Showing posts with label இரட்டைப்புலவர். Show all posts
Showing posts with label இரட்டைப்புலவர். Show all posts

Saturday, 7 November 2015

இரட்டைப்புலவர் தமிழ்மாறனிடம் சென்றது

இராமனும் இலக்குவனும்
தமிழ்மாறன் என்னும் பாண்டிய மன்னனும் அவனது தம்பியும் வீரத்திலும் கொடையிலும் சிறந்தவர்களாக விளங்கினர்.
இரட்டையர் இருவரும் அவர்களைக் காணச் சென்றனர்.

கவி என்னும் சொல் கவிஞரையும் குரங்கையும் குறிக்கும்.
இந்தச் சொல்லை வைத்துக்கொண்டு மாறனின் அமைச்சன் மன்னர் நல்கும் கொடையைத் தடுக்க முயன்று விளையாடினான்.
பாடலாகப் பாடினான்.

பழமையான கவிப்புலவர்களே! அற்பக் குரங்குகளே! மராமரத்தை விடுவிட்டு இங்கே ஏன் வந்தீர்கள் – என்றான். குரங்கினத் தலைவன் வாலி ஏழு மராமரங்களைக் காவல்மரமாகக் கொண்டவன். மராமரத்தை விட்டுவிட்டுக் குரங்குகள் வந்தது என்ன காரணமோ – என்றான்.

''புராதன மான கவிப் புலவீர் இந்தப் புன்குரங்கு
மராமரம் விட்டிங்கு வந்ததென் னோ

தமிழ்மாறனையும் அவன் தம்பியையும் இராமனும் இலக்குவனும் என்று எண்ணிக்கொண்டு வந்தோம் என்று இரட்டையருள் ஒருவர் பாடினார்.

அந்தப் பாடல்
கட்டளைக் கலித்துறை

''புராதன மான கவிப்புல வீரிந்தப் புன்குரங்கு
மராமரம் விட்டிங்கு வந்ததென் னோவந்த வாறுசொல்வேன்
தராதல மன்னுந் தமிழ்மா றனையுந்தன்  றம்பியையும்
இராகவ னென்று மிலக்குவ னென்றும்வந் தெய்தியதே'' 

இரட்டைப்புலவர் அம்மானைப் பாடல்

அம்மானை விளையாட்டு
இரட்டைப் புலவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்த  ஆமிலந்துறை  என்ற  ஊரில் பிறந்து  வாழ்ந்தவர்கள். இப்படி ஒரு செய்தி.
கொங்குநாடு என்று கொங்குமண்டலச் சதகம் கூறுகிறது.

இவர்கள் பாடிய அம்மானைப் பாடல்கள் சிலேடை நலம் மிக்கவை.

அம்மானை என்பது மூன்று பேர் வட்டமாக அமர்ந்துகொண்டு நான்கு பந்துகளைப் பக்கத்தில் இருப்பவரிடம் தூக்கிப் போட்டு பந்து கீழே விழாமல் விளையாடும் ஒருவகை விளையாட்டு. மூவரும் ஒவ்வொருவராகப் பாடிக்கொண்டே அம்மானைப் பந்துகளையும் ஆடவேண்டும்.

இப்படி அம்மானை ஆடும் பாடல்தான் அம்மானைப் பாடல்.


தென் புலியூர்த் தில்லைச்சிற் றம்பரத்தே
வெம்புலியொன் றென்நாளும்  மேவுங்காண் அம்மானை
வெம்புலியொன் றென்நாளும் மேவுமே  யாமாகில்
அம்பலத்தை விட்டே  அகலாதோ அம்மானை !
ஆட்டைவிட்டு வேங்கை அகலுமோ அம்மானை

வியாக்கிர பாதர் என்பவர் ஒரு சித்தர்.
அரிய வகைப் புத்தம்புது பூக்களால் சிவபெருமானை பூசனை செய்துவந்தார்.
பூக்களை மரத்தில் ஏறிப் பறிப்பதற்காக புலிக்கால் நகங்களைச் சிவபெருமானிடம் வரமாப் பெற்றார்.
அதனால் அவரைப் புலிக்கால் முனிவர் என்றனர்.
இவர் தென்புலியூர் கோயிலிலேயே தங்கிவிட்டார்.

பாடல் சொல்கிறதுந
தில்லை (சிதம்பரம்) சிற்றம்பலத்தில் விரும்பதக்க புலி வாழ்கிறது – அம்மானை
அது அம்பலத்தை விட்டு அகலாதோ – அம்மானை
ஆட்டை விட்டு வேங்கை அகலுமோ – அம்மானை
சிவபெருமான் ஆட்டத்தைக் காண்பதை விட்டுவிட்டு வேங்கைப்புலி அகலுமோ
ஆடு = ஆடுதல்
ஆடு = ஆடு என்னும் விலங்கு
ஆட்டைப் பிடித்துத் தின்னுவதை விட்டுவிட்டு வேங்கைப்புலி அகலுமோ?
இப்படி இரட்டுற மொழியப்பட்ட பாடல் இது.

மற்றொரு அம்மானைப் பாடல்
கச்சி ஏகாம்பர நாதரைப் பாடிய கலம்பகத்தில் உள்ளது.

ஏகாம்பரம் = ஏக அம்பரம் = ஒரே வானவெளி = ஒரே ஆகாசம்
ஆகாயமே சிவபெருமான் மேனி.
காஞ்சி காமாட்சி எகாம்பர நாதரைத் தழுவினாள்.
அவளது முலை ஏகாம்பரர் மார்பில் வடுவை உண்டாக்கிவிட்டது.
இது கதை.

ஆகாயத்தில் காயம் உண்டாக்கமுடியாதே.
எப்படி வடுப் பட்டது? – இது வினா

ஏகாம்பர நாதர் கோயில் காவல்மரம் மாமரம்.
மாமரத்தடியில் மாவடு விழாதா என்பது விடை.

வடு = தழும்பு – சிவபெருமான் கதையில்
வடு = மாவடு – கோயில்மரம் (தல விருட்சம்)

எண்ணரிய காஞ்சில்வாழ் ஏகாம்பர நாத
அண்ணல்திரு மேனிஎங்கும் ஆகாசம் அம்மானை!
அண்ணல்திரு மேனியெங்கும் ஆகாசம் மாயின்
வண்ணமுலை மார்பில் வடுப்படுமோ அம்மானை?
மாவடியில் வாழ்பவருக்கு வடுவரிதோ அம்மானை! 


இரட்டைப்புலவர் உறவுமுறை

கொங்குநாடு
செங்குந்தர் பிரபந்தத் திரட்டு என்னும் நூலிலுள்ள ஒருபாடல் இரட்டையர் இருவருக்கும் இடையே உள்ள உறவுமுறையைக் குறிப்பிடுகிறது.
குருடர் முடவருக்கு அத்தைமகன்.
முடவர் குருடருக்கு அம்மான் மகன்
அத்தையுடன் பிறந்தவனை அம்மான் என்பது உறவுமுறை.
குருடன் முடவனைச் சுமந்துகொண்டு கீழே இருப்பார்.
முடவன் குருடன் தோள்மேல் ஏறிக்கொண்டு மேலே இருப்பார்.
இவர்கள் இருவரும் ஒத்து உரைத்துக் கூறும் பாட்டு அணி கொண்டதாக இருக்கும். என்றும் காயாத ஈரமுள்ளதாக இருக்கும்.
இவர்கள் அறிவு முதிர்ந்த முத்தராக விளங்கினர்.
காஞ்சி ஏகாம்பர நாதர் மேல் உலா நூல் பாடினர். அது ‘ஏகம்பர் உலா’ என்னும் பெயரில் வழங்கிவந்தது.
இவர்கள் மனம் போன வழியெல்லாம் திரியும் சித்தர்களாகவும் விளங்கினர்.
இவர்கள் இருவரும் செங்குந்தர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.
கொங்கு நாட்டில் பிறந்தவர்கள்.

இந்தச் செய்திகள்ளைக் கூறும் பாடல்

''அத்தை மகன்குரு டம்மான் மகன்முட மாகிக்கீழ்மேல்
ஒத்துறைந் தேகூறு பாடோ(டு) அணிகொள் உலப்பில்கவி
முத்தரில் ஓதிஏ கம்பர் உலாமுன் மொழிந்தவரும்
சித்தம் உவப்பத் திரிந்தோர் செங்குந்த சிலாக்கியரே''


இரட்டைப்புலவர் இடர்

இரட்டைப்புலவர் இருவரும் குன்றும் குழியுமாக இருந்த வழியில் சென்றுகொண்டிருந்தனர். முடவரைச் சுமந்து செல்லும் குருடர் பாடினார்.

''குன்றும் குழியும் குறுகி வழிநடந்து
சென்று திரிவது என்றும் தீராதோ
என்றார்

முடவர் விடை சொல்லிப் பாடி முடிக்கிறார்.
ஒன்றும்
கொடாதானைக் காவென்றும் கோவென்றும் கூறின்
இடாதோ நமக்கு இவ் இடர்''
என்றார்.
ஒன்றுமே கொடுக்காதவனைக் காப்பாற்றுபவன் என்றும், அரசன் என்றும் கூறினோமே அந்தப் பொய்யால் நமக்கு இடர் வராதோ – என்கிறார்.


வெண்பா
''குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
சென்று திரிவதென்றுந் தீராதோ-ஒன்றுங்
கொடாதானைக் காவென்றுங் கோவென்றுங் கூறின்
இடாதோ நமக்கிவ் விடர்''

இரட்டைப்புலவரும் காளமேகப் புலவரும்

நினைத்ததும் பாடுவது ஆசுகவி. இப்படி ஆசுகவி பாடுவதில் காளமேகப்புலவர் வல்லவர்.

திருவாரூர் சிவபெருமானை இரட்டையர் வழிபட்டனர்,
சிவபெருமானைப் போற்றிப் பாடத் தொடங்கினர்.
சிவபெருமான் முப்புரத்தை எரித்தான்.
அப்போது அவன் வில்லில் இருந்த நாண் ‘வாசுகி’ என்னும் நஞ்சுள்ள பாம்பு.
வில் மேருமலையாகிய கல்.
அம்பு ?
'நானென்றால் நஞ்சிருக்கும் நற்சாபங் கற்சாபம்
பாணந்தான்'
இப்படிப் பாடிய முடவருக்கு மேலும் பாட வரவில்லை.

அங்கிருந்த காளமேகப் புலவர்,
மண்தின்ற பாணமே
என்று பாடிப் பாடலை நடத்தினார்.
மண்ணைத் தின்றவன் திருமால். திருமாலை அம்பாக வைத்து எய்யத் தொடங்கினார்.
இதுதான் மண்தின்ற பாணம்.

அப்போது அம்பாக இருந்த திருமால் செருக்குற்றார். நான்தானே முப்புரங்களைத் தகர்க்கப்போகிறேன் – என்று எண்ணிப் பெருமை கொண்டார்.
இதனை உணர்ந்த சிவபெருமான் வில்லம்பைப் பயன்படுத்தாமல் தன் நெற்றிக்கண் பார்வையால் முப்புரங்களை எரித்தார். இது கதை.
இந்தப் பாடல் இந்தக் கதையைக் கூறிச் சிவபெருமானைப் போற்றுகிறது.

குருடர் தொடர்ந்தார்.
தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீ எப்படியோ
நேராரூர் செற்ற நிலை?'
இப்படிப் பாடிப் முடித்தார்.

முழுமையான பாடல்


'நானென்றால் நஞ்சிருக்கும் நற்சாபங் கற்சாபம்
பாணந்தான்' 'மண்தின்ற பாணமே" '- தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீ எப்படியோ
நேராரூர் செற்ற நிலை?'


பின்பு இரட்டைப்புலவர்கள் காளமேகப்புலவரின் ஆற்றலை வியந்து பாராட்டினர்.
அந்தப் பாடல்

முன்பகுதியை முடவர் பாடினார்.
வானளாவிப் புகழை விளைவிக்கும் காளமேகமே! மழைபொழியும் கருமேகமே! ’மண்தின்ற பாணம்’ என்று வாய் இனிக்கச் சொல்லித்தந்தாயே - என்றார்
'விண்தின்ற கீர்த்தி விளைகாள மேகமே
மண்தின்றபாணமென்று வாயினிக்க
என்றார்.

குருடர் பின்பாதியைப் பாடி முடித்தார்.
தடுமாற்றம் கண்டு பாடினாய்.
வெல்லப் பாகோடு தேன்சீனி இடக்கூடிய பாக்கியத்தை நாங்கள் பெறவில்லை.
கெடுவோம்
பாடல் வராமல் முக்கித் திணறி
அங்கு
(நீ பாடித்தராவிட்டால்) என்ன ஆகும்?
என்று பாடினார்.

இதுதான் பாடல்

'விண்தின்ற கீர்த்தி விளைகாள மேகமே
மண்தின்றபாணமென்று வாயினிக்கக்-கண்டொன்று
பாகொடுதேன் சீனியிடும் பாக்கியம்பெற் றோமிலையே
ஆகெடுவோ முக்கியங்கென் னாம்?'

இப்படிப் பாடிப் புகழ்ந்தனர். பின்னர் பிரியாவிடை பெற்றுப் பிரிந்தனர்.

காலவண்டி ஓடிற்று.
சில ஆண்டுகள் கழிந்தன.
இரட்டையர் திருவானைக்காவல் வந்து இறைவனை வழிபட்டு தங்களது பழைய நண்பரும் பெரும்புலவருமான காளமேகப்புலவரை சந்திக்க விரைந்தனர்.
அப்போது அவர் இல்லத்தில், "சற்று முன்னர்தான் அவருடைய உயிர்பிரிந்து உடல் சுடுகாட்டுக்குப் போய்விட்டது" எனக் கூறினர்.
இரட்டையர் அதிர்ச்சியுடன் சுடுகாட்டிற்கு வந்தனர்.
காளமேகப்புலவரின் உடலை நெருப்பு தின்றுகொண்டிருந்தது.
இரட்டையரின் நெஞ்சிலும் துயரத் தீ.

முன்பகுதியை முடவர் பாடினார். பின்பகுதியைக் குருடர் பாடி முடித்தார்.
இதுதான் அந்தப் பாடல்.

'ஆசு கவியால் அகில உலகெங்கும்
வீசு புகழ்க்காள மேகமே''-பூசுரா
விண்கொண்ட செந்தணல்வாய் வேகுதே ஐயையோ
’மண்தின்ற பாணம்’என்ற வாய்!'

மண் தின்ற பாணம் – என்ற வாய் வேகுதே – என்று கூவி அழுதனர்.

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி