1. பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
    சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண்
    டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
    வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.  56  
    • செம்முகப் பன்றி ஒன்று தன் நிழலைப் பார்த்து, அதனை பகடு (ஆண்யானை) என்று எண்ணிப் பாய்ந்து குத்த அதன் கொம்பு ஒடிந்துபோயிற்று. அதனைப் பார்த்த குறவர் அந்தப் பன்றியைப் பிடிக்கக் குரல் எழுப்பின்னர். இது ஈங்கோய் மலை. வில்லை வளைத்துக்கொண்டு 3 எயில் எய்ய வெகுண்டவன் மலை. 
    பிடிபிரிந்த வேழம் பெருந்திசைதான் கோடிப்
    படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் - டிடரா
    இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
    குருவருட்குன் றாய்நின்றான் குன்று.  57  
    • பிடியைப் பிரிந்த வேழம் தன் வருத்தத்தில் வானத்தில் மேயும் மேகங்களைப் பார்த்து, தன் பிடி என்று எண்ணி, அதனைத் தன்னுடன் கூட்டிக்கொள்ள, தன் கைகளை மேகத்தின்மேல் நீட்டும் மலை, ஈங்கோய் மலை. அங்குள்ள சிவன் வானவர்க்கு அருள் வழங்கத் தீப்பிழம்பு மேனி கொண்டு நின்றவன்.    
    பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
    சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் - கருமந்தி
    முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
    திக்குகக்கச் செற்றான் சிலம்பு.  58  
    • யானையும் யானையும் போரிட்டுக்கொள்ளும். அப்போது முரிந்த தந்த முத்துகளை நீர்முத்து என்று எண்ணிக்கொண்டு, அதனைக் பருமந்தி விழுங்கும். அதனைப் பார்த்து, குறவர் சிரிப்பர். இப்படிப்பட்டது ஈங்கோய் மலை. இது மூவெயில் செற்ற சிவன் இருக்கும் மலை.  
    மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
    குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம்
    இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
    வளவெயில்தீ யிட்டான் மலை.  59  
    • களிற்றின் மருப்பு முத்துகளை உகுக்கும். குறவரின் சிறுவர்கள் தம் கைகளில் அள்ளிக்கொள்வர். குடை போல் வளைத்த கைகளில் அள்ளிக்கொள்வர். நறவக் கள்ளை இளவெயிலில் சூடாகும்படிக் காய்ச்சிப் பருகுவர். இது ஈங்கோய் மலை. மூவெயிலில் தீ இட்ட சிவன் இருக்கும் மலை. 
    மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
    சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய
    இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
    மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.  60 
    • குறவன் மானை வேட்டையாடிக் கொண்டுவந்து அதனோடு விளையாடும்படி மனைவியிடம் கொடுத்தான். அவள் அவன்மீது சீறினாள். ‘கலைமான் பிரிந்து வருந்தும்படி விட்டுவிட்டு பெண்மானை ஏன் பிடித்து வந்தாய்’ என்று சொல்லிக்கொண்டு சீறினாள். 

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    1

    View comments

  2. நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
    இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர்
    இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
    விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.  51  
    • காட்டுப் பன்றி நறவம் புல்லை மேய்ந்துவிட்டு இறவு என்னும் முல்லை நிலத்தில் வரும் வழி எது என அறிந்து குறவர் அது விழுமாறு வலை கட்டி வைக்கும் மலை ஈங்கோய் மலை. அது பெண்ணைத் தன் வலைக்குள் வைத்திருப்பவன் மலை. 
    நாக முழைநுழைந்த நாகம்போய் நன்வனத்தில்
    நாகம் விழுங்க நடுக்குற்று -நாகந்தான்
    மாக்கையால் மஞ்சுரிக்கும் ஈங்கோயே ஓங்கியசெந்
    தீக்கையால் ஏந்தி சிலம்பு.  52  
    • நாகம் புற்றில் நுழையும் 
    • நாகம் (புன்னை) வனத்தில் பூத்திருக்கும் 
    • புன்னந் தழைகளை யானை தின்னும் 
    • அந்த யானை விண்ணில் மேயும் மேகங்களைத் தன் கைகளை நீட்டி உரிக்கும்.
    • இவை ஈங்கோய் மலையில் நிகழும். 
    • இந்த மலை கையில் தீயை வைத்துக்கொண்டு ஆடுபவன் மலை
    நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின்
    ஆகந் தழுவி அசைவெய்த - மேகங்
    கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு
    பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.  53  
    • நாக மரத் தழைகளைக் களிறு உண்ணும் 
    • (உழுவை = புலி) (நாகம் = மலை) புலி மலையின் உடலைத் தழுவிக்கொண்டு திரியும். 
    • கருவுற்ற கேகம் கண்ணீர் (மழை) சொரியும்
    • இது ஈங்கோய் மலை
    • விடை ஊர்வான் இருக்கும் மலை இது
    பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
    கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி
    எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
    வண்கங்கை ஏற்றான் மலை.  54  
    • (பணவம்) பாம்புப் புற்றில் இருக்கும் கறையான்களை வறுத்து பழஞ்சோறு தின்னும் கணவனுக்கு, குறத்தி தருவாள். 
    • எண் தோள் வீசி நின்று ஆடும் சிவன் 
    • கங்கை வைத்திருக்கும் சிவன் 
    • ஏற்றில் வருவான் 
    • அவன் இருக்கும் ஈங்கோய் மலை இது.  
    பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
    தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக்
    கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்
    மருவரியான் மன்னும் மலை.  55 
    • பன்றி நிலத்தைக் கிண்டும் 
    • அதன் புழுதியில் மணிகள் கிடக்கும்
    • அதனைத் தீ என்று நினைத்துக்கொண்டு யானை ஓடும்
    • இது சிவன் இருக்கும் ஈங்கோய் மலை
    • சிவன் வானோர்க்குக் கிட்டாமல் மண்ணோர்க்குக் கிடைப்பவன்.   

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    1

    View comments

  3. தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத்
    தாமரையிற் பாய்ந்துகளும் தண்புறவில் - தாமரையின்
    ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
    வாட்டங்கள் தீர்ப்பான் மலை.  46  
    • தாவி வரும் மரைகள் (மான்கள்) அரையில் (நிழலில்) காலடி வைத்து அந்த நிழலிலும் துள்ளி விளையாடும். அது முல்லலை நிலம். புலி அந்த மான்களைச் சிதறி ஓடும்படிச் செய்யும். இப்படிப்பட்டது ஈங்கோய் மலை. இங்குள்ள சிவன் நம் வாட்டங்களைத் தீர்ப்பான்.  
    தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
    வள்ளவட்டப் பாழி மடலேறி -வெள்ளகட்ட
    காராமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்
    சேராமற் செற்றான் சிலம்பு.  47  
    • ஈங்கோய் மலையின் அழகிய சுனையில் தாமரை மலர்ந்திருக்கும். பாழிகள் வட்டமானவை. அதில் பூத்திருக்கும் வெண்ணிறத் தாழை மடல்களில் ஏறி கருநிற ஆமை கண்ணுறங்கும். இந்த மலையில் இருப்பவன் கூற்றத்தை அழித்த சிவன். 
    தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
    தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்
    பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
    சீராட்ட நின்றான் சிலம்பு.  48  
    • செம்முகக் குரங்கு இனிக்கும் பலாப்பழச் சுளைகளைக் கொண்டுவந்து மக்கள் கைகளில் கொடுக்கும். இந்த உயர்ந்த குணங்களை மக்கள் பாராட்டுவர். இது ஈங்கோய் மலை. இங்குள்ள சிவனை அமரர் சீராட்டுவர்.  
    தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
    கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்
    றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
    வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.  49  
    • பூஞ்சுனைகளில் புகுந்து, சந்தனக் காடுகளில் பாய்ந்து, அருவிநீர் கொண்டும் இடம் ஈங்கோய் மலை. இது நஞ்சு உண்ட சிவன் இருக்கும் மலை.  
    தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல்
    ஓகை செறியாயத் தோடாட - நாகம்
    இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்
    வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.  50 
    • ஈங்கோய் மலையில் மயில் இனம் ஆடும். (மயில் பாம்பை உண்ணும்) அதனைக் கண்டு அஞ்சி பாம்புகள் தம் புற்று வளையில் புகுந்து ஒளிந்துகொள்ளும். இங்குள்ள சிவன் நம் வினைகளை அழிப்பவன். 

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள நூல்களில் இதுவும் ஒன்று

    1

    View comments

  4. தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
    வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக்
    கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
    வண்கொன்றைத் தாரான் வரை.  41  
    • அது குளிர்ந்த மலைச்சாரல்
    • ஒளி மிக்க கானம்
    • அங்கு மூங்கில் முத்துக்கள் கொட்டும்
    • மூங்கில் உரசி, தீ பற்றும்
    • அது கொன்றைத் தாரானின் ஈங்கோய் மலை 
    செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்
    பிடியட்ட மாக்களிறு பேர்ந்து - கடம்முட்டி
    என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்
    பொன்னேர் அனையான் பொருப்பு.  42  
    • சிங்கம் பிடியை அடும்
    • களிறு என்னே! சீ! என்ன காரியம் செய்தோம்? என்று (பார்த்துக்கொண்டு இருந்துவிட்டோமே) என்று கல்லில் முட்டிக்கொள்ளும். 
    • இது தழல் ஏந்தியவனின் ஈங்கோய்மலை 
    சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
    புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி
    மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்
    சென்னி அணிந்தான் சிலம்பு.  43  
    • தாமரையில் தேன் உண்ணும்போது அதன் மகரந்தப் பொடிகள் உதிர்ந்து கருமை நிற வண்டு பொன் நிறமாக மாறி மணக்கும் மலை ஈங்கோய்.
    • இது தலையில் மதியம் அணிந்தவன் மலை 
    செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
    வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத்
    தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
    மாக்கலைகள் வைத்தான் மலை.  44  
    • தினைமாவில் செய்த பிண்டியில் / பிட்டில் தேன் ஊற்றி, தேக்கிலையில் வைத்து குறத்தி விருந்தினர்க்கு ஊட்டும் இடம் மானைக் கையில் வைத்திருக்கும் சிவன் இருக்கும் மலை. 
    தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
    இடம்புகுந்தங் கின்நறவம் மாந்தி - உடன்கலந்து
    மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
    கோக்குரவை ஆடிகொழுங் குன்று.  45 
    • கொங்கை நலம் கொண்ட மகளிர் நறவம் என்னும் கள்ளைப் பருகி ஆடவரோடு சேர்ந்து குரவை ஆடும் இடம் ஈங்கோய்மலை. 
    • அங்குள்ள சிவன் குறவை ஆடி.
    • சிவக்கொழுந்து.

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    0

    Add a comment

  5. கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
    படுகுழிகள் கல்லுதல் பார்த்தஞ்சி - நெடுநாகம்
    தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
    வண்டூன்றுந் தாரான் மலை.  36  
    • வேடர் வேட்டைக்குச் செல்லாமல் கிழங்கு எடுப்பதற்காக நிலத்தைத் தோண்டுவர்
    • மூடிக்கொண்டிருக்கும் அந்தக் குழிகளைத் தெரிந்துகொள்வதற்காக யானை கையில் ஊன்றுகோல் வைத்துக்கொண்டு செல்லும்
    • இது ஈங்கோய் மலை
    • வண்டுகள் ஊதும் கொன்றைமலர்த் தாரான் மலை 
    கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
    வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை
    வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
    வரவதனைக் காப்பான் மலை.  37  
    • கோங்க மலர் போன்ற கொங்கை கொண்ட குறமகளிர் வேங்கை மலர் நிழலில் விளையாடுவர். கொல்லும் வேங்கை (வரிப்புலி) அங்கு வரக் கண்டு ஓடிப்போவர். 
    • இந்தத ஈங்கோய் மலை தீங்கு வராமல் நம்மைக் காக்கும் சிவன் இருக்கும் மலை  
    சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
    மந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன்
    கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
    விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.  38  
    • சந்தனத் தழையை பிண்டிமலர்த் தேனில் குழைத்து, ஆண்யானை பெண்யானைக்கு ஊட்டி அது உண்ணுவதைக் கண்டு களிக்கும். 
    • இது நஞ்சு உண்டவன் இருக்கும் ஈங்கோய் மலை.  
    சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
    கொந்திஇனி துண்ணக் குறமகளிர் - மந்தி
    இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
    வளமகளிர் பாகன் மலை.  39  
    • தேனில் தொட்ட சந்தன இலையை மந்திக்குத் தந்து குறமகளிர் மகிழ்வர்.
    • இந்த ஈங்கோய் மலை பெண்ணைப் பாகமாகக் கொண்டவன் மலை. 
    சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
    சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத்
    தமர்இனிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக்
    குமரன்முது தாதையார் குன்று.  40 
    • குறத்தியர் யானைத் தந்தத்தால் வளைத்த வெண்பிண்டி மலர்களால் விளைந்த மதுவினைக் கூட்டமாக அமர்ந்துகொண்டு உண்ணும் சீர்மை கொண்டது ஈங்கோய் மலை. இது குமரனின் தந்தை  இருக்கும் மலை. 

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    0

    Add a comment

  6. காந்தளங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை
    கூந்தல் விரித்துடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி
    ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
    கார்க்கொன்றை ஏற்றான் கடறு.  31  
    • ஆட்டத்துக்குப் பரிசு வழங்கப்படுகிறது
    • காந்தள் கையை விரித்து ஆடுகிறது
    • மயில் கூந்தலை விரித்து ஆடுகிறது
    • கொன்றை அவற்றிற்குப் பொன்னைப் பரிசாக நல்குகிறது 
    • இதுதான் ஈங்கோய் மலை
    • கொன்றை அணிந்துகொண்டு ஏற்றின்மேல் வருபவன் மலை
    குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்தி
    நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர்
    கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே
    மைந்நீட்டுங் கண்டன் மலை.  32  
    • குறமகளிர் கூட்டமாக நின்று தினை குற்றுவர்
    • நறவம் கஞ்சியாக அதனைச் சமைப்பர்
    • குறவர்கள் களிப்புடன் அதனைக் கையேந்தி வாங்கி உண்பர்
    • இது நீலகண்டன் உறைவிடமான ஈங்கோய்மலை
    கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய
    ஏழை இளமந்தி சென்றிருந்து - வாழை
    இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி
    சிலையால்தான் செற்றான் சிலம்பு.  33  
    • முதுகு கூனிய கூழை மந்தி கொம்புத் தேனில் பாயும்
    • ஏழைமந்தி வழை இலையை நீட்டி அதில் தேனை வாங்கி உண்டு மகிழும்
    • அது முப்புரம் அழித்த சிவன் இருக்கும் ஈங்கோய்மலை  
    கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
    மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் - டொல்லை
    இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்
    வருங்கைக் களைவான் மலை.  34  
    • யானை வேங்கை மலர்களை உதிர்த்து அவை மிக்கும் நீரில் நீராடி, கரையில் ஏறும் இடம் கொண்டது ஈங்கோய் மலை
    • அது நம் நோய்களைப் போக்கும் சிவன் இருக்கும் மலை 
    கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
    கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையாற் -செவ்வை
    எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்
    குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.  35 
    • கோவைப்பழம் போன்ற சிவந்த வாயினை உடைய குறமகளின் கூந்தல் மணம் வீசும். அவர்களின் மேல் இருக்கும் காதலால் குறவர் அவர்களின் செவ்வாயைச் சுவைப்பர். 
    • இந்த ஈங்கோய் அன்பர்க்கு குறித்த வரம் கொடுக்கும் சிவன் இருக்கும் மலை
    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.
    0

    Add a comment

  7. கன்னிப் பிடிமுதுகிற் கப்பருவ முட்பருகி
    அன்னைக் குடிவர லாறஞ்சிப் - பின்னரே
    ஏன்தருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத
    மான்தரித்த கையான் மலை.  26  
    • அவள் புதுமையான பிடி போன்றவள். அவள் முதுகுறைவின் உட்பகுதியை அவன் பருகினான். பின்னும் தாய் இருக்கும் குடிலுக்கே அதற்காக வந்தான். அவன் வரும் வழியில் அவனுக்கு நேரவிருக்கும் துன்பங்களுக்காக அவள் அஞ்சினாள். 
    • அவள் வரும் வழி ஈங்கோய் மலை
    • அது சிவன் தவம் செய்யும் மலை
    • அந்தச் சிவன் கையில் மான் வைத்திருப்பவன். 
    கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
    கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் -துள்ளி
    இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
    மனக்கவலை தீர்ப்பான் மலை.  27  
    • ஈங்கோய் மலையில் இருக்கும் மறவர் மானை வேட்டையாடலாம் எனப் பேசிக்கொண்டனர். அதற்கான ஓசையை எழுப்பினர். அந்த ஓசையைக் கேட்ட மான்கூட்டம் பிரிந்து செல்லும் புதர் வழிகளின் வழியே பாய்ந்து ஓடின. 
    • அந்த ஈங்கோய்மலைச் சிவன் நம் மனக்கவலைகளைப் போக்குபவன்.
    கல்லைப் புனமேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
    கொல்லை எழுந்த கொழும்புறவின் - முல்லையங்கண்
    பல்லரும்பு மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
    கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.  28  
    • அது கல் இருக்கும் புனக்காடு. அங்குக் கார் காலத்தில் பூக்கும் கொன்றை மலர்கள் பூத்து மாலைகள் போலச் சரம் சரமாகத் தொங்கின. முல்லை நிலத்தில் முல்லை மலர்கள் பூத்தன. ஈங்கோய் மலை இவற்றை கொண்டு விளங்கிற்று. 
    • சிவன் 3 எயில்களையும் தன் சூலத்திலுள்ள 3 கோல்களில் கோத்துக்கொண்டான். 
    கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
    எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே
    இருந்கிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
    பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.  29  
    • கல்லாத குரங்கு ஒன்று பளிங்குக் கல்லுக்குள்ளே தோன்றும் பழங்களை மற்றக் குரங்குகளுக்குப் காட்டிற்று. அதனைப் பார்த்த மற்றக் குரங்குகள் தம் நகங்களால் பளிங்குக் கல்லைப் பரண்டின. 
    • அது சிவன் இருக்கும் ஈங்கோய்மலை
    • அந்தச் சிவன் பாம்புகளை அணிகலன்களாகப் பூண்டவன்.  
    கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
    வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் -தண்கோ
    டிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்
    விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.  30 
    • மண்ணில் மணிக்கற்கள் கிடக்கும். அந்த மணிக்கல் மண்ணைக் கிளரும்போது முரிந்த பன்றிக் கொம்புகளும் அந்த மணியுடன் கிடக்கும். 
    • இப்படிப்பட்ட மலைச்சாரல் கொண்டது ஈங்கோய் மலை
    • இது வேதம் விளம்பிய சிவன் இருக்கும் மலை. 

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    0

    Add a comment

  8. கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
    நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள்
    வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
    குரவரும்பு செஞ்சடையான் குன்று.  21  
    • பருத்த பலாப் பழங்களை, பாறை இலையில் வைத்து, பக்கத்தில் தேனை உண்கலத்தில் வைத்து வீடுகளில் தன் வீடுகளுக்கு வரவிருக்கும் விருந்தினர்களை எதிர்நோக்கிக்கொண்டு ஈங்கோய் மலைமக்கள் படைக்கக் காத்திருப்பர். 
    • அந்த ஈங்கோய், குரவமலர் போல் சிவந்திருக்கும் சடையை உடைவன் மலை   
    கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
    சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள்
    கீதந் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்
    வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.  22  
    • ஈங்கோய் மலைக்குறத்தியர் பாடுவர். அதனைக் கேட்டுக்கொண்டு மதம் கொண்ட களிறு உறங்கும். கரு வண்டுகள் அவர்களின் பாட்டுக்குச் சுருதி இசை எழுப்பித் தரும். அவற்றைக் கேட்டுக் கிளிகள் பாடும். 
    • ஆலமரத்தடியில் இருந்துகொண்டு சிவன் 4 வேதங்களையும் பிறர் தெரிந்துகொள்ளும்படிச் சொன்னான். 
    • ஈங்கோய் அவன் மலை.
    கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
    இறுத்துக்கை நீட்டும் ஈங்கோயே - செறுத்த
    கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
    விடமிடற்றி னான்மருவும் வெற்பு.  23  
    • கார்யானை சூல் உறும். அதன் முலைக்காம்பு கறுத்திருக்கும். அது தன் கையை நீட்டி இழுத்து சந்தனத் தழைகளை உண்ணும். 
    • இது ஈங்கோய்மலை
    • சிவன் இருக்கும் மலை
    • சிவன் யானைத்தோல் போர்த்தியவன்
    • விடம் தங்கும் மிடறு கொண்டவன்
    கங்குல் இரைதேரும் காகோ தரங்கேழற்
    கொம்பி னிடைக் கிடந்த கூர்மணியைப் - பொங்கி
    உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்
    வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.  24  
    • காகோதரம் என்னும் கறையான் இரவில் புற்றை எழுப்பும். கேழல் என்னும் காட்டுப் பன்றி இரவில் இரை தேரும். இந்தப் பன்றிக்குத் தந்தம் இருக்கும். அந்தத் தந்தத்தை வானத்தில் தோன்றும் இடி என நினைத்துக்கொண்டு கறையான் தன் புற்றுக்குள் அடைந்துகொள்ளும். 
    • இது ஈங்கோய் மலை
    • காமன்மீது கண்சிவந்தவன் மலை. 
    கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
    திலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென்
    றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
    வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.  25 
    • ஈங்கோய் மலையில் யானைகள் உடலுறவு கொள்வதில்லை. யானை இலைகளை வளைக்கும் காற்று வீசும். பெண்யானை அங்கு வரும்போது அதன் காதுகள் அசைந்து உண்டாகும் காற்றை ஏற்று ஆண்யானை உகக்கும். 
    • இது வெண்பொடி நீறு பூசிக்கொண்டிருக்கும் சிவன் மலை. 

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    0

    Add a comment

  9. ஒருகணையுங் கேழல் உயிர்செகுத்துக் கையில்
    இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும்
    ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
    கோளரிக்கும் காண்பரியான் குன்று.  16  
    • கானவன் ஓர் அம்பால் பன்றியை வீழ்த்துவான். அடுத்து இரண்டு அம்புகளை யானைமேல் எய்வான். அதனைக் கண்டு பயந்து ஆண்சிங்கம் ஓடும். பெண்சிங்கம் நடுங்கும். 
    • இப்படிப்பட்டட ஈங்கோய் மலையான், அரி உருவம் கொண்ட திருமாலாலும் காணமுடியாதவன். 
    ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவத் தண்போதைத்
    தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில்
    தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
    குழையிறுத்த காதுடையான் குன்று.  17  
    • இலவம் பூ மொட்டுகள் பூக்கும் நிலையில் இருந்தன. அவற்றைப் பார்த்த ஆண்குரங்கு எரிந்துகொண்டிருக்கும் கொள்ளிக்கட்டை என்று நினைத்து, மூங்கில் இலைகளைக் கொண்டு தட்டி அணைக்க முயலும் மலை ஈங்கோய்மலை. 
    • இது சங்குக் குழை காதில் அணிந்த சிவன் இருக்கும் குன்று. 
    ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி
    மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி
    மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே
    கோச்சீயம் காண்பரியான் குன்று.  18  
    • ஓடும் மேகங்களை நகத்தால் கிள்ளி, அந்த இடத்தில் தன் கையை நீட்டி அதன் நீரைக் குடித்து, அருவி நீரைக் கொட்டும். சிங்கம் அந்த நீரை உண்டு  மகிழும். 
    • அந்தக் குன்றத்துச் சிவனை, சிங்க உருவம் எடுத்த திருமாலாலும் காணமுடியாது.    
    கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
    உண்டு குளிர்ந்திலஎன் றூடிப்போய்க் -கொண்டல்
    இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
    மறைக்கீறு கண்டான் மலை.  19  
    • கண்ணில் கண்ட பழங்களைத் தின்ற ஆண்குரங்கு சுனைநீரைப் பருகவில்லை என்று பெண்குரங்கு அதனோடு பிணக்குப் போட்டுக்கொள்ளும். ஆண்குரங்கோ கொண்டல் மேகத் தலையைக் கீறி அதன் நீரைப் பருகும். 
    • இந்த ஈங்கோய் மலை நான்கு வேதங்களுக்கும் முடிவு கண்ட சிவன் இருக்கும் இடம் ஆகும். 
    கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார்
    பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்
    கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
    மைக்கொணருங் கண்டன் மலை.  20 
    • குறத்தி தினையைக் கல் உரலில் போட்டு யானைக்கொம்பு உலக்கையால் இடித்துக் குற்றுவாள். குறவன் தேன் கொண்டு வருவான். தேனில் தினைமாவைப் பிணைந்து இருவரும் உண்பர். 
    • இப்படிப்பட்ட இடம் நீலகண்டன் இருக்கும் ஈங்கோய் மலை. 

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    0

    Add a comment

  10. ஊடிப் பிடியுறங்க ஒண்கதலி வண்கனிகள்
    நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக்
    குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
    குணமருட்டுங் கோளரவன் குன்று.  11  
    • பெண்யானை ஆண்யானையோடு பிணக்குப் போட்டுக்கொண்டு உறங்கும். ஆண்யானை வாழைப்பழங்களைக் கொண்டுவந்து கொடுத்து அதனை உண்ணச்செய்து உறவு கொண்டாடும்.
    • இந்த ஈங்கோய் மலை பாம்பு அணிகலன் பூண்ட சிவபெருமான் மலை.
    எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக்
    கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ
    என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
    சென்றன்று வென்றான் சிலம்பு.  12  
    • கன்னிமானை எய்யக் கணை தொடுத்தேன். அது என்னை மருண்டு பார்த்தது. அந்தப் பார்வை என் குறத்தி என்னைப் பார்ப்பது போல் இருந்தது. எனவே, "மானே! மெதுவாகச் செல்" என்று சொல்லி விட்டுவிட்டேன்.
    • அது சிவன் இருக்கும் ஈங்ககோய் மலை. 
    ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று
    கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ
    இனைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
    வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.  13  
    • இளம்பெண்ணே! என்னோடு வா - என்று கூழைச்சிண்டு போட்டிருக்கும் பண்பு முதிர்ந்த வேடன் என்னை அழைத்துச் சென்றான். கரும்புத் தோகையால் வேயப்பட்ட தன் வீட்டில் என்னை வைத்துக்கொண்டான். 
    • அது வினைப்பயன் போக்கும் சிவன் இருக்கும் ஈங்கோய் மலை
    ஏனம் உழுத புழுதி இனமணியைக்
    கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல்
    இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்
    மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.  14  
    • பன்றி கிண்டிய புழுதியில் கிடக்கும் பவள மணிகளை, கானவர் தீ என்று எண்ணி, விளைந்த கதிர்களை உண்ணுவதற்காக வாட்டிக்கொள்வர். 
    • இப்படிப்பட்ட ஈங்கோய் மலை நம் துன்பங்களைப் போக்கும் சிவன் இருக்கும் மலை.  
    ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள்
    கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை
    இனம்இரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்
    வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு.  15
    • பன்றி உழுத புழுதியில் கிடக்கும் பவள மணிகளை நெருப்புக் கட்டிகள் என்று நினைத்துக்கொண்டு யானைக்கூட்டம் ஓடும். அதனைப் பார்த்து முல்லைப் பூக்கள் சிரிக்கும். 
    • இந்த ஈங்ஙகோய் மலை நம் வினைகளைப் போக்கி மகிழும் சிவன் இருக்கும் இடமாகும். 

    ஈங்கோய் எழுபது என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டு  நக்கீரதேவ நாயனார் ஈங்கோய் மலை ஈசனைப் போற்றும் 70 வெண்பாக்கள் கொண்டது.

    0

    Add a comment

Loading