செயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணி நூலிலும்,
ஒட்டக்கூத்தர் தம் 4 உலா நூல்களிலும்
சோழ அரசர்களின் கால்வழியைக் (tradition) குறிப்பிடுகின்றனர்.
அவற்றில் யார் யார் என்ன செயல் செய்து சிறப்புற்றார்
என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவற்றை இங்குத் தொகுப்பாகக் காணலாம்.
புராணச் சோழர்கள்
- சூரியன் - சோழர் சூரிய குலத்தவர் ஆதலால் சூரியன் அவர்களின் முன்னோன் என்று கூறப்பட்டிருக்கிறான்.
- மனுநீதிச் சோழன் - தன் மகன்மீது தன் தேர்ச்சக்கரத்தை ஏற்றிக் கொன்று பசுவுக்கு நீதி வழங்கியவன்.
- மந்தாதா - புலி மான் இரண்டும் பகைமை இன்றி ஒரே துறையில் நீர் உண்ணச் செய்தவன்.
- முசுகுந்தன் - விமானம் ஏறி வானில் பறந்தவன்.
- ககுத்தன் - இந்திரனை ஊர்தி ஆக்கி அவன் மேல் ஏறிச் சென்று அசுரர்களை வென்றவன்.
- பெருநற்கிள்ளி - உயிரைக் கொல்லும் கூற்றுவனோடு வாதாடி வழக்கில் வென்றவன்.
- கரகுரு - சாகாமல் இருந்த தன்னை, முதுமக்கள்-தாழி செய்து அதற்குள் தன்னை வைத்துப் புதைக்கச் செய்து மாண்டவன்.
- தூங்கெயில் எறிந்த தொடிதோள் செம்பியன் - ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருந்த கோட்டையை அழித்தவன்.
- சமுத்திர சித்து - மேற்குக் கடலும் கிழக்குக் கடலும் ஒன்றில் ஒன்று பாயும்படிச் செய்தவன்.
- கிள்ளி வளவன் - நாக நாட்டு நாக கன்னியை மணந்தவன்
- சிபி - புறாவுக்காகத் தராசில் ஏறித் தன்னேயே நிறுத்து, கழுவுக்கு உணவாகக் கொடுத்தவன்.
- சிவூகன் - காவிரி ஆறு பாசன நிலத்தில் பாய வழி உண்டாக்கித் தந்தவன்.
- இரண்டாம் கரிகாலன் - காவிரி ஆற்றுக்குக் கரை கட்டியவன். (இந்தச் செய்தியை 11 ஆம் நூற்றாண்டு நூல் ஒன்றும் குறிப்பிடுகிறது.
- கோச் செங்கட்சோழன் - பொய்கையார் பாடிய ‘களவழி’ பாடல் கேட்டுச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தவன். கோச்செங்கணான் 5 ஆம் நூற்றாண்டு அரசன்.
- சங்கர சோழன் பாட்டுக்கு 100 ஆயிரம் பொன் ஈந்தான் என்று சங்கரசோழன் உலா குறிப்பிடுகிறது. இது இன்னனது என விளங்கவில்லை.
- முதலாம் கரிகாலன் பட்டினப்பாலை பாட்டுக்கு 16 கோடி பசும்பொன் கொடுத்தான் என்று சங்கரசோழன் உலா குறிப்பிடுகிறது.
வரலாற்றுக் காலச் சோழர்கள் பற்றி இந்தப் புலவர்கள் கூறும் செய்திகள்.
- விசயாலயன் - இவன் தஞ்சையில் சோழப் பேரரசை நிறுவியவன். இவன் தன் மார்பில் பட்ட 96 புண்களை தன் அணிகலனாகக் கொண்டிருந்தான் என்று கூறப்படுகிறது.
- விசயாலயன் மகன் ஆதித்தன்
- பராந்தகன் மகனும் திருவிசைப்பா பாடிய கண்டராதித்தன்
- பராந்தகன் பேரனும் இராசராசனின் தந்தையுமாகிய சுந்தர சோழன் - மூவரையும் எந்த உலா நூலும் குறிப்பிடவில்லை.
- பட்டத்துக்கு வராத இராச மகேந்திரன் திருவரங்க நாதனுக்கு மாணிக்கத்தால் நாக அணை (பாம்புப் படுக்கை) செய்து கொடுத்ததை விக்கிரமன் உலா, சுந்தர சோழன் உலா இரண்டு நூல்களும் குறிப்பிடுகின்றன.
- ஒட்டக்கூத்தர் தன்மீது உலா பாடியபோது இரண்டாம் இராசராசன் ஒவ்வொரு கண்ணிக்கும் 1000 பொன் பரிசளித்தான் என்று சங்கர சோழன் உலா குறிப்பிடுகிறது.
- பராந்தகனுக்கு இருமுடிச்சோழன் என்னும் பெயர் உண்டு. இவன் தில்லைத் திருமன்றுக்குப் பொன் வேய்ந்தான். இவன் அரக்கன் அகலம் பிளந்து தில்லை மன்றம் கண்டான் என்று கூறுவது என்ன என்று விளங்கவில்லை.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 284
No comments:
Post a Comment