Saturday, 22 February 2020

கம்பராமாயணம் வாலி வதைப் படலம் - KambaRamayanam 4-7 150

வாலி தம்பியை அடைக்கலம் தருதல்


தவம் செய்து பெற்ற வலிமை உள்ளோர் அவம் செய்தாலும் இரானை அடைந்தால் உயர்நிலை பெறுவர் என்றால், இராமனுக்கு ஏவல் செய்வோர்நிலையினைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ - வாலி தன் தம்பி சுக்கிரீவனிடம் சொல்கிறான். 141

இருமையும் எய்த இராமனுக்கு ஏவல் செய் 
மூவுலகிலும் உயர்வாய் 142
இராமன் இட்ட பணியைச் செய்து பிறவி நீங்குக 143
அடிமையின் குற்றம் பொறுப்பர் - என்று எண்ண வேண்டா 144

இவ்வாறெல்லாம் தம்பிக்குக் கூறிய வாலி, தம்பியும் அவன் சுற்றமும் உன் அடைக்கலம் என்று சொல்லி சுக்கிரீவன் தலைமேல் தன் கையை வைத்து இராமனிடம் ஒப்படைத்தான். 145

தன் மகன் அங்கதனை அழைத்துவுமாறு தம்பியிடம் கூறினான். 
அழைத்துவரப்பட்ட மகன் தந்தை நிலை கண்டு கலங்கினான் 146
குருதி வெள்ளத்தில் தந்தையைக் கண்டான். 147
விண்மீன் ஒன்று மண்ணில் விழுந்தது போல் விழுந்தான். 148

புலம்பலானான்
'எந்தையே! எந்தையே! 
எங்கும் யாருக்கும் சிந்தையாலும், செயலாலும் தீவினை செந்திலாதோய்
நொந்தனை 
அது இருக்கட்டும் 
உன்னை நோக்கிக் கூற்றம் வந்ததே 
விதியின் வலிமையைப் போக்க வல்லார் யார் 149
உன் வாலைக் கண்டால் எனக்கு அச்சம் நீங்குமே 150

பாடல்

'கைதவம் இயற்றி, யாண்டும் கழிப்ப அருங் கணக்கு இல் தீமை
வைகலும் புரிந்துளாரும், வான் உயர் நிலையை, வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால், இணை அடி இறைஞ்சி, ஏவல்
செய்தவர் பெறுவது, ஐயா! செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ? 141

'அருமை என், விதியினாரே உதவுவான் அமைந்தகாலை?
இருமையும் எய்தினாய்; மற்று இனிச் செயற்பாலது எண்ணின்,
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி, சிந்தை
ஒருமையின் நிறுவி, மும்மை உலகினும் உயர்தி அன்றே. 142

'மத இயல் குரக்குச் செய்கை மயர்வொடு மாற்றி, வள்ளல்
உதவியை உன்னி, ஆவி உற்றிடத்து உதவுகிற்றி;
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும்
சிதைவு இல செய்து, நொய்தின் தீர்வு அரும் பிறவி தீர்தி. 143

'அரசியல் - பாரம் பூரித்து அயர்ந்தனை இகழாது, ஐயன்
மரை மலர்ப் பாதம் நீங்கா வாழுதி; மன்னர் என்பார்
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி; எண்ணம் யாவும்
புரிதி; "சிற்றடிமை குற்றம் பொறுப்பர்" என்று எண்ணவேண்டா 144

என்ன, இத் தகைய ஆய உறுதிகள் யாவும், ஏங்கும்
பின்னவற்கு இயம்பி, நின்ற பேர் எழிலானை நோக்கி,
'மன்னவர்க்கு அரசன் மைந்த! மற்று இவன் சுற்றத்தோடும்
உன் அடைக்கலம்' என்று உய்த்தே, உயர் கரம் உச்சி வைத்தான் 145

வைத்தபின், உரிமைத் தம்பி மா முகம் நோக்கி, 'வல்லை
உய்த்தனை கொணர்தி, உன் தன் ஓங்கு அரு மகனை' என்ன,
அத் தலை அவனை ஏவி அழைத்தலின், அணைந்தான் என்ப,
கைத்தலத்து உவரி நீரைக் கலக்கினான் பயந்த காளை. 146

சுடருடை மதியம் என்னத் தோன்றினன்; தோன்றி, யாண்டும்
இடருடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலா தான்,
மடலுடை நறு மென் சேக்கை மலை அன்றி, உதிர வாரிக்
கடலிடைக் கிடந்த காதல் தாதையை, கண்ணின் கண்டான். 147

கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால, மாலை,
குண்டலம் அலம்புகின்ற குவவுத் தோள் குரிசில், திங்கள்
மண்டலம் உலகில் வந்து கிடந்தது; அம் மதியின் மீதா
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்தென்ன, வீழ்ந்தான். 148

'எந்தையே! எந்தையே! இவ் எழு திரை வளாகத்து, யார்க்கும்,
சிந்தையால், செய்கையால், ஓர் தீவினை செய்திலாதாய்!
நொந்தனை! அதுதான் நிற்க, நின் முகம் நோக்கிக் கூற்றம்
வந்ததே அன்றோ, அஞ்சாது? ஆர் அதன் வலியைத் தீர்ப்பார்? 149

'தறை அடித்ததுபோல் தீராத் தகைய, இத் திசைகள் தாங்கும்
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம், உந்தன்
நிறை அடிக் கோல வாலின் நிலைமையை நினையும் தோறும்,
பறை அடிக்கின்ற அந்தப் பயம் அறப் பறந்தது அன்றே? 150

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
7. வாலி வதைப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

3 comments:

 1. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கம்பராமாயணம் வாலி வதைப் படலம் – KambaRamayanam 4-7 150 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

  ReplyDelete
 2. இணைப்பு சிறந்த முறையில் அமைந்துள்ளது
  முதலில் பாராட்டி மகிழ்கிறேன்

  ReplyDelete
 3. பண்டைய தமிழ் வளத்தைக் காட்டுவதும்
  தமிழர் பண்பாட்டைச் சுட்டுவதும்
  தமிழர் வரலாற்றுக்குத் தளம் போடுவதும்
  அடியேன் நோக்கம்

  ReplyDelete

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி