Pages

Wednesday, 5 November 2025

இராமாயணம் உத்தர காண்டம் கதைச் சுருக்கம்

கம்பராமாயணம் 6 காண்டங்களைக் கொண்டது. அதன் கதைத் தொடர்ச்சியை 7-வது காண்டமாக உத்தர காண்டத்தை ஒட்டக்கூத்தர் பாடியுள்ளார். இதன் கதையின் சுருக்கத்தை இங்குக் காணலாம். 

முனிவர் சொல்கிறார்

இலங்கையில் இராவணனைக் கொன்றபின் இராமன் அயோத்திக்கு வந்து அரியணை ஏறி வீற்றிருக்கிறான். முனிவர்கள் அவைக்கு வருகின்றனர். இராமன் முனிவர்களை வணங்குகிறான். முனிவர்கள் இராமனை வாழ்த்துகின்றனர். 

அரக்கர் வரலாற்றை விரிவாகச் சொல்லுமாறு இராமன் வேண்டுகிறான். முனிவர் சொல்கிறார். 

புட்பக விமானம்

பிரமனிடத்தில் புலத்தியன் தோன்றினான். புலத்தியன் மகன் குபேரன். அவன் பிரமனை வேண்டிப் புட்பக விமானம் ஒன்றைப் பெற்றான். இலங்கைக்குப் பறந்து சென்றான். இலங்கையை ஆண்டுவந்தான். 

பின்னர் அரக்கர் தோன்றினர். மாலியவான், சுமாலி, மாலி என்னும் 3 அரக்கர்களும் பிரமனிடம் வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொண்டு உலகை அழிக்கத் தொடங்கினர். 

இந்திரன் திருமாலிடம் முறையிட்டான். தான் தோன்றி அரக்கர் குலத்தை வேரறுப்பதாக திருமால் இந்திரனிடம் கூறுகிறார். 

மாலியவான் 

இந்தச் செய்தி அறிந்த அரக்கர்கள் படையுடன் சென்று திருமாலைத் தாக்கினர். போர் மூண்டது. அரக்கர் அழிந்தனர். 

மாலியவான் முதலானோர் பாதாளத்தில் புகுந்து ஒளிந்துகொண்டனர். 

சுமாலி தன் மகளுக்கு வரன் தேடிக்கொண்டிருந்தான். இலங்கையில் குபேரன் ஆண்டுகொண்டிருந்த சிறப்பை அறிந்தான். பொறாமை கொண்டான். தன் மகளைப் புலத்தியனுக்கு மணம் செய்வித்து அவன் மூலம் பேரரக்கர்களைப் பெற்று, அவர்களின் உதவியுடன் இலங்கையைக் கைப்பற்றக் கருதினான். 

இராவணன்

எண்ணியபடியே திருமணம் திருமணம் செய்துவைத்தான். அவள் இராவணன் முதலானோரைப் பெற்றாள். 

இந்தப் பிள்ளைகள் அருந்தவம் செய்து அரிய வரங்களைப் பெற்றனர். 

இராவணன் இலங்கையை வென்றான். மாயன் மகள் மண்டோதரியை மணந்தான். பல பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு இலங்கையை ஆண்டுவந்தான். 

கயிலாயம்

இராவணன் விமானத்தில் பறந்து சென்றபோது கயிலை மலை தடுத்தது. எனவே, அந்த மலையைப் பெயர்க்க முயன்றான். நந்தி அவனைச் சபித்தான். கயிலை மலையில் இருந்த சிவன் தன் விரலை ஊன்றி மலையை அமுக்கினான். அப்போது இராவணன் வாய்விட்டு அலறி, சாமகீதம்  பாடினான். அதனைக் கேட்டுச் சிவன் மகிழ்ந்தான். வாளும், நாளும் (முக்கோடி வாழ்நாளும்) வரமாக வழங்கினான். 

கார்த்தவீரிய அருச்சுனன்

இராவணன் திக்குவிசயம் செய்தான். அப்போது ஆயிரம் கை கொண்ட கார்த்தவீரிய அருச்சுனன் இராவணனைச் சிறை பிடித்தான். பிதாமகன் என்பவன் அங்கு வந்து இராவணனைச் சிறையிலிருந்து விடுவித்தான். 

வாலி

பின்னர் இராவணன் வாலியுடன் போரிட்டபோதும் அவமானப்பட்டான். வாலியிடம் தோற்ற சுக்கிரீவனிடம் அனுமன் இருந்தான். காட்டில் மனைவி சீதையைப் பிரிந்த இராமன் (திருமால்) அனுமான் துணையுடன் இராவணனை அழித்தான். 

அவ்வாறு முனிவர் அரக்கர் வரலாற்றைக் கூறி முடித்தார். 

வம்புப் பேச்சு

இராமன் அரியணை ஏறி ஆண்டுகொண்டிருந்த காலத்தில், சீதை இராவணனுடன் இருந்தது பற்றி ஊரார் வம்பு பேசினர்.  

அது கேட்ட இராமன் சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்பினான். வால்மீகி முனிவன் ஆதரவில் வாழ்ந்த சீதை குசன், லவன் என்னும் இரண்டு மகன்களைப் பெற்றாள். 

வால்மீகி

வால்மீகி தாம் பாடி வைத்திருந்த இராம கதையை அவர்களுக்குக் சொல்லி, அசுவமேக யாகத்தில் அதனை இசையோடு பாடவைத்தார். இராமன் அதனைக் கேட்டு மகிழ்ந்தான். 

செய்தி அறிந்த இராமன் சீதையை மீண்டும் வரவழைத்து தன்மீதுள்ள பழியைப் போக்க வேண்டும் என்று வேண்டினான். 

சீதை பூமிதேவியை வேண்டினாள். 

பூமி வெடித்து சீதையை தனக்குள் வாங்கிக்கொண்டது. 

இராமன் மனவருத்தத்துடன் இருந்தான். பின்னர் உரிய காலத்தில் வைகுந்தம் சேர்ந்தான். 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 323

No comments:

Post a Comment