Tuesday, 31 March 2020

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 60

வீடணனைப் பற்றிச் சுக்கிரீவன்

இராமனிடம் வீடணன் "சரண் புகுந்தேன்" என்றான் 51
"என் தவப் பேற்றால் உன்னிடம் வந்தேன். நான் தூயவன்" என்றான் 52
கற்புடைத் தேவியை நீ விடாவிட்டால் உன் முடித்தலை மண்ணில் புரளும் என்று அறிவுறுத்தினேன் 53
இராவணன் "என் முன் நிற்காதே" என்று கூறிவிட்டான். அதனால் வந்தேன் என்றான் வீடணன் 54

அப்போது இராமன் "இவனை ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா" என்று சுக்கிரீவனை வினவினான் 55

நல்ல இடம். நல்ல காலம் என்று சுக்கிரீவமன் கருதினான் 56
வேதம், மனு நூல் எல்லாம் அறிந்த நீ என்னை வினவிய காரணம் என்ன என்று இராமனை வினவினான் 57
என்றாலும் எனக்குத் தெரிந்தது சொல்கிறேன். முடிந்த முடிவு அன்று என்று தொடங்கிச் சொல்லலானான் 58

இவன் தன் அண்ணனை விட்டுவிட்டு வந்தது தருமமா? நீதியா? 59
அண்ணனை, தாயை, தந்தையை, குரவரை, வேந்தனை, பகைத்துக்கொண்டு வந்தது என்ன பண்பு - என்று சொல்லி நகைத்தான் 60

பாடல்

'"முரண் புகு தீவினை முடித்த முன்னவன்

கரண் புகு சூழலே சூழ, காண்பது ஓர்
அரண் பிறிது இல் என, அருளின் வேலையைச்
சரண் புகுந்தனன்" என முன்னம் சாற்றினான். 51

'"ஆயவன், தருமமும், ஆதி மூர்த்திபால்

மேயது ஓர் சிந்தையும், மெய்யும், வேதியர்
நாயகன் தர, நெடுந் தவத்தின், நண்ணினன்;
தூயவன்" என்பது ஓர் பொருளும் சொல்லினான். 52

'"கற்புடைத் தேவியை விடாது காத்தியேல்,

எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின்
பொற்புடை முடித் தலை புரளும் - என்று ஒரு
நற் பொருள் உணர்த்தினன்" என்றும் நாட்டினான். 53

'ஏந்து எழில் இராவணன், "இனைய சொன்ன நீ

சாம் தொழிற்கு உரியை, என் சார்பு நிற்றியேல்;
ஆம் தினைப் பொழுதினில் அகறியால் - எனப்
போந்தனன்" என்றனன்; புகுந்தது ஈது' என்றான். 54

அப் பொழுது, இராமனும், அருகில் நண்பரை,
'இப் பொருள் கேட்ட நீர் இயம்புவீர் - இவன்
கைப்புகற்பாலனோ? கழியற்பாலனோ?-
ஒப்புற நோக்கி, நும் உணர்வினால்' என்றான். 55

தட மலர்க் கண்ணனைத் தடக் கை கூப்பி நின்று,
'இடன் இது; காலம் ஈது' என்ன எண்ணுவான்,
கடன் அறி காவலன் கழறினான் அரோ-
சுடர் நெடு மணி முடிச் சுக்கிரீவனே: 56

'நனி முதல் வேதங்கள் நான்கும், நாம நூல்

மனு முதல் யாவையும், வரம்பு கண்ட நீ,
இனையன கேட்கவோ, எம்மனோர்களை
வினவிய காரணம்? - விதிக்கும் மேல் உளாய்! 57

'ஆயினும், விளம்புவென், அருளின் ஆழியாய்!

ஏயினது ஆதலின், அறிவிற்கு ஏற்றன;
"தூய அன்று" என்னினும், "துணிவு அன்று" எண்ணினும்,
மேயது கேட்டியால்; விளைவு நோக்குவாய். 58

'வெம் முனை விளைதலின் அன்று; வேறு ஒரு

சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று;
தம்முனைத் துறந்தது, தரும நீதியோ?
செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்? 59

'தகை உறு தம்முனை, தாயை, தந்தையை,

மிகை உறு குரவரை, உலகின் வேந்தனை,
பகை உற வருதலும், துறந்த பண்பு இது
நகையுறல் அன்றியும், நயக்கற்பாலதோ? 60

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 50

இராமனுக்குச் செய்தி சொல்லியது


அனுமன் அனுப்பிய மயிந்தன் வினவினான். 
வீடணன் துணைவன் அனலன் விடை சொல்கிறான். 

யார் 
எதற்காக வந்தீர் 
போருக்கா 41

இராமனைக் கண்டு பிழைத்துப் போக வந்தோம் 42
தவப் பயனால் இவன் வந்திருக்கிறான் 43
இராவணனுக்கு அறிவுரை கூறி அவன் கேளாமையால் வந்திருக்கிறான் 44

தம்பி ஆதலால் பிழைத்துப்போ என்று இராவணன் இவனை அனுப்பிவிட்டான் 45

உன் உரையை தலைவர்க்குச் சொல்வேன் - என்று கூறி மயிந்தன் சென்றான் 46
மயிந்தன் இராமனிடம் சென்று வணங்கினான் 47
சொல்ல வேண்டியது ஒன்று உண்டு என்றான் 48
இராவணன் தம்பி வீடணன் நால்வருடன் வந்துள்ளான் என்றான் 49
நான் வினவியபோது அவன் தன்னைப்பற்றிக் கூறினான் 50


பாடல்

'யார்? இவண் எய்திய கருமம் யாவது?
போர் அது புரிதிரோ? புறத்து ஒர் எண்ணமோ?
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்,
சோர்விலீர், மெய்ம் முறை, சொல்லுவீர்' என்றான். 41

'பகலவன் வழி முதல், பாரின் நாயகன்,
புகல் அவன் கழல் அடைந்து, உய்யப் போந்தனன் -
தகவு உறு சிந்தையன், தரும நீதியன்,
மகன் மகன் மைந்தன் நான்முகற்கு, வாய்மையான். 42

'அற நிலை வழாமையும், ஆதி மூர்த்திபால்
நிறைவரு நேயமும், நின்ற வாய்மையும்,
மறையவர்க்கு அன்பும், என்று இனைய, மா மலர்
இறையவன் தர, நெடுந் தவத்தின் எய்தினான். 43

'"சுடு தியைத் துகிலிடைப் பொதிந்து, துன்மதி!
இடுதியே, சிறையிடை இறைவன் தேவியை;
விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல்,
படுதி" என்று உறுதிகள் பலவும் பன்னினான். 44

'மறம் தரு சிந்தையன், மதியின் நீங்கினான்,
"பிறந்தனை பின்பு; அதின் பிழைத்தி; பேர்குதி;
இறந்தனை, நிற்றியேல்" என்ன, இன்னவன்
துறந்தனன்' என விரித்து, அனலன் சொல்லினான். 45

மயிந்தனும் அவ் உரை மனத்து வைத்து, 'நீ
இயைந்தது நாயகற்கு இயம்புவேன்' எனா,
பெயர்ந்தனன் - 'தம்பியும், பெயர்வு இல் சேனையும்,
அயர்ந்திலிர் காமின்' என்று அமைவது ஆக்கியே. 46

தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்,
மருவ அரும் பெருமையும் பொறையும் வாயிலாய்,
கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை,
அருள் நெறி எய்திச் சென்று, அடி வணங்கினான். 47

'உண்டு, உரை உணர்த்துவது, ஊழியாய்!' எனப்
புண்டரீகத் தடம் புரையும் பூட்சியான்,
மண்டிலச் சடை முடி துளக்கி, 'வாய்மையாய்!
கண்டதும் கேட்டதும் கழறுவாய்' என்றான். 48

'விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர்
நளிர் மலர்க் கையினன், நால்வரோடு உடன்,
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு
இளவல், நம் சேனையின் நடுவண் எய்தினான். 49

'"கொல்லுமின், பற்றுமின்" என்னும் கொள்கையான்,
பல் பெருந் தானை சென்று அடர்க்கப் பார்த்து, யான்,
"நில்லுமின்" என்று, "நீர் யாவிர்? நும் நிலை
சொல்லுமின்" என்ன, ஓர் துணைவன் சொல்லினான்: 50

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 40

வீடணனிடம் நல்லவன் அறிகுறி


ஊடலில் தோற்ற ஓதிமம் கூடலில் வென்றது கண்டான் 31 (திருக்குறள்) 
இராமன் பித்தன் போல் திரிந்தான் 32

அங்கு வீடணன் வந்தான் 33
குரங்குப்படை அவனை வளைத்துக்கொண்டது 34
இலங்கை மன்னன் வந்தான் என்று நினைத்தனர் 35
10 தலை, 20 கை என்றார்களே! என்னவாயிற்று என்று பேசிக்கொண்டனர் 36
அவனை நெருங்கினர் 37
அரக்கன் அயிற்றே! கொல்வோம் என்றனர் 38

அனுமன் அனுப்பிய மயிந்தன் துமிந்தன் ஆகிய இருவரும் அங்கு வந்தனர் 39
தன் படையினரை விலக்கிக்கொண்டு பார்த்தனர். முகக் குறிகளால் நல்லவன் எனத் தெரிந்துகொண்டனர் 40

பாடல்

உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்

கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்,
தண் நிறப் பவள வாய் இதழை, தற் பொதி
வெண் நிற முத்தினால், அதுக்கி, விம்மினான். 31

இத் திறம் நிகழ்வுறு காலை, எய்திய
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும், உணர்வு தோன்றிய
பித்தரின், ஒரு வகை பெயர்ந்து போயினான். 32

உறைவிடம் எய்தினான், ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு இருந்த சூழலில்,
முறை படு தானையின் மருங்கு முற்றினான் -
அறை கழல் வீடணன், அயிர்ப்பு இல் சிந்தையான். 33

முற்றிய குரிசிலை, 'முழங்கு தானையின்
உற்றனர், நிருதர் வந்து' என்ன ஒன்றினார்,
'எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்' என்று, இடை
சுற்றினர் - உரும் எனத் தெழிக்கும் சொல்லினார். 34

'தந்தது தருமமே கொணர்ந்துதான்; இவன்

வெந் தொழில் தீவினை பயந்த மேன்மையான்,
வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம்
சிந்தனை முடிந்தன' என்னும் சிந்தையார். 35

'"இருபது கரம்; தலை ஈர்-ஐந்து" எனபர், அத்

திருவிலிக்கு; அன்னவை சிதைந்தவோ?' என்பார்,
'பொரு தொழில் எம்மொடும் பொருதி, போர்' என்பார்,
ஒருவரின் ஒருவர் சென்று, உறுக்கி ஊன்றுவார். 36

'பற்றினம் சிறையிடை வைத்து, பாருடைக்

கொற்றவர்க்கு உணர்த்துதும்' என்று கூறுவார்;
'எற்றுவது அன்றியே, இவனைக் கண்டு, இறை
நிற்றல் என், பிறிது?' என நெருக்கி நேர்குவார். 37

'இமைப்பதன்முன் விசும்பு எழுந்து போய பின்,

அமைப்பது என், பிறிது? இவர் அரக்கர் அல்லரோ?
சமைப்பது கொலை அலால், தக்கது யாவதோ?
குமைப்பது நலன்' என முடுகிக் கூறினார். 38

இயைந்தன இயைந்தன இனைய கூறலும்,
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்,
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால்,
நயம் தெரி காவலர் இருவர், நண்ணினார். 39

விலக்கினர் படைஞரை; வேதம், நீதி நூல்,

இலக்கணம், நோக்கிய இயல்பர் எய்தினார், -
'சலக் குறி இலர்' என, அருகு சார்ந்தனர் -
புலக் குறி அற நெறி பொருந்த நோக்கினார். 40

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 30

இராமன் கடற்கரையில் உலாவல் 


என் தவப்பேற்றால் இராமனைக் காண்கிறேன் 21
மனம் நிம்மதி ஆயிற்று 22
இருளில் சென்று காணல் நன்றன்று. பகலில் செல்லலாம் என அவர்கள் காத்திருந்தனர் 23

இராமன் சீதை நினைவுடன் கடற்கரை வந்தான் 24
கானலை நோக்கினான் 25
முத்து பவளத்துடன் வரும் அலையைப் பார்த்தான் 26
நுளைச்சியர் வண்டல் இழைக்கும் பொதும்பரைப் பார்த்தான் 27
அன்னம் தன் பெடையோடு தாழையில் கண்டான் 28
மீன் கொணரச் சென்ற நாரையை எதிர்பாத்துக் காத்திருக்கும் பெண்-நாரையைப் பார்த்தான் 29
ஊடி விளையாடும் குருகுகளைப் பார்த்தான் 30

பாடல்


'ஆதி அம் பரமனுக்கு அன்பும், நல் அறம்
நீதியின் வழாமையும், உயிர்க்கு நேயமும்,
வேதியர் அருளும், நான் விரும்பிப் பெற்றனென் -
போது உறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள். 21

'ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது;
தூயது, நினைந்தது; தொல்லை யாவர்க்கும்
நாயகன் மலர்க்கழல் நணுகி, நம் மனத்து
ஏயது முடித்தும்' என்று இனிது மேயினான். 22

'இருளிடை எய்துவது இயல்பு அன்றாம்' என,
பொருள் உற உணர்ந்த அப் புலன் கொள் கேள்வியார்,
மருளுறு சோலையின் மறைந்து வைகினார்;
உருளுறு தேரவன் உதயம் எய்தினார். 23

அப் புறத்து, இராமன், அவ் அலங்கு வேலையைக்
குப்புறக் கருதுவான், குவளை நோக்கிதன்
துப்பு உறச் சிவந்த வாய் நினைந்து சோர்குவான்,
இப் புறத்து இருங் கரை மருங்கின் எய்தினான். 24

கானலும் கழிகளும், மணலும், கண்டலும்,
பானலும் குவளையும், பரந்த புன்னையும்,
மேல் நிறை அன்னமும் பெடையும், வேட்கை கூர்
பூ நிறை சோலையும், புரிந்து நோக்கினான். 25

தரளமும், பவளமும், தரங்கம் ஈட்டிய
திரள் மணிக் குப்பையும், கனக தீரமும்,
மருளும் மென் பொதும்பரும், மணலின் குன்றமும்,
புரள் நெடுந் திரைகளும், புரிந்து நோக்கினான். 26

மின் நகு மணி விரல் தேய, வீழ் கணீர்
துன்ன அரும் பெருஞ் சுழி அழிப்ப, சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னை அம் பொதும்பரும் புக்கு, நோக்கினான். 27

கூதிர் நுண் குறும் பனித் திவலைக் கோவை கால்,
மோதி வெண் திரை வர, முட வெண் தாழைமேல்,
பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து
ஓதிமம் துயில்வ கண்டு, உயிர்ப்பு வீங்கினான். 28

அருந்துதற்கு இனிய மீன் கொணர, அன்பினால்
பெருந் தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை,
வருந் திசை நோக்கி, ஓர் மழலை வெண் குருகு,
இருந்தது கண்டு நின்று, இரக்கம் எய்தினான். 29

ஒரு தனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால்,
பெரு வலி வயக் குருகு இரண்டும் பேர்கில,
திருகு வெஞ் சினத்தன, தெறு கண் தீ உகப்
பொருவன கண்டு, தன் புருவம் கோட்டினான். 30

கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 20

வீடணன் இராமன் இருக்குமிடம் வரல்


உன் மகன்கள், குருக்கள், உறவினர், நண்பர், உன்னைச் சேர்ந்திருப்போர், மெலியோர், வலியோர் - அத்தனைப் பேரையும் இராமன் அம்பு கொல்வதைக் காணப்போகிறாயா - என்றான் வீடணன் இராவணனிடம் 11

எத்தனோயோ வகையில் உனக்கு உறுதி உறுதி சொன்னேன். நீ கேட்கவில்லை. என்று பிழையைப் பொறுத்தருள் -என்று சொல்லிவிட்டு வீடணன் நகரை விட்டுச் சென்றுவிட்டான் 12

அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய 4 அமைச்சர்களும் வீடணனுடன் சென்றனர் 13
இராமன் இருக்குமிடம் வந்தனர் 14

குரங்குப் படையாம் பாற்கடல் நடுவில் இராமனைக் கண்டனர் 15
வானரப் படை பெரிது - என்றான் வீடணன் 16

அறத்தைக் கடைப்பிடிப்பவரிடம் வந்திருக்கிறேன். இனி என்ன செய்யலாம்? சொல்லுங்கள் என்று அமைச்சர்களை வினவினான் 17

இராமனைக் காணலாம் என்றனர் 18
வீடணன் ஏற்றுக்கொண்டான் 19
இராமனை எண்ணும்போது நெஞ்சம் குளிர்கிறது, என்றான் வீடணன் 20

பாடல்

'புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர்,

மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர்,
இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம்
சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ? 11

'எத்துணை வகையினும் உறுதி எய்தின,
ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;
அத்த! என் பிழை பொறுத்தருள்வாய்' என,
உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான். 12

அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும்,
வினையவர் நால்வரும், விரைவின் வந்தனர், -
கனை கழல் காலினர், கருமச் சூழ்ச்சியர், -
இனைவரும் வீடணனோடும் ஏயினார். 13

அரக்கனும், ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும்,

'குரக்கு இனத்தவரொடும் மனிதர், கொள்ளை நீர்க்
கரைக்கண் வந்து இறுத்தனர்' என்ற காலையில்,
'பொருக்கென எழுதும்' என்று எண்ணிப் போயினார். 14

அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும்,
விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல்
வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என,
களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான். 15

'ஊனுடை உடம்பின உயிர்கள் யாவையும்

ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால்,
வானரம் பெரிது' என, மறு இல் சிந்தையான்,
தூ நிறச் சுடு படைத் துணைவர்ச் சொல்லினான்: 16

'அறம்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென்;
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்;
"பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய்" எனாத்
துறந்தனென்; இனிச் செயல் சொல்லுவீர்' என்றான். 17

'மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை;
தாழ்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன்' என்று, கல்வி சால்
சூழ்ச்சியின் கிழவரும், துணிந்து சொல்லினார். 18

'நல்லது சொல்லினீர்; நாமும், வேறு இனி

அல்லது செய்துமேல், அரக்கர் ஆதுமால்;
எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை
புல்லுதும்; புல்லி, இப் பிறவி போக்குதும். 19

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;

அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால். 20


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

கம்பராமாயணம் வீடணன் அடைக்கலப் படலம் - KambaRamayanam 6-4 10

பிரகலாதன் போன்றவன் வீடணன்


இரணியன் மாண்டது பற்றி வீடணன் கூறிய செய்தியை இராவணன் ஏற்றுக்கொள்ளவில்லை. அரக்கில் தீ மூட்டியது போல் அவன் கண்கள் சினந்தன. 1
மரணத்தை மாற்ற விரும்புகிறாய் 2
தந்தையைக் கொல்ல உதவிய மகனும் நீயும் ஒன்றுதான் 3
நான் தோற்ற பின் என் செல்வத்தை அடைய விரும்புகிறாயா 4
போலியாக அழுது காட்டுகிறாய் 5
என் அரசு மீது உனக்கு ஆசை 6
உனக்கு வஞ்சனை உள்ளம். நஞ்சு உன்னை வைத்துக்கொண்டு வாழ்தல் எனக்கு நன்மையோ 7
என் கண் முன் நிற்காதே. நின்றால் மாண்டு போவாய். ஓடிப்போ - என்றான் இராவணன்  8
வீடணன் இருக்கையை விட்டு எழுந்து தன்னைச் சேர்ந்தவர்களுடன் வானில் நின்றுகொண்டு பேசுகிறான் 9
நீ உன் உயிரைப் பற்றி நினைக்க வில்லை. அறம் பிழைத்தவர்க்கு உயிர் நிலைக்குமா 10


பாடல்


கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக்
கோட்டிய சிந்தையான், உறுதி கொண்டிலன், -
மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் -
ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான். 1

'"இரணியன் என்பவன் எம்மனோரினும்
முரணியன்; அவன் தனை முருக்கி முற்றினான்,
அரணியன்" என்று, அவற்கு அன்பு பூண்டனை -
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்! 2

'ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்,
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ? 3

'பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என,
சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின்,
ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின்
வாழவோ கருத்து? அது வர வற்று ஆகுமோ? 4

'முன்புற அனையர்பால் அன்பு முற்றினை;
வன் பகை மனிதரின், வைத்த வன்பினை;
என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;
உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ? 5

'நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை;
எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு
உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;
திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ? 6

'அஞ்சினை ஆதலின், அமர்க்கும் ஆள் அலை;
தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை;
வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாறினை;
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ? 7

'பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை;
ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி;
விழி எதிர் நிற்றியேல், விளிதி' என்றனன்-
அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான். 8

என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச்
சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா -
நின்றனன்; பின்னரும், நீதி சான்றன,
ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்: 9

'வாழியாய்! கேட்டியால்: வாழ்வு கைம்மிக
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,
கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ?
வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ? 10


கம்ப இராமாயணம் 
6 யுத்த காண்டம்
4. வீடணன் அடைக்கலப் படலம்

கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ் 
நாலடி நறுக்கு அடுக்குகள் 

ஆதி = முதல் the history of the word 'aathi'

1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள்

ஆதி -பெயர்ச்சொல் - தொழிற்பெயர்

ஒப்புநோக்குக
கொடு = வளை - கொடுவாள் - - - கொடு < கோடு - வளைவுகளை உடைய சங்கு.
கொடு < கொடி - வளையும் செடியினம்

மூடு - மூடி

மிகு - மிகுதி - மீதி - தமிழ்
பகு - பகுதி - பாதி  - தமிழ்
தகு -தகைமை - தகுதி - தமிழ்
குரு (சிவப்பு) - குருதி - தமிழ்
உறு - உறுதி - தமிழ்

விகுதி - வடசொல்
ஸ்வரம் - சுருதி - வடசொல்

2

ஆ < ஆகு - வினை

ஆ < ஆனான், ஆகிறான், ஆவான் - ஆனாள், ஆகிறாள், ஆவாள் - ஆனார், ஆகிறர், ஆவார் - ஆனது, ஆகிறது, ஆகும் - ஆயின, ஆகின்றன, ஆகும் - ஆனேன், ஆகிறேன், ஆவேன் - ஆனேம், ஆகின்றேம், ஆவேம் - ஆனோம், ஆவோம் - ஆனாய், ஆகிறாய், ஆவாய் - ஆனீர், ஆகின்றீர், ஆவீர் - ஆகுக  - என்றல்லாம் மூன்று காலம் - மூன்று இடம் - ஒருமை, பன்மை என்னும் இரண்டு எண் - அகியற்றைக் காட்டும் வினைமுற்றுகளை நாம் அறிவோம்.

3

பொன்னால் ஆன குழை - பெயரெச்சம்
நல்லவன் ஆக, ஆகி - வாழ்ந்தான், வாழ்கிறான், வாழ்வான் - வினையெச்சம்

4

ஆகு - ஆக்கு
ஆனான் < > ஆக்கினான் என்னும் தொடக்கத்தனவும் கொள்க.

அவனை ஆணாக (ஆண் ஆக) எண்ணாதே  - இடைச்சொல்

ஆதல் - "நயன் உடையான் நல்கூரந்தான் ஆதல்" - திருக்குறள் 219
ஆதும் - "ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை ஆஅதும் என்னுமவர்" - வினைமுற்று
ஆதி - "அந்தணர நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்" - திருக்குறள் 543 - - - இதில் ஆதி என்பது ‘முதல்’ (= முதன்மை, முதலீடு) என்னும் பொருளில் ஆளப்பபட்டுள்ளது.

5

இந்த ஆதி என்னும் சொல்லைப் பாவாணர் வடசொல் எனக் கருதி விலக்கியுள்ளார்.
அகராதி  என்னும் சொல்லை விலக்கி அகரமுதலி என்னும் சொல்லைக் கையாளுகிறார்.

எண்ணுவோம் 
Monday, 30 March 2020

தமிழில் வேர்ச்சொல் Etymology in Tamil

மொழியில் உள்ள சொல் எங்கே தோன்றி எப்படி வளர்ந்து என்ன பொருளை உணர்த்துகிறது என்று அதன் வரலாற்றைக் கண்டறிதல் சொற்பிறப்பியல். 
Etymology is the study of the origin of words and the way in which their meanings have changed throughout history.
"the decline of etymology as a linguistic discipline"

ஆங்கில மொழி பல்வேறு பண்டைய மொழிகளிலிருந்து சொற்களை வாங்கிக்கொண்டு வாழ்கிறது. ஒரு சொல்லின் பொருளைக் காணும்போது அந்தச் சொல் தோன்றிய மொழியில் என்ன பொருள் உணர்த்திற்று எனக் காண்பது அந்த மொழிக்கு இன்றியமையாதது. தமிழ் பல மொழிகளுக்குத் தாய். 
இதன் வரலாற்றை ஆராய்வதால் என்ன பயன்? 
பிற மொழியிலிருந்து இதன் சொல் வரவில்லை என்பதைக் காட்டவே பயன்படும். பாவாணர் இதனைச் செய்தார் 

கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் ஒன்று என்றார். 

பாவாணர் ‘ஆதி’ என்னும் சொல்லை வடமொழி என்று விலக்கி, அகராதியை ‘அகரமுதலி’ என்றார். 

‘ஆதி என்னும் சொல் ‘முதல்’ என்னும் பொருளை உணர்த்தும்போதும் தமிழை என்பதை வேறொரு கட்டுரையில் காணலாம். - தொடுப்பு 


1

வேர் < அடி < மொழி
தாது என்பது விதை. வடமொழியில் வேர்ச்சொல்லைத் ‘தாது’ என்பர்.  

2

மொழியில் உள்ள ஒரு சொல்லை மரம் என வைத்துக்கொள்வோம்.
அதில் மேலே தழைத்து வளர்வனவற்றை நம் இலக்கணம் காட்டுகிறது.
நிலத்துக்குக் கீழே உள்ள வேரை சொற்பிறப்பியல் காட்டுகிறது. 

3

கீழே உள்ள கணேசனார் கட்டுரையில் தமிழில் சொற்பிறப்பியல் வளரவேண்டும் என்று குறிப்பிடுகிறார். யார் யார் இதில் முன்னோடியாகத் திகழ்கின்றனர் என்றும் சுட்டிக் காட்டுகிறார். 

4

தமிழில் உள்ள சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்று 4 வகையில் காண்பது மரபு 

இவற்றில் பெயரும் வினையும் தனித்து இயங்கக் கூடியவை 
இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரோடோ, வினையோடோ இணைந்துதான் இயங்கும். தனித்து இயங்காது. 

பெயரும் வினையும் அடி
இடையும் உரியும் கிளை

5

இடைச்சொல் தனிச்சொல்லில் அல்லது மொழியில் பின்னொட்டாகவே வரும் - பிற, மற்று, ஆகியவை போன்றவைகளும் முன்னவற்றை உணர்த்தவே வருவது காண்க 

சில உரிச்சொல் முன்னொட்டாகவோ, பின்னொட்டாகவோ வரும்
நன்பொருள் (நன்று =பெரிது -தொல்காப்பியம்) - முன்னொட்டு
பொருள் முழுதும் - பின்னொட்டு

தொல்காப்பியம் 41 இடைச்சொற்களைக் குறிப்பிட்டு அவை வெளிப்படுத்தும் பொருளையும் சுட்டுகிறது - விளக்கம்

உரிச்சொற்கள் 3 வகையாகப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. 
பலசொல் ஒருகொருள் 26
ஒருசொல் பலபொருள் 15
ஒருசொல் ஒருபொருள் 107 - விளக்கம்

புணர்ச்சியில் தோன்றும் சாரியைகள் - விளக்கம் 
வினைச்சொல்லில் காலம் காட்டும் நிலைகள்
வேற்றுமை உருபுகள் - விளக்கம்
அசைநிலை, இசைநிறை, குறிப்பு, ஒப்பில் போலி முதலானவை
ஆகியனவும் இடைச்சொற்கள்

பால் உணர்த்தும் சொற்களும் இடைச்சொற்களே.
வினைச்சொல்லில் பால், இடம், எண் ஆகியவை தொல்காப்பியம் வினையியலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன - விளக்கம் 

6

பெயரிலும், வினையிலும் தனித்து நின்றாலும் பொருள் தரக்கூடிய அடிச்சொல்லை நன்னூல் பகுதி என்று குறிப்பிடுகிறது. 
அதனோடு உறவு கொள்ளும் சொற்களை விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்று பிரித்துக் காட்டுகிறது 

பகுதி என்பது அடிச்சொல் 
பிற அதற்குப் பால், எண், இடம், வேற்றுமை, காலம் காட்ட அதனோடு ஒட்டிக்கொள்ளும்

பகுபத உறுப்புகள்
நிலைகொள்ளும் இடம்
(உறுப்புகள் - இக்கால வழக்கு)
(உறுப்புக்கள் - பண்டைய வழக்கு)

7

N. Ganesan, Mar 30, 2020, 5:50 PM, தொல்காப்பியமும் நன்னூலும் என்று தலைப்பிட்டு வல்லமை முதலான மின்னிதழ்களுக்கு அனுப்பிய செய்தி


நன்னூல், தொல்காப்பியத்தில் இல்லாத 5 வடவெழுத்துகளை தமிழ் தமிழல்லா அயன்மொழிச் சொற்களை ட்ரான்ஸ்லிட்டரேட் செய்ய தமிழ் இலிபியில் பாவிக்கின்றனர். இணையம், அச்சு நூல்களில் காணலாம்.


இன்னொன்று: தமிழில் நன்னூல், தொல்காப்பியத்தில் இல்லாதது: தாதுவேரியல்.


சம்ஸ்கிருதத்தில் நன்கு வளர்ந்த துறை. தமிழில் தாதுவேர் சாஸ்திரம் நன்கு வளர்ந்திருந்தால் இந்தியாவில் திராவிட பாஷைகள் அழிந்து இந்தோ-ஆர்ய பாஷைகள் மிகுதல் குறைந்திருக்கும்.


அது நடக்கவில்லை. 


பின்னர் எல்லிஸ் என்னும் சென்னை கலெக்டர் இதுபற்றி ஆராய்ந்தார்.


பல காலமாக, சமணர் வழிபாட்டில் உள்ள திருவள்ளுவர் உருவை தங்கக் காசாக வெளியிட்டவர் எல்லீசன்.


அதற்கு முன் சிலர் தமிழில் சில வாசகங்கள் சொல்லிப்போந்தனர்: 


மணவாள மாமுனிகள்
மாதவச் சிவஞான யோகிகள், ... குறிப்பிடலாம். 

தனிநூலாக, ரெவரண்ட் கால்வெல் எழுதினார்.


சான்றார்கள், நெல்லை சரிதம் ஆகிய முக்கியமான நூல்களையும் எழுதியவர் இப் பாதிரியார் ஆவார்.


பின்னர், மாகறல் கார்த்திகேயர், சுவாமி ஞானப்பிரகாசர் (யாழ்), பாவாணர், ....


எல்லாவற்றுக்கும் மேலாக, எமனோ-பர்ரோவின் திராவிட வேர்ச்சொல் அகராதி (DED)


தெலுங்கு, திராவிட மொழியியல் பேரா. பி.எஸ். சுப்பிரமணியம்,

DED-கு பிற்சேர்க்கை நூல் வெளியிட்டுள்ளார். சென்னையின்
செம்மொழி ஆய்வு நிலைய வெளியீடு.

திராவிட மொழியியலில் செய்ய வேண்டிய பணிகள் பல. 


சிந்துவெளி திறந்துள்ளது.


21-ஆம் நூற்றாண்டில் திராவிட ஒப்பீட்டு மொழியியல் இந்தியாவில், மேலை நாடுகளில் வளர வேண்டும்.


நா. கணேசன்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி