Pages

Tuesday, 28 October 2025

விக்கிரம சோழன் (1118-1135)

ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா நூலின் முதல் உலா விக்கிரம சோழன் உலா. விக்கிரம சோழன் பற்றிய சில செய்திகள்:
  1. கலிங்கத்துப் பரணி கொண்ட முதல் குலோத்துங்கனின் மகன் இந்த விக்கிரம சோழன்
  2. 1118-ல் இளவரசு பட்டம் பெற்றவன்
  3. 1120-ல் தந்தை இறந்தபோது அரசனானவன்
  4. பரகேசரி என்னும் பட்டம் பெற்றவன் 
  5. ஆனி உத்திரட்டாதி நாளில் பிறந்தவன் 
  6. தந்தை இருந்தபோது வேங்கி நாட்டில் தந்தையின் பிரதிநிதியாக இருந்து தென்கலிங்கப் போரில் பங்கு கொண்டு புகழ் பெற்றவன். 
  7. இவன் ஆட்சிக் காலத்தில் நாட்டில் அமைதி நிலவிற்று 
  8. இவன் பல கோயில்களுக்குத் திருப்பணி செய்தான். 
  9. தில்லைச் சிற்றம்பலத்துப் பல பகுதிகளுக்குப் பொன் வேய்ந்தான் 
  10. தில்லைத் திருத்தேருக்கு முத்துவடம் அணிவித்தான்
  11. விக்கிரம சோழன் திருமாளிகை, விக்கிரம சோழன் திருவீதி, விக்கிரம சோழன் திருமண்டபம் என்னும் இடப்பெயர்கள் அவன் காலத்திலேயே இவன் பெயரில் சூட்டப்பட்டு வழக்கில் இருந்துவந்தன. 
  12. காவிரிக்கும் மண்ணியாற்றுக்கும் இடையில் இவன் வெட்டிய பாசன ஆறு ‘விக்கிரமன் ஆறு’ எனப் பெயர் பெற்றிருந்தது.  
  13. ‘அரும்பாக்கம் கிழான் மணவில் கூத்தன் காலிங்கராயன்’ என்பவன் இவனது படைத்தலைவன். 
  14. கங்கை கொண்ட சோழபுரம், பழையாறை எனப்பட்ட முடிகொண்ட சோழபுரம், தில்லை, காட்டுமன்னார் கோயில் முதலானவை இவன் வாழ்ந்த பேரூர்கள். 
  15. ஒட்டக்கூத்தரின் தகுதியை அறிந்து அவரது இளமைப் பருவத்திலையே அவரை அவைக்களப் புலவராக இவன் அமர்த்திக்கொண்டான். 
  16. அகளங்கன், தியாக சமுத்திரம் - என்பன இவனுக்குரிய சிறப்புப் பெயர்கள். 
  17. இவனுக்கு மூன்று மனைவியர்
  18. இவனுக்குப் பின்னர் அரசனான இரண்டாம் குலோத்துங்கன் இவனது மகன். 
  19. கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமான், முனையர்கோன், மணவிற்கூத்தன், காலிங்கராயன் - முதலானோர் இவன் படைத்தலைவர்களில் மற்றும் சிலர்.
  20. ஆந்திர நாட்டின் பல அரசர்கள் இவனுக்குத் திறை செலுத்திவந்தனர். 
  21. "பூமாலை மிடைந்து பூமாது புணர" எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தி இவனைக் குறிக்கிறது. 
  22. இவனைப் பற்றிய தனிப்பாடல்
வடவைக் கனலைப் பிரித்துக்கொண்டு
மற்றும் ஒருகால் வடித்து எடுத்து 
வாடைத் துருத்தி வைத்து ஊதி
மறுகக் காய்ச்சிக் குழம்பு செய்து 

புடவிக் கயவர் தமைப் பாடிப்
பரிசு பெறாமல் திரும்பி வரும் 
புலவர் மனம் போல் கடு நெருப்பைப் 
புளுகு என்று இறைத்தால் பொறுப்பாளோ

அடவிக் கதலிப் பசும் குருத்தை
நச்சுக் குழல் என்று அஞ்சி அஞ்சி
அம் சொல் கிளிகள் பஞ்சரம் விட்டு 
அகலா நிற்கும் அகளங்கா!

திட முக் கட வாரணம் உகைத்த 
தேவே! சோழ சிங்கமே!
திக்கு விசயம் செலுத்தி ஒரு
செங்கோல் நடத்தும் எம் கோவே!

கயவரைப் பாடிய புலவர்கள் பரிசில் பெறாமல் திரும்பி வருவர். காரணம் அந்தப் புலவர்கள் அவர்களிடம் இல்லாதது  பற்றிச் சொல்லிப் புளுகினார்கள். 

அதனால் அவர்களின் மனம் வேதனையில் எரிந்தது. ஊழி முடியும் காலத்தில் உலகை அழிக்கத் தோன்றும் வடவைக் கனல் போல் எரிந்தது. 

அந்த வடவைத் தீக்கொளுந்தை மட்டும் தனியே பிரித்து எடுத்து வாடைக்காற்று என்னும் துருத்தியால் ஊதிக் காய்ச்சிய தீக்குழம்பு போல அந்தப் புலவர்கள் கயவர்களைப் பாடினார்கள் அல்லவா? அதனைத் தமிழ்த்தாய் பொறுத்துக்கொள்வாளா? 

அதனால் அந்தப் புலவர்களின் நெஞ்சம் எரிந்தது. 

வாழையிலைக் குருத்தைத் தின்னும் கிளிகள் அந்த இலைக்குருத்துக் குழலில் ஊதுவது போல் தோன்றும். பஞ்சரம் என்னும் பாலைப்பண் பாடுவது போல் இருக்கும். பாலைப்பண் காதலர் பிரிவு பற்றிப் பாடும் பண். 

இப்படிக் கிளிகள் வாழைக்குருத்தை விட்டு அகலாமல் இருக்கும் நாட்டை உடைய அகளங்கா! 

மும்மதம் ஒழுகும் யானைமேல் வரும் சோழ சிங்கமே!  

திக்கு விசயம் செய்து செங்கோல் செலுத்தும் எம் கோமகனே! 
நீயே எண்ணிப் பார்.

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 272
  

No comments:

Post a Comment