Monday, 27 April 2020

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 10

படை முழக்கம் 


கரன் மகன் மகரக்கண்ணன், சிங்கன் ஆகியோர் போரில் மாண்ட செய்தியை இராவணன் கேட்டான். தன் மகன் இந்திரசித்தனை அழைத்துவருமாறு கூறினான் 1
தந்தை அழைத்தது கேட்டு இந்திரசித்தன் விரைந்து வந்தான் 2
தந்தையை வணங்கினான். "மாண்டனர் என்று மயங்க வேண்டாம். இன்று குரங்குகளும் மனிதரும் இறந்ததை நீயும். சீதையும், அமரரும் காணலாம்" என்றான் 3

தேரில் ஏறிப் படைகளுடன் சென்றான் 4
கும்பிகை, திமிலை முதலான போரிசைக் கருவிகள் முழங்கின 5
யானைமேல் பறையும், தேர்மேல் மணியும் ஒலித்தன 6
சங்கு, வயிர், ஆகுளி, காளம், முதலான கருவிகளும் முழங்கின 7
வில் ஒலி, வயவர் ஆர்ப்பொலி போன்ற ஒலிகளும் எழுந்தன 8
4 படைகளும் 4 கடல்கள் போல் முழங்கின 9
படை நடுவில் இந்திரசித்தன் கதிரவன் போலச் சென்றான் 10

பாடல்

கரன் மகன் பட்டவாறும், குருதியின்கண்ணன் காலின்
சிரன் தெரிந்து உக்கவாறும், சிங்கனது ஈறும், சேனைப்
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும், பகரக் கேட்டான்;
வரன்முறை தவிர்ந்தான், 'வல்லைத் தருதிர், என் மகனை!' என்றான் 1

'கூயினன், நுந்தை' என்றார்; குன்று எனக் குவிந்த தோளான்,
'போயின நிருதர் யாரும் போந்திலர் போலும்!' என்றான்;
'ஏயின பின்னை, மீள்வார் நீ அலாது யாவர்?' என்னா,
மேயது சொன்னார், தூதர்; தாதைபால் விரைவின் வந்தான். 2

வணங்கி, 'நீ, ஐய! "நொய்தின் மாண்டனர் மக்கள்" என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்' என்றான். 3

வலங்கொண்டு வணங்கி, வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட
பொலங் கொடி நெடுந் தேர் ஏறி, போர்ப் பணை முழங்கப் போனான்;
அலங்கல் வாள் அரக்கர் தானை அறுபது வெள்ளம், யானைக்
குலங்களும், தேரும், மாவும், குழாம் கொளக் குழீஇய அன்றே. 4

கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி, கொட்டி
பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி,
கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே. 5

யானைமேல் பறை, கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி,
மான மாப் புரவிப் பொன் - தார், மாக் கொடி கொண்ட பண்ணை,
சேனையோர் சுழலும் தாரும், சேண் தரப் புலம்ப, மற்றை
வானகத்தோடும் ஆழி அலை என, வளர்ந்த அன்றே. 6

சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
பொங்கு ஒலி, வரி கண் பீலிப் பேர் ஒலி, வேயின் பொம்மல்,
சிங்கத்தின் முழக்கம், வாசிச் சிரிப்பு, தேர் இடிப்பு, திண் கைம்
மங்குலின் அதிர்வு, - வான மழையொடு மலைந்த அன்றே. 7

வில் ஒலி, வயவர் ஆர்க்கும் விளி ஒலி, தெழிப்பின் ஓங்கும்
ஒல்லொலி, வீரர் பேசும் உரை ஒலி, உரப்பில் தோன்றும்
செல் ஒலி, திரள் தோள் கொட்டும் சேண் ஒலி, நிலத்தில் செல்லும்
கல்லொலியோடும் கூடக் கடல் ஒலி கரந்தது அன்றே. 8

நாற் கடல் அனைய தானை நடந்திட, கிடந்த பாரின் -
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்மேல் தொடர்ந்து வீச,
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர், மானப்
பாற்கடல் அனைய, வாட் கண் பனிக் கடல் படைத்தது அன்றே 9

ஆயிர கோடித் திண் தேர், அமரர்கோன் நகரம் என்ன
மேயின சுற்ற, தான் ஓர் கொற்றப் பொன் தேரின் மேலான்,
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற, நடுவண் தோன்றும்
நாயகப் பரிதி போன்றான் - தேவரை நடுக்கம் கண்டான். 10

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழ்த் தொடர்களின் நாலடி அடுக்கு 
வித்தாரக் கவி 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி