Monday, 20 April 2020

கம்பராமாயணம் அதிகாயன் வதைப் படலம் - KambaRamayanam 6-18 200

அம்பு மாரி


இலக்குவன் அம்பை வீழ்த்தி அதிகாயன் 16 கணைகளைத் தொடுத்து எய்தான் 191
இலக்குவன் வாளி அதனைத் தகர்த்தது 192
இலக்குவன் எய்த அம்புகளை எல்லாம் அதிகாயன் வீழ்த்தினான் 193
கோடிக் கணக்கில் அம்புகள் 194
கணக்கில்லா மும்மடி அம்புகள் 195
வானை மூடும் அம்புகள் 196
திசைகளை மூடும் அம்புகள் 197
இலக்குவன் வியந்தான் 198
இலக்குவனைத் தூக்கிச் சென்ற அங்கதன் மேல்ம் அம்புகள் 199
தேரில் பூட்டிய குதிரைகளின் தலைகளையும், அதிகாயன் வில்லையும் இலக்குவன் தகர்த்தான் 200

பாடல்


விட்ட வெம் பகழிதன்னை, வெற்பினை வெதுப்பும் தோளான்,
சுட்டது ஓர் பகழிதன்னால் விசும்பிடைத் துணித்து நீக்கி,
எட்டினோடு எட்டு வாளி, 'இலக்குவ! விலக்காய்' என்னா,
திட்டியின் விடத்து நாகம் அனையன, சிந்தி, ஆர்த்தான். 191

ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி,
வேர்த்து, ஒலி வயிர வெங் கோல், மேருவைப் பிளக்கற்பால,
தூர்த்தனன், இராமன் தம்பி; அவை எலாம் துணித்துச் சிந்தி,
கூர்த்தன பகழி கோத்தான், குபேரனை ஆடல் கொண்டான். 192

எய்தனன் எய்த எல்லாம் எரி முகப் பகழியாலே,
கொய்தனன் அகற்றி, ஆர்க்கும் அரக்கனைக் குரிசில் கோபம்
செய்தனன், துரந்தான் தெய்வச் செயல் அன்ன கணையை; வெங்கோல்
நொய்து அவன் கவசம் கீறி நுழைவன, பிழைப்பு இலாத. 193

நூறு கோல் கவசம் கீறி நுழைதலும், குழைவு தோன்றத்
தேறல் ஆம் துணையும், தெய்வச் சிலை நெடுந் தேரின் ஊன்றி,
ஆறினான்; அதுகாலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம்
கூறுகூறாக்கி அம்பால், கோடியின் மேலும் கொன்றான். 194

புடை நின்றார் புரண்டவாறும், போகின்ற புங்க வாளி
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான்;
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான்; ஏந்திய சிலையன் காந்தி,
தொடை நின்ற பகழி மாரி, மாரியின் மும்மை தூர்த்தான். 195

வான் எலாம் பகழி, வானின் வரம்பு எலாம் பகழி, மண்ணும்
தான் எலாம் பகழி, குன்றின் தலை எலாம் பகழி, சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி, நின்றோர் உயிர் எலாம் பகழி, வேலை
மீன் எலாம் பகழி, ஆக வித்தினன்-வெகுளி மிக்கோன். 196

மறைந்தன திசைகள் எல்லாம்; வானவர் மனமே போலக்
குறைந்தன, சுடரின் மும்மைக் கொழுங் கதிர்; குவிந்து, ஒன்று ஒன்றை
அறைந்தன, பகழி; வையம் அதிர்ந்தது; விண்ணும் அஃதே;
நிறைந்தன, பொறியின் குப்பை; நிமிர்ந்தன, நெருப்பின் கற்றை. 197

'முற்றியது இன்றே அன்றோ, வானர முழங்கு தானை?
மற்று இவன் தன்னை வெல்ல வல்லனோ, வள்ளல் தம்பி?
கற்றது காலனோடோ , கொலை இவன்? ஒருவன் கற்ற
வில் தொழில் என்னே!' என்னா, தேவரும் வெருவலுற்றார். 198

அங்கதன் நெற்றிமேலும், தோளினும், ஆகத்துள்ளும்,
புங்கமும் தோன்றாவண்ணம், பொரு சரம் பலவும் போக்கி,
வெங் கணை இரண்டும் ஒன்றும் வீரன்மேல் ஏவி, மேகச்
சங்கமும் ஊதி, விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான். 199

வாலி சேய் மேனிமேலும், மழை பொரு குருதி வாரி,
கால் உயர் வரையின் செங் கேழ் அருவிபோல் ஒழுகக் கண்டான்;
கோல் ஒரு பத்து-நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து,
மேலவன் சிரத்தைச் சிந்தி, வில்லையும் துணித்தான்-வீரன். 200

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
18. அதிகாயன் வதைப் படலம் 
(வீடணனுக்கு அவன் மனைவி தான்யமாலினி பெற்ற மகன்) 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழ்த் தொடர்களின் நாலடி அடுக்கு 


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி