Thursday, 20 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 60

வாலி - சுக்கிரீவன் போர்


வாலியும் சுக்கிரீவனும் போரிடுவதை இராமன் இலக்குவனிடம் சொல்கிறான் 

விண்ணிலா, மண்ணிலா, எங்கே போரிடுகின்றனர் 
கடிக்கின்றனர். அடிக்கின்றனர். குருதி ஒழுகுகிறது. 51
கடல் போல் முங்குகின்றனர் 
இடி போல் குத்துகின்றனர் 52
ஒழுகும் குருதியால் வானமே செவ்வானமாகத் தோன்றுகிறது 53
கைகளால் தாக்குகின்றனர் 54
காலால் உதைத்துக் கைகளால் மரங்களைப் பிடுங்கி அடிக்கின்றனர் 55
தழுவித் தள்ளுகின்றனர் 56
வாலில் சுற்றுகின்றனர் 
நகத்தால் கிள்ளுகின்றனர் 57
கையில் கிடைத்தவற்றை யெல்லாம் எடுத்து எறிவதால் வானும் கடலும் தூர்வது போல் தோன்றுகிறது 58
யாரும் தோல்வியுறவில்லை 59
இப்படிப் போரிடும்போது தம்பி குலையுமாறு வாலி தாக்கினான் 60

பாடல்

'விண் மேலினரோ? நெடு வெற்பின் முகட்டினாரோ?
மண் மேலினரோ? புற மாதிர வீதியாரோ?
கண் மேலினரோ?' என, யாவரும் காண் நின்றார்,
புண்மேல் இரத்தம் பொடிப்ப, கடிப்பார், புடைப்பார். 51

ஏழ் ஒத்து, உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும்,
ஆழிக் கிளர் ஆர் கலிக்கு ஐம் மடங்கு ஆர்ப்பின் ஓசை;
பாழித் தடந் தோளினும் மார்பினும் கைகள் பாய,
ஊழிக் கிளர் கார் இடி ஒத்தது, குத்தும் ஓதை. 52

வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப, மீச் சென்று,
அவ் வாய் எழு சோரி அது, ஆசைகள் தோறும் வீச,
எவ் வாயும் எழுந்த கொழுஞ் சுடர் மீன்கள் யாவும்,
செவ் வாயை நிகர்த்தன; செக்கரை ஒத்த, மேகம். 53

வெந்த வல் இரும்பிடை நெடுங் கூடங்கள் வீழ்ப்ப,
சிந்தி எங்கணும் சிதறுவபோல், பொறி தெறிப்ப,
இந்திரன் மகன் புயங்களும், இரவி சேய் உரனும்,
சந்த வல் நெடுந் தடக் கைகள் தாக்கலின் தகர்வ. 54

உரத்தினால் மடுத்து உந்துவர்; பாதம் இட்டு உதைப்பர்;
கரத்தினால் விசைத்து எற்றுவர்; கடிப்பர்; நின்று இடிப்பர்;
மரத்தினால் அடித்து உரப்புவர்; பொருப்பு இனம் வாங்கிச்
சிரத்தின் மேல் எறிந்து ஒறுக்குவர்; தெழிப்பர்; தீ விழிப்பர். 55

எடுப்பர் பற்றி; உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர்;
கொடுப்பர், வந்து, உரம்; குத்துவர் கைத்தலம் குளிப்ப;
கடுப்பினில் பெருங் கறங்கு எனச் சாரிகை பிறங்கத்
தடுப்பர்; பின்றுவர்; ஒன்றுவர்; தழுவுவர்; விழுவர். 56

வாலினால் உரம் வரிந்தனர், நெரிந்து உக வலிப்பர்;
காலினால் நெடுங் கால் பிணித்து உடற்றுவர்; கழல்வர்;
வேலினால் அற எறிந்தென, விறல் வலி உகிரால்,
தோலினால் உடன் நெடு வரை முழை எனத் தொளைப்பர். 57

மண்ணகத்தன மலைகளும், மரங்களும், மற்றும்
கண்ணகத்தினில் தோன்றிய யாவையும், கையால்,
எண் நகப் பறித்து எறிதலின், எற்றலின், இற்ற,
விண்ணகத்தினை மறைத்தன; மறி கடல் வீழ்ந்த. 58

வெருவிச் சாய்ந்தனர், விண்ணவர்; வேறு என்னை விளம்பல்?
ஒருவர்க்கு ஆண்டு அமர், ஒருவரும் தோற்றிலர்; உடன்று
செருவில் தேய்த்தலின், செங் கனல் வெண் மயிர்ச் செல்ல,
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார். 59

அன்ன தன்மையர், ஆற்றலின் அமர் புரி பொழுதின்,
வல் நெடுந் தடந் திரள் புயத்து அடு திறல் வாலி,
சொன்ன தம்பியை, தும்பியை அரி தொலைத்தென்ன,
கொல் நகங்களின், கரங்களின், குலைந்து, உக மலைந்தான். 60

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி