Wednesday, 22 April 2020

கம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 70

இந்திரசித்தன் போர்


மலை போல் தோள். தூண் போல் விரல் கொண்டவன் இந்திரசித்தன் 61
அவன் சிங்க ஏறு போல் போரிட்டான் 62
குரங்குகள் வீசிய கற்களையும் மரங்களையும் துகளாக்கினான் 63
குரங்குகளின் உடல்கள் குன்றுகளில் சிதறுமாறு கணைபளை எய்தான் 64
வெள்ளக் கணக்கில் வானரப்படை அழிந்தது 65
அறுந்த குரங்குத் தலைகள் நாகர் உலகம் சென்றன 66
அவன் அம்புகள் குரங்குகளின் உடலில் பாய்ந்தன 67
தேவர்கள் கலங்கினர் 68
அப்போது சுக்கிரீவன் தோன்றினான் 69
அரக்கர்கள் கூசினர் 70

பாடல்

பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர, அடல் வலித்
தூண் எறிந்தனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட,
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை, செவிடு எறிந்து உடைய,-மிடல் வலோன்
நாண் எறிந்து, முறை முறை தொடர்ந்து, கடல் உலகம் யாவையும் நடுக்கினான் 61

சிங்கஏறு, கடல்போல் முழங்கி, 'நிமிர் தேர் கடாய் நெடிது செல்க' எனா,
அங்கதாதியர் அனுங்க, வானவர்கள் அஞ்ச, வெஞ் சின அனந்தன் மாச்
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெங் கண் நாகம் என, வேகமாய், உருமு வெள்க, வெங் கணைகள் சிந்தினான் 62

சுற்றும் வந்து, கவி வீரர் வீசிய சுடர்த் தடங் கல் வரை, தொல் மரம்
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன; எழுந்து சேணிடை இழிந்தபோல்,
வெற்றி வெங் கணை படப் பட, தலைகள் விண்ணினூடு திசைமீது போய்,
அற்று எழுந்தன விழுந்து, மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால். 63

சிலைத் தடம் பொழி வயக் கடும் பகழி செல்ல, ஒல்கினர், சினத்தினால்
உலைத்து எறிந்திட எடுத்த குன்றுதொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார்,
நிலைத்து நின்று, சினம் முந்து செல்ல, எதிர் சென்று சென்று, உற நெருக்கலால்,
மலைத் தடங்களொடு உரத் தலம் கழல, ஊடு சென்ற, பல வாளியே. 64

முழுத்தம் ஒன்றில், ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன, தடிந்து போய்,
கழுத்த, கைய, நிமிர் கால, வால, பல கண்டமானபடி கண்டு, நேர்
எழுத் தொடர்ந்த படர் தோள்களால் எறிய, எற்ற, அற்றன எழுந்து மேல்,
விழுத்த பைந் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி, உடன் வீழுமால். 65

அற்ற பைந் தலை அரிந்து சென்றன அயில் கடுங் கணை, வெயில்கள் போல்,
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால்;
வெற்ற வெள்ளிடை விரைந்து போவது, ஒரு மேடு பள்ளம் வெளி இன்மையால்,
உற்ற செங் குருதி வெள்ளம், உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் 66

விழிக்குமேல் விழிய, நிற்கின் மார்பிடைய, மீளுமேல் முதுக, மேனிய
கழிக்குமேல், உயர ஓடுமேல் நெடிய கால, வீசின் நிமிர் கைய, வாய்த்
தெழிக்குமேல் அகவும் நாவ, சிந்தையின் உன்னுமேல்-சிகரம் யாவையும்
பழிக்கும் மேனிய குரங்கின்மேல், அவன் விடும் கொடும் பகழி பாயவே. 67

மொய் எடுத்த கணை மாரியால், இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார்;
எய்விடத்து எறியும் நாணின் ஓசையலது யாதும் ஒன்று செவி உற்றிலார்;
'மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன' எனும் விம்மலால்,
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு,-தேவர்கள்-கலங்கினார். 68

கண்ட வானரம் அனந்த கோடி முறை கண்டமானபடி கண்ட அக்
கண்டன், மாறு ஒருவர் இன்மை கண்டு, கணை மாறினான், விடுதல் இன்மையாய்;
கண்ட காலையில், விலங்கினான் இரவி காதல், காதுவது ஓர் காதலால்,
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான். 69

உடைந்து, தன் படை உலைந்து சிந்தி, உயிர் ஒல்க, வெல் செரு உடற்றலால்,
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான்,
இடைந்து சென்றவனை எய்தி, எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான்
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர, வீசினான்; நிருதர் கூசினார். 70

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
19. நாகபாசப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழ்த் தொடர்களின் நாலடி அடுக்கு 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி