சோழமண்டல சதகம் என்னும் நூலின் உரையில் வரும் மேற்கோள் பாடல் ஒன்று ஒட்டக்கூத்தரைக் ‘கவிராட்சதன்’ என்று குறிப்பிடுகிறது. இங்கு ‘ராட்சதன்’ என்னும் சொல் ‘மிகுந்த வல்லமை உள்ளவன்’ என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது.
அந்தப் பாடல்:
புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்கு
உதவித் தொழில் புரி ஒட்டக்கூத்தனைக்
கவிகளிறு உகைக்கும் கவிராட்சதன் எனப்
புவிக்கு உயர் கவுடப் புலவனும் ஆக்கி
வேறு மங்கல நாள் வியந்து காங்கயன் மேல்
கூறும் நாலாயிரம் கோவை கொண்டு உயர்ந்தோன்
கம்பனைப் பாதுகாத்த வள்ளல் சடையப்ப வள்ளல் ‘திருவெண்ணெய் நல்லூர்ச் சடையன். இவனைப் போல் புதுவை (புதுச்சேரி) என்னும் ஊரில் வாழ்ந்த சடையன் ‘சங்கரன்’ என்பவன். இவன் ஒட்டக்கூத்தருக்கு உதவிவந்தான்.
ஒட்டக்கூத்தர் கவிதை என்னும் யானைமீது ஏறி அதனை நடத்திச்செல்லும் வல்லாளன்.
உலகியலைக் கடந்த உவமைகளுடன் பாடும் கவுட நெறிப் பாடல்களைப் பாடும் புலவர்.
இவர் காங்கயன் வள்ளலின் மங்கல நாளில் (பிறந்த நாளில்) அவனைப் போற்றி நாலாயிரம் பாடல்கள் பாடினார். அது ‘நாலாயிரம் கோவை’ என்னும் நூல்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 270
No comments:
Post a Comment