Thursday, 2 April 2020

கம்பராமாயணம் ஒன்னார் வலி அறி படலம் - KambaRamayanam 6-5 10

மாலைப்பொழுது


வீடணன் தங்க தனி இருப்பிடம் தரப்பட்டது 1
அந்திக் காலம் வந்தது 2
இருளும் விண்மீன்களும் தோன்றின 3
மல்லிகை மணம் இராமனை வாட்டியது 4
இராமன் முகத்தை வெல்வேன் என்று நிலா தோன்றிற்று 5
கடலே வெண்ணிறமாக மாறியது 6
குரங்குப் படை போல் எங்கும் வெள்ளை 7
கடற்கரை மணல் வாலுகத்திலும் அதே நிறம் 8
தென்றல் புலி இராமன் மேல் பாய்ந்தது 9
நிலாத் தாரை அம்புகளை மன்மதன் இராமன் மார்பில் பாய்ச்சினான் 10


பாடல்


வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழித்
தந்தனன் விடுத்த பின், இரவி, 'தன் கதிர்
சிந்தின வெய்ய' என்று எண்ணி, தீர்ந்தனன். 1

சந்தி வந்தனைத் தொழில் முடித்து, தன்னுடைப்
புந்தி நொந்து, இராமனும் உயிர்ப்ப, பூங் கணை
சிந்தி வந்து இறுத்தனன், மதனன்; தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே. 2

மாத் தடந் திசைதொறும் வளைத்த வல் இருள்

கோத்தது, கருங் கடல் கொள்ளை கொண்டென;
நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர்
பூத்தென மீன்களால் பொலிந்தது, அண்டமே. 3

சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய

வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வேட்கையால்,
எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால்,
மல்லிகைக் கானமும், வானம் ஒத்ததே. 4

ஒன்றும் உட் கறுப்பினோடு, ஒளியின் வாள் உரீஇ,

'தன் திருமுகத்தினால் என்னைத் தாழ்த்து அற
வென்றவள் துணைவனை இன்று வெல்குவேன்'
என்றது போல, வந்து எழுந்தது - இந்துவே. 5

'கண்ணினை அப்புறம் கரந்து போகினும்,

பெண் நிறம் உண்டுஎனின், பிடிப்பல் ஈண்டு' எனா,
உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான். 6

புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல்,

'உடைக் கருந் தனி நிறம் ஒளித்துக் கொண்டவன்,
அடைக்க வந்தான் எனை, அரியின் தானையால்;
கிடைக்க வந்தான்' எனக் கிளர்ந்தது ஒத்ததே. 7

மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்

தோல் உகுத்தாலென, அரவத் தொல் கடல்,
வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம்,
பால் உகுத்தாலென, நிலவு பாய்ந்ததால். 8

மன்றல்வாய் மல்லிகை எயிற்றின், வண்டு இனம்

கன்றிய நிறத்தது, நறவின் கண்ணது,
குன்றின்வாய் முழையின் நின்று உலாய கொட்பது,
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால். 9

கரத்தொடும் பாழி மாக் கடல் கடைந்துளான்

உரத்தொடும், கரனொடும், உயர ஓங்கிய
மரத்தொடும், தொளைத்தவன் மார்பில், மன்மதன்
சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள். 10


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
5. ஒன்னார் வலி அறி படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 

நாலடி நறுக்குகளின் அடுக்கு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி