Thursday, 2 April 2020

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 Plus

மிகைப் பாடல்கள்


வீடணன் சொன்ன சொற்களைக் கேட்டு இராவணன் சினந்து நகைத்தான் 1-1
அன்று தூதனைக் கொல்லக் கூடாது என்றாய். 
இன்று அவனோடு சேர விரும்புகிறாய் - என உருமினான் 6-1
உனக்கு உறுதி சொன்னேன். 
நீ கேட்கவில்லை 
உன்னைக் காட்டிலும் பேதை யார் - என வீடணன் இராவணனிடம் கூறினான் 11-1
கொற்றவா! சரண் - என்றான் வீடணன் 33-1
சரண் என்று கூறியவர் யார் கன்று இராமன் வினவினான் 33-2
பாற்கடல் கடையும்போது தோன்றிய அமுதத்தையும் விடத்தையும் ஒன்று என்று கொள்ளமுடியாதது போல, இராவணனையும் வீடணனையும் ஒருவர் எனக் கொள்ள முடியாது என்றான், அனுமன் 86-1
ஒரு வயிற்றில் தோன்றிய அதிதி, திதி இருவரும் ஒருதிறத்தவர் அல்லாது போல, கொள்ள வேண்டும். 86-2
பிறப்பில் ஒத்தவர் ஆயினும் குணத்தில் வேறுபட்டிருப்போரைக் கண்டறிதல் பேண்டும் 86-3
அடைக்கலம் புகுந்துள்ளான் 
எண்ணி ஏற்றுக்கொள் 91-1
சீய முனிவனும், வேடனும் ஒரு மரத்தடிக்கு வந்தபோது அந்த மரம் இருவருக்கும் ஒரே  வகையான பழம் தந்தது அன்றோ 116-1
இராமன் சொல்வதே முடிவு என்று சுக்கிரீவன் சொன்னான் 117-1
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன் - என்று வீடணன் மகிழ்ந்தான் 151-1

மிகைப் பாடல்கள்

சிரத்தொகை அனைத்தையும் துளக்கி, தீ எழக்
கரத்தொடு கரம் பல புடைத்து, 'காளை! நீ
உரைத்திடும் உறுதிகள் நன்று, நன்று!' எனாச்
சிரித்தனன், கதம் எழுந்து இனைய செப்புவான்: 1-1

'அன்று வானரம் வந்து, நம் சோலையை அழிக்க
"கொன்று தின்றிடுமின்" என, "தூதரைக் கோறல்
வென்றி அன்று" என விலக்கினை; மேல் விளைவு எண்ணித்
துன்று தாரவன் - துணை எனக் கோடலே துணிந்தாய். 6-1

'நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்;
சீரிது என்று உணர்கிலை; சீறிப் பொங்கினாய்;
ஓர் தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார்,
தேர்வுறின், அவர்களின் சிறந்த பேதையோர்.' 11-1

'மற்று ஒரு பொருள் உளது என்? நின் மாறு இலாக்
கொற்றவ! சரண்' எனக் கூயது ஓர் உரை
உற்றது, செவித்தலத்து; ஐயன் ஒல்லென
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா, 33-1

'"எந்தையே இராகவ! சரணம்" என்ற சொல்
தந்தவர் எனைவரோ? சாற்றுமின்!' என,
மந்தணம் உற்றுழீஇ, வய வெஞ் சேனையின்
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம் அரோ: 33-2

'மேலைநாள், அமுதமும் விடமும் வெண்கடல்
மூலமாய் உதித்தன; முறையின் முற்றுதல்
சாலுமோ, ஒன்று எனக் கருதல் தக்கதோ -
ஞால நாயக! - தெரிந்து எண்ணி நாடிலே? 86-1

'ஒருவயிறு உதித்தனர், அதிதி, ஒண் திதி,
இருவர்; மற்று அவரிடத்து எண்ணில், எம்பிரான்!
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்;
கருதின் மற்று ஒன்று எனக் கழறலாகுமோ? 86-2

'எப்பொருள்? ஏவரே? உலகின் ஓர் முறை
ஒப்பினும், குணத்து இயல் உணரின், பேதமாம்
அப் பொருள் நலன் இழிவு இரண்டும் ஆய்ந்து, அகம்
மெய்ப் பொருள் கோடலே விழுமிது' என்பரால். 86-3

'ஆவலின் அடைக்கலம் புகுந்துளான் கருத்து
ஓவலின் இவர்தமக்கு உணர ஒண்ணுமோ?
தேவர்கள் தேவன் நீ; தெளியின், அன்னவர்க்
கூவி, இங்கு அறிவது கொள்கை ஆகுமால். 91-1

மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து, வேடன்
மீது ஒரு மரத்தில் சேர, வேண்டு உரை அரிக்குச் சொல்லி,
பேதம் அற்று இருந்தும்? அன்னான் பிரிந்த வஞ்சத்தை ஓர்ந்தும்,
காதலின் கனி காய் நல்கிக் காத்ததும் கவியது அன்றோ? 116-1

என்ன முன் பருதிமைந்தன் எழுந்து அடி வணங்கி, 'எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால், மறுத்து ஒரு துணிவும் உண்டோ?
உன் உளத்து உணராது ஏது? உனக்கு அரிது யாதோ?' என்னாப்
பன்னி, மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான்.117-1

வானவர் இதனைக் கூற, வலங்கொடு தானை வைப்பை,
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும், 'தாழாது
ஊனுடைப் பிறவி தீர்ந்தேன்' என மனத்து உவந்து, ஆங்கு அண்ணல்
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான். 151-1

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்குகளின் அடுக்கு

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி