Wednesday, 1 April 2020

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 80

வீடணன் பற்றி நீலன் கருத்து


சாம்பன் வீடணன் பற்றிக் கூறுகிறான். இவன் நமக்கு வெற்றி தேடித் தந்தாலும் சிற்றினத்தவன் அல்லனோ 71
தேவர்க்கு இடர் செய்தவர் நமக்கு அன்பு செய்வாரோ 72
இவனுக்கு அடைக்கலம் கொடுத்தாலும் பழி. கொடுக்காமல் விட்டுவிட்டாலும் பழி 73
இவன் ஏமாற்றிய மான் போல வந்திருக்கிறான் - என்றான் 74

இராமன் நீலனை வினவினான் 75

பகைவரைத் துணையாக, கொள்ளலாம். இது குரங்கின் சொல் என்று இகழாமல் கேள் 76

போரில் தம் குலத்தவரைக் கொன்றவர் 
பெண்களை மதிப்பவர் 
பெரும் பொருளை இழந்தவர் 77
அதிகமான அன்பினைச் செலுத்துவோர் 
போரில் புறங்கொடுத்து அஞ்சி வந்தவர் 
தாயம் பெற விரும்புபவர் 
சுற்றத்தாரை மடித்தவர் 78
பகைவனால் துன்புற்றவர் 79
ஆகியோர் நம்மை வந்து அண்டினால் நமக்குத் துணை நிற்பர் என நம்பலாம் என்றான் 80

பாடல்

'வெற்றியும் தருகுவர், வினையம் வேண்டுவர்,

முற்றுவர், உறு குறை முடிப்பர், முன்பினால் -
உற்றுறு நெடும் பகை உடையர், அல்லதூஉம்,
சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ? 71

'வேதமும் வேள்வியும் மயக்கி, வேதியர்க்கு

ஏதமும், இமையவர்க்கு இடரும், ஈட்டிய
பாதகர் நம்வயின் படர்வராம் எனின்,
தீது இலராய், நமக்கு அன்பு செய்வரோ? 72

'கைப் புகுந்து, உறு சரண் அருளிக் காத்துமேல்,

பொய்க் கொடு வஞ்சனை புணர்த்த போதினும்,
மெய்க் கொள விளியினும், "விடுதும்" என்னினும்,
திக்கு உறும், நெடும் பழி; அறமும் சீறுமால். 73

'மேல் நனி விளைவது விளம்ப வேண்டுமோ?

கானகத்து இறைவியோடு உறைந்த காலையில்,
மான் என வந்தவன் வரவை மானும், இவ்
ஏனையன் வரவும்' என்று இனைய கூறினான். 74

பால்வரு பனுவலின் துணிவு பற்றிய
சால் பெருங் கேள்வியன், தானை நாயகன்,
நீலனை, 'நின் கருத்து இயம்பு, நீ' என
மேலவன் விளம்பலும், விளம்பல் மேயினான்: 75

'பகைவரைத் துணை எனப் பற்றற்பால ஆம்

வகை உள; அன்னவை - வரம்பு இல் கேள்வியாய்! -
தொகையுறக் கூறுவென்; "குரங்கின் சொல்" என
நகையுறல் இன்றியே, நயந்து கேட்டியால்! 76

'தம் குலக் கிளைஞரைத் தருக்கும் போரிடைப்

பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர்,
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர்,
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர், 77

'பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர்,

போரிடைப் புறங்கொடுத்து அஞ்சிப் போந்தவர்,
நேர் வரு தாயத்து நிரப்பினோர், பிறர்
சீரிய கிளைஞரை மடியச் செற்றுளோர், 78

'அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால்

படுத்தவர் நட்டவர், - பகைஞரோடு ஒரு
மடக்கொடி பயந்தவர் மைந்தர் ஆயினும்,
உடன் கொளத் தகையர், நம்முழை வந்து ஒன்றினால். 79

'தாம் உற எளிவரும் தகைமையார் அலர்,

நாம் உற வல்லவர், நம்மை நண்ணினால்,
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின்,
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம். 80

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி