Monday, 6 April 2020

கம்பராமாயணம் ஒற்றுக் கேள்விப் படலம் - KambaRamayanam 6-9 89

மாலியவானின் சொல்லை இராவணன் மதியாமை


மனம் வெதும்பி இவற்றை உனக்குக் கூறுகிறேன். 
சீதையை விட்டுவிட்டால் தீங்கு நீங்கும் - என்று மாலியவான் கூறினான் 81

மனிதர், வானரங்கள், இமையவர் பற்றித் தெரிவித்தாய். நீ கற்றது நன்று! என்று தொடங்கி இராவணன் கூறலானான் 82
போர் சீதைக்காக என்றால், போரிடத் தயங்குவேனோ 83
தேவரை வென்ற அம்புகள் குரங்குகளை வெல்லாவோ? 84
அமிழ்தம் கடைந்த நாளில் வந்த விடம் போன்றது என் அம்பு 85
திருமாலே வந்தாலும் என் அம்பு வெல்லும் 86
இமையோர் குரங்காக வந்தால், அவை தூக்கி எறிவதற்கு என் தோள் பொடிபடும் மலைகளா? 87 என்றான். 

இருள் விடிந்தது 88
கதிரவன் தோன்றினான் 89

பாடல் 

'ஈது எலாம் உணர்ந்தேன் யானும்; என் குலம் இறுதி உற்றது

ஆதியின் இவனால் என்றும், உன் தன் மேல் அன்பினாலும்,
வேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ சொன்னேன்;
சீதையை விடுதி ஆயின், தீரும் இத் தீமை' என்றான். 81

'மற்று எலாம் நிற்க, அந்த மனிதர் வானரங்கள், வானில்
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை
சொற்றவாறு அன்றியேயும், "தோற்றி நீ" என்றும் சொன்னாய்;
கற்றவா நன்று! போ' என்று, இனையன கழறலுற்றான்: 82

'பேதை மானிடவரோடு குரங்கு அல, பிறவே ஆக,

பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப் புறத்தது ஆக,
காது வெஞ் செரு வேட்டு, என்னைக் காந்தினர் கலந்த போதும்,
சீதைதன் திறத்தின் ஆயின், அமர்த் தொழில் திறம்புவேனோ? 83

'ஒன்று அல, பகழி, என் கைக்கு உரியன; உலகம் எல்லாம்

வென்றன; ஒருவன் செய்த வினையினும் வலிய; "வெம் போர்
முன் தருக" என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம்
சென்றன; இன்று வந்த குரங்கின் மேல் செல்கலாவோ? 84

'சூலம் ஏய் தடக் கை அண்ணல் தானும் ஓர் குரங்காய்த் தோன்றி

ஏலுமேல், இடைவது அல்லால், என் செய வல்லான் என்னை?
வேலை நீர் கடைந்த மேல்நாள், உலகு எலாம் வெருவ வந்த
ஆலமோ விழுங்க, என் கை அயில் முகப் பகழி? அம்மா! 85

'அறிகிலை போலும், ஐய! அமர் எனக்கு அஞ்சிப் போன

எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும், என் கை வாளி
பொறி பட, சுடர்கள் தீயப் போவன; போழ்ந்து முன் நாள்,
மறி கடல் கடைய, வந்த மணிகொலாம், மார்பில் பூண? 86

'கொற்றவன், இமையோர் கோமான், குரக்கினது உருவு கொண்டால்,

அற்றை நாள், அவன் தான் விட்ட அயிற்படை அறுத்து மாற்ற,
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து, மேல் எழுந்து வீங்காப்
பொற்றை மால் வரைகளோ, என் புய நெடும் பொருப்பும்? அம்மா!' 87

உள்ளமே தூது செல்ல, உயிர் அனார் உறையுள் நாடும்
கள்ளம் ஆர் மகளிர் சோர, நேமிப்புள் கவற்சி நீங்க,
கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கோட்டில் கொண்ட
வெள்ள நீர் வடிந்தது என்ன, வீங்கு இருள் விடிந்தது அன்றே. 88

இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி,

பொன் மதில் புறத்து நாளும் போகின்றான், - 'போர் மேற்கொண்டு
மன்னவர்க்கு அரசன் வந்தான்; வலியமால்' என்று, தானும்
தொல் நகர் காண்பான் போல, - கதிரவன் தோற்றம் செய்தான். 89


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
9. ஒற்றுக் கேள்விப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 

நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி