Friday, 31 January 2020

கம்பராமாயணம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் - KambaRamayanam 3-7 10

மணிமண்டபத்தில் இராவணன்

1
அரக்கர் படை அழிந்ததை நினைக்கவில்லை 
இராமன் தோள் ஆசை விடவில்லை
இராவணனிடம் சீதை பற்றி உரைப்பேன் - என்று நினைத்துக்கொண்டு சூர்ப்பணகை இலங்கை வந்தாள் 

2
தருமம் எல்லாம் வழங்கும் மணிமண்டபத்தில் இராவணன் இருந்தான்

3
மகளிர் புலவி தீர்க்கவும் வணங்காத் தலை கொண்டவன் இராவணன்
  4
  திசையானைகள் குத்தியபோது தன் மார்பில் வாங்கி, அவற்றின் கொம்புகளை முரித்து, அவற்றை மார்பிலேயே அணிகலனாகப் பூண்டிருப்பவன் இராவணன் 
  10 தலைகளில் உள்ள 20 காதுகளில் இருக்கும் குண்டலங்கள் குலவரையை வலம்வரும் கதிரவன் போல் ஒளிர்ந்தன

  5
  இலங்கையில் கோள்கள் எல்லாம் சிறை கிடப்பது போல் கழுத்தில் ஆரம் அணிந்திருந்தான்
   6
   அரக்கர் முதலானோர் முடிகள் இவன் அடிகளை வணங்குவதால் இவன் காலில் அணிந்திருந்த கழல்கள் தேய்ந்திருந்தன
    7
    மூவுலகிலும் உள்ளவர்கள் தூவிய மலர்கள் குப்பைகளாக அவன் அடியில் கிடந்தன
     8
     எப்போது நம் பக்கம் திரும்புவான் என்று தெரியாமல், வேந்தர்கள் தம் கைகளைக் கூப்பியவாறே அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர்
      9
      சித்தர்கள் அவனுடன் இருந்தனர் 
      மங்கையரைப் பற்றி மாறுபாடாப் பேசினால் அது தங்களைப் பற்றியதாக எண்ணும் சித்தம் கொண்டவர்கள் அந்தச் சித்தர்கள்
       10
       அவன் அமைச்சரை நோக்கி நல்ல செய்தி சொன்னாலும் அந்த அமைச்சர்கள் நடுங்குவர்
        பாடல்

        இரைத்த நெடும் படை அரக்கர் இறந்ததனை மறந்தனள், போர் இராமன் துங்க
        வரைப் புயத்தினிடைக் கிடந்த பேர் ஆசை மனம் கவற்ற, ஆற்றாள் ஆகி,
        திரைப் பரவைப் பேர் அகழித் திண் நகரில் கடிது ஓடி, 'சீதை தன்மை
        உரைப்பென்' எனச் சூர்ப்பணகை வர, இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ 1

        நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த
        மலரின்மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
        உலைவு இலா வகை இழைத்த தருமம் என, நினைந்த எலாம் உதவும் தச்சன்
        புலன் எலாம் தெரிப்பது,ஒரு புனை மணிமண்டபம் அதனில் பொலிய மன்னோ.2

        புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும்
        நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்?
        மெலியும் இடை,தடிக்கும் முலை,வேய் இளந்தோள்,சேயரிக்கண் வென்றிமாதர்
        வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ. 3

        வண்டு அலங்கு நுதல் திசைய வயக் களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்-தோள்
        விண் தலங்கள் உற வீங்கி, ஓங்கு உதய மால் வரையின் விளங்க, மீதில்
        குண்டலங்கள், குல வரையை வலம்வருவான் இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை
        மண்டலங்கள் பன்னிரண்டும், நால்-ஐந்து ஆய்ப் பொலிந்த என வயங்க மன்னோ. 4

        வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க, வயிரக் குன்றத்
        தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற, ஆன்ற
        நாள் எலாம் புடை, தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட
        கோள் எலாம் கிடந்த நெடுஞ்சிறை அன்ன நிறை ஆரம் குலவ மன்னோ. 5

        ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர்
        நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால்,
        தேய்வுறத் தேய்வுறப் பெயர்ந்து, செஞ் சுடர்
        ஆய் மணிப் பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே. 6

        மூவகை உலகினும் முதல்வர் முந்தையோர்,
        ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல்போல்,
        தேவரும் அவுணரும் முதலினோர், திசை
        தூவிய நறு மலர்க் குப்பை துன்னவே. 7

        இன்னபோது, இவ் வழி நோக்கும் என்பதை
        உன்னலர், கரதலம் சுமந்த உச்சியர்,
        மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
        துன்னினர், முறை முறை துறையில் சுற்றவே. 8

        மங்கையர் திறத்து ஒரு மாற்றம் கூறினும்,
        தங்களை ஆம் எனத் தாழும் சென்னியர்,
        அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர்,
        சிங்க ஏறு என, திறல் சித்தர் சேரவே. 9

        அன்னவன் அமைச்சரை நோக்கி, ஆண்டு ஒரு
        நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர்,
        'என்னைகொல் பணி?' என இறைஞ்சுகின்றனர்,
        கின்னரர், பெரும் பயம் கிடந்த நெஞ்சினர். 10

        கம்ப இராமாயணம் 
        3 ஆரணிய காண்டம் 
        7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 
        கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

        No comments:

        Post a comment

        Blog Archive


        எழுத்துப் பிழை திருத்தி

        சந்திப் பிழை திருத்தி

        தமிழ் வலைப்பதிவு திரட்டி