Showing posts with label இறையனார் அகப்பொருள். Show all posts
Showing posts with label இறையனார் அகப்பொருள். Show all posts

Wednesday, 27 November 2019

இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 60

களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர்
உள நிகழ் அன்பின் உயர்ச்சி மேன

இங்குக்
களவு, கற்பு என்று கருதுவது
உள்ளத்தில் நிகழ்வதோர்
அன்பின் உயர்வின்மீது கொள்ளப்படும் 
ஒழுக்கக் கோட்பாடு


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 59


முற்படக் கிளந்த பொருட்படைக் கெல்லாம்
எச்சம் ஆகி வரும்வழி அறிந்து
கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும்
கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே

முன்னே சொல்லப்பட்ட
உரை பொருள் படைப்புக்கள் எல்லாவற்றிற்கும்
எச்சம் ஆகி
மேலும் சில வருவனவற்றை அறிந்து
சொல்லப்படாத வேறு பல தோன்றினாலும்
அவற்றையும்
சொல்லப்பட்டனவற்றோடு சேர்த்து உணர்ந்துகொள்ள வேண்டும்


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 58


சொல்லே குறிப்பே ஆயிரண் டெச்சம்.

உரையில் சொல்லப்படாமல் விடுபடும் எச்சம்
சொல்லெச்சம்
குறிப்பெச்சம்
என்று இரண்டு வகைப்படும்.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 57


அவற்றுள்
எச்சமும் கோளும் இன்மையும் உரிய.

உரை சொல்வோர் காட்டும் 10 நிலைப்பாடுகளில்
உரைக்காமல் உணர்ந்துகொள்ளும்படி விடப்பட்ட எச்சம்
குறித்துக்கொள்ள வேண்டிய கோட்பாடு
ஆகியவை சொல்லப்படாமல் விடுபடலும் உண்டு.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 56


திணையே கைகோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் எச்சம் மெய்ப்பாடு
பயனே கோளென் றாங்கப் பத்தே
அகனைந் திணையும் உரைத்தல் ஆறே

அகப்பொருள் ஐந்திணைப் பாடல்களுக்கு உரை தருபவர்கள்
  1. திணை – (5 திணைகளில் இது எது)
  2. கைகோள் – (களவா, கற்பா – எந்த ஒழுக்கம்)
  3. கூற்று – (சொல்வது யார்)
  4. கேட்போர் – (கேட்பது யார்)
  5. இடம் – (எந்த இடத்தில் இருந்துகொண்டு கூறுகிறார்)
  6. காலம் – (எப்போது கூறுகிறார்)
  7. எச்சம் – (எதற்காகக் கூறுகிறார்)
  8. மெய்ப்பாடு – (அவர் கூறுவதில், நகை, அழுகை - - - முதலான 8 வகை மெய்ப்பாடுகளில் எந்த மெய்ப்பாடு தோன்றுகிறது)
  9. பயன் – (இதனை அவர் சொல்வதால் விளையும் பயன் என்ன)
  10. கோள் - (இந்தக் கூற்றின் குறிக்கோள் என்ன)
என்று 10 நிலைகளையும் சுட்டிக் காட்டிப் பொருள் உரைக்க வேண்டும்.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 55


சிறைப்புறம் குறியா தோன்றலும் உளவே
அவற்புணர் வறியும் குறிப்பின் ஆன

பிரிந்து செல்லும் தலைவன் விரைவில் திரும்பித்
தலைவியைப் புணர்வான் என்னும் தெளிவு பிறக்கும்போது
வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று
பிரிய வேண்டா என்று கூறாமல்
ஒப்புக்காக, தலைவி முன்னிலையில் வற்புறுத்துவர்.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 54


வன்புறை குறித்த வாயில் எல்லாம்
அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற்
சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர்

வாயில்கள்
பிரிய வேண்டா என்று தலைவனை வற்புறுத்தும்போது
தலைவன் மீது அன்பு காட்டாத உரையாக இருக்குமானால்
தலைவி முன் தலைவன் இருக்கிம்போது கூறாமல்
வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று
கடுஞ்சொற்களால் வன்புறுத்துவர்.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 53


எல்லா வாயிலும் கிழவோன் பிரிவயின்
பல்லாற் றானும் வன்புறை குறித்தன்று

தோழி, பாணன் முதலானோர் அகத்திணை வாயில்கள்
தலைவன் தலைவியை விட்டுப் பிரிய நேரும்போது
பிரிய வேண்டா என்று வற்புறுத்திக் கூறுவர்.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 52


நிலம்பெயர்ந் துறையும் எல்லாப் பிரிவும்
ஒழிந்தோர் அறியவும் அறியா மையும்
கழிந்துசேட் படூஉம் இயற்கைய என்ப

தலைவன் நிலத்தை விட்டு வேறு நிலத்துக்குச் சென்று வாழும் பிரிவு தோன்றின்,
நால்வகைப் பிரிவில் எந்தப் பிரிவு ஆனாலும்,
தலைவி, தோழி ஆகியோரைத் தவிர, பிறர்
அறியும் நிலையிலும்,
அறியாமல் இருக்கும் நிலையிலும்
நிலம் கடந்து சென்று வாழும் நிலையை மேற்கொள்வான்.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 51


நிலம்பெயர்ந் துறையும் நிலையியல் மருங்கின்
களவுறை கிளவி தோன்றுவ தாயின்
திணைநிலைப் பெயர்க்கோள் கிழவற்கும் வரையார்

திணைநிலைப்பெயர் என்பது நிலத்திணையால் பெறும் பெயர்

குன்றநாடன், கானவன், ஊரன், சேர்ப்பன் என்பன முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலத்திணை மக்களுக்கு வழங்கும் பெயர்.
அகப்பொருள் பாடல்களில் தலைவனின் பெயரைச் சொல்வதில்லை.
தலைவன் வேறு நிலப்பகுதிக்குச் சென்று வாழும் காலத்தில் தலைவி உரை வரும்போது இத்தகைய திணைநிலைப் பெயரால் தலைவனைக் குறிப்பிடுவாள்.
களவு-ஒழுக்கத்தில் ஒருவழித் தணத்தல் நிகழும்போது இவ்வாறு தலைவன் பெயரைக் குறிப்பிடுவாள்

கிழவன் = தலைவன், கிழத்திக்கு உரியவன், உரியவளுக்கு உரியவன்




இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 50


உணர்ப்புவயின் வாரா ஊடல் தோன்றிற்
புலத்தல் தானே கிழவற்கும் வரையார்

தலைவி ஊடுவாள்
தலைவன் அவள் ஊடலைத் தீர்க்க உணர்த்துவான்
தலைவி உணர்ந்துகொள்ளாமல் மேலும் பிணக்கிக்கொண்டே இருந்தால்
தலைவனும் ஊடல் கொள்வதை விலக்க முடியாது.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 49


அவன்வயின் கிளப்பின் வரைவின் பொருட்டே

தலைவி தலைவனின் நாட்டைப் பற்றியும், ஊரைப் பற்றியும், இல்லத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசனால், அவன் அதற்குத் தக தன்னை வரையறுத்து நடந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பால் உணர்த்தியதாக எடுத்துக்கொள்ள வேண்டும்


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 48


நாடும் ஊரும் இல்லும் சுட்டித்
தன்வயின் கிளப்பின் புலவிப் பொருட்டே

தலைவி தன் நாட்டைப் பற்றியும், ஊரைப் பற்றியும், இல்லத்தைப் பற்றியும் புகழ்ந்து பேசினால், அதனை ஊடல் என்று கணவன் எடுத்துக்கொள்ள வேண்டும்.


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 47


கிழவோன் முன்னர்க் கிழத்தி தற்புகழ்தல்
புலவிக் காலத்தும் புரைவ தன்றே.

தலைவன் முன் தன்னைப் புகழ்ந்து பேசுதல்
தலைவனோடு ஊடல் கொள்ளும் காலத்திலும் இல்லை

இதனால் தலைவியின் பெருமை உணரப்படும்


Tuesday, 26 November 2019

இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 46


கொடுமை இல்லைக் கிழவி மேற்றே

தலைவிமீது கொடுமை சார்த்தப்படுவது இல்லை


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 45


புகழும் கொடுமையும் கிழவோன் மேன

தக்கான் எனப் போற்றப்படுதலும்
தகைமை இல்லாதவன் கொடுமை கூறப்படுதலும்
தலைவன் மேல் சாற்றிப் பேசப்படும்


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 44


கற்பினுட் பிரிந்தோன் பரத்தையின் மறுத்தந்து
'அப்பொருட் படுப்பினும் வரை நிலை இன்றே

மணவாழ்க்கை நடத்தும் தலைவன்
பிரிந்து சென்று பரத்தையுடன் வாழும் தலைவன்
பரத்தையிடமிருந்து மீண்டு வந்து
மீண்டும் மனைவியுடன் கற்பு வாழ்க்கையை மேற்கொள்வதும்
விலக்கப்படாது


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 43


பரத்தையிற் பிரிந்த கிழவோன் மனைவி
பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறைதல் அறத்தா றன்றே

பரத்தை இன்பத்துக்காகப் பிரிந்து செல்லும் தலைவன்
மனைவி மாதந்தோறும் பூப்படையும் நாளிலிருந்து
12 நாள்
மனைவியை விட்டு விலகிச் செல்ல மாட்டான்


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 42


பரத்தையிற் பிரிவே நிலத்திரி பின்றே

பரத்தை இன்பத்துக்காக நாட்டை விட்டு நாட்டுக்கோ, ஊரை விட்டு ஊருக்கோ பிரிந்து செல்வது இல்லை


இறையனார் களவியல் Iraiyanar kalaviyal 41


பிரிவின் நீட்டம் நிலம்பெயர்ந் துறைவோர்க்கு
உரிய தன்றே யாண்டுவரை யறுத்தல்

தலைவன் ஊரை விட்டு ஊர் போய் பிரியும் பிரிவிற்குத் திரும்பி வரும் காலத்தை உறுதிபடுத்தித் தலைவிக்குச் சொல்வான்.

திரும்பும் நாள் அல்லது மாதம் அல்லது பருவம் இது என்று குறிப்பிட்டுச் சொல்வான்.

உரியதன்று – உடன்பாட்டு வாய்பாடு


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி