Friday, 3 April 2020

கம்பராமாயணம் கடல் சீறிய படலம் - KambaRamayanam 6-6 30

கடலில் தீ


எரி நிலத்தைத் தாங்கும் பாம்பின் தலையையும் சுட்டது 21
கப்பல் கூம்பு போல் மீனில் பாய்ந்த அம்புகள் தோன்றின 22
சில மீன்கள் வெந்து பொரிந்தன 23
மீன்கள் நெய்யில் வேவது போலப் பொரிந்தன 24
கடல் தனலைக் கொட்டுவது போல் தோன்றிற்று 25
சங்குகள் கிழங்குகள் போல் வெந்தன 26
ஒன்றில் ஒன்று மோதிய அம்புகள் மூங்கில் காடு போல் பற்றி எரிந்தன 27
மலைகள் நெய்யில் நனைத்தது போல் எரிந்தன 28
நீரில் தாமரை தோன்றுவது போல, கடலில் தீ 29
உப்புக் கடல், அப்புக் கடல் என்னும் பெயர்கள் மறைந்து தீக்கடல் என ஆயிற்று 30

பாடல்


நீறு மீச்செல, நெருப்பு எழ, பொருப்பு எலாம் எரிய,
நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,
ஆறு கீழ்ப் பட, அளறு பட்டு அழுந்திய அளக்கர்
சேறு தீய்ந்து எழ, காந்தின சேடன் தன் சிரங்கள். 21

மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின, மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என, பொரு கணை எரிய;
உய்த்த கூம்பொடு நெடுங் கலம் ஓடுவ கடுப்ப,
தைத்த அம்பொடும் திரிந்தன, தாலமீன் சாலம். 22

சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய,
அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்ப அரும் அளக்கர்;
பந்தி பந்திகளாய் நெடுங் கடுங் கணை படர,
வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன, சில மீன். 23

வைய நாயகன் வடிக் கணை குடித்திட, வற்றி,
ஐய நீர் உடைத்தாய், மருங்கு அருங் கனல் மண்ட,
கை கலந்து எரி கருங் கடல் கார் அகல் கடுப்ப,
வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன, சில மீன். 24

குணிப்ப அருங் கொடும் பகழிகள் குருதி வாய் மடுப்ப,
கணிப்ப அரும் புனல் கடையுறக் குடித்தலின், காந்தும்
மணிப் பருந் தடங் குப்பைகள் மறி கடல் வெந்து,
தணிப்ப அருந் தழல் சொரிந்தன போன்றன, தயங்கி. 25

எங்கும் வெள்ளிடை மடுத்தலின், இழுதுடை இன மீன்
சங்கமும், கறி கிழங்கு என, இடை இடை தழுவி,
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த;
பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரித்தன போன்ற. 26

அதிரும் வெங் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப,
வெதிரின் வல் நெடுங் கான் என வெந்தன, மீனம்;
பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த
உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒரு பால். 27

அண்ணல் வெங் கணை அறுத்திட, தெறித்து எழுந்து அளக்கர்ப்
பண்ணை வெம் புனல் படப் பட, நெருப்பொடும் பற்றி,
மண்ணில் வேர் உறப் பற்றிய நெடு மரம், மற்றும்,
எண்ணெய் தோய்ந்தென எரிந்தன, கிரிக் குலம் எல்லாம். 28

தெய்வ நாயகன் தெரி கணை, 'திசை முகத்து ஒருவன்
வைவு இது ஆம்' என, பிழைப்பு இல மனத்தினும் கடுக,
வெய்ய வல் நெருப்பு இடை இடை பொறித்து எழ, வெறி நீர்ப்
பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது, புணரி. 29

செப்பின், மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்
தப்புமே? அது கண்டனம், உவரியில்; 'தணியா
உப்பு வேலை' என்று உலகு உறு பெரும் பழி நீங்கி,
அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ, அளக்கர்? 30

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
6. கடல் சீறிய படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 

நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி