லாம் கலியினையே, உள்ளத்தால் வெள்ளத்தால்
செறுப்பதெல்லாம் புல்லினையே, செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெல்லாம் சேற்றினையே, வளம்படுத்தற் பொருட்டாலே!  27 (வேறு)

வேளாளர் வெறுப்பது பொய் 
தண்டிப்பது பஞ்சம் 
அழிப்பது பயிரிடையில் முளைக்கும் புல் 
புறட்டிப் போடுவது சேறு 
இவை வயலையும், மக்களையும் வளப்படுத்துவதற்காக. 

28 

வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறுங்
குரம்படிக்க மணிகொழிக்கும் குலப்பொன்னித் திருநாடர்,
பரம்படிக்க உடைந்தளைந்த பழனச்சேற்(று) உரமன்றி
உரம்படிக்க பிறிதுண்டோ உண்டாயின் உரையீரே! - 28

வரம்பு அடிக்க வயலை அடிப்பர் 
குரம்பு அடிக்க நென்மணி கொழிக்கும் 
பரம்பு அடிக்க சேறு சமமாகும்
எரு உரம்பு அடிக்க எல்லா நலமும் உண்டாகும் 

Thursday, 9 July 2020

ஏர் எழுபது ER ELUPADU 25-26

25 

மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்,
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ?
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே! 

வேதநூல் நெறி மக்கள் வாழ்க்கைக்கு வரம்பு என்பர் 
மற்றும் அந்த வரம்பு, இந்த வரம்பு என்று கூறுவர் 
இவையெல்லாம் பொய்யான வரம்புகள் 
உழவர் வயலில் நிறுத்தக் கட்டும் வரம்பே (வரப்பே) உதவும் வரம்பு. 

26 

அடுத்திரக்காக் கொடைசீர்த்தித் தாளாளர் அணிவயலில்
எடுத்து எருக் கொண்(டு) எழில்வளர இசையாரேல், இவ்வுலகில்
தொடுத்திருக்கும் அறத்துறையும், தொழுமிருக்கும கத்துறையும்,
படுத்திருக்கும் அவையல்லால் பரிந்திருக்க மாட்டாவே! 


தாளாளர் வயலில் எரு போடாவிட்டால்
இந்த உலகில் அறத்துறை எங்கே
அகத்துறை எங்கே 
இவை படுத்திருக்கும் அல்லவா 
பரிவுடன் இருக்க மாட்டா 
வயலுக்கு வரம்பு \வரப்பு 

ஏர் எழுபது ER ELUPADU 23-24

23 

மேடுவெட்டி வளப்படுத்தி மெய்வரம்பு நிலைநிறுத்திக்
கோடுவெட்டிக் காராளர் குவலயத்தைக் காத்திலரேல்,
பாடுவெட்டிக் குறும்படக்கப் படைவேந்தர் அவர்விளைத்த
காடுவெட்டிப் பகையறுத்துக் கலிகளைய மாட்டாரே. 

மேட்டை வெட்டிச் சமநிலமாக வளப்படுத்தி 
வரப்பு கட்டி, கங்கு வெட்டி, பயிரிட்டு,  
வேளாளர் உலகைக் காப்பாற்றாவிட்டால் 
வேந்தர் பகைவரைச் சாய்த்து பஞ்சம் போக்குவது எப்படி? 

24 

எழுதொணா மறைவிளங்கும், இயல்இசைநா டகம்விளங்கும்,
பழுதிலா அறம்விளங்கும், பார்வேந்தர் முடிவிளங்கும்,
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்கால்
புழுதியால் விளையாத பொருள்உளவோ புகலீரே! 

மறை விளங்கும் 
இயல் இசை நாடகம் விளங்கும் 
அறம் விளங்கும் 
வேந்தர் சூடும் முடி விளங்கும் 
உழவர் உழுது உழக்கிய புழுதியால் விளையாத பொருள் என்ன இருக்கிறது? 

ஏர் எழுபது ER ELUPADU 21-22

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்(கு)
உழுதுசால் வதுகலப்பை உயர்வான(து) என்றக்கால்,
எழுதுசால் பெருங்கீர்த்தி ஏராளும் பெருக்காளர்,
உழுதசால் வழியன்றி உலகுவழி அறியாதே!  - 21

பயமையான மறை வழியில் வேள்வி செய்வாரை விட 
உழும் கலப்பை உயர்வானது 
உழவர் பெருஞ்சிறப்புக்கு உரியவர் 
இவர்கள் நிலத்தை உழுத மண் பள்ளமாகிய ‘படைச்சால்’ வழியில் 
உலகம் செல்லும். 
படைச்சாலில் விதை இடுவர் 
அது விளையும் 
விளைவைப் பெற வழிச் செல்வர் 

மட்டிருக்கும் திருமாதும், மகிழ்ந்திருக்கும் புவிமாதும்,
முட்டிருக்கும் சயமாதும், முன்னிருப்பார் முதுநிலத்து
விட்டிருக்கும் கலிதொலைத்த விறல்தடக்கை வேளாளர்,
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே!  - 22

திருமகள் 
புவிமகள் 
வெற்றிச்செல்வி 
உழவர்க்குத் துணையாக முன்வந்து நிற்பர் 
பஞ்சம் போக்கும் வேளாளர் முன்வந்து நிற்பர் 
அவர்கள் கையில் தொத்தும் மண்வெட்டி இருக்கும்போது 
அவர்களுக்கு ஒரு குறையும் இருக்க முடியாது  


உழும் படைச்சால் \ உழவுப் பள்ளம்

Wednesday, 8 July 2020

ஏர் எழுபது ER ELUPADU 19-20

19 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாரும்
தொழுதுண்டு பின்செல்வர் என்றேயித் தொல்லுலகில்
எழுதுண்ட மறைசொன்னால் இவர்ஏவன் மள்ளர்க்கும்
பழுதுண்டோ? பார்வேந்தர் படைமன்னர் ஒப்பாரோ? 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாரும்
தொழுதுண்டு பின்செல்வர்
என்று திருவள்ளுவர் மறை எழுதிச் சொல்கிறது  
இந்த மள்ளருக்குப் பழுது உண்டோ 
வேந்தர் இவருக்கு ஒப்பு ஆவாரோ 

20 

அலகிலா மறைவிளங்கும், அந்தணர்ஆ குதிவிளங்கும்
பலகலையாம் தொகைவிளங்கும், பாவலர்தம் பாவிளங்கும்,
மலர்குலாந் திருவிளங்கும், மழைவிளங்கும், மனுவிளங்கும்,
உலகெலாம் ஒளிவிளங்கும், உழவர் உழும் உழவாலே!  

உழவர் உழும் உழவால் 
வேதம் விளங்கும் 
வேள்வி விளங்கும் 
கலைகள் விளங்கும் 
பாவலர் பாடல் விளங்கும் 
துரு விளங்கும் 
மழை விளங்கும் 
மனுநெறி விளங்கும் 
உலகின் புகழ் விளங்கும் 

ஏர் எழுபது ER ELUPADU 17-18

17 

பார்பூட்டும் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டும் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டும் கொடைத் தடக்கைக் காவேரி வளநாடர்
ஏர்பூட்டின் அல்லதுமற்(று) இரவியும்தேர் பூட்டானே! 

பகடு ஏர் பாரம் இழுத்தால் அல்லாமல் விளைச்சல் இல்லை 
விளைச்சல் உண்ணும் மக்கள் உடலில் தெம்பு இல்லை 
எனவே பகடு பூட்டாவிட்டால் 
காமன் அம்பு பூட்டான் 
ஏர் பூட்டாவிட்டால் சூரியன் தேர் வருவதால் என்ன பயன் 

18 

கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கும் எனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்கும் திறன்நடக்கும் திருவறத்தின் செயல்நடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே

கார்மேகம் நடக்கும் காராளர் ஏர் நடக்கும் எனில், 
இயல் இசை நாடகம் நடக்கும் 
சீர், திறன், அறத்தின் செயல், உலகியல் - நடக்கும் 
பசி மட்டும் நடக்காது 

ஏர் எழுபது ER ELUPADU 15-16

15 

கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை,
விண்ணவரை அமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்;
மண்ணவரை அமுதூட்டி வானுலகம் காப்பதுவும்,
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவல் இடுகறையே! 

சிவன் கருத்தில் இருக்கும் கறை விண்ணவர்க்கு அமுதம் ஊட்டிற்று என்பர் 
மண்ணில் வாழும் மக்களுக்கு அமுதம் ஊட்டுவது 
மாட்டின் கழுத்தில் 
ஏர் நுகம் தாங்கு இழுத்ததால் உண்டான தழும்புக் கறை. 

16 

ஊட்டுவார் பிறருளரோ? உலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ?
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொல்? இந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே! 

உணவு ஊட்டுவார் உழவரைத் தவிர வேறு யார் உண்டு 
ஏரில் பகடு பூட்டுவார் புகழ் அல்லாமல் வேறு எந்தப் புகழால் பிறருக்குப் பயன் 
வெற்றியில் மேம்பட்டவராக இவரை அல்லாமல் 
வேறு யாரைக் காட்டுவது 

ஏர் எழுபது ER ELUPADU 13-14

13 

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும்,
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்கும் சிறுகோலே. 

பஞ்சம் போக்குபவர் வேளாளர் 
அவர் வயலில் நாற்று முடி நட்டுத் திருந்தினால் 
வேந்தர் முடி திருந்தும் 
வேந்தரின் செங்கோலை நடத்தும் கோல் 
ஏர் மண்ணைத் தள்ளும் தாற்றுக்கோலே  

14 

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே?
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே?
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்தில், செருக்குமத
யானைவலி எவராலே? இவர் எருதின் வலியாலே

வானம் பொழிந்தாலும் வளம் பெருகுவது எதனால் 
மறையவர் வேள்வி எதனால் 
மன்னர் போர்க்களத்தில் போர்யானையின் வலிமை எதனால்
உழவு செய்யும் எருதுகளின் வலிமையால் 

ஏர் எழுபது ER ELUPADU 11-12

11 

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவார் எல்லாரும் உழுவார்தம் தலைக்கடைக்கே!
கோதைவேன் மன்னவர்தம் குடைவளமும் கொழுவளமே
ஆதலால் அவர் பெருமை யாருரைக்க வல்லாரே! 

வேதநூல் முதலானவை கலைகள் 
அத்தகைய கலைகள் பலவற்றையும் ஓதுவார் எல்லாரும் 
உழுவார் தலைக்கடை வாயிலுக்கு வந்தாக வேண்டும் 
மன்னர் வெண்ணஃகொற்றக் குடைக்கீழ் இருக்ககும் வளமும் 
கொழு நிலத்தை உழுவதால் பெற்றிருக்கும் வளமே 
அதனால் உழவர் பெருமையை எடுத்துரைக்க யாரால் முடியும் 

12 

செழுவான மழைவாரித் திங்கடொறும் பொழிந்தாலும்,
கெழுவார நிலமடந்தை கீழ்நீர்கொண் டெழுந்தாலும்,
வழுவாத காவேரி வளநாடர் உழுங்கலப்பைக்
கொழுவாணி கொண்டன் றிக் குவலயஞ்சீர் நிரம்பாவே. 

திங்கள் மும்மாரி பொழிந்தாலும் 
நிலத்தில் ஊற்று சுரந்தாலும் 
காவிரி நாட்டார் 
கலப்பைக் கொழுவாகிய ஆணி கொண்டு 
உழவுத்தொழில் செய்யாவிட்டால் 
உலகம் சிறப்புப் பெறாது 

Tuesday, 7 July 2020

ஏர் எழுபது ER ELUPADU 9-10


நாட்டுகின்ற சோதிடத்தின் நாண்பொருத்தம் நாட்பொருத்தம்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல; கடைப்புவியில்
தீட்டுப்புகழ்ப் பெருக்காளர் செழுநுகத்தோடு உழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகள்மங் கலக்கயிறே! 

மங்கல நாண் பூட்டும் நாளை 
தாலி கட்டும் நாளை 
சோதிடத்தால் 
நாண் அணிவிக்கும் ஆண் பெண் பொருத்தம் 
நாள் பொருத்தம் 
ஆகியவற்றைப் பார்க்கும் சோதிடக் கயிறு 
கயிறு அல்ல 
உழவர் நுகத்தடியில் எருதினைப் பூட்டும் கயிறே 
உலகினைக் கட்டிக் காக்கும் கயிறு. 

10 

தடுத்தநெடு வரையாலும் தடவரைகள் எட்டாலும்
உடுத்ததிரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்தபுகழ்ப் பெருக்காளர் எழுநுகத்தோடு இணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதோ! 

8 மலையரணாலும் 
கடல் அரணாலும் 
உலகினைக் காப்பாற்ற முடியாது 
உழவர் எருதினை நுகத்தில் பூட்டும் தொடை
அவிழாமல் இருந்தால் மட்டுமே 
உலகினைக் காப்பாற்ற முடியும். 

ஏர் எழுபது ER ELUPADU 7-8

7

வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோர் எல்லோர்க்கும்
தொளைத்ததொளை பசும்பொன்னின் அணிகிடக்கும் துணைத்தல்லால்
திளைத்துவருஞ் செழும்பொன்னித் திருநாடர் உழுநுகத்தில்
தொளைத்ததொளை போலுதவும் தொளையுளதோ சொல்லீரே! 

காதி போட்ட துளையில் அணிகலன் கிடக்கிறது 
இது அவருக்கு அழகு தருகிறது 
உழவர் நுகத்தில் போட்ட துளைகளில் எருதுகள் பூட்டப்பட்டுள்ளது 
இது நிலத்தை உழுது உலகைக் காக்கிறது 


ஓராணித் தேரினுக்கும், உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ!
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக்கு ஒப்பதொரு சிறந்தாணி செப்பீரே! 

சூரியன் தேர் அச்சில் இருக்கும் கடையாணி 
அந்தத் தேரைக் கழலாமல் ஓடச் செய்கிறது 
உழவர் நுகத்தில் பூட்டிய கடைமுளை
எருதுகளை நேர் வழியில் நடத்தி உழச்செய்து உலகைக் காக்கிறது 


உழுநுகம்
உழுநுகத்தில் தொளைத்த தொளை
உழுநுகத்தின் சீராணி

ஏர் எழுபது ER ELUPADU 5-6



நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாளர் இவராலே தொல்லுலகம் நிலைபெறுமோ?
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி உளதாயின் உலகுநிலை குலையாதே! 

சிவன், பிரமன், மால் - இவர்கள் தோற்றத்தால் உலகம் நிலைபெறுமா 
காவிரி நாட்டு உழவர் ஊற்றாணியால் அன்றோ 
உலகை நிலைகுலையாமல் இருக்கச் செய்கிறது 
ஊற்றாணி என்பது கலப்பைக் கொழு 
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி" - திருக்குறள் 


ஆற்றாணி வேணியர்பால் அம்மையிருந்து அனைத்துலகும்
போற்றாணி யாம் கச்சிப் புறமெல்லாம் அறம்வளர்க்கச்
சேற்றாணிக் கரமொதுக்கும் செல்வரணி ஏர்க்காலின்
ஊற்றாணி உறுதியினால் உலகுறுதி யானதுவே.

காஞ்சிபுர ஆற்றுமணலில் கரையாத ஆணியாக இருப்பவர் ஏகாம்பரர் 
அவர்பால் இருப்பவர் அம்மை காமாட்சி 
இவள் அறம் வளர்க்கிறாள் 
வளர்க்க உதவுபவர் சேற்றில் நடவு நடும் உழவர் 
இதுதான் ஏர்க்கால் ஊற்று 

வேறு பதிப்பு

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற இருநிலத்தோர் வறுமையொடு வீழாமே
கரையேற்றும் நுகமன்றோ காராளர் உழுநுகமே! 

கதிரோன் தேரை இழுக்கும் 7 குதிரைகளுக்குப் பூட்டிய நுகம் 
உலகின் இருளைப் போக்குகிறது 
காராளர் ஏரில் பூட்டிய நுகம் 
உலகின் வறுமையைப் போக்குகிறது 

ஏர் எழுபது ER ELUPADU 3-4

3 அலப்படையின் சிறப்பு

குடையாளும் முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளும் இவைநான்கும் படைத்துடைய ரானாலென்,
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்அலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே 

அலம் என்னும் கலப்பைப் படை கொண்டு உழுது பயிரிட்டு, 
பொன்னி நாட்டு உழவர் போரடிக்காவிட்டால், 
வேந்தர் நாற்படை கொண்டிருப்பதால் என்ன பயன்?

4 மேழிச் சிறப்பு  

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்,
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்,
ஊழிபே ரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 

நானமறையாளர் வளர்க்கும் வேள்வி வாழி
ஆணைச்சக்கரத்தால் உலகளிக்கும் வேந்தர் செல்வம் வாழி
இவை உலகுக்கு உணவளிக்கும் உழவரின் மேழியால் விளைவது அல்லாமல் 
வேறொன்றால் விளையாது 

ஏர் எழுபது ER ELUPADU 1-2

ஏரெழுபது – பாடல்கள் - நூல்

1 உழவு நாட்கோடல்

சீர்மங்க லம்பொழியும், தெண்டிரைநீர்க் கடல்சூழ்ந்த
பார்மங்க லம்பொழியும், பல்லுயிருஞ் செழித்தோங்கும்,
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய இனிதுழநாட் கொண்டிடினே. 

கார்மேகம் சிறந்து மழை பொழிந்த பருவத்தில் 
உழவர் ஏர் பூட்டும் நன்னாள் கொள்வர். 
கொண்டதும் 
உலகே சீர் பெற்றுச் சிறக்கும்
பல உயிர்களும் செழித்து ஓங்கும் 

2 உழவுச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந், தம்முடைய
சீர்விழாக் கொளவிளங்கும் திருவிழாப் பெருக்காளர்,
ஏர்விழாக் கொளினன்றி, எறுழ்க்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கொளமாட்டார், போர்வேந்த ரானோரே. 

நிலம் நீர் ஊறி விழாக் கொள்ளும் காலத்தில்
திருவிழா பெருக்குபவர் உலகம் சிறக்கும் சீர்விழாக் கொள்வர் 
இவர்கள் இப்படி ஏர் விழாக் கொள்ளாவிட்டால் 
வேந்தர் கரி, பரி, மா படைகளைக் கொண்டு போர்விழா கொள்ள முடியாது


Monday, 6 July 2020

ஏர் எழுபது ER ELUPADU 09


வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும்,
நீதிவளம் படைத்துடைய நிதிவளத்துத் திருக்குலமும்,
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலம் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே. 

வேதியர் குலம் 
வேந்தர் குலம் 
நிதியர் குலம் - ஆகியவை 
காராளர் குலத்துக்கு நிகர் இல்லை 

வேறு பாடம்

வேதியர்தம் உயர்குலமும், விறல்வேந்தர் பெருங்குலமும்,
நீதிவளந் தருமுறையான் நிலநிறையு நிதிவளனும்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோ தில்குலந் தனக்கு நிகர் உண்டாகிற் கூறீரே  (பாயிரம் முடிந்தது)

ஏர் எழுபது ER ELUPADU 07-08


ஆழித் தேவர் கடலானார், அல்லாத் தேவர் அம்பலத்தார்
ஊழித் தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ?
வாழித் தேவர் திருமக்கள், வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித் தேவர் பெருமைக்கு வேறு தேவர் கூறேனே! 

கையில் சக்கரத்தை உடைய தேவர் கடலில் உறங்குகிறார். 
அவர் அல்லாத தேவர்கள் அம்பலக் கோயிலில் கிடக்கின்றனர் 
இவர்களா ஒன்று கூடி உலகத்தைக் காக்க வல்லவர்? 
காப்பவர் மேழித் தேவர் அன்றோ! 
இவர் பெருமைக்கு வேறு தேவரைக் கூறமாட்டேன். 


தொழுங் குலத்திற் பிறந்தாலென், சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென், இவர்க்குப்பின் வசியரெனுஞ்
செழுங் குலத்திற் பிறந்தாராய்ச் சிறப்புடையா ராய் வாய்மை
உழுங் குலத்தில் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே !  

தொழும் தேவர் குலத்தில் பிறந்தால் என்ன 
முடி சூடும் மன்னர் குலத்தில் பிறந்தால் என்ன 
இவர்களுக்குப் பின் வைசியர் குலத்தில் பிறந்தால் என்ன 
உங்கு உய்யப் பிறந்தவர் உழுங்குலத்தில் பிறந்தவரே ஆவர். 

வேறு பதிப்பு

எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனால் என்
அழுங்குழவிக் கன்புடைய தாயேபோல் அனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர், எளியரோ யாம்பகழ!
உழுங்கொழுவிற் கருவீறி உலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்!

அழும் குழந்தையிடம் அன்பு காட்டும் தாய் போல் 
அனைத்து உயிர்களுக்கும் கருணை காட்டி எழும் கருணைப் பெருக்காளர் 
யாம் புகழும் அளவுக்கு எளியரோ 
உழும் கொழுக்கருவே உலக முதலாகிய கரு. 

ஏர் எழுபது ER ELUPADU 05-06

சோழ நாடு


முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத் துடைய
கொடி யுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயரு டையான்,
இடியுடைய வொலிகெழு நீர் எழுபத் தொன் பதுநாட்டுக்
குடியுடையான், சென்னி பிறர் என்னு டையார் கூறீரே? 

மூவுலகிலும் உள்ள முடி மன்னர் 
கொடிமன்னர் 
அனைவரும் குலவும் முதன்மையான பேர் உடையவன் 
79 நாட்டுக் குடிகளை உடையவன் சென்னி 
பிறர் என்ன உடையார்?


மந்திரம் அனைய திண்டோள் மணிமுடி வளவன், சேரன்,
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட,
அந்தணர் குலமும் எல்லா அறங்களும் விளங்க, வந்த
இந்திரன் ஓலக் கம்போல் இருந்தது, பெரிய நாடே. 

மலை போன்ற தோள் கொண்ட மணிமுடி அரசர்களான
வளவன், சேரன், பாண்டியன் ஆகியோர் முடி சூட, 
அந்தணர் அறம் விளங்க, 
இந்திர ஓலக்கம் போல
இருந்தது, பொன்னிநாடு என்னும் பெரிய நாடு. 

ஏர் எழுபது ER ELUPADU 03-04


திங்களின்மும் மாரிபெய்யஞ், செகத்திலுயிர் செழித்தோங்கக்,
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத், தொழுகுலத்தோர்
துங்கமக, மநுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்றன் நாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 

மாதந்தோறும் 3 மழை பெய்ய, 
உயிரினங்கள் செழித்து ஓங்க 
காராளர் கரு வீறு பெற 
அவரைத் தொழும் குலத்தோர் மனுநெறி துலங்க 
வையம் படைத்த பிரமன் நாவில் உறையும் நாமடந்தையைத் தொழுவாம் 

.4 

ஈழமண்டல முதலென, உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலக்கும், செம்பியன் மரபினோர் தாமெலாம் பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங், கனகமு மமணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டலம், இதற்கிணை யாம்எனச் சொல்லு மண்டலஞ் சொல்வதற் கிலையே 

ஈழ மண்டலம் முதல் எண்ணப்படும் எல்லா வேந்தரும் 
தாழும் மண்டலம் 
செம்பியன் மரபினோர் காக்கும் காவிரி வளம் கொழிக்கும் சோழ மண்டலம் 
இதற்கு இணையாகச் சொல்ல எந்த மண்டலமும் இல்லை 



ஏர் எழுபது ER ELUPADU 01-02

பாயிரம்


கங்கை பெறுங் காராளர் கருவிஎழு பதும்உரைக்க
அங்கை பெறும் வளைத்தழும்பும் முலைத் தழும்பும் அணிய, மலை
மங்கை பெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமை, வலஞ்செய்
கங்கை பெறும் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 

கார் மேகத்தால் வாழ்பவர் காராளர் \ உழவர் 
அவர்களைப் போற்றும் கருவியாக இந்த 70 பாடல்களும் பாடப்படுகின்றன. 
இதனை உரைக்க ஆனைமுகன் தாள்களைப் பணிவாம் 
உமை தழுவும்போது அவளது வளையல் தழும்பும், முலைத் தழும்பும் பெற்றவன் சிவன். 
அவன் மங்கை மங்கை உருவமும் சேர்ந்து அமையும் அம்மையப்பராக இருக்கிறார். 
அவரை வலம் செய்தவன் இந்த ஆனைமுகன் 
அவர் நீர்த் துறையில் அமர்ந்திருக்கிறார் 
அகன்ற உருவில் இருக்கிறார் 
விகடம் \ நல்ல மதம் \ அறிவு நீர் தந்துகொண்டிருக்கிறார்


நிறைக்குரிய அந்தணர்கள் நெறிபரவ, மநுவிளங்க,
தறைக்குரிய காராளர் தமதுவரம்பு இனிதோங்க,
மறைக்குரிய பூமனையும், வண்டுளபத் தாமனையும்,
பிறைக்குரிய நெடுஞ்சடிலப் பெம்மானை யும், பணிவாம். 

அந்தணர் நெறியைப் போற்றவும் 
மனுநெறி விளங்கவும் 
வாழ்பவர் காராளர் 
இவர்களின் எல்லை இனிதே ஓங்க,
மறை ஓதும் பூமன் \ பிரமன்
துளசி மாலையன் \ திருமால் 
தலையில் பிறை சூடியவன் \ சிவன் 
மூவரையும் பணிவாம் 


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி