Saturday, 25 January 2020

திருவாசகம் – பண்டாய நான்மறை – Tiruvasagam – 'Pandaya' - chapter 48

பண்டாய நான்மறை

நேரிசை வெண்பா


பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 628

  • நான்மறைக்கோ, மால் அயனுக்கோ தெரியாதவன் 
  • அடியேனைத் தொண்டனாகக் கொண்டான் 
  • கைம்மாறு உண்டோ 

உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்து வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்காள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு. 629

  • மலம் மூன்றும் மாயத் தேன் பெய்தான் 
  • வாழ்த்தினால் பிறவிக் காடு வெந்து கருவிப் போகும் 

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 630

  • காட்டில் வேடன் (அருச்சுணன் தவம் செய்தபோது)
  • கடலில் மீனவன் 
  • நாட்டில் குதிரைக்காரன் 

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 631

  • வாழ விரும்புவோரும் 
  • வல்வினையைப் போக்க விரும்புபவரும்
  • வணங்கிப் போற்றுங்கள் 

நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 632

  • இடர் நீங்க அவனைக் காண எழுகோ 

காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 633

  • அவனைப் பற்றி வாய் நிறையப் பேசுங்கள் 

பேசும் பொருளுக் கிலக்கிதமாய்ப் பேச்சிறந்த
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 634

  • மணிவார்த்தை பேசினேன் 
  • [மாணிக்க வாசகன் \ மணிமொழிப் பெருமான்]

திருச்சிற்றம்பலம்

எட்டாம் திருமுறை - திருவாசகம் 
48. பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல்
(திருப்பெருந்துறையில் அருளியது)


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி