Monday, 27 January 2020

கம்பராமாயணம் - அகத்தியப் படலம் - KambaRamayanam 3-3 20

இராமன் 

முனிவர்களுக்கு அபயம் அளித்தல்


எய்திய முனிவரை இறைஞ்சி, ஏத்து உவந்து,
ஐயனும் இருந்தனன்; 'அருள் என்? என்றலும்,
'வையகம் காவலன் மதலை! வந்தது ஓர்
வெய்ய வெங் கொடுந் தொழில் விளைவு கேள்' எனா, 11

 • வந்த முனிவர்களை இராமன் வணங்கினான் 
 • "தங்கள் அருள் வாக்கு என்ன" என வினவினான் 
 • வையக் காவலன் மைந்தனே! எங்களுக்கு நேர்ந்தது கேள் - என்று தொடங்கினர் 

'இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்,
அரக்கர் என்று உளர் சிலர், அறத்தின் நீங்கினார்,
நெருக்கவும், யாம் படர் நெறி அலா நெறி
துரக்கவும், அருந் தவத் துறையுள் நீங்கினேம். 12

 • அரக்கர் கொடுமையால் தவம் செய்ய முடியவில்லை - என்றனர் 

'வல்லியம் பல திரி வனத்து மான் என,
எல்லியும் பகலும், நொந்து இரங்கி ஆற்றலெம்;
சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம்;
வில் இயல் மொய்ம்பினாய்! வீடு காண்டுமோ? 13

 • புலிகள் பல நடமாட்டும் காட்டில் மான்கள் போல் நோகின்றோம் - என்றனர் 

'மா தவத்து ஒழுகலெம்; மறைகள் யாவையும்
ஓதலெம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம்;
மூதெரி வளர்க்கிலெம்; முறையின் நீங்கினோம்;
ஆதலின், அந்தணரேயும் ஆகிலேம்! 14

 • தவ ஒழுக்கம் இல்லை 
 • மறைகள் ஓதவில்லை 
 • ஓதுவார்க்கு உதவ முடியவில்லை 
 • தீ வளர்க்க முடியவில்லை - என்றனர் 

'இந்திரன் எனின், அவன் அரக்கர் ஏயின
சிந்தையில் சென்னியில், கொள்ளும் செய்கையான்;
எந்தை! மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார்?
வந்தனை, யாம் செய்த தவத்தின் மாட்சியால். 15

 • இந்திரன் அஞ்சி அரக்கர் விருப்பம் போல் நடந்துகொள்கிறான் 
 • எங்கள் துன்பம் போக்குவார் உன்னைத் தவிர வேறு யார் 

'உருளுடை நேமியால் உலகை ஓம்பிய
பொருளுடை மன்னவன் புதல்வ! போக்கிலா
இருளுடை வைகலெம்; இரவி தோன்றினாய்;
அருளுடை வீர! நின் அபயம் யாம்' என்றார். 16

 • இருள் நீக்கும் சூரியன் போல வந்துள்ளாய் 
 • வீர! உன் அபயம் - என்றனர் 

'புகல் புகுந்திலரேல்; புறத்து அண்டத்தின்
அகல்வரேனும், என் அம்பொடு வீழ்வரால்;
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர்' எனா,
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான். 17

 • அவர்கள் என்னிடம் அடைக்கலம் புகாவிட்டால் அம்பொடு வீழ்வர் 
 • துன்பம் நீங்குங்கள் - என்றான் 

'வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும்,
ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம்
போந்தது, என்னுடைப் புண்ணியத்தால்' என்றான். 18

 • நான் காட்டுக்கு வந்தது என் புண்ணியம் - என்றான், இராமன் 

'அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன்எனின்,
இறந்துபோகினும் நன்று; இது அல்லது,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 19

 • அந்தணர் தன்மையை மறந்த புல்லர் வலிமையைத் தொலைப்பேன் 
 • முடியாவிட்டால் சாவது மேல் 
 • நான் பிறந்ததன் பயன் வேறு உண்டோ - என்றான்  

'நிவந்த வேதியர் நீவிரும், தீயவர்
கவந்தபந்தக் களிநடம் கண்டிட,
அமைந்த வில்லும் அருங் கணைத் தூணியும்
சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால். 20

 • தலை அறுபட்ட அரக்கரின் கவந்தங்கள் ஆடுவதை நீங்கள் பார்க்கலாம் - என்றான் இராமன் 

கம்ப இராமாயணம் 
3 ஆரணிய காண்டம் 
3. அகத்தியப் படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி