Tuesday, 7 April 2020

கம்பராமாயணம் மகுட பங்கப் படலம் - KambaRamayanam 6-12 20

சுக்கிரீவன் இராவணன் போர்


இராவணன் தன்னை உதைத்த சுக்கிரீவன் காலில் கதையால் அடித்தான் 11
தரையில் அமுக்கி அவன் குருதியைக் குடித்தான் 12
சுக்கிரீவன் இராவணன் கைகளைப் பிடித்துக்கொண்டான் 13
இராவணன் அவனை அகழியில் எறிந்தான் 14
அவன் இராவணனை அகழியில் இழுத்துப் போட்டான் 15
இருவரும் தாக்கிக்கொண்டனர் 16
இராவணன் பாற்கடல் கடைந்த வாலி போல் சுக்கிரீவனைக் கடைந்தான் 17
கழுகுச் சண்டை போல் அங்குப் போர் 18
தோளொடு தோள் போர் 19
சூரியனை மேகம் மறைப்பது போல் போர் 20

பாடல்

உதைத்தவன் அடித் துணை பிடித்து, ஒரு கணத்தில்,
பதைத்து உலைவுறப் பல திறத்து இகல் பரப்பி,
மதக் கரியை உற்று அரி நெரித்தென மயக்கி,
சுதைத் தலனிடை, கடிது அடிக்கொடு துகைத்தான். 11

துகைத்தவன் உடற் பொறை சுறுக்கொள இறுக்கி,
தகைப் பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி,
வகைப் பிறை நிறத்து எயிறுடைப் பொறி வழக்கின்
குகைப் பொழி புதுக் குருதி கைக்கொடு குடித்தான். 12

கைக்கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை,
பைக் கொடு விடத்து அரவு எனப் பல கை பற்றி,
மைக் கொடு நிறத்தவன் மறத்தொடு, புறத்தில்
திக்கொடு, பொருப்பு உற நெருப்பொடு திரிந்தான். 13

திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி,
பெருத்து உயர் தடக் கைகொடு அடுத்து இடை பிடித்து,
கருத்து அழிவுற, -திரி திறத்து எயில், கணத்து அன்று
எரித்தவனை ஒத்தவன், -எடுத்து அகழி இட்டான். 14

இட்டவனை இட்ட அகழில் கடிதின் இட்டான்,
தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான்;
ஒட்ட உடனே அவனும் வந்து, இவனை உற்றான்;
விட்டிலர் புரண்டு இருவர், ஓர் அகழின் வீழ்ந்தார். 15

விழுந்தனர், சுழன்றனர்; வெகுண்டனர், திரிந்தார்;
அழுந்தினர், அழுந்திலர்; அகன்றிலர், அகன்றார்;
எழுந்தனர், எழுந்திலர்; எதிர்ந்தனர் முதிர்ந்தார்;
ஒழிந்தனர், ஒழிந்திலர்; உணர்ந்திலர்கள், ஒன்றும். 16

அந்தர அருக்கன் மகன், - ஆழி அகழ் ஆக,
சுந்தரமுடைக் கரம் வலிக் கயிறுஅது ஒப்ப,
எந்திரம் எனத் திரி இரக்கம் இல் அரக்கன்
மந்தரம் என, - கடையும் வாலியையும் ஒத்தான். 17

ஊறு படு செம்புனல், உடைத்த கரை உற்ற
ஆறு படர்கின்றன எனப் படர, அன்னார்,
பாறு, பொருகின்றன பருந்து, இவை எனப்போய்,
ஏறினர் விசும்பிடை; இரிந்த, உலகு எல்லாம். 18

தூர நெடு வானின் மலையும் சுடரவன் சேய்,
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன்
தாருடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான்,
ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான். 19

பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில்,
செங் கதிரவன் சிறுவனை, திரள் புயத்தால்,
மங்கல வயங்கு ஒளி மறைத்த வல் அரக்கன்,
வெங் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான். 20

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
12. மகுட பங்கப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி