Wednesday, 29 January 2020

கம்பராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் - KambaRamayanam 3-5 143

மேலும் நப்பாசை


'விண்டாரே அல்லாரோ, வேண்டாதார்? மனம் வேண்டின்,
உண்டாய காதலின், என் உயிர் என்பது உமது அன்றோ?
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ?
கொண்டாரே கொண்டாடும் உருப் பெற்றால், கொள்ளீரோ? 131

 • சூர்ப்பணகை தொடர்ந்து கூறுகிறாள் 
 • மனம் விரும்பினால் காதல் வரும் 
 • என் உயிர் உன் கையில் உள்ளது 
 • அழகு கண்டவரையெல்லாம் விரும்பச் செய்யும். ஆதலால் அது விடம். 
 • கொண்டான் கொண்டாடும் உருவமே அழகு - என்றாள் 

'சிவனும், மலர்த்திசைமுகனும்; திருமாலும், தெறு குலிசத்து-
அவனும், அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே!
புவனம் அனைத்தையும், ஒரு தன் பூங் கணையால் உயிர் வாங்கும்
அவனும், உனக்கு இளையானோ? இவனேபோல் அருள் இலனால் 132

 • சிவன், அயன், மால், இந்திரன் ஒன்றாகிய உருவம் கொண்டவனே 
 • உயிரை வாட்டும் காமன் உனக்கு இளையவனோ 
 •  உன் தம்பியைப் போல் நீயும் அருள் இல்லாதவனாக இருக்கிறாயே - என்றாள்

'பொன் உருவப் பொரு கழலீர்! புழை காண, மூக்கு அரிவான் பொருள் உண்டோ ?
"இன் உருவம் இது கொண்டு, இங்கு இருந்துஒழியும் நம் மருங்கே; ஏகாள் அப்பால்;
பின், இவளை அயல் ஒருவர் பாரார்" என்றே, அரிந்தீர்; பிழை செய்தீரோ?
அன்னதனை அறிந்து அன்றோ, அன்பு இரட்டி பூண்டது நான்? அறிவு இலேனோ? 133

 • இவள் அழகினை மற்றொருவர் பார்க்கக் கூடாது என்றுதானே மூக்கை அரிந்தீர் 
 • இதனால் பிழை செய்தவர் ஆகுமா 
 • இதனை நினைத்தால் உன் தம்பிமீது அன்பு இரட்டிப்பு ஆகிறது 
 • நான் என்ன - அறிவு இல்லாதவளா -- என்றாள் 

'வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின்,
அப் பழியால், உலகு அனைத்தும், நும் பொருட்டால் அழிந்தன ஆம்; அறத்தை நோக்கி,
ஒப்பழியச் செய்கிலார் உயர் குலத்துத் தோன்றினோர்; உணர்ந்து, நோக்கி,
இப் பழியைத் துடைத்து உதவி, இனிது இருத்திர், என்னொடும்' என்று, இறைஞ்சி நின்றாள். 134

 • அரக்கர் வெகுண்டால் 
 • உன் பழியைத் துடைத்துக்கொள் 
 • என்னுடன் இரு - என்று வேண்டிக்கொண்டாள்

'நாடு அறியாத் துயர் இழைத்த நவை அரக்கி, நின் அன்னைதன்னை நல்கும்
தாடகையை, உயிர் கவர்ந்த சரம் இருந்தது; அன்றியும், நான் தவம் மேற்கொண்டு,
தோள் தகையத் துறு மலர்த் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான், தோன்றி நின்றேன்;
போடு,அகல,புல் ஒழுக்கை;வல் அரக்கி!' என்று இறைவன் புகலும்,பின்னும் 135

 • உன் தாய் தாடகையின் உயிரைத் தொலைத்த அம்பு என்னிடம் இருக்கிறது 
 • நான் தவம் மேற்கொண்டிருக்கிறேன். (அதனால் கொல்ல மாட்டேன்) 
 • அகன்று செல் - என்றான் இராமன் 

'தரை அளித்த தனி நேமித் தயரதன் தன் புதல்வர் யாம்; தாய்சொல் தாங்கி,
விரை அளித்த கான் புகுந்தேம்; வேதியரும் மா தவரும் வேண்ட, நீண்டு
கரை அளித்தற்கு அரிய படைக் கடல் அரக்கர் குலம் தொலைத்து, கண்டாய், பண்டை,
வரை அளித்த குல மாட, நகர் புகுவேம்; இவை தெரிய மனக்கொள்' என்றான் 136

 • அரக்கர் குலத்தை அழித்து நாடு திரும்புவது என் நோக்கம் - என்றான்  

'"நெறித் தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே, நெடிய தேவர்
மறித்தார்; ஈண்டு, இவர் இருவர்; மானிடவர்" என்னாது, வல்லை ஆகின்,
வெறித் தாரை வேல் அரக்கர், விறல் இயக்கர், முதலினர், நீ, மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும், கொணருதியேல், நின் எதிரே கோறும்' என்றான்137

 • உன் அரக்கர் குலத்தாரை எல்லாம் கொண்டு வா 
 • உன் எதிரிலேயே அவர்களையெல்லாம் கொன்று குவிப்பேன் - என்றான்

'கொல்லலாம்' மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம்; கொற்ற முற்ற
வெல்லலாம்; அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம்;-"மேல் வாய் நீங்கி,
பல் எலாம் உறத் தோன்றும் பகு வாயள்" என்னாது, பார்த்திஆயின்,
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட! கேள்' என்று நிருதி கூறும்: 138

 • என் சிரித்த முகத்தைப் பார்க்காமல் பேசுகிறாயே - என்று சொல்லிக்கொண்டு சூர்ப்பணகை மேலும் கூறுகிறாள்

'காம்பு அறியும் தோளானைக் கைவிடீர்; என்னினும், யான் மிகையோ? கள்வர்
ஆம், பொறி இல், அடல் அரக்கர் அவரோடே செருச் செய்வான் அமைந்தீர் ஆயின்,
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து, அவற்றைத் தடுப்பென் அன்றே?
"பாம்பு அறியும் பாம்பின கால்" என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ? 139

 • அப்படியாயின், 
 • நீ அரக்கருடன் போர் செய்யும்போது, அவர்கள் செய்யும் மாயத்தை யெல்லாம் சொல்லி உனக்குத் துணை புரிவேன் 
 • பாம்பு சென்ற காலடிப் பாதையைப் பாம்பு அறியும் என்பார்கள் 
 • அரக்கர்கள் பாம்பு போன்றவர்கள் 
 • அவர்கள் செய்யும் மாயங்களை அறிந்தவள் நான் 
 • போரின்போது அவற்றை உனக்குச் சொல்லி உதவுவேன் 
 • என்னை ஏற்றுக்கொள் - என்றாள் 

'"உளம் கோடல் உனை இழைத்தாள் உளள் ஒருத்தி" என்னுதியேல், நிருதரோடும்
களம் கோடற்கு உரிய செருக் கண்ணியக்கால், ஒரு மூவேம் கலந்தகாலை,
குளம் கோடும் என்று இதுவும் உறுகோளே? என்று உணரும் குறிக்கோள் இல்லா
இளங்கோவோடு எனை இருத்தி, இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையேன்' என்றாள். 140

 • உன்னுடன் ஒருத்தி இருக்கிறாள் என்றால் 
 • உன் தம்பியுடன் என்னை வை - என்றாள்

'பெருங் குலா உறு நகர்க்கே ஏகும் நாள், வேண்டும் உருப் பிடிப்பேன்; அன்றேல்,
அருங் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம்; இளையவன் தான், "அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ?" என்பானேல், இறைவ! "ஒன்றும்
மருங்கு இலாதவளோடும் அன்றோ", நீ, "நெடுங் காலம் வாழ்ந்தது" என்பாய் 141

 • மூக்கு இல்லாதவளோடு எப்படி வாழ்வேன் என்று உன் தம்பி சொல்வானானால், 
 • இடுப்பு இல்லாத ஒருத்தியோடு நீ வாழ்வதைச் சொல்லிக்காட்டு - என்றாள்

என்றவள்மேல், இளையவன் தான், இலங்கு இலை வேல் கடைக்கணியா, 'இவளை ஈண்டு
கொன்று களையேம் என்றால், நெடிது அலைக்கும்; அருள் என்கொல்? கோவே!' என்ன,
'நன்று, அதுவே ஆம் அன்றோ? போகாளேல் ஆக!' என நாதன் கூற,
'ஒன்றும் இவர் எனக்கு இரங்கார்; உயிர் இழப்பென், நிற்கின்' என, அரக்கி உன்னா, 142

 • கொல்லாமல் இவள் போகமாட்டாள் 
 • ஆணையிடு - என்றான், தம்பி, அண்ணனிடம் 

'ஏற்ற நெடுங் கொடி மூக்கும், இரு காதும், முலை இரண்டும், இழந்தும், வாழ
ஆற்றுவனே? வஞ்சனையால், உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ?
காற்றினிலும் கனலினிலும் கடியானை, கொடியானை, கரனை, உங்கள்
கூற்றுவனை, இப்பொழுதே கொணர்கின்றேன்' என்று, சலம்கொண்டு போனாள் 143

 • கரனை உங்களுக்குக் கூற்றுவனாகக் கொண்டுவருகிறேன் - என்று சொல்லிவிட்டு, சூர்ப்பணகை போய்விட்டாள்  

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
5. சூர்ப்பணகைப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி