Wednesday, 1 April 2020

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 90

வீடணன் பற்றி அனுமன்


காலச் சூழலைக் கருதி வீடணனை ஏற்கலாம் என்றான் நீலன் 81
மற்ற அமைச்சர்களில் சிலர் வீடணனை ஏற்றுக்கொள்ளுதல் பழுது என்றும், சிலர் பழுதன்று எனவும் கூறினர் 82

இராமன் மாருதியை வினவினான் 83
மாருதி தன் கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு அடக்கத்துடன் கூறலானான் 84

பலரும் பலவிதமாகக் கூறினர் 85
வீடணனைத் தீயவன் என்று நான் கருதவில்லை 86
இவன் நெஞ்சில் கைதவம் (வஞ்சம்) ஒருக்குமானால் இவன் முகம் காட்டிக் கொடுத்துவிடும் அல்லவா 87
இவன் முகம் இவனைக் கள்ளமில்லாதவன் எனக் காட்டுகிறது 88
வாலி இறந்த பின்னர் சுக்கிரீவன் ஆட்சி பெற்றது போல் பெற விரும்புகிறான் 89
நெறி இல்லா அரசு நிலைக்காது என்று உணர்ந்து கொண்டிருக்கிறான் 90


பாடல்

'காலமே நோக்கினும், கற்ற நூல்களின்

மூலமே நோக்கினும், முனிந்து போந்தவன்
சீலமே நோக்கி, யாம் தெரிந்து தேறுதற்கு
ஏலுமே?' என்று எடுத்து இனைய கூறினான். 81

மற்றுள மந்திரக் கிழவர், வாய்மையால்,
குற்றம் இல் கேள்வியர், அன்பு கூர்ந்தவர்,
'பற்றுதல் பழுது' என, பழுது உறா ஒரு
பெற்றியின் உணர்வினார், முடியப் பேசினார். 82

'உறு பொருள் யாவரும் ஒன்றக் கூறினார்
செறி பெருங் கேள்வியாய்! கருத்து என்? செப்பு' என,
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா
அறிவனை நோக்கினான், அறிவின் மேல் உளான். 83

'இணங்கினர் அறிவிலர் எனினும், எண்ணுங்கால்,
கணம் கொள்கை நும்மனோர் கடன்மைகாண்' என
வணங்கிய சென்னியன், மறைத்த வாயினன்,
நுணங்கிய கேள்வியன், நுவல்வதாயினான்: 84

'எத்தனை உளர், தெரிந்து எண்ண ஏய்ந்தவர்,

அத்தனைவரும், ஒரு பொருளை, "அன்று" என,
உத்தமர், அது தெரிந்து உணர, ஓதினார்;
வித்தக! இனி, சில விளம்ப வேண்டுமோ? 85

'தூயவர் துணி திறன் நன்று தூயதே;

ஆயினும், ஒரு பொருள் உரைப்பென், ஆழியாய்!
"தீயன்" என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்;
மேயின சில பொருள் விளம்பக் கேட்டியால்: 86

'வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள் முகம்,

கண்டது ஓர் பொழுதினில், தெரியும்; கைதவம்
உண்டுஎனின், அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ?
விண்டவர் நம் புகல் மருவி வீழ்வரோ? 87

'உள்ளத்தின் உள்ளதை, உரையின் முந்துற,

மெள்ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால்,
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள்
பள்ளத்தின் அன்றியே வெளியில் பல்குமோ? 88

'வாலி விண் பெற, அரசு இளையவன் பெற,

கோலிய வரி சிலை வலியும் கொற்றமும்,
சீலமும் உணர்ந்து, நிற் சேர்ந்து, தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான். 89

'செறி கழல் அரக்கர்தம் அரசு சீரியோர்

நெறி அலது; ஆதலின், நிலைக்கலாமையும்,
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர்
பிறிவு அருங் கருணையும், மெய்யும், பேணினான். 90

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி