Monday, 27 January 2020

கம்பராமாயணம் - சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் - KambaRamayanam 3-2 44

சரவங்க முனிவர் எரி மூழ்கல்

ஆயிடை, அறிஞனும், அவன் எதிர் அழுவத்
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்,
'நீ விடை தருக' என நிறுவினன், நெறியால்,
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான். 37

  • தனக்கு விடை தரும்படி முனிவன் இராமனை வேண்டினான் 
  • தீயில் இறங்க முடிவு செய்தான் 

வரி சிலை உழவனும், மறை உழவனை, 'நீ
புரி தொழில் எனை? அது புகலுதி' எனலும்,
'திருமகள் தலைவ! செய் திருவினை உற, யான்
எரி புக நினைகுவென்; அருள்' என, இறைவன்: 38

  • இராமன் சிலை உழவன் 
  • முனிவன் மறை உழவன்
  • "என்ன செய்யப் போகிறீர்" - இராமன் வினா 
  • "எரி புகுவேன். அருள் தருக" - முனிவன் வேண்டினான் 

'யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ?-
மான் வரு தனி உரி மார்பினை!' எனலும்,
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன்
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான்: 39

  • "நான் வரும்போது இது செய்வது ஏன்" - இராமன் வினா 
  • முனிவன் கூறுகிறான் 

'ஆயிர முகம் உள தவம் அயர்குவென், யான்;
"நீ இவண் வருகுதி" எனும் நினைவு உடையேன்;
போயின இரு வினை; புகலுறு விதியால்
மேயினை; இனி ஒரு வினை இலை;-விறலோய்! 40

  • ஆயிரம் முகம் கொண்ட தவம் செய்தேன் 
  • நீ இங்கு வந்தாய் 
  • என் இரு வினைகளும் போயின 
  • இனி நான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை  - என்றான் முனிவன் 

'இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா
வந்தனன், "மருவுதி மலர் அயன் உலகம்;
தந்தனென்" என, 'அது சாரலென்,-உரவோய்!-
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன். 41

  • இந்திரன் பிரமலோகம் வரும்படி அழைத்தான் 
  • அங்கு நான் செல்லவில்லை 
  • எனக்கு வேண்டியது முடிவு இல்லாத உயர்பதம் 
  • உன்னால் இருவினை நீங்கியது 
  • அதனால் செல்கிறேன் - என்றான் முனிவன் 

'ஆதலின், இது பெற அருள்' என உரையா,
காதலி அவளொடு கதழ் எரி முழுகி,
போதலை மருவினன், ஒரு நெறி-புகலா
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன். 42

  • "இதனை நீ அருள்" என இராமனை வேண்டினான் 
  • தன் மனைவியுடன் முனிவன் தான் விரும்பியவண்ணம் செய்தான் 

தேவரும், முனிவரும், உறுவது தெரிவோர்,
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர்,
ஏவரும், அறிவினில் இரு வினை ஒருவி,
போவது கருதும் அவ் அரு நெறி புக்கான். 43

  • வினையின் நீங்கி, அருநெறி புக்கான் 

அண்டமும் அகிலமும் அறிவு அரு நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிதுஎனின், இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ? 44

  • இராமனைக் கண்ட பின்னர் ஒருவர் அடைய வேண்டிய வேறு பேறும் உண்டோ 

கம்ப இராமாயணம்  3 ஆரணிய காண்டம் -  
2. சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 
கடவுள் கதையில் கனியும் கம்பன் தமிழ்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி