Showing posts with label இன்னாநாற்பது. Show all posts
Showing posts with label இன்னாநாற்பது. Show all posts

Thursday, 30 June 2016

இன்னாநாற்பது InnaNarppatu 40

அடக்கம் உள்ளவன் வீரம் கொள்ளல் துன்பம்.
தன்னைப் பற்றிய தொடக்க அறிவே இல்லாதவன் வீறாப்பு துன்பம்.
அடைக்கலாமாக தந்த பொருளைத் திருடிக்கொள்ளுதல் துன்பம்.
அடக்கினால் அடங்காதவரிடம் அறிவுரை சொல்லுதல் துன்பம்.

பாடல்

அடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா,
அடக்க, அடங்காதார் சொல். 40
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 39

கடிக்கும் கழிப்பாக்கு
கொடுப்பதற்குப் பொருள் இல்லாதவன் கொடை வழங்குதல் துன்பம்.
கடிக்கும் பாக்கு கல்லாக இறுகி இருக்கிமாயின் துன்பம்.
பாடிய பாடலுக்குக் கொடை வழங்கப்படாவிட்டால் துன்பம்.
துன்பம் வரும்போது போக்க முயலாவிட்டால் துன்பம்.

பாடல்

கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா;
கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா;
கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா,
மடுத்துழிப் பாடா விடல்.                39
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 38

சேணம் பூட்டிய குதிரை
பிறன் மனைவியை அடையப் பின்தொடரும் பித்து துன்பம்.
வீரம் இல்லாத மன்னன் போரிடக் களம் புகுதல் துன்பம்.
சேணம் இல்லாமல் குதிரைமேல் ஏறுதல் துன்பம்.
செயலாற்றும் திறம் இல்லாதவன் செய்யும் செயல் துன்பம்.

பாடல்

பிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;
மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா;
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா,
திறன் இலான் செய்யும் வினை. 38
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 37

மணக்கும் மலர் பூக்காமல் இருப்பது துன்பம்.
ஆழம் தெரியாதவன் ஆற்றுத் துறையில் இறங்கிச் செல்லுதல் துன்பம்.
தெரியாதவனைக் கேள்வி கேட்டால் துன்பம்.
எளியவர் மேல் சினம் கொள்ளுதல் துன்பம்.

பாடல்

நறிய மலர் பெரிதும் நாறாமை இன்னா;
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;
அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,
சிறியார்மேல் செற்றம் கொளல். 37
                               
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 36

பொருள் இல்லாதவன் உதவி செய்ய விரும்புதல் துன்பம்.
ஓங்கி உயர்ந்த மாடி வீடு இருக்கிறது. ஆனால் அது நம் இல்லாவிட்டால் துன்பம்.
சமைக்கும் வீட்டை எதிர்பார்த்துக்கொண்டு காத்திருந்து உண்ணுதல் துன்பம்.
கேடு வரும்போது கைவிட்டு நீங்குவார் நட்பு துன்பம்.

பாடல்

பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;
நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா;
அடு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா,
கெடும் இடம் கைவிடுவார் நட்பு. 36
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

Wednesday, 29 June 2016

இன்னாநாற்பது InnaNarppatu 35

மேகம் மழை பொழியாவிட்டால் இந்த உலகில் உள்ளவர்களுக்கெல்லாம் துன்பம்.
குழலோசை இல்லாத வெறும் தாள ஓசை துன்பம்.
சொல்லத் தெரியாத குழந்தைக்கு நோய் வரின் துன்பம்.
அழகுடையவன் அறிவில்லாதவனாக இருந்தால் துன்பம்.

பாடல்

எழிலி உறை நீங்கின், ஈண்டையார்க்கு இன்னா;
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;
குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,
அழகுடையான் பேதை எனல். 35

கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 34

ஒழுக்கமே இல்லாதவருக்கு உறவுக்காரர் என்று சொல்லிக்கொள்ளுதல் துன்பம்.
விரும்பாதவர்களுக்கு நூல் எத்தகைய சிறப்புடையதாயினும் தருவது துன்பம்.
இழிதொழில் புரிபவருடன் நட்பு கொள்ளல் துன்பம்.
வயிற்றுப் போக்கு, வாந்தி வரின் துன்பம்.

பாடல்

ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;
விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;
இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,
கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு. 34
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 33


  1. கள்ளுண்டு களித்திருப்பவன் சொல்லும் அறிவுரை துன்பம்.
  2. முள்ளுக் காட்டில் நடத்தல் துன்பம்.
  3. குருதி வெள்ளம் படுமாறு வளர்ப்பு விலங்குகளைக் கொல்வது துன்பம்.
  4. நெஞ்சில் கள்ளத்தனம் வைத்திருபவரோடு தொடர்பு வைத்துக்கொள்வது துன்பம். 
பாடல் 

கள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா;
முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா;
வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா,
கள்ள மனத்தார் தொடர்பு
. 33                                                     


கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 32

ஒருவன் அவனையே காப்பாற்றிக்கொள்ளாமல் நடந்துகொள்ளுதல் பெரிதும் துன்பம்.
ஒருவரைப் பற்றி அவர் முன்னிலையில் சொல்லாமல் அவர் இல்லாதபொழுது சொல்லுதல் துன்பம்.
பெருந்தன்மையாக நடந்துகொள்ளாதவர்ரோடு தொடர்பு வைத்துக்கொள்ளுதல் துன்பம்.
பழமையான நண்பர் கெடுதி அடைதல் துன்பம்.

பாடல்

தன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;
முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;
தன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா,
தொன்மை உடையார் கெடல். 32
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 31

பண் தெரியாமல் யாழில் பாடும் இசைப்பாடல் பெரிதும் துன்பம்.
கருவுற்று மாதவிடாய் நின்ற நாளை எண்ணத் தெரியாதவள் கூறுவது துன்பம்.
நீராடாத முழவோசை துன்பம்.
நல்ல குணத் தன்மை இல்லாதவரின் பகைமையும் துன்பம்.

பாடல்

பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா;
மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா,
தன்மை இலாளர் பகை. 31
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

Tuesday, 28 June 2016

இன்னாநாற்பது InnaNarppatu 30

உயர்ந்த மரத்தின் நீண்ட கிளையிலிருந்து நீரில் பாய்தல் துன்பம்.
சினம் மிக்க யானையை எதிர்த்து அதன் முன் நிற்றல் துன்பம்.
பாம்பு குடியிருக்கும் வீட்டில் வாழ்தல் துன்பம்.
புலி வாழும் காட்டு வழியில் செல்லுதல் துன்பம்.

பாடல்

நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;
கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;
ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,
கடும் புலி வாழும் அதர். 30

கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 29

தறி அறிந்தவர் நீரில் பாய்தல்
ஆட்டும் குறி தெரியாதவன் பாம்பை ஆட்டுதல் துன்பம்.
நீரில் மிதக்கத் தெரியாதவன் நீரில் பாய்தல் துன்பம்.
அறிவில்லாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பம்.
மனத்தில் செறிவாக வைத்துக்கொள்ளாதவன் கேட்ட மறைபொருள் துன்பம்.

பாடல்

குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;
தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;
அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,
செறிவு இலான் கேட்ட மறை. 29
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 28

கற்றவர் ஊரும் கலிமா
சவாரி செய்யத் தெரியாதவன் குதிரையேறுதல் துன்பம்.
வல்லமை இல்லாதவன் சொல்லும் சொல்லின் பயன் துன்பம்.
பொருள் இல்லாதவர் சொல்லும் சொல்லின் நயம் எடுபடாத துன்பம்.
கற்ற அறிவு இல்லாதவன் அவையில் தோன்றுதல் துன்பம்.

பாடல்

கல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;
இல்லார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,
கல்லாதான் கோட்டி கொளல். 28
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 27

பெருந்தன்மை உடையவரின் பெருமையைச் சீரழித்தல் துன்பம்.
உரிமை உடையவரை மதிக்காமை துன்பம்.
செல்வம் இல்லாதவரின் அழகு துன்பம்.
இளமைக் காலத்தில் மூத்தோரின் தளர்வு வருதல் துன்பம்.

பாடல்

பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;
கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;
வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,
இளமையுள் மூப்புப் புகல்.             27
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 26

பெருந்தன்மை வாய்ந்தவர்களோடு வைத்திருந்த தொடர்பு விடுபட்டுப்போதல் துன்பம்.
‘செயற்கரிய செய்வேன்’ எனக் கூறுதல் துன்பம்.
இரக்கம் இல்லாதவர்களுக்குப் பங்கு கொடுத்தல் துன்பம்.
பண்பில் பெரியவருக்குத் தீங்கிழைத்தல் துன்பம்.

பாடல்

பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;
அரியவை செய்தும்!’ என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல். 26
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 25

பாண்டவர் கவறு ஆட்டம் \ சூது ஆட்டம்
நண்பர் துன்புறுவதைக் காண்பது துன்பம்.
பகைவரின் பெருமிதத்தைப் பார்த்தல் துன்பம்.
கட்டுப்பாடு இல்லாத ஊரில் வாழ்வது துன்பம்.
கவறு என்பது பிறர் பொருளைக் கவறும் ஒரு வகைச் சூதாட்டம். அது நட்டத்தைத் தரும். இப்படிப்பட்ட கவறு ஆட்டத்தில் சூதாடுதல் துன்பம்.

பாடல்

நட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா,
நட்ட கவற்றினால் சூது.   25

கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 24

பாதுகாப்பு இல்லாத ஊரில் இருப்பது துன்பம்.
தீமை செய்பவர் பக்கத்தில் இருப்பது துன்பம்.
காமம் முதிர்ந்துவிட்டால் உயிருக்குத் துன்பம்.
‘யாம்’ என்னும் செருக்கு உடையவரோடு நட்பு கொண்டிருத்தல் துன்பம்.

பாடல்

ஏமம் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு. 24
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 23

மதில் கட்டு இல்லாத ஊரில் வாயிலைக் காப்பது துன்பம்.
ஆற்றுத் துறையில் குளித்துக்கொண்டே ஆடையைக் கழுவுதல் துன்பம்.
பழி தோற்றுவோர் சொல் துன்பம்.
நிறையுடைமை இல்லாதவன் செய்யும் தவம் துன்பம்.

பாடல்

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;
அறை பறை அன்னர் சொல் இன்னா; இன்னா,
நிறை இலான் கொண்ட தவம். 23
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 22

பட்டத்து யானை இல்லாத மன்னரைக் காணல் துன்பம்.
மற்றொரு உயிரின் உடலைத் தின்று தன் உடலைப் பருமனாக்கிக்கொள்ளுதல் துன்பம்.
தேனோ, நெய்யோ புளித்துப்போனால் துன்பம்.
காட்டாற்றுக்கு நடுவில் இருக்கும் ஊர் துன்பம்.

பாடல்

யானை இல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,
கான் யாறு இடையிட்ட ஊர். 22
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

இன்னாநாற்பது InnaNarppatu 21

கொடுத்த வகையில் திருப்பி உதவாதவருக்கு நல்கிய கொடை துன்பம்.
பகுத்துத் தந்து உண்ணும் பழக்கம் இல்லாதவரிடம் சென்று உண்ணுவது துன்பம்.
அகவையில் மூத்திருக்கும் காலத்தில் நோய் வந்தால் துன்பம்.
வேதம் படிக்காத பார்ப்பான் விளக்கிக் கூறும் உரை துன்பம்.

பாடல்

ஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;
பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;
மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,
ஓத்து இலாப் பார்ப்பான் உரை. 21
                               
கபில தேவர் பாடியது
காலம்கி.பி. 3 ஆம் நூற்றாண்டு

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி