ஒட்டக்கூத்தன் பாடிய தனிப்பாடல்
சோழனைக் காதலிக்கும் ஒருத்தி அவன் ஊர் மல்லையில் வாழும் குருகுப் பறவைகளிடம் தன் குறையைச் சொல்லி முறையிடுவதாகப் பாட்டு.
செய்யோன் அகளங்கன் வளவன் சோழ குலேசன்
சென்னிக் குல தீபன் உயர் பொன்னித் திருநாடன்
பொய்யோடு ஒருநாளும் முறை செய்யா தனு துங்கன்
போர் வல்லவன் மல்லைப் பொழில் பொங்கும் குருகீரே!
ஐயோ அவரைப் போல் ஒரு நிட்டூரரும் உண்டோ?
அஞ்சு அம்பு அடு கைக்கே, துயர் நெஞ்சம் படும் கைக்கே,
வெய்யோன் விழுகைக்கே, முழு மதி வந்து எழுகைக்கே,
விழிநீர் சொரிகைக்கே, எனை விட்டுப் பிரிந்தாரே.
அகளங்கன் செய்யோன் (செம்மையானவன்)
வளவன்
சோழ குல ஈசன்
சென்னிக் குல தீபன் (குலவிளக்கு)
உயர் பொன்னித் திருநாடன்
பொய்யோடு ஒருநாளும் முறை செய்யா தனு துங்கன்
(பொய்யா வில் கொண்ட மேலோன்)
போர் வல்லவன்
அவன் மல்லைப் பொழிலில் பொங்கும் குருகுகளே!
ஐயோ
அவரைப் போல் ஒரு நிட்டூரரும் (கொடுமைக்காரரும்) உண்டோ?
அஞ்சு அம்பு அடு கைக்கே,
துயர் நெஞ்சம் படும் கைக்கே,
(ஐந்து அம்புகள் தொடுக்கும் காமன் கையில் அகப்பட்டு என் நெஞ்சம் துயர் படுகிறது)
வெய்யோன் விழுகைக்கே, முழு மதி வந்து எழுகைக்கே,
விழிநீர் சொரிகைக்கே, எனை விட்டுப் பிரிந்தாரே.
பொழுது இறங்கும்போது மதியம் வந்து எழுவதனால் நான் கண்ணீர் விடுவதற்காகவே என்னை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 271
No comments:
Post a Comment