Thursday, 30 April 2020

காந்தி / காந்தம் / rhetoric 5

காந்தி அணி
காந்தம் | காந்த அணி
ஈர்ப்பு-விசை

ஆசை / காதல் அணி

மானே யுனது வளர்கொங்கை வீக்கத்தைக்
தானேது மெண்ணாது தாமரையோன் – மீனேயும்
வானத்தை யித்தனையு மந்தமா கப்படைத்தான்
ஞானத்தை யில்லான்போ னன்கு.


மானே! உனது வளர் கொங்கை வீக்கத்தைக்
தான் ஏதும் எண்ணாது தாமரையோன் – மீன் ஏயும்
வானத்தை இத்தனையும் மந்தமாகப் படைத்தான்

ஞானத்தை இல்லான் போல் நன்கு.

ஒருவனுக்கு ஒருத்தி மேல் ஆசை 
கொங்கையைப் பார்த்து ஆசை 
பிரமன் ஞானமில்லாதவன் போல அதனை நன்கு படைத்துள்ளான் 
மீன் திகழும் வானம் கூட எனக்கு அழகில்லாமல் தோன்றும்படி உன் கொங்கையைப் படைத்திருக்கிறான் - என்கிறான்.

அவள்மீது உள்ள காந்தி, காந்த சத்தி, காதல் 

இந்தப் பாடல் வீரசோழியம் பாடல் 149-க்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது 

கொங்கு தேர் வாழ்க்கை - பாடல் இந்த அணி

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 Link

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 Plus

மிகைப் பாடல்கள்


மகரக்கண்ணன் போரிடப் புறப்பட்டது இராவணனுக்கு அமிழ்தம் ஆயிற்று 7-1
ஓடிய அரக்கர் படை மீண்டும் வந்து போருக்கு அழைப்பது ஏன் என்று இல்லக்குவன் நினைத்தான் 21-1
இராம இலக்குவர் போரைப் பார்த்து மகரக்கண்ணன் வியந்தான் 25-1
சிரித்த இராமன் மேல் மகரக்கண்ணன் அம்புமாரி பொழிந்தான் 77-1
இந்திரசித்தன் தந்தையைக் கண்டான் 88-1
இலக்குவன் அம்பால் அகம்பன் மாண்டான் 137-1
அகம்பனோடு மற்ற அரக்கர்களையும் அனுமன் கொன்றான் 140-1
அரக்கன் விட்ட அம்பால் போர்க்காடே பற்றி எரிந்தது 143-1
இராவணன் தன் மகனிடம் சொல்லுமாறு கூற, வந்தவர் கூறக்கேட்ட இந்திரசித்தன் "அனுமன், வீடணன் எங்கு உள்ளனர்" என்றான் 157-1
தந்தை இறந்த பின், தாயர் பிரிந்த பின், நீ இருக்கிறாய் என்று இன்புற்றிருந்தேன். நீயும் போய்விட்டாயே - என்று இராமன் தம்பி உடலைப் பார்த்துப் புலம்பினான் 202-1

மிகைப் பாடல்கள்

பண் தரு கிளவிச் செவ்விப் பல்லியத்து ஒழுகு தீம் தேன்,
கண்டினின் குயின்ற வீணை நரம்பொடு கமழும் தேறல்,
வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம், வானத்து
அண்டர்தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே. 7-1

இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம் தன்னைக்
குமைத் தொழில் புரிந்த வீரர் தனுத் தொழில் குறித்து இன்று எம்மால்
அமைப்பது என்? பிறிது ஒன்று உண்டோ ? மேரு என்று அமைந்த வில்லான்,
உமைக்கு ஒரு பாகன், எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த. 21-1

தலைகளை நோக்கும்; தான் தன் சரங்களை நோக்கும்; தன் கைச்
சிலையினை நோக்கும்; செம் பொன் தேரினை நோக்கும்; செய்த
கொலைகளை நோக்கும்; கொன்ற கொற்றவர் தம்மை நோக்கும்;
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும். 25-1

ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய,
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில்
சீர்த்த வீரியன் இளையவன் இராமன்மேல் செறிய,
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினைத் தொடர்ந்தான். 77-1

இன்னது இவ் வழி நிற்க, மற்று இருஞ் சமர்க்கு உடைந்தே,
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்,
பொன்னின் வார் சிலைக் கரத்தொடும் பொருகெனப் புகுந்து,
தன்னை ஈன்றிடும் ஒரு தனித் தந்தையைக் கண்டான். 88-1

மாண்டனன் அகம்பன், மண்மேல்; மடிந்தன, நிருதர் சேனை;
மீண்டனர், குரக்கு வீரர்; விழுந்தன, சினக் கை வேழம்;
தூண்டின, கொடித் தேர்; அற்றுத் துணிந்தன, தொடுத்த வாசி;-
ஆண் தகை இளைய வீரன் அடு சிலை பொழியும் அம்பால். 137-1

அருந் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு, அளவு இல் ஆற்றல்
பொரும் திறல் களிறு, காலாள், புரவி, தேர், அளப்பு இல் கோடி,
இரிந்திடக் கொன்று, தான் அங்கு ஒரு திசை, யாரும் இன்றிப்
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய, மாருதியும் நின்றான். 140-1

மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம், வான மாரி
ஆன வன் பகழி சிந்த, திசைதொறும் பொறியோடு அற்று
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல,
கானகம் தொடர்ந்த தீயின் சுடுவன பலவும் கண்டான். 143-1

'தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்துமின்' என்னச் சொன்னான்;
ஓடினார் சாரர்; வல்லை உணர்த்தினர்; துணுக்கம் எய்தா,
ஆடவர் திலகன், 'யாண்டையான் இகல் அனுமன்? ஏனோர்,
வீடணன், யாங்கண் உள்ளார்? உணர்த்துமின், விரைவின்' என்றான் 157-1

தந்தை இறந்தும், தாயர் பிரிந்தும், தலம் விட்டும்,
பின் தனி மேவும் மாது பிரிந்தும், பிரிவு இல்லா
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன்; இது காணேன்;
வந்தனென், எம்பி! வந்தனென், எந்தாய்! இனி வாழேன்! 202-1


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 227

"உன் பகை முடிந்தது"

தேவர்கள் இராமனைத் தேற்றுகின்றனர். "3 உலகிலும் துயர் தீர்க்கப் பிறந்துள்ளாய். மாயத்துக்கு அஞ்சலாமா"  221
எல்லாமாக இருக்கும் பரமேட்டி நீ 222
இந்தத் துன்ப விளையாட்டு இன்ப விளையாட்டாக மாறும் 223
நீயே இத் துன்பத்தைப் போக்காவிட்டால், இந்த மாயைத் துன்பத்தை எங்ககளால் தீர்க்க முடியுமா 224
நீயே உணர்வு பெற்று இவர்களுக்கு உணர்வைத் தருக - என்று கூறி இராமனைத் தேவர்கள் வேண்டினர் 225
இராமன் அழுவது கண்ட தூதர் இராவணனிடம் சென்றனர் 226
இராமன் அழுகிறான். உன் பகை முடிந்தது - என்றனர் 227

பாடல்

'ஈன்றாய்! இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி, அரசர் இல் பிறந்தாய்!
"மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி" என்னும் ஆசை முயல்கின்றோம்;
ஏன்றும் மறந்தோம், "அவன் அல்லன்; மனிதன்" என்றே; இம் மாயம்
போன்றது இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ? 221

'அண்டம் பலவும், அனைத்து உயிரும், அகத்தும் புறத்தும் உள ஆக்கி,
உண்டும் உமிழ்ந்தும், அளந்து இடந்தும், உள்ளும் புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயையக் கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய்-பரமேட்டி! 222

'துன்ப விளையாட்டு இதுவேயும், நின்னைத் துன்பம் தொடர்பு இன்மை,
இன்ப விளையாட்டு ஆம்; எனினும், அறியாதோருக்கு இடர் உறுமால்;
அன்பின் விளைவும், அருள் விளைவும், அறிவின் விளைவும், அவை எல்லாம்,-
முன்பு, பின்பு, நடு, இல்லாய்!-முடிந்தால் அன்றி, முடியாவே. 223

'வருவாய் போல வாராதாய்! வந்தாய் என்று மனம் களிப்ப,
வெருவாதிருந்தோம்; நீ இடையே துன்பம் விளைக்க, மெலிகின்றோம்;
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே! நீயே இடரைக் காவாயேல்,
திரு வாழ் மார்ப! நின் மாயை எம்மால் தீர்க்கத் தீருமோ?' 224

'அம்பரீடற்கு அருளியதும், அயனார் மகனுக்கு அளித்ததுவும்,
எம்பிரானே! எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம்;
வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றோம்;
தம்பி துணைவா! நீ இதனைத் தவிர்த்து, எம் உணர்வைத் தாராயோ?' 225

என்ப பலவும் எடுத்து இயம்பி, இமையாதோரும் இடர் உழந்தார்;
அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,
துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;
புன்கண் நிருதர் பெருந் தூதர் போனார், அரக்கனிடம் புக்கார். 226

'என் வந்தது, நீர்?' என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப, 'எறி செருவில்,
நின் மைந்தன் தன் நெடுஞ் சரத்தால், துணைவர் எல்லாம் நிலம்சேர,
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி, பெருந் துயரால்,
முன்வந்தவனும் முடிந்தான்; உன் பகை போய் முடிந்தது' என மொழிந்தார். 227


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 220

தேவர் கூற்று


அரக்கன் என் மனைவியைச் சிறை வைத்திருக்கிறான். நீ இறந்துவிட்டாய். என் வில்லால் 3 உலகையும் முடிப்பேன் 211
விராதன், கவந்தன், கரன், வாலி - கொன்ற என் வில் சும்மா இருக்குமா 212
உன்னைக் கொன்றவரைக் கொல்வேன் 213

தாய்மார், சுற்றத்தார், மறையோர் என்ன ஆனாரோ 214
நான் உயிரோடு இருந்தால் என்னைப் பார்த்துச் சிரிக்கமாட்டார்களா 215
வீடணனுக்கு அளித்த வாக்கைக் காப்பாற்றாமல் முடிகிறேன் 216
என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, தம்பியை அணைத்த வண்ணம் இராமன் சோர்ந்தான் 217

இதனைக் கண்டு, கண் சிமிட்டாத தேவர் கண் சிமிட்டிக் குலைந்தனர் 218
"இன்பதுன்பம் எல்லாமாக இருக்கும் உன்னை எப்படித் தேற்றுவது" 219
"அரக்கர் குலத்தை வேரறுக்கப் பிறந்துள்ளவனே" என்று தேவர்கள் இராமனிடம் கூறலாயினர் 220

பாடல்

'சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்டால்,
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்,
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா? 211

'வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும், விராதற்கும்,
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும்,
மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்,
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா! 212

'இருந்தேனானால், இந்திரசித்தே முதலாய
பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனேல்,
வருந்தேன்; "நீயே வெல்லுதி" என்னும் வலி கொண்டேன்;
பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன்! 213

'மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
"ஏது ஆனாரோ?" என்று தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால நினைந்தேன்; தளர்கின்றேன்;
போதாய், ஐயா, பொன் முடி என்னைப் புனைவிப்பான்! 214

'பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே
நாசம் உஞற்றிய போதும், நடந்தேன், உடன் அல்லேன்;
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன்; தனி நின்றேன்;
தேசமும் மற்று, என் கொற்ற நலத்தைச் சிரியாரோ? 215

'கொடுத்தேன் அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள
முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்;
படித்தேன் அன்றே, பொய்ம்மை? குடிக்குப் பழி பெற்றேன்;
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே, உணர்வு அற்றேன்?' 216

என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில்வுற்றான். 217

கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;
கொண்டார், துன்பம்; 'என் முடிவு?' என்னாக் குலைகின்றார்;
'அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;
உண்டோ , உன்பால் துன்பு?' என அன்போடு உரை செய்தார். 218

'உன்னை உள்ளபடி அறியோம்; உலகை உள்ள திறம் உள்ளோம்;
பின்னை அறியோம்; முன் அறியோம்; இடையும் அறியோம், பிறழாமல்;
நின்னை வணங்கி, நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால்,
என்னை, அடியோம் செயற்பால? - இன்ப-துன்பம் இல்லோனே! 219

'"அரக்கர் குலத்தை வேரறுத்து, எம் அல்லல் நீக்கியருள்வாய்" என்று
இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை எய்தி,
புரக்கும் மன்னர் குடிப் பிறந்து போந்தாய்! அறத்தைப் பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ? 220

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 210

இராமன் புலம்பல்


தம்பி விண்ணுலகிலிருந்து மீளமாட்டான் என்று எண்ணி இராமன் புலம்பினான் 201
தந்தை இறந்த பின்னர் நீ இருக்கிறாய் என்று இருந்தேன் 202
தாய், தந்தை, தவம்,  சேய், தம்பி, திரு - அனைத்தும் நீ என்று இருந்தேன் 203
உன் உடலில் உயிர் இல்லையே 204
உறங்குகிறாயா? உறக்கத்ததை விட்டு எழமாட்டாயா? 205
நான் உயிர் சுமந்து திரிகிறேனே. உனக்கு உறவு யார்? 206
வேள்வி செய்யச் சென்றேன். உன்னை இழந்துவிட்டேனே 207
தாய்மாருக்கெல்லாம் துன்பம் தந்துவிட்டேனே 208
நான் தனியே உயிர் வாழமாட்டேன். பரதன் உயிருடன் இருப்பானா? 209
என்னை எப்படி மறந்தாய் - சொல்லிக்கொண்டு இராமன் இலக்ககுவனை நினைத்துப் புலம்பினான் 210

பாடல்

அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகக்
கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்;
'விண்ணை உற்றனன்; மீள்கிலன்' என்று, அகம் வெதும்பி,
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்: 201

'"எந்தை இறந்தான்" என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்;
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்! 202

'தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்றனென்; நெஞ்சம் வலியேனால். 203

'ஊறாநின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்;
ஆறாநின்றேன், ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்;
ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக்
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ, கெடுவேனே? 204

'பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய், நின்று தளர்ந்தாய்! மெலிவு எய்தி,
துயில்கின்றாயோ இன்று? இவ் உறக்கம் துறவாயோ? 205

அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச் சொல்
பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ?
செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்;
உயிரோ, நானோ, யாவர், உனக்கு இங்கு உறவு? அம்மா! 206

'வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, "ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும்!" என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்;
சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்;
தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்? 207

'மண்மேல் வைத்த காதலின், மாதா முதலோர்க்கும்
புண்மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன்;
பெண்மேல் வைத்த காதலின், இப் பேறுகள் பெற்றேன்;
எண்மேல் வைத்த என் புகழ் நன்றால்! எளியேனோ! 208

'மாண்டாய் நீயோ; யான் ஒரு போதும் உயிர் வாழேன்;
ஆண்டான் அல்லன் நானிலம், அந்தோ, பரதன் தான்!
பூண்டார் எல்லாம் பொன்றுவர், துன்பப் பொறையாற்றார்;
வேண்டாவோ, நான் நல் அறம் அஞ்சி, மெலிவுற்றால்? 209

'அறம், தாய், தந்தை, சுற்றமும், மற்றும், எனை அல்லால்,
துறந்தாய்! என்றும் என்னை மறாதாய்! துணை வந்து
பிறந்தாய்! என்னைப் பின்பு தொடர்ந்தாய்! பிரிவு அற்றாய்!
இறந்தாய்; உன்னைக் கண்டும் இருந்தேன், எளியேனோ? 210

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 200

இராமன் கதறல்


இராமன் புலம்புகிறான் - முடி சூட விரும்பினேன். தந்தையைக் கொன்றேன். இப்போது இத்தனை வீரரையும் இழந்தேன் 191
அண்ணனைக் கொன்று தம்பிக்கு அரசு தர முனைந்தேன். உங்களை இழந்த பின்னர் உடலைச் சுமந்திருக்கிறேன் 192
அடைக்கலம் தந்தேனே - என்று அங்கதனைப் பார்த்து அழுதான் 193

தம்பியைக் கண்டான் 194
பொருமினான். பொங்கினான். இடி விழுந்த மரம் போல் ஆனான் 195
இராமனுக்கு உயிர் மட்டுந்தான் இருந்தது 196

தனியே இருக்கும் என் துயரைத் தீர்ப்பவர் ஆர் என்று கலங்கினான் 197
கணவரைத் தேடும் மனைவியரும், நரிகளும் மட்டுமே திரிந்தனர் 198
தேவரும் சோர்ந்தனர் 199
இராமனுக்குப் பகையாகிய பாவமும் இரக்கம் கொண்டு இராமனைப் பார்த்து அழுதது 200

பாடல்

'புன் தொழில் புலை அரசினை வெஃகினேன் பூண்டேன்;
கொன்று ஒருக்கினென், எந்தையை; சடாயுவைக் குறைத்தேன்;
இன்று ஒருக்கினென், இத்தனை வீரரை; இருந்தேன்!
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ? 191

'தமையனைக் கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை
அமைய நல்கினென், அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்;
கமை பிடித்து நின்று, உங்களை இத்துணை கண்டேன்;
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென்' எனச் சொன்னான். 192

விடைக் குலங்களின் இடை ஒரு விடை கிடந்தென்ன,
கடைக்கண் தீ உக, அங்கதக் களிற்றினைக் கண்டான்;
'படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன், பழி பார்த்து,
அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிது' என்று அழுதான். 193

உடலிடைத் தொடர் பகழியின் ஒளிர் கதிர்க் கற்றைச்
சுடருடைய பெருங் குருதியில், பாம்பு எனச் சுமந்த
மிடலுடைப் பண மீமிசை, தான் பண்டை வெள்ளக்
கடலிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான். 194

பொருமினான், அகம்; பொங்கினான்; உயிர் முற்றும் புகைந்தான்;
குரு மணித் திரு மேனியும், மனம் எனக் குலைந்தான்;
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர, சாய்ந்தான்;
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான். 195

உயிர்த்திலன் ஒரு நாழிகை; உணர்த்திலன் ஒன்றும்;
வியர்த்திலன், உடல்; விழித்திலன், கண் இணை; விண்ணோர்,
'அயர்த்தனன் கொல்?' என்று அஞ்சினர்; அங்கையும் தாளும்
பெயர்த்திலன்; உயிர் பிரிந்திலன் - கருணையால் பிறந்தான். 196

தாங்குவார் இல்லை; தம்பியைத் தழீஇக்கொண்ட தடக் கை
வாங்குவார் இல்லை; வாக்கினால் தெருட்டுவார் இல்லை;
பாங்கர் ஆயினோர் யாவரும் பட்டனர்; பட்ட
தீங்குதான் இது; தமியனை யார் துயர் தீர்ப்பார்? 197

கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணாச்
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்,
உவந்த சாதகத்து ஈட்டமும், ஓரியின் ஒழுங்கும்,
நிவந்த; அல்லது, பிறர் இல்லை, களத்திடை நின்றார். 198

வான நாடியர் வயிறு அலைத்து அழுது, கண் மழை நீர்
சோனை மாரியின் சொரிந்தனர்; தேவரும் சோர்ந்தார்;
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின, எவையும்
ஞான நாயகன் உருவமே ஆதலின், நடுங்கி. 199

முகைய நாள்மலர்க் கிழவற்கும், முக்கணான் தனக்கும்,
நகையும் நீங்கிய; திருமுகம், கருணையின் நலிந்த;
தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என்? தொடர்ந்த
பகையில் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது, பரிவால். 200

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 190

இராமன் கலக்கம் 


"எங்கள் நாயகருக்காக உயிர் நீத்து வந்துள்ளீர்" என்று தேவர் போற்றினர் 181

வானரப்படையுடன் இலக்குவன் மாண்டது பற்றி இந்திரசித்தன் தந்தையிடம் தெரிவித்தான் 182
"இராமன் இறந்திலனோ" என்றான் இராவணன் 183
"அன்னதே" என்று கூறிவிட்டு இந்திரசித்தன் தன் கோயிலுக்குச் சென்றான். மகோதரன் வந்தான். இராமன் வேறு இடத்தில் இருந்தான் என்னும் உண்மையைத் தெரிவித்தான்  184

தெய்வப் படைகளுக்குப் பூசனை செய்த பின்னர் இராமன் போர்க்களம் வந்தான். 185
களத்தைக் கண்டதும் உடல் தளர்ந்தான் 186
வானரத் தலைவரைத் தனித்தனியே பார்த்தான் 187
சுக்கிரீவனைக் கண்டு கலங்கினான் 188
கடல் கடந்து அரக்கரைக் கலக்கியது இதற்காகவா என்று சொல்லி அனுமனைப் பார்த்துக் கலங்கினான் 189
தேவர் தந்த வரங்கள், முனிவர்கள் வாய்மொழி, சானகி உதவி - அத்தனையும் பொய்த்தனவோ என்று அழுதான் 190

பாடல்

'நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர்;
உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்;
செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்;
எங்கள் நாயகர் நீங்கள்' என்று இமையவர் இசைத்தார். 181

'வெங் கண் வானரக் குழுவொடும், இளையவன் விளிந்தான்;
இங்கு வந்திலன், இராமன் இப்போது' என இகழ்ந்தான்;
சங்கம் ஊதினன்; தாதையை வல்லையில் சார்ந்தான்;
பொங்கு போரிடைப் புகுந்துள பொருள் எலாம் புகன்றான். 182

'இறந்திலன்கொலாம் இராமன்?' என்று இராவணன் இசைத்தான்;
'துறந்து நீங்கினன்; அல்லனேல், தம்பியைத் தொலைத்து,
சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனையைச் சிதைக்க,
மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?' என்றான், மதலை. 183

'அன்னதே' என, அரக்கனும், ஆதரித்து அமைந்தான்;
சொன்ன மைந்தனும், தன் பெருங் கோயிலைத் தொடர்ந்தான்;
மன்னன் ஆணையின் போயினன், மகோதரன் வந்தான்;
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான். 184

செய்ய தாமரை நாள்மலர்க் கைத் தலம் சேப்ப,
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி, மேல், வீரன்,
'மொய்கொள் போர்க் களத்து எய்துவாம் இனி' என முயன்றான். 185

கொள்ளியின் சுடர் அனலிதன் பகழி கைக்கொண்டான்;
அள்ளி நுங்கலாம் ஆர் இருட் பிழம்பினை அழித்தான்;
வெள்ள வெங் களப் பரப்பினைப் பொருக்கென விழித்தான்;
தள்ளி, தாமரைச் சேவடி நுடங்கிடத் தளர்ந்தான். 186

நோக்கினான் பெருந் திசைதொறும்; முறை முறை நோக்கி,
ஊக்கினான்; தடந் தாமரைத் திரு முகத்து உதிரம்
போக்கினான்; நிணப் பறந்தலை அழுவத்துள் புக்கான்;
காக்கும் வானரத் துணைவரைத் தனித் தனிக் கண்டான். 187

சுக்கிரீவனை நோக்கி, தன் தாமரைத் துணைக் கண்
உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிது நின்று உயிர்த்தான்;
'தக்கதோ, இது நினக்கு!' என, தனி மனம் தளர்ந்தான்;
பக்கம் நோக்கினன்; மாருதி தன்மையைப் பார்த்தான். 188

'கடல் கடந்து புக்கு, அரக்கரைக் கருமுதல் கலக்கி,
இடர் கடந்து நான் இருப்ப, நீ நல்கியது இதுவோ?
உடல் கடந்தனவோ, உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர் வாளி?' என்று, ஆகுலித்து அழுதான். 189

'முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும்,
பின்னைச் சானகி உதவியும், பிழைத்தன, பிறிது என்?
புன்மைச் செய் தொழில் என் வினைக் கொடுமையால் புகழோர்
என்னைப் போல்பவர் ஆர் உளர், ஒருவர்?' என்று இசைத்தான் 190

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 180

பிரமன் படை


அங்கதன், சாம்பன் சாய்ந்தனர் 171
நீலன், இடபன், பனசன், குமுதன் அயர்ந்தனர் 172
மயிந்தன், துமிந்தன், கயவன், கேசரி அயர்ந்தனர் 173
கனகன், அனகன், சங்கன், சதவலி, தம்பன் அயர்ந்தனர் 174
சதவலி, சுசேடணன், வினதன், கெந்தமாதனன், இடும்பன், ததிமுகன் மயங்கினர் 175
குரங்குகள் உருண்டன 176
பிரமன் படை தாக்கத்தால் இந்த நிலைமை 177
கிடந்தவரை அரமகளிர் தழுவினர் 178
வானவர் விருந்தூட்டினர். மீண்டும் மண்ணுலகம் திரும்புவர் என்பது அவர்களுக்குத் தெரியும் 179
பிரமன் படை தாக்கம் பற்றியும் வனவர் அறிவர் 180

பாடல்

அங்கதன், பதினாயிரம் அயில் கணை அழுந்த,
சிங்க ஏறு இடியுண்டென நெடு நிலம் சேர்ந்தான்;
சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்,
துங்க மார்பையும் தோளையும் வடிக் கணை துளைக்க. 171

நீலன், ஆயிரம் வடிக் கணை நிறம் புக்கு நெருங்க,
காலனார் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்;
ஆலமே அன்ன பகழியால், பனசனும் அயர்ந்தான்;
கோலின் மேவிய கூற்றினால், குமுதனும் குறைந்தான். 172

வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான்;
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார்;
கால வெந் தொழில் கயவனும் வானகம் கண்டான்;
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான். 173

கனகன் ஆயிரம் கணை பட, விண்ணிடைக் கலந்தான்;
அனகன் ஆயின சங்கனும் அக் கணத்து அயர்ந்தான்;
முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான்;
புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப் புரண்டான். 174

விந்தம் அன்ன தோள் சதவலி, சுசேடணன், வினதன்,
கெந்தமாதனன், இடும்பன், வன் ததிமுகன், கிளர,
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப,
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர், மண் உறச் சாய்ந்தார். 175

மற்றை வீரர்கள் யாவரும் வடிக் கணை மழையால்
முற்றும் வீந்தனர்; முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர்
எற்று வான் திரைக் கடலொடும் பொருது சென்று ஏற,
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட. 176

தளைத்து வைத்தது, சதுமுகன் பெரும் படை தள்ளி;
ஒளிக்க, மற்றொரு புகழிடம் உணர்கிலர்; உருமின்
வளைத்து வீக்கிய வாளியால், மண்ணொடும் திண்ணம்
முளைப் புடைத்தன ஒத்தன; வானரம் முடிந்த. 177

குவளைக் கண்ணினை வான் அர மடந்தையர் கோட்டித்
துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதி நீர் சுற்றித்
திவள, கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப் பரவை. 178

விண்ணில் சென்றது, கவிக் குலப் பெரும் படை வெள்ளம்;
கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார்,
உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்;
'மண்ணில் செல்லுதிர், இக் கணத்தே' எனும் மனத்தார். 179

'பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர்;
நீர் படக் கடவீர் அலீர்;-வரி சிலை நெடியோன்
பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார்,
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா, வீடு. 180


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 170

மாய இந்திரன்


வேள்வியில் தீ வலஞ்சுழியாக எரிந்தது கண்ட இந்திரசித்தன்  தனக்கு வெற்றி உண்டாகும் என்று மகிழ்ந்தான் 161
விண்ணில் சென்று மாயையால் மறைந்துகொண்டான் 162
முன்பே மறைந்திருந்த மகோதரன் இந்திரசித்தன் வரவு கண்டு மகிந்து மாயையில் இந்திரன் வடிவம் கொண்டு ஐராவத யானைமேல் வந்து இலக்குவனைத் தாக்கினான் 163
அரக்கர், மானிடர், குரங்கு எல்லாம் தாக்குவது போல் மாயம் செய்தான் 164
4 கொம்பு யானை, இந்திரன், முனிவர், நரகர் கூடி வந்து போரிடுவது ஏன் என்று இலக்குவன் வருந்தினான் 165
இந்திரனை எதிர்த்துப் போரிடமாமா என்று அனுமனை வினவினான் 166
அப்போது இந்திரசித்தன் பிரமன் படையை இலக்குவன் மேல் எய்தான் 167
அம்புகளால் மூடப்பட்டு இலக்குவன் அயர்ந்தான் 168
நிலத்தில் சோர்ந்து விழுந்தான் 169
பொழுது மறைந்தது 170

பாடல்

வலம் சுழித்து வந்து எழுந்து எரி, நறு வெறி வயங்கி,
நலம் சுரந்தன பெருங் குறி முறைமையின் நல்க,
குலம் சுரந்து எழு கொடுமையன், வரன்முறை கொண்டே,
'நிலம் சுரந்து எழும் வென்றி' என்று உம்பரில் நிமிர்ந்தான். 161

விசும்பு போயினன், மாயைபின் பெருமையான்; மேலைப்
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா,
அசும்பு விண்ணிடை அடங்கினன், முனிவரும் அறியாத்
தசும்பு நுண் நெடுங் கோளொடு காலமும் சார. 162

அனையன் நின்றனன்; அவ் வழி, மகோதரன் அறிந்து, ஓர்
வினையம் எண்ணினன், இந்திர வேடத்தை மேவி,
துனை வலத்து அயிராவதக் களிற்றின்மேல் தோன்றி,
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான். 163

'அரக்கர், மானிடர், குரங்கு, எனும் இவை எலாம் அல்லா
உருக்களாய் உள, யாவையும், உலகத்தின் உலவாத்
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம்' எனச் சமைத்தான்;
வெருக்கொளப் பெருங் கவிப் படை குலைந்தது, விலங்கி. 164

'கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின்மேல் கொண்டான்
ஆடல் இந்திரன்; அல்லவர் யாவரும் அமரர்,
சேடர், சிந்தனை முனிவர்கள்; அமர் பொரச் சீறி,
ஊடு வந்து உற்றது என்கொலோ, நிபம்?' என உலைந்தார். 165

அனுமன் வாள் முகம் நோக்கினன், ஆழியை அகற்றித்
தனு வலம் கொண்ட தாமரைக்கண்ணவன் தம்பி,
'முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த, யாம் முயன்ற
துனி இது என்கொலோ? சொல்லுதி, விரைந்து' எனச் சொன்னான் 166

இன்ன காலையின் இலக்குவன் மேனிமேல் எய்தான்,
முன்னை நான்முகன் படைக்கலம்; இமைப்பதன் முன்னம்,
பொன்னின் மால் வரைக் குரீஇ இனம் மொய்ப்பது போல,
பன்னல் ஆம் தரம் அல்லன சுடர்க் கணை பாய்ந்த. 167

கோடி கோடி நூறாயிரம் கொடுங் கணைக் குழாங்கள்
மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க,
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன், உணர்வு புக்கு ஒடுங்க,
ஆடல் மாக் கரி சேவகம் அமைந்தென, அயர்ந்தான். 168

அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல், ஈது அமைந்தான்?
இனி என்? எற்றுவென் களிற்றினோடு எடுத்து' என எழுந்தான்;
தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங் கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய், நெடு நிலம் சேர்ந்தான். 169

அருக்கன் மா மகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த
முருக்கின் கானகம் ஆம் என, குருதி நீர் மூட,
தருக்கி, வெஞ் சரம் தலைத்தலை மயங்கின தைக்க,
உருக்கு செம்பு அன கண்ணினன், நெடு நிலம் உற்றான். 170


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

Wednesday, 29 April 2020

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 160

சிவன் படை


பிறர் நிலைமை பற்றித் தெரியவில்லை என்று அனுமன் இலக்குவனிடம் கூறினான் 151
தெய்வப்படையை எய்யுமாறு இலக்குவனை அனுமன் வேண்டினான் 152
இலக்குவன் இராமன் பெயரைச் சொல்லி வணங்கி, சிவன் படையை எய்தான் 153
அது மூங்கில் காட்டில் தீ பற்றுவது போல் அரக்கர் படைமீது பாய்ந்து தீ பற்றி எரித்தது 154
மகோதரன் மறைந்துகொண்டான். மற்றையோர் எரிந்தனர் 155
தேவர் மலர் தூவினர் 156

செய்தி இராவணனுக்குக் கூறப்பட்டது. "ஒரு வில்லால் அவர்களைக் கொல்ல முடியுமா" என்று மகனை வினவினான். மகன் முடியும்  என்றான். 157
இராமன் வேறோர் மலையில் இருக்கிறான் என்றும் மகன் கூறினான் 158

இராவணன் காதல்(மகன்) ஒரு ஆலமரத்தடிக்குச் சென்று வேள்வி செய்யத் தொடங்கினான் 159
அம்பினால் வேள்விக் குண்டம் செய்து தீ மூட்டினான். தும்பை மலர், எள், வெள்ளாடு போன்றவற்றைப் பலியாக இட்டு எண்ணெய் ஊற்றித் தீ வளர்த்தான் 160

பாடல்

'போயினார் போயவாறும், போயினது அன்றிப் போரில்
ஆயினார் ஆயது ஒன்றும், அறிந்திலென், ஐய! யாரும்
மேயினார் மேய போதே தெரியுறும், விளைந்தது' என்றான் -
தாயினான் வேலையோடும் அயிந்திரப் பரவைதன்னை. 151

'மந்திரம் உளதால், ஐய! உணர்த்துவென்; மறைநூல் ஆய்ந்த
சிந்தையின் உணர்ந்து, செய்யற்பாற்று எனின், செய்தி; தெவ்வர்
தந்திரம் அதனைத் தெய்வப் படையினால் சமைப்பின் அல்லால்,
எந்தை! நின் அடியர் யாரும் எய்தலர், நின்னை' என்றான். 152

'அன்னது புரிவென்' என்னா, ஆயிர நாமத்து அண்ணல்-
தன்னையே தொழுது வாழ்த்தி, சரங்களைத் தெரிந்து வாங்கி,
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்தப் பற்றி,
மின் எயிற்று அரக்கர் தம்மேல் ஏவினான் - வில்லின் செல்வன். 153

முக்கணான் படையை மூட்டி விடுதலும், மூங்கில் காட்டில்
புக்கது, ஓர் ஊழித் தீயின், புறத்து ஒன்றும் போகாவண்ணம்
அக் கணத்து எரிந்து வீழ்ந்தது, அரக்கர்தம் சேனை; ஆழித்
திக்கு எலாம் இருளும் தீர்ந்த; தேவரும் இடுக்கண் தீர்ந்தார். 154

தேவர்தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா,
மா பெருந் தேரில் நின்ற மகோதரன் மறையப் போனான்;
ஏவரும் இரிந்தார் எல்லாம், இன மழை என்ன ஆர்த்து,
கோ இளங் களிற்றை வந்து கூடினார்; ஆடல் கொண்டார். 155

யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு, உவகை ஏற,
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான்;
காவல் போர்க் குரக்குச் சேனை கடல் எனக் கிளர்ந்து சுற்ற,
பூ வர்க்கம் இமையோர் தூவ, பொலிந்தனன்; தூதர் போனார். 156

இலங்கையர் கோனை எய்தி, எய்தியது உரைத்தார், 'நீவிர்
விலங்கினிர் போலும்; வெள்ளம் நூற்றை ஓர் வில்லின், வேழக்
குலங்களினோடும் கொல்லக் கூடுமோ?' என்ன, 'கொன்றை
அலங்கலான் படையின்' என்றார். 'அன்னதேல், ஆகும்' என்றான் 157

'வந்திலன் இராமன்; வேறு ஓர் மலை உளான்; உந்தை மாயத்
தந்திரம் தெரிவான் போனான், உண்பன தாழ்க்க; தாழா
எந்தை! ஈது இயன்றது' என்றார், 'மகோதரன் யாண்டை?' என்ன,
'அந்தரத்திடையன்' என்றார். இராவணி, 'அழகிற்று!' என்றான். 158

'காலம் ஈது' எனக் கருதிய இராவணன் காதல்,
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்;
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார். 159

அம்பினால் பெருஞ் சமிதைகள் அமைத்தனன்; அனலில்
தும்பை மா மலர் தூவினன்; காரி எள் சொரிந்தான்;
கொம்பு பல்லொடு, கரிய வெள்ளாட்டு இருங் குருதி,
வெம்பு வெந் தசை, முறையின் இட்டு, எண்ணெயால் வேட்டான் 160


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 150

இலக்குவன் அனுமனைத் தழுவல்


இலக்குவனை அனுமன் தேடிச் சென்றான் 141
யானைக் கொம்புகள் குருதியில் மிதப்பதைப் பார்த்தான் 142
அம்பு பாய்ந்து அறுபட்டுக் கிடக்கும் தலைகளைப் பார்த்தான் 143
சிவன் தலைமுடி போல் செந்நிற அம்புகள் பாய்வதைப் பார்த்தான் 144
தலையில்லாக் கவந்தக் காடுகளைப் பார்த்தான் 145
ஆள் இல்லாத தேர், யானை, குதிரைகளைப் பார்த்தான் 146
உதிர்ந்து கிடக்கும் படைக் கரிவிகளைப் பார்த்தான் 147
அப்போது இலக்குவன் நாண் ஒலி கேட்டது 148
வந்த அனுமனை இலக்குவன் தழுவிக்கொண்டான் 149
மற்றவர்கள் எங்கே என்று இலக்குவன் அனுமனை வினவினான் 150

பாடல்

'இளையவன் நின்ற சூழல் எய்துவென், விரைவின்' என்னா,
உளைவு வந்து உள்ளம் தூண்ட, ஊழி வெங் காலின் செல்வான்,
களைவு அருந் துன்பம் நீங்கக் கண்டனன் என்ப மன்னோ-
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய. 141

ஆனையின் கோடும், பீலித் தழைகளும், ஆரத்தோடு
மான மா மணியும், பொன்னும், முத்தமும், கொழித்து வாரி,
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர, வீசும்
பேன வெண் குடைய ஆய, குருதிப் பேர் ஆறு கண்டான். 142

ஆசைகள் தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர் தம்மேல்
வீசின பகழி, அற்ற தலையொடும் விசும்பை முட்டி,
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற, ஊழி நாளில்
காசு அறு கல்லின் மாரி பொழிவபோல், விழுவ கண்டான். 143

அருளுடைக் குரிசில் வாளி, அந்தரம் எங்கும் தாம் ஆய்,
தெருள் உறத் தொடர்ந்து வீசிச் செல்வன, தேவர் காண
இருளிடைச் சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ணச்
சுருளுடைச் சடையின் கற்றைச் சுற்று எனச் சுடர்வ, கண்டான் 144

நெய் உறக் கொளுத்தப்பட்ட நெருப்பு என, பொருப்பின் ஓங்கும்
மெய் உறக் குருதித் தாரை விசும்பு உற, விளங்கி நின்றது-
ஐயனை, கங்குல் மாலை, அரசு என அறிந்து, காலம்,
கை விளக்கு எடுத்தது என்ன-கவந்தத்தின் காடு கண்டான். 145

ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்,
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி,
தாள் எலாம் குலைய ஓடித் திரிவன, தாங்கல் ஆற்றும்
கோள் இலா மன்னன் நாட்டுக் குடி எனக் குலைவ கண்டான். 146

மிடல் கொளும் பகழி, வானின் மாரியின் மும்மை வீசி,
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட, உலைந்து மாண்டார்
உடல்களும், உதிர நீரும், ஒளிர் படைக்கலமும், உற்ற
கடல்களும், நெடிய கானும், கார் தவழ் மலையும், கண்டான். 147

சுழித்து எறி ஊழிக் காலத்து உரும் எனத் தொடர்ந்து தோன்ற,
தழிக் கொண்ட குருதி வேலை தாவுவான்; 'தனிப் பேர் அண்டம்
கிழித்தது, கிழித்தது' என்னும் நாண் உரும் ஏறு கேட்டான்;
அழித்து ஒழி காலத்து ஆர்க்கும் ஆர்கலிக்கு இரட்டி ஆர்த்தான் 148

ஆர்த்த பேர் அமலை கேளா, அணுகினன் அனுமன்; 'எல்லா
வார்த்தையும் கேட்கல் ஆகும்' என்று, அகம் மகிழ்ந்து, வள்ளல்
பார்த்தனன்; பாராமுன்னம் பணிந்தனன், விசயப் பாவை
தூர்த்தனை; இளைய வீரன் தழுவினன், இனைய சொன்னான்: 149

'அரி குல வீரர், ஐய! யாண்டையர்? அருக்கன் மைந்தன்
பிரிவு உனைச் செய்தது எவ்வாறு? அங்கதன் பெயர்ந்தது எங்கே?
விரி இருள் பரவைச் சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும்
தெரிகிலென்; உரைத்தி' என்றான், சென்னிமேல் கையன் சொல்வான் 150


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 140

அகம்பன் மாண்டான் 


வில்லினால் அனுமனை வெல்ல முடியாது என்று கருதிய அகம்பன் கூர்மையான கதை ஒன்றை எடுத்துக்கொண்டு தாக்கினான் 131
இருவரும் தாக்கிக்கொண்டனர் 132
புடைத்தனர் 133
அனுமன் அகம்பன் மார்பில் குத்தினான். அகம்பன் தடுத்தான். அப்போது அகம்பன் கையும் கதையும் முரிந்தன. 134
வலக்கை ஒடிந்த அகம்பன் இடக்கையால் அறைந்தான் 135
அனுமனும் தன் இடக்கையால் குத்தினான். அகம்பன் வாய் குருதி கக்கிற்று 136
அனுமன் அகம்பன் காதில் அறைந்தான். அகம்பன் மாண்டான் 137

இலக்குவன் வில் எய்யும் ஒலி அனுமனுக்குக் கேட்கவில்லையே என்று அனுமன் கலங்கினான் 138
அங்கதன் ஒரு ஓசனை, சுக்கிலீவன் 2 ஓசனை, இலக்குவன் 4 ஓசனை தொலைவிக்கு அப்பால் போரிட்டுக்கொண்டிருந்தனர் 139
மற்றவர்கள் அதற்கப்பால் போரிட்டுக்கொண்டிருந்தனர். நீர் மேல் மிதக்கும் பாசி போல் போர்க்களம் காணப்பட்டது 140

பாடல்

'வில்லினால் இவனை வெல்லல் அரிது' எனா, நிருதன் - வெய்ய
மல்லினால் இயன்ற தோளான், வளியினால், வானத் தச்சன்
கொல்லினால் இயன்றது, ஆங்கு, ஓர் கொடு முனைத் தண்டு கொண்டான்,-
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான், முகிலின் ஆர்ப்பான். 131

தாக்கினார்; இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி;
ஓக்கினார்; ஊழின் ஆர்ப்புக் கொட்டினார்; கிட்டினார்; கீழ்த்
தூக்கினார்; சுழற்றினார், மேல்; சுற்றினார், எற்ற எற்ற;
நீக்கினார்; நெருக்கினார்; மேல் நெருக்கினார்; நீங்கினார், மேல் 132

தட்டினார்; தழுவினார்; மேல் தாவினார்; தரையினோடும்
கிட்டினார்; கிடைத்தார்; வீசிப் புடைத்தனர் கீழும் மேலும்
கட்டினார்; காத்தார்; ஒன்றும் காண்கிலார், இறவு; கண்ணுற்று,
ஒட்டினார்; மாறி வட்டம் ஓடினார்; சாரி போனார். 133

மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்,
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத,
வெய்யவன், தன் கைத் தண்டால் விலக்கினான்; விலக்கலோடும்,
கையொடும் இற்று, மற்று அக் கதை களம் கண்டது அன்றே. 134

கையொடு தண்டு நீங்க, கடல் எனக் கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன், மிடலுடை இடக் கை ஓச்சி,
ஐயனை அலங்கல் ஆகத்து அடித்தனன்; அடித்த ஓசை,
ஒய்யென வயிரக் குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த. 135

அடித்தவன் தன்னை நோக்கி, அசனி ஏறு அனைய தண்டு
பிடித்து நின்றேயும் எற்றான், 'வெறுங்கையான்; பிழையிற்று' என்னா,
மடித்து வாய், இடத்துக் கையால் மார்பிடைக் குத்த, வாயால்
குடித்து நின்று உமிழ்வான் என்னக் கக்கினன், குருதி வெள்ளம் 136

மீட்டும் அக் கையால் வீசி, செவித் தலத்து எற்ற, வீழ்ந்தான்;
கூட்டினான் உயிரை; விண்ணோர் குழாத்திடை; அரக்கர் கூட்டக்
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன,
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன, திசைகள் எங்கும். 137

ஆர்க்கின்ற குரலும் கேளான்; இலக்குவன் அசனி ஏற்றைப்
பேர்க்கின்ற சிலையின் நாணின் பேர் ஒலி கேளான்; வீரன்
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன்; இசைப்பார் இல்லை;
போர்க் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான் 138

வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின்
யோசனை ஏழு சென்றான் அங்கதன்; அதனுக்கு அப்பால்,
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன்; அப்பால்,
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான். 139

மற்றையோர் நாலும் ஐந்தும் யோசனை மலைந்து புக்கார்;
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல்
முற்றினன் - இரண்டு மூன்று காவதம் ஒழிய, பின்னும்
சுற்றிய சேனை நீர்மேல் பாசிபோல் மிடைந்து சுற்ற. 140

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 130

அகம்பன் போர்


அகம்பன் அனுமனைத் தாக்க வந்தான். அவன் வில்லாற்றல் மிக்கவன் 121
குரங்குகளோடு போரிடக் கற்றவன் 122
தடுக்காவிட்டால் அரக்கர் அழிவர் என்று முன்னேறினான் 123
அனுமன் தண்டைச் சுழற்றினான் 124
கதைப் போரையும் அன்று கற்றுக்கொண்டவன் போல அகம்பன் தாக்கினான்  125
அகம்பன் கண்ணெதிரே அவனது யானை முதலான படைகளை அனுமன் கொன்றான் 126
இன்று அனுமனை முடிப்பேன் - என்று அகம்பன் தாக்கினான் 127
அம்பு மழை பொழிந்தான் 128
அவை அனுமன் தோளிலும் மார்பிலும் தாக்கின 129
எனினும் அனுமன் அவன் தேரைத் தகர்த்தான் 130

பாடல்

மலைப் பெருங் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன், மனத்தின் செல்லும்
தலைத் தடந் தேரன், வில்லன், தாருகன் என்னும் தன்மைக்
கொலைத் தொழில் அவுணன்; பின்னை, இராக்கத வேடம் கொண்டான்,
சிலைத் தொழில் குமரன் கொல்ல, தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் 121

'பாகசாதனனும், மற்றைப் பகை அடும் திகிரி பற்றும்
ஏக சாதனனும், மூன்று புரங்கள் பண்டு எரித்துளோனும்
போக; தாம் ஒருவர் மற்று இக் குரங்கொடு பொரக் கற்றாரே,
ஆக; கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும்' என்றான். 122

'யான் தடேன் என்னின், மற்று இவ் எழு திரை வளாகம் என் ஆம்?
வான் தடாது; அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும்' என்னா,
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து, உருத்துச் சென்றான்;
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும், விரைவின் வந்தான். 123

தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கித் தெற்ற,
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன,
வாரொடு தொடர்ந்த பைம் பொற் கழலினன் வருதலோடும்,
சூரொடும் தொடர்ந்த தண்டைச் சுழற்றினான், வயிரத் தோளான் 124

எற்றின, எறிந்த, வல்லை ஏயின, எய்த, பெய்த,
முற்றின படைகள் யாவும், முறை முறை முறிந்து சிந்த,
சுற்றின வயிரத் தண்டால் துகைத்தனன், அமரர் துள்ள;
கற்றிலன் இன்று கற்றான், கதையினால் வதையின் கல்வி. 125

அகம்பனும் காணக் காண, ஐ-இரு கோடிக் கைம்மா,
முகம் பயில் கலினப் பாய்மா, முனை எயிற்று அரக்கர், மூரி
நுகம் பயில் தேரினோடும் நுறுக்கினன்; நூழில் தீர்த்தான்;-
உகம் பெயர் ஊழிக் காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான். 126

'இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி, வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி, மற்றை மனிதரை வெறியர் ஆக்கி,
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்பால் நிறுப்பென்' என்னாச்
சென்றனன் அகம்பன்; 'நன்று, வருக!' என அனுமன் சேர்ந்தான் 127

படுகளப் பரப்பை நோக்கி, பாழி வாய் மடித்து, நூழில்
சுடு கனற் பொறிகள் வெங் கண் தோன்றிட, கொடித் தேர் தூண்டி,
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி,
முடுகுறச் சென்று, குன்றின் முட்டினான், முகிலின் ஆர்ப்பான். 128

சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும்
தெரிந்தன -அசனி போலத் தெறு பொறி பிதிர்வ திக்கின்,
வரிந்தன எருவை மானச் சிறைகளால், அமரர் மார்பை
அரிந்தன, வடிம்பு பொன் கொண்டு அணிந்தன, வாங்கு கண்ண 129

மார்பினும் தோளின்மேலும், வாளி வாய் மடுத்த வாயில்,
சோர் பெருங் குருதி சோரத் துளங்குவான், தேறாமுன்னம்,
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த,
சாரதி, புரள, வீரத் தண்டினால் கண்டம் செய்தான். 130

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம் - KambaRamayanam 6-22 120

அனுமன் போர்


கும்பகன்னன் பயன்படுத்திய தண்டாயுதம் ஒன்று அங்குக் கிடந்ததை எடுத்து அனுமன் போரிட்டான் 111
காற்று, கனல் போல அல்லாமல் கூற்றம் போலத் தாக்கினான் 112
அரக்கர் படையினர் அத்தனைப்  பேர் உடல் மீதும் இருப்பவன் போலத் தாக்கினான் 113
அரக்கர் உடல்களைக் கிழித்தான் 114
யானைகளின் மேல் தாவிப் போரிட்டான் 115
தண்டால் அடித்துக் குழம்பாக்கினான் 116
யானைகளைச் சேறாக்கினான் 117
தேர், பரி, கரி அனைத்தையும் தாக்கினான் 118
நீலன் முதலான படைத்தலைவர்கள் அரக்கர் படையில் எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை 119
தாக்க வரும் அகம்பனை அனுமன் கண்டான் 120

பாடல்

கும்பகன்னன் ஆண்டு இட்டது, வயிர வான் குன்றின்
வெம்பு வெஞ் சுடர் விரிப்பது, தேவரை மேல்நாள்
தும்பையின் தலைத் துரந்தது, சுடர் மணித் தண்டு ஒன்று,
இம்பர் ஞாலத்தை நெளிப்பது, மாருதி எடுத்தான். 111

'காற்று அன்று, இது கனல் அன்று' என இமையோரிடை காணா
ஏற்றம்கொடு, விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால்,
சீற்றம் தனி உருவாய், இடை தேறாதது ஓர் மாறு ஆம்
கூற்றம் கொடு முனை வந்தெனக் கொன்றான், இகல் வென்றான். 112

வெங் கண் மதமலைமேல், விரை பரிமேல், விடு தேர்மேல்,
சங்கம் தரு படை வீரர்கள் உடல்மேல், அவர் தலைமேல்,
"எங்கும் உளன் ஒருவன்" என இரு நான் மறை தெரிக்கும்
செங் கண்ணவன் இவனே' எனத் திரிந்தான் - கலை தெரிந்தான் 113

கிளர்ந்தாரையும் கிடைத்தாரையும் கிழித்தான், கனல் விழித்தான்;
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான், இரு கரத்தால்;
வளர்ந்தான் நிலை உணர்ந்தார், 'உலகு ஒரு மூன்றையும் வலத்தால்
அளந்தான் முனம் இவனே?' என இமையோர்களும் அயிர்த்தார் 114

மத்தக் கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி மேல்
முத்தின் பொலி முழு மேனியன், முகில் விண் தொடு மெய்யால்,
ஒத்தக் கடையுகம் உற்றுழி, உறு கால் பொர, உடு மீன்
தொத்தப் பொலி கனகக் கிரி வெயில் சுற்றியது ஒத்தான். 115

இடித்தான் நிலம் விசும்போடு என, இட்டான் அடி, எழுந்தான்;
பொடித்தான், கடற் பெருஞ் சேனையை; பொலந் தண்டு தன் வலத்தால்
பிடித்தான்; மத கரி, தேர், பரி, பிழம்பு ஆனவை குழம்பா
அடித்தான்; உயிர் குடித்தான்; எடுத்து ஆர்த்தான்; பகை தீர்த்தான் 116

நூறாயிரம் மத மால் கரி, ஒரு நாழிகை நுவல்போது,
ஆறாய், நெடுங் கடுஞ் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான்,
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி,
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான். 117

தேர் ஏறினர், பரி ஏறினர், விடை ஏறினர், சின வெங்
கார் ஏறினர், மழை ஏறினர், கலை எறினர், பல வெம்
போர் ஏறினர், புகழ் ஏறினர், புகுந்தார் புடை வளைந்தார்;
நேர் ஏறினர், விசும்பு ஏறிட, நெரித்தான், கதை திரித்தான். 118

அரி குல மன்னன், நீலன், அங்கதன், குமுதன், சாம்பன்,
பரு வலிப் பனசன், என்று இப் படைத் தலை வீரர் யாரும்,
பொரு சினம் திருகி, வென்றிப் போர்க் கள மருங்கில் புக்கார்;
ஒருவரை ஒருவர் காணார்; உயர் படைக் கடலின் உள்ளார். 119

தொகும் படை அரக்கர் வெள்ளம் துறைதொறும் அள்ளித் தூவி,
நகம் படை ஆகக் கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன,
மிகும் படைக் கடலுள் செல்லும் மாருதி, வீர வாழ்க்கை
அகம்பனைக் கண்டான், தண்டால் அரக்கரை அரைக்கும் கையான் 120

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம் 
22. பிரமாத்திரப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
கன்னித் தமிழின் களிநடனம் 
நறுக்குத் தமிழின் நாலடி அடுக்கு 

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி