Tuesday, 28 January 2020

கம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-3 40

அகத்தியர் பெருமை


உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு, எதிர்,
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான்:
'அவம் இலா விருந்து ஆகி, என்னால் அமை
தவம் எலாம் கொளத் தக்கனையால்' என்றான். 31

 • என் தவப்பயன் அனைத்தும் கொள்க - என்று சுதீக்கண முனிவன் இராமனுஉக்கு வழங்கினான் 

மறைவலான் எதிர், வள்ளலும் கூறுவான்:
'இறைவ! நின் அருள் எத் தவத்திற்கு எளிது?
அறைவது ஈண்டு ஒன்று; அகத்தியற் காண்பது ஓர்
குறை கிடந்தது, இனி' எனக் கூறினான். 32

 • அகத்தியரைக் காணவேண்டும் - என்று தன் விருப்பத்தை இராமன் முனிவனிடம் தெரிவித்தான் 

'நல்லதே நினைந்தாய்; அது, நானும் முன்
சொல்லுவான் துணிகின்றது; தோன்றல்! நீ
செல்தி ஆண்டு; அவற் சேருதி; சேர்ந்தபின்,
இல்லை, நின்வயின் எய்தகில்லாதவே. 33

 • நானும் சொல்ல நினைத்தேன் 
 • செல்க 
 • அவரைச் சேர்ந்த பின் நீ அடையவேண்டிய பேறு வேறு இல்லை - என்றார் முனிவர் 

'அன்றியும் நின் வரவினை ஆதரித்து,
இன்றுகாறும் நின்று ஏமுறுமால்; அவற்
சென்று சேருதி; சேருதல், செவ்வியோய்!
நன்று தேவர்க்கும்; யாவர்க்கும் நன்று' எனா, 34

 • அகத்தியர் உன் வரவுக்காக இன்றும் காத்திருக்கிறார் - என்றும் கூறினார் 

வழியும் கூறி, வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மா தவன் மொய்ம் மலர்த் தாள் தொழா,
பிழியும் தேனின் பிறங்கு அருவித் திரள்
பொழியும் சோலை விரைவினில் போயினார். 35

 • அகத்தியரிடம் செல்ல வழியும் கூறினார் 

ஆண்தகையர் அவ் வயின் அடைந்தமை அறிந்தான்;
ஈண்டு, உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த,
மாண்ட வரதன் சரண் வணங்க, எதிர் வந்தான் -
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான். 36

 • இராமன் சென்றான் 
 • அகத்தியர் எதிர்கொண்டு வரவேற்றார் 
 • இராமன் வணங்கினான் 

பண்டு, 'அவுணர் மூழ்கினர்; படார்கள்' என வானோர்,
'எண் தவ! எமக்கு அருள்க' எனக் குறையிரப்பக்
கண்டு, ஒரு கை வாரினன் முகந்து, கடல் எல்லாம்
உண்டு, அவர்கள் பின், 'உமிழ்க' என்றலும், உமிழ்ந்தான் 37

 • கடலுக்குள் ஒளிந்திருக்கும் அவுணரை வெளியில் காட்ட அகத்தியர் கடல் நீர் எல்லாவற்றையும் தம் உள்ளங்கையில் அடக்கி உண்டார். 
 • பின்னர் அவர்கள் வேண்டகோளின்படி உமிழ்ந்தார் 

தூய கடல் நீர் அடிசில் உண்டு, அது துரந்தான்;
ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்;
மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர் களைந்தான் 38

 • வாதாபி என்னும் அரக்கனை உண்டு முனிவர் துன்பத்தைப் போக்கினார் 

யோகமுறு பேர் உயிர்கள்தாம், 'உலைவுறாமல்
ஏகு நெறி யாது?' என, மிதித்து அடியின் ஏறி,
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்
நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39

 • விந்த மலையைக் காலால் மிதித்து அடக்கினார் 

மூசு அரவு சூடு முதலோன், உரையின், 'மூவா
மாசு இல் தவ! ஏகு' என, வடாது திசை மேல்நாள்
நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா,
ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40

 • சிவபெருமான் ஆணைப்படி \ வடதிசை தென்திசை சாயாமல் இருக்க \ தென்னாடு வந்தார் 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
3. அகத்தியப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி