Wednesday, 1 April 2020

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 100

அனுமன் உரை - தொடர்ச்சி


வாலிக்கு நிகழ்ந்தது போல் இராவணனுக்கு நிகழும் என்று நினைத்துக்கொண்டு வந்துள்ளான் 91
அரக்கர் மாயங்களை உணர்ந்தவன் இவன். நமக்கு அவ்வப்போது சொல்லுவான் 92
எளியவன் இவனை எதிரி என்று எண்ண முடியவில்லை 93
அன்று இராவணன் என்னைக் கொல்ல வந்தபோது தூதனைக் கொல்லக்கூடாது" என்று கூறியவன் இவன் 94
மாதரை, அடைக்கலம் பெற்றோரை, தூதரைக் கொல்லக்கூடாது என்று அன்று கூறியவன் இவன் 95
அன்று இரவில் இவன் மாளிகைக்குச் சென்றபோது நன்னிமித்தங்கள் தோன்றின 96
இவன் இல்லம் அரக்கர் இல்லம் போல் காணப்படாமல், அந்தணர் இல்லம் போலக் காணப்பட்டது 97
இவன் மகள் "உன்னைத் தொட்டால் இராவணன் தலை வெடித்துவிடும்" என்னும் உண்மையைச் சீதைக்குச் சொல்லியுள்ளாள் 98
உன் அம்பால் இராவணன் அழிவான் என உணர்ந்திருக்கிறான் 99
இவன் அபயத்தை ஏற்றுக்கொள்ளாமல் விட்டால் கூவத்து நீரைக் கடல் ஏற்றுக்கொள்ளாதது போல் ஆகும் 100
என்றான் அனுமன் 

பாடல்


'"காலம் அன்று, இவன் வரு காலம்" என்பரேல்,
"வாலிதன் உறு பகை வலி தொலைத்தலால்,
ஏலும், இங்கு இவற்கு இனி இறுதி" என்று, உனை
மூலம் என்று உணர்தலால், பிரிவு முற்றினான். 91

'தீத் தொழில் அரக்கர்தம் மாயச் செய் வினை
வாய்த்துளர், அன்னவை உணரும் மாண்பினால்
காய்த்தவர், அவர்களே கையுற்றார் நமக்கு;
ஏத்த அரும் உறுதியும் எளிதின் எய்துமால். 92

'"தெளிவுறல் அரிது, இவர் மனத்தின் தீமை; நாம்
விளிவது செய்குவர்" என்ன வேண்டுதல்,
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப, எண்ணலார்;
எளியவர்திறத்து இவை எண்ணல் ஏயுமோ? 93

'"கொல்லுமின், இவனை" என்று அரக்கன் கூறிய
எல்லையில், "தூதரை எறிதல் என்பது
புல்லிது; பழியொடும் புணரும்; போர்த் தொழில்
வெல்லலாம், பின்னர்" என்று இடை விலக்கினான். 94

'"மாதரைக் கோறலும், மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும், அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும், தூய்து அன்றாம்" என,
ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான். 95

'எல்லியில் நான் இவன் இரத மாளிகை
செல்லிய போதினும், திரிந்த போதினும்,
நல்லன நிமித்தங்கள் நனி நயந்துள;
அல்லதும் உண்டு, நான் அறிந்தது - ஆழியாய்! 96

'நிந்தனை நறவமும், நெறி இல் ஊன்களும்,
தந்தன கண்டிலேன்; தரும தானமும்,
வந்தனை நீதியும், பிறவும், மாண்பு அமைந்து,
அந்தணர் இல் எனப் பொலிந்ததாம் அரோ. 97

'அன்னவன் தனி மகள், "அலரின்மேல் அயன்
சொன்னது ஓர் சாபம் உண்டு; உன்னைத் துன்மதி,
நன்னுதல்! தீண்டுமேல், நணுகும் கூற்று" என,
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள். 98

'"பெற்றுடைய பெரு வரமும், பிறந்துடைய வஞ்சனையும், பிறவும், உன் கை
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும்" எனக் கருதி, விரைவின் வந்தான்;
உற்றுடைய பெரு வரமும், உகந்து உடைய தண்ணளியும், உணர்வும் நோக்கின்,
மற்று உடையர்தாம் உளரோ, வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார்? 99

'தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவ தேவர்
மூவர்க்கும், முடிப்ப அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்;
ஆவத்தின் வந்து, "அபயம்!" என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்,
கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? - கொற்ற வேந்தே! 100

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி