ஒட்டக்கூத்தன் பாடிய தனிப்பாடல்
தண்டாமரை தரு நாண்மலர் மீது ஓதிமம் மீளத்
தரளத் திரள் பவளத் திரள் என்று ஏழையர் தம் கைக்
கொண்டாடிட முன்னைக்கு இது புன்னைத் தரு செம்மைக்
குணம் நான்மடி உளதாகிய குட காவிரி நாடா!
பண்டு ஆலிலை அமளித் துயில் குழவிப் பருவத்தே
பவ்வத்தொடும் உலகைச் சிறு பவளத் துவர் வாயால்
உண்டாய் அகளங்கா! நிகளங்காய் கரி தொழுதாள்
உய்யத் திருவுளமோ எது செய்யத் திருவுளமோ?
நாண்மலர் என்பது அன்று அலர்ந்த தாமரை மலர்.
குளிர்ந்த தாமரைக் கொடி தரும் நாண்மலர்.
அன்னப்பறவை செந்தாமரை மலரில் இருக்கும்.
அப்போது அதன் கால் பவள நிறத்தில் காணப்படும்.
ஏழையர் என்போர் எளிய மனம் கொண்ட மகளிர்.
தாமரையிலிருந்து அன்னம் மீளும்போது ஏழையர் கை கொட்டிச் சிரிப்பர்.
அவர்களின் வாய் பவளம் போல் சிவப்பு.
பல் புன்னை முத்துகள் போல் வெள்ளை.
இப்படித் தோன்றும் காவிரி நாடா!
குடக்கிலிருந்து பாய்ந்து வரும் காவிரி நாடா!
(விக்கிரம பாண்டியா!)
நீ, குழந்தைப் பருவத்தில் ஆலிலை மேல் பள்ளிகொண்டிருந்த திருமால்.
உன் பவளம் போன்ற செந்நிற வாயால் உலகை, நீ உறங்கும் கடலோடு உண்டவன்.
நிகளம் என்னும் கால் கட்டுச் சங்கிலியை வெறுக்கும் யானைமேல் நீ வரும்போது உன் யானையை இவள் தொழுதாள்.
உன் மேல் காதல் கொண்டிருக்கும் இவள் உயிருடன் வாழ நீ திருவுள்ளம் கொள்ளமாட்டாயா?
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 271
No comments:
Post a Comment