Monday, 27 April 2020

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 20

படை அணிவகுப்பு


இந்திரசித்தன் தன் படையினரை அன்றில் பறவை போல் அணிவகுத்து நிறுத்தினான் 11
இந்திரன் தந்த சங்கை ஊதிப் போருக்கு அழைத்தான் 12
தன் வில்லின் நாணைத் தெறித்து வீரத்தைப் புலப்படுத்தினான் 13
வானரப் படைகள் நடுங்கின 14
சுக்கிரீவன், சமீரணன், அங்கதன், இராமன், இலக்குவன், வீடணன் விர மற்றவர் ஓட்டம் கண்டனர் 15
அரக்கர் படை ஆரவாரித்தது 16

அனுமன் தோளில் இராமனும், அங்கதன் தோளில் இலக்குவனும் ஏறிக்கொண்டனர் 17
காளை மேல் சிவனும், கருடன் மேல் மாலும் ஏறியது போல் அது காணப்பட்டது 18
நீலன் முதலானோரை பின்னே  வருமாறு இராமன் நிறுத்தினான் 19
என் வில்லாற்றலைப் பாருங்கள் - என்றான் இராமன் 20

பாடல்

சென்று வெங் களத்தை எய்தி, சிறையொடு துண்டம், செங் கண்,
ஒன்றிய கழுத்து, மேனி, கால், உகிர், வாலின், ஒப்ப,
பின்றல் இல் வெள்ளத் தானை முறை படப் பரப்பி, பேழ்வாய்
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து, அமைந்து நின்றான். 11

புரந்தரன் செருவில் தந்து போயது, புணரி ஏழும்
உரம் தவிர்த்து, ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை
கரந்தது வயிற்று, கால வலம்புரி கையில் வாங்கி,
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச, ஊதினான், திசைகள் சிந்த. 12

சங்கத்தின் முழக்கம் கேட்ட கவிப் பெருந் தானை, யானை
சிங்கத்தின் நாதம் வந்து செவிப் புக விலங்கு சிந்தி,
'எங்கு உற்ற?' என்னாவண்ணம் இரிந்தது; ஈது அன்றி ஏழை-
பங்கத்தன் மலை வில் அன்ன சிலை ஒலி பரப்பி, ஆர்த்தான். 13

கீண்டன, செவிகள்; நெஞ்சம் கிழிந்தன; கிளர்ந்து செல்லா
மீண்டன, கால்கள்; கையின் விழுந்தன, மரனும் வெற்பும்;
பூண்டன, நடுக்கம்; வாய்கள் புலர்ந்தன; மயிரும் பொங்க,
'மாண்டனம் அன்றோ?' என்ற - வானரம் எவையும் மாதோ. 14

செங் கதிர்ச் செல்வன் சேயும், சமீரணன் சிறுவந்தானும்,
அங்கதப் பெயரினானும், அண்ணலும், இளைய கோவும்,
வெங் கதிர் மௌலிச் செங் கண் வீடணன், முதலாம் வீரர்
இங்கு இவர் நின்றார் அல்லது, இரிந்தது, சேனை எல்லாம். 15

படைப் பெருந் தலைவர் நிற்க, பல் பெருஞ் சேனை, வெள்ளம்
உடைப்புறு புனலின் ஓட, ஊழிநாள் உவரி ஓதை
கிடைத்திட முழங்கி ஆர்த்துக் கிளர்ந்தது; நிருதர் சேனை,
அடைத்தது, திசைகள் எல்லாம்; அன்னவர் அகத்தர் ஆனார். 16

மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிரத் தோள்மேல்
வீரனும், வாலி சேய்தன் விறல் கெழு சிகரத் தோள்மேல்
ஆரியற்கு இளைய கோவும், ஏறினர்; அமரர் வாழ்த்தி,
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர், இடைவிடாமல். 17

விடையின்மேல், கலுழன் தன்மேல், வில்லினர் விளங்குகின்ற
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் - கண்ணுற்று
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார்,
தொடையின் மேல் மலர்ந்த தாரர், தோளின்மேல் தோன்றும் வீரர் 18

நீலனை முதலாய் உள்ள நெடும் படைத் தலைவர் நின்றார்,
தாலமும் மலையும் ஏந்தி, தாக்குவான் சமைந்த காலை,
ஞாலமும் விசும்பும் காத்த நானிலக் கிழவன் மைந்தன்
மேல் அமர் விளைவை உன்னி, விலக்கினன், விளம்பலுற்றான்: 19

'கடவுளர் படையை நும்மேல் வெய்யவன் துரந்தகாலை,
தடை உள அல்ல; தாங்கும் தன்மையிர் அல்லீர்; தாக்கிற்கு
இடை உளது எம்பால் நல்கி, பின் நிரை நிற்றிர்; ஈண்டு இப்
படை உளதனையும், இன்று, எம் வில் தொழில் பார்த்திர்' என்றான் 20


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழ்த் தொடர்களின் நாலடி அடுக்கு 
வித்தாரக் கவி 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி