Showing posts with label உலகநீதி. Show all posts
Showing posts with label உலகநீதி. Show all posts

Tuesday, 2 February 2016

நூற்பயன் உலகநீதி UlagaNiti 13


 • உலகநாதன் பாடிய உலகநீதி இது.
 • ஆறுமுகப் பெருமானைப் பாடுவதற்காகச் சொல்லப்பட்ட கருத்துக்கள் இவை.
 • இதனை ஏற்றுக்கொண்டு, சொல்லப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து உணர்ந்து, நூலின்மீது காதல் கொண்டு, கற்றவர்களும், சொல்லக் கருத்துடன் கேட்டவர்களும் அறிவுநலம் பெற்று, மகிழ்வோடும், புகழோடும்  இந்த நிலவுலகம் உள்ள வரையில் நிலைபெற்று வாழ்வர். 

பாடல்

ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பி னோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமேபாடல் 13

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
கேட்டல்


Monday, 1 February 2016

கூறாக்கி உலகநீதி UlagaNiti 12

 • ஒன்றுபட்டிருந்த குடும்பத்தை கூறு கூறாகத் துண்டுபடும்படிச் செய்து கெடுக்கக் கூடாது.
 • தேடிக் கொண்டுவந்து பூவைக் கொண்டையில் முடிந்துவிடக் கூடாது. (ஆண்கள் வேசியர்க்கு முடிந்துவிடக் கூடாது என்றும், பூ முடிந்துகொண்டு ஆண்களை மயக்குவது வேசியர் தொழில் என்றும் பொருள் காண்பர்)
 • பிறர் குடும்பத்தில் தலையிட்டுக் குழப்பம் விளைவிக்கக் கூடாது.
 • துடுக்குத்தனத்துடன் திரிபவரோடு சேரக் கூடாது.
 • ஆற்றல் மிக்க தெய்வத்தைப் பழிக்கக் கூடாது.
 • வெற்றிப்பேறு கொண்ட பெரியோரை வெறுக்கக் கூடாது.

மாறுபட்ட வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் குறவர் குலப்பெண் வள்ளியின் பங்காளனாக விளங்கும் மயிலேறும் பெருமானை, நெஞ்சே! நீ வாழ்த்து.  

பாடல்

கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 12

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
பட்டவன் | குடித் தெய்வம் | வீறான தெய்வம்

ஊர்க் காவல் தெய்வம் | வீறான தெய்வம் 

அஞ்சுபேர் உலகநீதி UlagaNiti 11

ஐந்து பேருக்குத் தரும் கூலியைத் தராமல் ஏமாற்றி வைத்துக்கொள்ளக் கூடாது.
அவை எவை என்று சொல்கிறேன், கேளுங்கள்.
 1. தஞ்சமடைந்து துணிகளைத் துவைத்துத் தந்த வண்ணான் கூலி
 2. முடி திருத்தம் செய்த நாவிதன் கூலி
 3. எல்லாக் கலைகளையும் கற்பித்த ஆசிரியன் கூலி
 4. பிள்ளைப்பேறு காலத்தில் உதவி தாயும் குழந்தையும் பிணைந்திருந்த நஞ்சுக்கொடியை அறுத்த மருத்துவச்சி கூலி
 5. நோயின் பெருந் துன்பத்தைப் போக்கிய மருத்துவன் கூலி
இனிய சொற்களைப் பேசி இவர்களுடைய கூலியைக் கொடுக்காத பேரை எமன் என்னென்ன கொடுமைகள் செய்வானோ

பாடல்

அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎனின்நீ சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்தன் கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்தன் கூலி
இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதுஏது செய்வானோ ஏமன் தானேபாடல் 11

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
நஞ்சறுக்கும் மருத்துவம் | தாய் வயிற்றில் தாயோடு ஒட்டிக்கொண்டிருந்த நஞ்சுக்கொடி


மறம் உலகநீதி UlagaNiti 10

 • வீராப்புப் பேசிக்கொண்டு திரிபவருடன் சேரக்கூடாது.
 • வாதாடி வாதாடி வழக்கில் அழிவு தரும் நீதி சொல்லக் கூடாது.
 • வாய்த்திறமையால் கலகம் மூட்டக் கூடாது.
 • தெய்வத்தை மறக்கக் கூடாது.
 • சாக நேர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது.
 • ஏசிப் பேசிய உறவினரிடம் நயந்து போகக் கூடாது.

நெஞ்சே! குறி சொல்லி வாழும் வள்ளியின் பங்காளனாக விளங்கும் குமரவேள் பெயரைச் சொல்.

பாடல்

மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே - பாடல் 10

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதிமண் உலகநீதி UlagaNiti 9

 • மண்ணிலே நின்றுகொண்டு மண் உடைமைக்கு ஓரவஞ்சனை பேசக் கூடாது.
 • செயலாற்றும்போது மனம் சலித்துக்கொள்ளக் கூடாது.
 • அழுது காட்டிச் சாதிக்கக் கூடாது.
 • காணாதவற்றை இட்டுக்கட்டிப் பேசக் கூடாது.
 • மனம் புண்ணாகும்படிப் பேசக் கூடாது.
 • பிறரைப் பற்றிப் புறம் சொல்பவரோடு சேரக் கூடாது.

நெஞ்சே! மாவலி ஆண்ட உலக மண்ணை அளந்த பெருமாளின் தங்கையாகிய உமையம்மையின் மகனாகிய எம் கோமகன் மயிலேறும் பெருமாளை வாழ்த்து.

பாடல்

மண்ணின்று மண்ணோரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக்கட் டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்ணளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 9

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
அழுகை


சேராத உலகநீதி UlagaNiti 8

 • முன்பின் பழக்கமில்லாத இடத்தில் வாழக்கூடாது.
 • உதவியை எந்த நாளும் மறக்கக் கூடாது.
 • ஊரைக் கெடுப்பவனாக வாழக் கூடாது.
 • உறவினர்களைப் பொறுப்பற்றவர் என்று பேசக் கூடாது.
 • நற்புகழ் தேடித்தரும் செயல்களைக் கைவிடக் கூடாது.
 • பிழைக்குத் துணைபோகக் கூடாது.

நெஞ்சே! குறவர் மகள் கச்சணிந்த வள்ளி பங்காளன் மயிலூர்திப் பெருமானை வாழ்த்து.

பாடல்

சேராத இடம்தனிலே சேர வேண்டாம்
செய்தநன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 8

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதிகருதாமல் உலகநீதி UlagaNiti 7

 • எண்ணிப்பார்க்காமல் செயல்களை நிறைவேற்றக் கூடாது.
 • தப்புக் கணக்குப் போட்டுப் பேசக் கூடாது.
 • போர்க்களம் சென்று வேடிக்கை பார்க்கக் கூடாது.
 • பொதுநிலத்தில் வீடு கட்டக் கூடாது.
 • இரண்டு மனையரைத் தேடிக்கொள்ளக் கூடாது.
 • எளியவர்களை எதிர்த்து நிற்கக் கூடாது.

நெஞ்சே! குருகுகள் மேயும் புனத்தை காக்கும் ஏழையாகிய வள்ளி பக்கம் வாழும் குமரவேள் திருவடிப் பெருமைகளைப் பேசு.

பாடல்

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே - பாடல் 7

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
போர்க்களம் 


வார்த்தை உலகநீதி UlagaNiti 6

 • பாராட்டுபவர் வாயைப் பார்த்துக்கொண்டு திரியக்கூடாது.
 • மதிக்காதவர் வீட்டுப்பக்கம் காலடியே வைக்கக் கூடாது.
 • பட்டறிவில் மூத்தவர் சொல்லிவைத்த சொற்களை மறக்கக் கூடாது.
 • முன்கோபம் வருபவர்களோடு சேரக்குடாது.
 • ஆசிரியர் கூலியில் குறை வைக்கக் கூடாது. (பணம் கொடுத்துக் கல்வி பயின்ற காலம்)
 • வழிப்பறி செய்பவர்களோடு சேரக் கூடாது.

நெஞ்சே! வள்ளிக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் புகழாளனான வேலாயுதன் புகழைச் சொல்.   

பாடல்

வார்த்தைசொல்வார் வாய்பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார்கூ லியைவைத் திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புக ழாளன்ஒரு வள்ளி பங்கன்
திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே - பாட்டு 6

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
புகழ் 


வாழாமல் உலகநீதி UlagaNiti 5

 • தன் மனைவியை வைத்துக்கொண்டு குடித்தனம் நடத்தாமல் பிற பெண்களைத் தேடி அலையக் கூடாது.
 • தன் மனைவியைப் பற்றி ஒரு குற்றமும் சொல்லக் கூடாது.
 • மனைவியைப் பற்றிக்கொண்டு நல்லவர்கள் விரும்பாத வாழ்க்கைப் படுகுழியில் விழக்கூடாது. (வீழாத படுகுழி = பிணக்குழி எனலும் ஆம்)
 • கொடிய போரில் புறமுதுகு காட்டி ஓடிவரக் கூடாது.
 • தாழ்ந்த பண்புள்ள குலத்தவருடன் சேரக் கூடாது.
 • வறுமையுற்றுத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள்மீது இல்லாதும் பொல்லாதுமான சொற்களைச் சொல்லக்கூடாது.  

நெஞ்சே! வள்ளிக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் மயிலேறும் பொருமான் முருகனை வாழ்த்திக்கொண்டிரு.
வாழ்வு பெருகும் குறவர் மகள் வள்ளி. 

பாடல்

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம்ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 5


உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
வைப்பாட்டி 


Sunday, 31 January 2016

குற்றம் உலகநீதி UlagaNiti 4

 • பிறர் குற்றத்தைப் பாராட்டிக்கொண்டு அலையக் கூடாது.
 • கொலை, களவு முதலான தீய செயங்களைப் புரிபவரோடு சேரக் கூடாது.
 • கல்வி கற்றவரைப் பழிக்கக் கூடாது.
 • கற்பு நெறியில் வாழும் பெண்ணை மாற்றான் எவனும் அடைய நினைக்கவும் கூடாது.
 • அரசனை எதிர்த்துப் பேசக் கூடாது.
 • வழிபடும் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது.

நெஞ்சே! வள்ளிக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் மயிலேறும் பொருமான் முருகனை வாழ்த்திக்கொண்டிரு.
பத்தரை மாற்றுத் தங்கம் போல் இணையில்லா மாற்றுத்திறன் கொண்ட குறவர் மகள் வள்ளி. 

பாடல்

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில்குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 4
கோயில்

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி


மனம் உலகநீதி UlagaNiti 3


 • மனம் போன வழி எல்லாம் போய் மனத்தை அலைய விடக் கூடாது.
 • பகைவனை உறவுக்காரன் என்று நம்பிவிடக் கூடாது.
 • பணம் சம்பாதித்து உண்டு மகிழாமல் மறைத்துப் புதைத்து வைக்கக் கூடாது.
 • அறம் செய்யவேண்டும் என்னும் நினைவோட்டத்தை மறந்துவிடக் கூடாது.
 • கோபத்தை வரவழைத்துக்கொண்டு அதனால் வரும் துன்பத்தையும் வரவழைத்துக் கொள்ள வேண்டாம்.
 • கோபத்தோடு இருப்பவர் பக்கமே போகக் கூடாது.
நெஞ்சே! வள்ளிக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் மயிலேறும் பொருமான் முருகனை வாழ்த்திக்கொண்டிரு.
காட்டைத் தேடி வாழும் குறவர் மகள் வள்ளி. 

பாடல்

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே - பாடல் 3

உலகநாதன் (18 ஆம் நூற்றாண்டு) பாடிய உலகநீதி
மனம் போகும் போக்கு 


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி