Sunday, 23 February 2020

கம்பராமாயணம் கார்காலப் படலம் - KambaRamayanam 4-10 30

தம்பலப்பூச்சி


பாம்பைக் கொல்லும் கருடன் போல் மழை பொழுந்தது 21
யானைகள் போரிடுவது போல் மேகங்கள் மோதிக்கொண்டன 22
திசையோடு திசை போரிடுவது போல் காற்று சுழன்று வீசியது 23

பொருளீட்டச் சென்றவர் பொருளுடன் திரும்ப மனைவி மகிழ்வது போல் மரங்கள் தழைத்தன 24
மயில் ஆடிற்று | குயில் கூவவில்லை 
காந்தள் மலர்ந்தது | குவலய மலர்கள் சிறுமை உற்றன 
கேடுற மனம் தளர்வார் போலவும் | செல்வம் பெற மகிழ்ந்தார் போலவும்
மாறுபட்ட நிகழ்வுகள் தோன்றின 25
வண்டுகள் தேன் உண்டு மகிழ்ந்தன 26
பாம்பு படம் எடுப்பது போல் கோடல் (வெண்காந்தள்) மலர்கள் தலைதூக்கிச் சாய்ந்தன 27

இந்திரகோபம் என்னும் தம்பலப் பூச்சிகள் எங்கும் பரந்து மேய்ந்தன 
கலவியில் மகிழும் மகளிர் வெற்றிலை போட்டு உமிழ்ந்து கிடப்பது போல் அந்தப பூச்சிகள் மேய்ந்தன 28

வேங்கை, கொன்றை மலர்கள் கலந்து சிற்றாற்று நீர் ஓடிற்று 29
காந்தளில் கடுக்கை மலர் உதிர்ந்து கிடப்பது கை நீட்டிக் காசு கொடுப்பது போல் இருந்தது 30

பாடல்

பொருள் தரப் போயினர்ப் பிரிந்த பொய் உடற்கு,
உருள்தரு தேர்மிசை உயிர்கொண்டு உய்த்தலான்,
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட,
கருடனைப் பொருவின்-கால மாரியே. 21

முழங்கின முறை முறை மூரி மேகம், நீர்
வழங்கின, மிடைவன, - மான யானைகள்,
தழங்கின, பொழி மதத் திவலை தாழ்தரப்
புழுங்கின, எதிர் எதிர் பொருவ போன்றவே. 22

விசைகொடு மாருதம் மறித்து வீசலால்,
அசைவுறு சிறு துளி அப்பு மாரியின்,
இசைவுற எய்வன இயைவவாய், இருந்
திசையொடு திசை செருச் செய்தல் ஒத்தவே. 23

விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற, உயிர் உற உயிர்க்கும் மாதரின்,
மழை உற, மா முகம் மலர்ந்து தோன்றின,
குழை உறப் பொலிந்தன-உலவைக் கொம்பு எலாம். 24

பாடலம் வறுமை கூர, பகலவன் பசுமை கூர,
கோடல்கள் பெருமை கூர, குவலயம் சிறுமை கூர,
ஆடின மயில்கள்; பேசாது அடங்கின குயில்கள் - அன்பர்
கேடுறத் தளர்ந்தார் போன்றும், திரு உறக் கிளர்ந்தார் போன்றும் 25

நால் நிறச் சுரும்பும், வண்டும், நவ மணி அணியின் சார,
தேன் உக மலர்ந்து சாய்ந்த சேயிதழ்க் காந்தட் செம் பூ,
'வேனிலை வென்றது அம்மா, கார்!' என வியந்து நோக்கி,
மா நிலக் கிழத்தி கைகள் மறித்தன போன்ற மன்னோ. 26

வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த
தாளுடைக் கோடல் தம்மைத் தழீஇயின, காதல் தங்க
மீளல; அவையும் அன்ன விழைவன, உணர்வு வீந்த
கோள் அரவு என்னப் பின்னி, அவற்றொடும் குழைந்து சாய்ந்த. 27

எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம்,
தள்ளுற, தலைவர் தம்மைப் பிரிந்து, அவர் தழீஇய தூமக்
கள்ளுடை ஓதியார் தம் கலவியில், பலகால் கான்ற
வெள்ளடைத் தம்பல் குப்பை சிதர்ந்தென, விரிந்த மாதோ. 28

தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின், செம் பொன்
வாங்கின கொண்டு, பாரில் மண்டும் மால் யாறு மான,
வேங்கையின் மலரும், கொன்றை விரிந்தன வீயும், ஈர்த்து,
தாங்கின கலுழி, சென்று தலை மயக்குறுவ தம்மில். 29

நல் நெடுங் காந்தள் போதில், நறை விரி கடுக்கை மென் பூ,
துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் - தும்பி
இன் இசை முரல்வ நோக்கி, இரு நில மகள் கை ஏந்தி,
பொன்னொடும் காசை நீட்டிக் கொடுப்பதே போன்றது அன்றே! 30

கம்ப இராமாயணம் 
கிட்கிந்தா காண்டம் 
10. கார்காலப் படலம்
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி