Saturday, 25 April 2020

கம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 280

தந்தை மகனிடம் சென்றான்


மழைக்குக் கைம்மாறு செய்ய முடியுமா என்று இராமன் கருடனைப் புகழ்ந்தான் 271

இலக்குவன் இறந்துவிட்டான் என்று சீதை துன்புறுவாள். அவள் துன்பம் நீங்க ஆரவாரம் செய்வோம் என்றான் அனுமன் 272
இது நல்ல செயல் என்று இராமன் கூற அனந்தன் குன்றின் உச்சியில் ஏறி, திசையெல்லாம் எதிரொலிக்கும்படி ஆரவாரம் செய்தனர். 273
அந்த ஒலியை இராவணன் கேட்டான் 274
அடுத்த போரை எண்ணிக்கொண்டிருக்கும் இந்திரசித்தன், இராமனை எண்ணிக்கொண்டிருக்கும் சீதை, அவளை எண்ணிக்கொண்டிருக்கும் இராவணன் ஆகிய மூவர் மட்டுமே உறங்காமல் இருக்க மற்றவரெல்லாம் உறங்கிக்கொண்டிருந்தனர் 275
பகைவர் அழிந்தனரே! இது என்ன முழக்கம் என்று இராவணன் சிரித்தான் 276
இராமன், இலக்குவன் வில்நாண் ஒலி கேட்கின்றது. அனுமன் ஆரவாரம் கேட்கின்றது 277
அங்கதன், நீலன் ஆர்ப்பொலி கேடுகிறது 278
என்று புரிந்துகொண்ட இராவணன் வாட்கை மறவரும், விளக்கொளி மகளிரும் சூழ மகன் இருப்பிடம் சென்றான் 279
தூக்கத்தில் முலைகளை மூடியும் மூடாமலும் மகளிர் அவனுடன் வந்தனர் 280

பாடல்

ஆரியன் அவனை நோக்கி, 'ஆர் உயிர் உதவி, யாதும்
காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடமை ஈதால்;
பேர் இயலாளர், "செய்கை ஊதியம் பிடித்தும்" என்னார்;
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ, வையம்?' என்றான். 271

'"இறந்தனன், இளவல்" என்னா, இறைவியும் இடுக்கண் எய்தும்;
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி, "மீளப்
பிறந்தனர்" என்று கொண்டு, ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே;
அறம் தரு சிந்தை ஐய! ஆர்த்தும்' என்று அனுமன் சொன்னான். 272

'அழகிது' என்று அண்ணல் கூற, ஆர்த்தனர்-கடல்கள் அஞ்சிக்
குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின்நின்று அண்டகோளம்
எழ மிசை, உலகம் மேல் மேல் ஏங்கிட, இரிந்து சிந்தி
மழை விழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ. 273

பழிப்பு அறு மேனியாள் பால் சிந்தனை படர, கண்கள்
விழிப்பு இலன், மேனி சால வெதும்பினன், ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி
கிழிப்புற, உயிர்ப்பு வீங்கிக் கிடந்த வாள் அரக்கன் கேட்டான். 274

தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன், தரும மூர்த்தி
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும்
சீதையும், அவளை உன்னிச் சிந்தனை தீர்ந்தும் தீராப்
பேதையும், அன்றி, அவ் ஊர் யார் உளர், துயில் பெறாதார்? 275

சிங்கஏறு, அசனிஏறு கேட்டலும், 'சீற்றச் சேனை
பொங்கியது' என்ன, மன்னன் பொருக்கென எழுந்து, "போரில்
மங்கினர் பகைஞர்" என்ற வார்த்தையே வலியது!' என்னா,
அங்கையோடு அங்கை கொட்டி, அலங்கல் தோள் குலுங்க நக்கான். 276

'இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது, இராமன் போர் வில்;
வெடிக்கின்றது அண்டம் என்ன, படுவது தம்பி வில் நாண்;
அடிக்கின்றது என்னை வந்து, செவிதொறும் அனுமன் ஆர்ப்பு;
பிடிக்கின்றது உலகம் எங்கும், பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி. 277

'அங்கதன் அவனும் ஆர்த்தான்; அந்தரம் ஆர்க்கின்றானும்,
வெங் கத நீலன்; மற்றை வீரரும், வேறு வேறு,
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன;
சங்கை ஒன்று இன்றித் தீர்ந்தார் பாசத்தை, தருமம் நல்க. 278

என்பது சொல்லி, பள்ளிச் சேக்கைநின்று இழிந்து, வேந்தன்,
ஒன்பது கோடி வாட் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற,
பொன் பொதி விளக்கம் கோடிப் பூங் குழை மகளிர் ஏந்த,
தன் பெருங் கோயில் நின்றும் மகன் தனிக் கோயில் சார்ந்தான். 279

தாங்கிய துகிலார், மெள்ளச் சரிந்து வீழ் குழலார், தாங்கி
வீங்கிய உயிர்ப்பார், விண்ணை விழுங்கிய முலையார், மெல்லத்
தூங்கிய விழியார், தள்ளித் துளங்கிய நடையார்,-வல்லி
வாங்கிய மருங்குல் மாதர்,-அனந்தரால் மயங்கி வந்தார். 280


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
19. நாகபாசப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழ்த் தொடர்களின் நாலடி அடுக்கு 
வித்தாரக் கவி 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி