Monday, 27 April 2020

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 50

இலக்குவன் எழுச்சி


"இவன் தலையைத் துண்டாடாவிட்டால் உனக்கு நான் செய்யும் தோண்டு அற்றுப் போகட்டும்" 41
இப்படி இலக்குவன் சொல்லும்போது தேவர்கள் ஆரவாரித்து மகிழ்ந்தனர் 42
"நீ கொல்வாய் என்பது அறிவேன். அதனால் ஏற்படும் விளைவு என்ன" - என்றான் இராமன் புன்முறுவலோடு 43
"அரக்கர் படையைக் கொல்வேன்" என்று இலக்குவன் எழுந்தான் 44
அங்கதன் ஆர்த்தான். இராமன் சங்கொலி எழுப்பினான் 45

அரக்கர் தமிடமுள்ள எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம், தண்டு, வேல், முசுண்டி, கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம் முதலான போர்க்கருவிகளால் தாக்கினர் 46

விண்மீன்கள் உதிர்வது போல் கருவிகள் பாய்ந்தன 47
புகை எழும்பி உலகே கருகியது 48
இலக்குவன் அம்புகளால் அரக்கர் தேர்கள் அழிந்தன 49
அரக்கர் படை சின்னாபின்னம் ஆனது 50

பாடல்

'கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க, என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாதுஎனின்,
முடிய ஒன்று உணர்ந்துவென்; உனக்கு நான் முயல்
அடிமையின் பயன் இகந்து அறுக, ஆழியாய்!' 41

வல்லவன் அவ் உரை வழங்கும் ஏல்வையுள்,
'அல்லல் நீங்கினம்' என, அமரர் ஆர்த்தனர்;
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன;
நல் அறம் ஆர்த்தது; நமனும் ஆர்த்தனன். 42

முறுவல் வாள் முகத்தினன், முளரிக்கண்ணனும்,
'அறிவென்; நீ, "அடுவல்" என்று அமைதி ஆம் எனின்,
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும்
வெறுவியர்; வேறு இனி விளைவது யாது?' என்றான். 43

சொல் அது கேட்டு, அடி தொழுது, 'சுற்றிய
பல் பெருந் தேரொடும் அரக்கர் பண்ணையைக்
கொல்வென்; இங்கு அன்னது காண்டிகொல்' எனா,
ஒல்லையில் எழுந்தனன் - உவகை உள்ளத்தான். 44

அங்கதன் ஆர்த்தனன், அசனி ஏறு என,
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை
சிங்கமும் நடுக்குற; திருவின் நாயகன்
சங்கம் ஒன்று ஒலித்தனன், கடலும் தள்ளுற. 45

எழு, மழு, சக்கரம், ஈட்டி, தோமரம்,
முழு முரண் தண்டு, வேல், முசுண்டி, மூவிலை,
கழு, அயில் கப்பணம், கவண் கல், கன்னகம்,
விழு மழைக்கு இரட்டி விட்டு, அரக்கர் வீசினார். 46

மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்தென,
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன;
கான் எலாம் துணிந்து போய்த் தகர்ந்து காந்தின;-
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால். 47

ஆயிரம் தேர், ஒரு தொடையின், அச்சு இறும்;
பாய் பரிக் குலம் படும்; பாகர் பொன்றுவர்;
நாயகர் நெடுந் தலை துமியும், நாம் அற;
தீ எழும், புகை எழும், உலகும் தீயுமால். 48

அடி அறும் தேர்; முரண் ஆழி அச்சு இறும்;
கடி நெடுஞ் சிலை அறும்; கவச மார்பு இறும்;
கொடி அறும்; குடை அறும்; கொற்ற வீரர் தம்
முடி அறும்; முரசு அறும்; முழுதும் சிந்துமால். 49

'இன்னது ஓர் உறுப்பு; இவை இனைய தேர் பரி;
மன்னவர் இவர்; இவர் படைஞர், மற்றுளோர்'
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் -
சின்னபின்னங்களாய் மயங்கிச் சிந்தலால். 50

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழ்த் தொடர்களின் நாலடி அடுக்கு 
வித்தாரக் கவி 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி