Thursday, 30 January 2020

கம்பராமாயணம் - கரன் வதைப் படலம் - KambaRamayanam 3-6 160

தூடணன் போர்


ஆய்ந்த கங்க பத்திரங்கள் புக்கு, அரக்கர்தம் ஆவி
தோய்ந்த; தோய்வு இலாப் பிறை முகச் சரம் சிரம் துமித்த;
காய்ந்த வெஞ் சரம் நிருதர்தம் கவச மார்பு உருவப்
பாய்ந்த; வஞ்சகர் இதயமும் பிளந்தன; பல்லம். 151

 • இராமன் அம்புகள் நிருதர் மார்புகளைத் துளைத்தன

தூடணன் விடு சுடு சரம் யாவையும் துணியா,
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா
ஆடல் கொண்டனன், அளப்ப அரும் பெரு வலி அரக்கர்
கூடி நின்ற அக் குரை கடல் வறள்படக் குறைத்தான். 152

 • தூடணன் அம்புகளையும் வீழ்த்தின

ஆர்த்து எழுந்தனர் வானவர்; அரு வரை மரத்தொடு
ஈர்த்து எழுந்தன, குருதியின் பெரு நதி; இராமன்
தூர்த்த செஞ் சரம் திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து
போர்த்த வெஞ் சினத்து அரக்கரைப் புரட்டின, புவியில் 153

 • அரக்கர்களை தரையில் புரட்டியது

தோன்றும் மால் வரைத் தொகை எனத் துவன்றிய நிணச் சேறு
ஆன்ற பாழ் வயிற்று அலகையைப் புகல்வது என்? அமர் வேட்டு
ஊன்றினார் எலாம் உலைந்தனர்; ஒல்லையில் ஒழிந்தார்;
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து, மெய்ம் மறந்தான். 154

 • அலகைகள் நிணச்சோறு உண்டன 
 • எமன் உயிர்களைக் கவர்ந்து களைத்துவிட்டான் 

களிறு, தேர், பரி, கடுத்தவர், முடித் தலை, கவந்தம்,
ஒளிறு பல் படை, தம் குலத்து அரக்கர்தம் உடலம்,
வெளிறு சேர் நிணம், பிறங்கிய அடுக்கலின் மீதாக்
குளிறு தேர் கடிது ஓட்டினன் தூடணன், கொதித்தான். 155

 • அழிந்த படைகளின் மீது தூடணன் தன் தேரை ஓட்டினான் 

அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன, கணிப்பு இல; பெருங் கடு விசையால்;
கறங்கு போன்றுளது ஆயினும், பிணப் பெருங் காட்டில்
இறங்கும், ஏறும்; அத் தேர் பட்டது யாது என இசைப்பாம்? 156

 • பிணக்காட்டில் தூடணன் தேர் சென்றது

அரிதின் எய்தினன் -ஐ-ஐந்து கொய் உளைப் பரியால்
உருளும் ஆழியது ஒரு தனித் தேரினன், மேகத்து
இருளை நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன்
தெருளும் வார் கணைக் கூற்று எதிர், ஆவி சென்றென்ன. 157

 • இராமன் அம்புகளை எதிர்த்து நின்றான் 

சென்ற தேரையும், சிலையுடை மலை எனத் தேர்மேல்
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி,
'நன்று-நன்று, நின் நிலை' என, அருள், இறை நயந்தான்
என்ற காலத்து, அவ் வெய்யவன் பகழி மூன்று எய்தான். 158

 • தூடணன் 3 அம்பு விட்டான்

தூர வட்ட எண் திசைகளைத் தனித்தனி சுமக்கும்
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்கப்
பேர விட்டவன், நுதல் அணி ஓடையின் பிறங்கும்
வீர பட்டத்தில் பட்டன, விண்ணவர் வெருவ. 159

 • தேவர் அஞ்சினர்

'எய்த காலமும் வலியும் நன்று' என நினைத்து, இராமன்
செய்த சேயொளி முறுவலன், கடுங் கணை தெரிந்தான்;
நொய்தின், அங்கு அவன் நொறில் பரித் தேர் பட நூறி,
கையில் வெஞ் சிலை அறுத்து, ஒளிர் கவசமும் கடிந்தான். 160

 • இராமன் சிரித்துக்கொண்டே அம்பைப் பாய்ச்சினான்கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
6. கரன் வதைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி