Wednesday, 1 April 2020

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 120

வீடணன் தஞ்சம் பெறல் 


இராமன் மனநிலை 
தஞ்சம் அடைந்தவருக்கெல்லாம் மாயன் வீடு அளிப்பவன் ஆயிற்றே 111
தந்தை இரணியன் கொடுத்த நச்சுப் பாலை மகன் உண்டபோது அபயம் என்ற மகனைக் காப்பாற்றியவன் ஆயிற்றே 112
சானகி சரண் அடைந்தபோது அஞ்சல் என்றவன் ஆயிற்றே 113
அபயம் என்றாரைக் காப்பாற்றாதவன் நரகில் வீழ்வர் 114
தேவர்க்குத் தீமை செய்த பேதையைக் கொல்வேன் என்ற வாக்கு பொய்க்கலாமா 115
எளியர் என்றாலும் புகலிடம் தந்து காப்பாற்றித அரசர்கள் பலர் அல்லவா 116
அபய தானம் கொடுத்தலே என் கடப்பாடு ஆதலால் வீடணனைக் கொண்டுவருக என்று சுக்கிரீவனை அனுப்பினான். 117
சுக்கிரீவன் சென்றான் 118
சுக்கிரீவன் வருகையை உணர்ந்த வீடணன் எதிர் சென்றான் 119
இரவும் பகலும் போல இருவரும் தழுவிக்கொண்டனர் 120

பாடல்

'மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன்,

தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே
என்னினும், அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி,
பின்னும் வீடு அளிக்கும் என்றால், பிறிது ஒரு சான்றும் உண்டோ ? 111

'நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன், "நாளும்

தஞ்சு" என, முன்னம், தானே தாதைபால் கொடுத்து, "சாதல்
அஞ்சினேன்; அபயம்!" என்ற அந்தணற்கு ஆகி, அந் நாள்,
வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ ? 112

'"சரண் எனக்கு யார்கொல்?" என்று சானகி அழுது சாம்ப,

"அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!" என்று அருளின் எய்தி,
முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய் அமர் முடித்து, தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என்வயின் வழக்கு அன்று ஆமோ? 113

'உய்ய, "நிற்கு அபயம்!" என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்

கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும்,
மை அற, நெறியின் நோக்கி, மா மறை நெறியில் நின்ற
மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகில் வீழ்வார். 114

'சீதையைக் குறித்ததேயோ, "தேவரைத் தீமை செய்த

பேதையைக் கொல்வேன்" என்று பேணிய விரதப் பெற்றி?
வேதியர், "அபயம்!" என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்ன
காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ? 115

'காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச்

சீரிய தன்மை நோக்கின், இதனின் மேல் சிறந்தது உண்டோ?
பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா
ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் அம்மா! 116

'ஆதலான், "அபயம்!" என்ற பொழுதத்தே, அபய தானம்

ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர், என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி' என்றான். 117

ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே;
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி,
கைபுகற்கு அமைவது ஆனான், 'கடிதினின் கொணர்வல்' என்னா,
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்பால் விரைவின் சென்றான். 118

வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல்,
'"தருக!" என்றான்; அதனால், நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த,
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன்' என்னலோடும்,
திரிகின்ற உள்ளத்தானும், அகம் மலர்ந்து, அவன் முன் சென்றான். 119

தொல் பெருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார்
புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே;
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒரு நாள் உற்ற
எல்லியும் பகலும் போல, தழுவினர், எழுவின் தோளார். 120

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்குகளின் அடுக்கு 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி