Friday, 24 April 2020

கம்பராமாயணம் நாகபாசப் படலம் - KambaRamayanam 6-19 250

கலுழன் (கருடன்) வந்தது


இராமன் விம்மினான் 241
இலக்குவன் இறந்தால் நானும் இறப்பேன் என்றான் 242

அப்போது இருளில் கருடன் வந்தான் 243
அவன் திசை யானைகள் ஒடுங்கும் சிறகுகளை உடையவன் 244
கருடன் சொன்னான் 245
மேரு மலையை வலம்வரும் சுடரோன் போல் தோன்றினான் 246
தெற்கில் மின்னல் குன்றம் போல் விளங்கினான் 247

பண்டு பிரிந்த துயரம் தீர வந்து இராமனைத் தொழுதான் 248
கூப்பிய கைகளொடு மண்ணில் விழுந்து வணங்கினான் 249
வருந்த வேண்டாம் என்று இராமனுக்கு ஆறுதல் கூறினான் 250

பாடல்

என்று கொண்டு இயம்பி, 'ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய,
வென்று, இவண் உலகை மாய்த்தல்விதி அன்றால்' என்று விம்மி,
நின்று நின்று, உன்னி உன்னி, நெடிது உயிர்த்து அலக்கணுற்றான்,-
தன் துணைத் தம்பிதன்மேல், துணைவர்மேல், தாழ்ந்த அன்பான். 241

மீட்டும் வந்து, இளைய வீரன் வெற்பு அன்ன விசயத் தோளைப்
பூட்டுறு பாசம் தன்னைப் பல் முறை புரிந்து நோக்கி,
'வீட்டியது என்னின், பின்னை வீவென்' என்று எண்ணும்-வேதத்
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணைக் கைம்மால் யானை அன்னான். 242

இத் தன்மை எய்தும் அளவின்கண், நின்ற இமையோர்கள் அஞ்சி, 'இது போய்
எத் தன்மை எய்தி முடியும்கொல்?' என்று குலைகின்ற எல்லை இதன்வாய்,
அத் தன்மை கண்டு, புடை நின்ற அண்ணல்-கலுழன் தன் அன்பின் மிகையால்,
சித்தம் நடுங்கி இது தீர, மெள்ள, இருளூடு வந்து தெரிவான்,- 243

அசையாத சிந்தை அரவால் அனுங்க, அழியாத உள்ளம் அழிவான்,-
இசையா இலங்கை அரசோடும் அண்ணல் அருள் இன்மை கண்டு நயவான்,-
விசையால் அனுங்க வட மேரு, வையம் ஒளியால் விளங்க, இமையாத்
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க, நிறை கால் வழங்கு சிறையான்,- 244

காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ,
கேதங்கள் கூர, அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு, கிளர்வான்,-
சீதம் கொள் வேலை அலை சிந்த, ஞாலம் இருள் சிந்த, வந்த சிறையான்,
வேதங்கள் பாட; உலகங்கள் யாவும் வினை சிந்த; நாகம் மெலிய: 245

அல்லைச் சுருட்டி, வெயிலைப் பரப்பி, அகல் ஆசை எங்கும் அழியா
வில்லைச் செலுத்தி, நிலவைத் திரட்டி, விரிகின்ற சோதி மிளிர;
எல்லைக் குயிற்றி எரிகின்ற மோலி, இடை நின்ற மேரு எனும் அத்
தொல்லைப் பொருப்பின் மிசையே விளங்கு சுடரோனின் மும்மை சுடர; 246

நன் பால் விளங்கு மணி கோடியோடு, நளிர்போது, செம் பொன், முதலாத்
தன்பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ;
மின்பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன, வெயிலோன்
தென்பால் எழுந்து, வடபால் நிமிர்ந்து, வருகின்ற செய்கை தெரிய; 247

பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க; வெயில் கால்
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க; வன மாலை மார்பு புரள;
தொல் நாள் பிரிந்த துயர் தீர, அண்ணல் திரு மேனி கண்டு, தொழுவான். 248

முடிமேல் நிமிர்ந்து முகிழ் ஏறு கையன், முகில்மேல் நிமிர்ந்த ஒளியான்,
அடிமேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான்,
கொடிமேல் இருந்து, இவ் உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய்,
படிமேல் எழுந்து வருவான், விரைந்து, பல கால் நினைந்து, பணிவான்,- 249

'வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும், மலர்மேல் அயன் தன் முதலோர்-
தம் தாதை தாதை இறைவா! பிறந்து விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ?
எந்தாய்? வருந்தல்; உடையாய்! வருந்தல்' என, இன்ன பன்னி மொழிவான்: 250

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
19. நாகபாசப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழ்த் தொடர்களின் நாலடி அடுக்கு 
வித்தாரக் கவி 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி