Friday, 13 December 2019

திருக்குறள் - குடியியல் Family in a country

திருக்குறள் - குடியியல் 

பகுப்பு


திருக்குறள் 3 பால்களாக அமைந்துள்ளது. அவற்றில் 10 பாடல்கள் கொண்ட அடுக்குகள் உள்ளன. இந்த அடுக்குகளை அதிகாரம் என்கிறோம். இதனைப் ‘பத்து’ என வழங்குதல் நலம். இந்த அடுக்குகளை மேலும் பாகுபாடு செய்வதில் திருவள்ளுவ மாலை பாடிய ஆசிரியர்களும், பண்டைய உரையாடசிரியர்களும் மாறுபடுகின்றனர்.

"படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்" - 6-ம் உடையவன் அரசன் என்று ஒரு திருக்குறள் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் பொருட்பால் 7 இயல்களாகப் பாகுபடுத்தப் படுள்ளது. 

திருக்குறளின் பெருமையைப் போற்றிப் பாடிய நூல்-தொகுப்பு திருவள்ளுவ-மாலை. இதில் உள்ள பாடல்களில் ஒன்று "போத்தியார்" பாடியது. அது:

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் – இருவியல்
திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை

இவற்றில், "குடியியல்" என்னும் தலைப்பில் 13 பத்துகள் உள்ளன. இதனை ஆராயும் பேற்றினை அடியேன் பெற்றுள்ளேன்.

இந்தத் தலைப்பு மணக்குடவர் உரையில் “குடியியல்” என்றே உள்ளது. பரிமேலழகர் இதனை “ஒழிபியல்” என்று குறிப்பிடுகின்றனர். 

தொகுப்பு

 • மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை - பண்புகளால் குடும்பம் மேலோங்கும். 
 • குடும்பத்தின் செல்வம் பயன்பட வேண்டும். 
 • தகாத செயலுக்குக் குடும்பத்தில் உள்ளவர் நாணவேண்டும். 
 • குடும்பத்தை மேம்படுத்தும் பண்புகள் இவையிவை. 
 • உழவுத் தொழிலால் செம்மாப்புடன் வாழலாம். 
 • தொழில் செய்யாவிட்டால் "நல்குரவு" (வறுமை) வரும். 
 • கொடுப்பவரிடம் கேட்கலாம் என்றாலும் அது இழிவு 
 • கயமைத்தனம் இழிந்த செயல் 
என்பன குடியியலில் கூறப்படும் செய்திகள். 


நெஞ்சைத் தொட்ட செய்திகள்

பெருமை - பணிவுடைமை (978) 
பெருமை - பெருமிதம் இன்மை - 979
பெருமை - பிறர் அறியாமையை மறைக்கும் - 980

சால்பு - பிறர்தீமை சொல்லா நலத்தது - 984 
சால்பு - தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். 986 
சான்றாண்மை - தோல்வி துலை அல்லார் கண்ணும் கொளல் (986)

மானம் - பெருந்தன்மைக்கு அழிவு வருதல் (968). 

வள்ளுவர் புரட்சி


நலமாக வாழும் ஒருவனிடம் அன்பு இல்லாவிட்டால் அவன் அந்தக் குடும்பத் தலைவனுக்குப் பிறந்தவனா என ஐயம் கொள்ள நேரும். 

"நலத்தின்கண் நார் இன்மை தோன்றின், அவனைக் 
குலத்தின்கண் ஐயப்படும்". (958) 

வள்ளுவர் கடவுளை மிரட்டல்


இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகு இயற்றியான் (1062)

உலகைப் படைத்தவனே!
பிறரிடம் கேட்டுப் பெற்றுத்தான் உயிர் வாழ வேண்டும் என்று யாரையாவது படைத்தாயா?
படைத்திருந்தால், நீயே பிச்சை எடுத்துக் கெட்டொழிக.
இவ்வாறு கடவுளுக்கே சாபம் கொடுக்கும் சினத்தால் வள்ளுவர் எதனை உணர்த்துகிறார்?
பிச்சை எடுத்து வாழும்படி இறைவன் யாரையும் படைக்கவில்லை என்கிறார்.

வள்ளுவர் கடவுளிடம் கெஞ்சல்


கடவுளே!
கெஞ்சிக் கேட்கிறேன்
சினம் கொள்ளாமல் கேள்.
வறுமை இல்லாமல் வாழ வை.
வறுமை தரும் துன்பத்துக்கு சான்றாக் கூற வறுமையைத் தவிர வேறு இல்லை. அந்த அளவுக்கு வறுமை கொடுமையானது
என்கிறார்.

இரப்பன் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை 
தானேயும் சாலும் கரி (1060)


நம் கண்ணோட்டம்


"குடி செயல்வகை" (103) என வரும் பத்து "பொருள் செயல்வகை" (73) என வரும் பத்தோடு ஒப்புநோக்கத் தக்கது. செயல்வகை என்பது மேம்படுத்துதலைக் குறிக்கும். 

அறத்துப் பாலில் "இல்வாழ்க்கை" (5) குடும்ப வாழ்க்கையின் மேன்மையை விரித்துரைக்கிறது. பொருட்பாலின் "குடிசெயல்வகை" (103) குடும்பத்தை மேன்மைப் படுத்தும் பாங்கினைக் கூறுகிறது. 

நிலம், நிலவுலகம்

நிலம் தாங்காது, சான்றவர் சான்றாண்மை குன்றின் (990)
நிலத்துக்குச் சுமை, செல்வத்தை வழங்கிப் புகழ் பெறாதவர் (1003)
உலகம் வாழ்கிறது, பண்புடையார் இருப்பதால்தான் (996)
நிலம் நகும், இல்லை என்று இருப்பவரைக் கண்டால் 1040 
என்றெல்லாம் நிலம், நிலவுலகம் ஆகியவற்றைப் பற்றி இந்த இயலில் கூறப்பட்டுள்ளது. 

ஒப்பு நோக்குவோம்

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றி 
அருமை உடைய செயல் (975) 
என்று பெருமை பற்றிக் குறிப்பிடும் திருவள்ளுவர் 
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாதார் (26) 
என்று நீத்தார் பெருமை பற்றிக் குறிப்பிடுகிறார். 

சரியான கண்ணோட்டம்


ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார் (989) 

என்னும் திருக்குறளுக்கு, "சான்றாண்மைக் கடலுக்குக் கரை" என்று பலரும் உரை கண்டுள்ளனர். அவர்கள் ஆழி = கடல் எனக் கொண்டுள்ளனர். 

ஆழி என்பதற்குத் "சக்கரம்" என்று பொருள் கண்டால், சான்றாமைத் தேருக்கு ஆழியாய் விளங்குபவர் சான்றோர் என்று விளங்கிக்கொள்ளலாம். கரை என்னும் சொல்லை இணைக்க வேண்டி வராது. 

வள்ளுவர் வினா


எச்சம் என்று என் ஆங்கொல் ஒருவரால்
நச்சப் படாஅதவர் (நன்றியில் செல்வம் - 1004) 

யாருக்கும் பயன்படாமல் செல்வத்தைப் பாதுகாப்பவன் தனக்கு எச்சம் என்று எதை விட்டுவைப்பான்? 

இது வள்ளுவர் வினா.


எச்சம்


உணவு உண்டு நாம் தள்ளும் எச்சத்தை நாமே வெறுக்கிறோம். 
கணவன் மனைவியரின் எச்சம் அவரகளது பிள்ளைகள். (தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் - 114)  
தனி ஒருவன் அவன் செயலால் பெறும் எச்சம் புகழ் அல்லது இகழ் 
கஞ்சனுக்கு எஞ்சி நிற்பது எது? சொல்லாமல் தெரியும். 

உவமைகளில் சில

அழகி


அழகி ஒருத்தி ஆண்மகனால் பயன்படுத்தப் படாமல் முதுமை அடைவது போன்றது, கஞ்சன் கையில் உள்ள செல்வம்

ஆற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் 
மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று - நன்றியில் செல்வம் - 1007 

மனைவியிடம் உடலுறவு


மனைவியின் உடலைக் கணவன் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் அவள் அவனிடம் பிணக்கிக் கொள்வாள். அதுபோல நிலத்தை உழாமல் இருந்தால் விளையாமல் வறண்டு போகும்

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் 
தில்லாளின் ஊடி விடும் - உழவு - 1039 

கரும்பு


சான்றோர் புகழத்தக்க வகையில் நடந்துகொள்வர். கயவரைக் கரும்பு போல் கடித்துத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் 
கொல்லப் பயன்படும் கீழ் - கயமை - 1080

மயிர்


தலையிலிருந்து விழுந்த மயிருக்கு என்ன மதிப்போ, அவ்வளவுதான் மானம் கெட்டவனுக்கு உள்ள மதிப்பு.  

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை - மானம் 964

அவன் பல்லை உடை


குத்துச்சண்டையில் குத்துவது போலக் கையை மடக்கிக்கொண்டு பல்லை உடைப்பவருக்கு மட்டுமே கயவர் பயன்படுவர். மற்றவர்களுக்குப் பணிய மாட்டார்கள்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் 
கூன் கையர் அல்லாதவர்க்கு - கயமை - 1077

மரம் போல்வர் 


கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் மக்களின் நற்பண்பு இல்லாதவர் வெட்டினால் வலி தெரியாத சொரணை கெட்டவர் ஆவார்.

அறம் போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர் 
மக்கட் பண்பு இல்லாதவர் - பண்புடைமை - 997

மரப்பாவை 


நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று (1020) 

இரப்பாரை இல்லாத ஈர்ங்கண்மா ஞாலம் 
மரப்பாவை சென்று வந்து அற்று (1058)

மரப்பாவை என்பது கட்டபொம்மலாட்டம். கட்டையால் செய்த பொம்மைகள் கை கால்களைத் தூக்கி ஆடுவது போல் இதில் காட்டுவர். வெளியிலிருந்து பார்ப்பவர்களின் கண்ணுக்குத் தெரியாத நூல் கயிறுகளால், 2 கால், 2 கை, தலை ஆகியவற்றில் கட்டி, அவற்றின் மறு நுனியை ஆட்டக்காரன் தன் 5 விரல்களிலும் கட்டி அசைத்து, பொம்மை ஆடுவது போல் காட்டுவான்.

நாணம் இல்லாதவர் இந்தப் பொம்மை போன்றவர்.

இரப்பவர் இல்லை என்றால் யாருக்குக் கொடுக்க முடியும்? எனவே உலக வாழ்க்கையானது, உயிரோட்டம் இல்லாமல் மரப்பாவை போல் இருக்கும் - என்கிறார், திருவள்ளுவர். 

உருவகம் 


இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும்
பார் தாக்கப் பக்கு விடும் (1068)

பிறரிடம் கேட்டுப் பெறும் "இரவு" என்னும் தோணி
வாழ்க்கைக் கடலில் செல்லும்போது
இருப்பதைக் கொடுக்காமல் மறைக்கும் "கரவு" என்னும் பாறையில் மோதும்போது,
முரிந்து போகும்.

மேம்பட்ட வாழ்க்கைக்கு நாணம் வேலி. (1016)

பாக்களின் கருத்துத் திரட்டு 

96 குடிமை (உயர்ந்த குடும்பத்தின் தன்மை) 

 1. செவ்விய ஒழுக்கம், தவறு நேரின் நாணம் ஆகியவை குடிமை
 2. இவற்றுடன் நன்மை பயக்கும் வாய்மையையே பேசவேண்டும்.
 3. புன்னகை, ஈகைக்குணம், இன்சொல் இகழாமை - வேண்டும்.
 4. பெருஞ் செல்வம் வருவதாயினும், இழுக்குதல் கூடாது.
 5. கொடை குறைந்தாலும் பிற குடிமைப் பண்புகளிலிருந்து விலகக் கூடாது.
 6. சபலத்தாலும் சால்பு இல்லாதன செய்யக் கூடாது.
 7. செய்தால், அக் குற்றம், எல்லாருக்கும் தெரிந்துவிடும்.
 8. செய்தால், அவன் வேறு தந்தைக்குப் பிறந்தவனோ என ஐயுற நேரும்.
 9. குலப் பெருமையைக் காட்டுவது வாயிலிருந்து வரும் சொற்களே.
 10. பணிவும் குலப் பெருமையைக் காட்டும்.

97 மானம் (பெருமைக்கு வரும் இழுக்கு)


 1. புகழ் குறையாமல் நடந்துகொள்ளுதல் மானம்
 2. இது சீர் என்றும், பேராண்மை என்றும் போற்றப்படும்.
 3. சிறுமைப் படும்போது செம்மாப்பு வேண்டும்.
 4. மானம் கெட்டவர் தலையிலிருந்து விழுந்த மயிர் போன்றவர்.
 5. குன்று போல் உயர்ந்திருப்பவருக்கும் இதே நிலைதான்.
 6. தன்னை இகழ்பவரைப் பின்தொடர்ந்து பிழைப்பதும் ஒரு பிழைப்பா?
 7. இப்படிப் பிழைப்பதை விடக் கெட்டொழிதல் மேல்.
 8. பெருமை குன்றி வாழ்வது ஒரு பிழைப்பா?
 9. மயிரை இழந்தால் வாழாத கவரிமா போல, மானம் இழந்தால் உயிரை விட்டுவிட வேண்டும்.
 10. இப்படி வாழ்ந்தால், உலகம் அவரைப் போற்றும்.

98 பெருமை


 1. புகழ்தான் பெருமை.
 2. செயலால் இது வரும்.
 3. பதவியால் இது வராது.
 4. பெண் கற்பைக் காப்பாற்றிக் கொள்வது போல, பெருமையையும் அவன்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
 5. அரிய செயலைச் செய்தால் பெருமை வரும்.
 6. சிறியார் பெரியாரை மதிப்பதில்லை.
 7. சீர்மை இல்லாதவனுக்குச் சிறப்பு வாய்த்தால் வரம்பைக் கடந்து நடந்து கொள்வான்.
 8. பெருமை பணியும் பண்பினைக் கொண்டது.
 9. பெருமிதம் கொள்ளாதது.
 10. பிறர் குறைகளை மறைப்பது பெருமை.

99 சான்றாண்மை


 1. நல்லன எல்லாம் செய்தல் கடமை 
 2. அது குணநலம் 
 3. அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து தூண்கள் சால்பினைத் தாங்கி நிற்கின்றன 
 4. பிறர் தீமையைச் சொல்லாதது சால்பு 
 5. அது பணிவால் பகையை வெல்லும் 
 6. தோல்வியை ஒப்புக்கொள்வதே சால்பு 
 7. துன்பம் செய்தவர்க்கும் இன்பம் தரவேண்டும் 
 8. சால்பு உடையவர் வறுமையை இளிவாக எண்ண மாட்டார்கள் 
 9. உலகம் மாறினாலும் சான்றோர் சால்பு குன்றார் 
 10. குன்றினால் உலகம் அழிந்துவிடும் 


100 பண்புடைமை 1. எளிமையே பண்புடைமை 
 2. அன்புடைமை பண்பின் வழக்கம் 
 3. அது நற்பண்புகளால் பிறரோடு ஒத்துப்போகும் 
 4. பண்புடைமையை உலகம் பாராட்டும் 
 5. பகைவரிடமுள்ள பண்பையும் அது பாராட்டும் 
 6. பண்புடையார் வாழ்வதால்தான் உலக வாழ்க்கை நடைபெறுகிறது 
 7. பண்பில்லா அறிவாளர் மரம் போன்றவர் 
 8. நன்மை தராத செயல் செய்வாரிடமும் பண்பாக நடந்துகொள்ள வேண்டும் 
 9. மகிழ்ந்து, மகிழ்ச்சி உண்டாக்கி வாழ்வதே பண்புடைமை 
 10. கறந்த பாலானது, வைத்திருக்கும் பானையின் தீமையால் திரிந்து போவது போல் பண்பு இல்லாதவன் செல்வம் திரிந்து போகும் 

101 நன்றியில் செல்வம்


 1. செத்தவனுக்கு அவன் சேர்த்து வைத்த பொருளால் என்ன நன்மை 
 2. எல்லாம் பொருளால் ஆகும் என்றால் அது பிறப்புதான் 
 3. பொருளைக் கொடுக்காமல் சேர்த்து வைப்பவர் நிலத்துக்குப் பாரம் 
 4. கஞ்சனுக்கு மிச்சம் என்ன இருக்கும் 
 5. பிறர் கொடுப்பதையும் தடுப்பவன் உண்ண, உடுக்க இல்லாமல் சுற்றத்தோடு கெடுவான் 
 6. கஞ்சன் செல்வத்தால் எல்லாருக்கும் துன்பந்தான் 
 7. பெண்ணின் அழகு துய்க்கப்படாமல் மூப்படைவது போன்று அவன் செல்வம் அழியும் 
 8. ஊர் நடுவில் பழுத்திருக்கும் நச்சுமரம் போன்றது அவன் செல்வம். 
 9. அவன் செல்வத்தைப் பிறர் துய்ப்பர் 
 10. நல்லவரிடம் செல்வம் இல்லாமை நீர் இல்லாத மேகம் போன்றது 

102 நாணுடைமை


 1. செய்யத் தகாத செயல் செய்ய நாணுதல் ஆண் நாணம் 
 2. இந்த நாணந்தான் மாந்தர்க்கு உள்ள சிறப்பு 
 3. உயிர் உடம்பைப் பற்றி நிற்பது போல, நாணம் சால்பைப் பற்றி நிற்கும். 
 4. இந்த நாணம் ஒருவனுக்கு அணிகலன். 
 5. தான் செய்யும் பழிக்கும் நாண வேண்டும் 
 6. உயர்ந்தவர் நாணத்தைத் தமக்கு வேலியாக அமைத்துக்கொள்வர் 
 7. நாண நேர்ந்தால் உயிரை விடுவது மேல் 
 8. நாணாதவனை அறம் நாணும் 
 9. நாணவில்லை என்றால் அவன் நலமெல்லாம் கெடும் 
 10. நாணம் இல்லாதவன் கயிற்றிலாடும் மரப்பொம்மை போன்றவன் 

103 குடிசெயல் வகை 1. கடமையைச் செய்வது பீடு
 2. இடையறா உழைப்பு, அகன்ற அறிவு கொண்டு செயலாற்றுக.
 3. முயன்றால் ஊழும் துணைவரும் 
 4. முயன்றால் முடியும் 
 5. உலகமே சுற்றமாகச் சூழ்தல் இதன் பயன் 
 6. குடும்பத்தை ஆளுமை உடையதாக ஆக்கிக்கொள் 
 7. குடும்பத்தைத் தாங்கிக்கொள் 
 8. பருவத்தை எதிர்பார்த்து, காலம் தாழ்த்தாதே 
 9. துன்பம் வரத்தான் செய்யும் 
 10. ஆலம் விழுது போல் தாங்கு 

104 உழவு  1. வேளாண்மையின் பின் உலகம் வருகிறது
 2. உழுவார் உலகைத் தாங்கும் ஆணிவேர் 
 3. உழவரைத் தொழுதுகொண்டு மற்றவர்கள் பின் செல்வர் 
 4. உழவின் விளைச்சல் நிழலில், அரசன் குடைநிழல் 
 5. உழவர் ஏற்பதில்லை. ஈவார் 
 6. உழவர் உதவி இல்லாமல் துறவியும் நிலைகொள்ள முடியாது 
 7. உழுத மண்ணை நன்றாகக் காயவிடு 
 8. எரு இடு. களை கட்டு. நீர் பாய்ச்சு. வேலியிட்டுக் காப்பாற்று 
 9. நாள்தோறும் அதனோடு இரு 
 10. நிலம் "நான் இருக்கிறேன்" என்று இல்லாதவனை அழைக்கும் 


105 நல்குரவு  1. இல்லாமையைக் காட்டிலும் கொடியது இல்லை 
 2. இல்லாமை என்னும் பாவி எக்காலத்திலும் வறுத்தும் 
 3. முன்னோர் விட்டதையும், சுற்றம் தருவதையும் கெடுக்கும் 
 4. உயர் குடியில் பிறந்திருந்தாலும் சோர்வை உண்டாக்கும் 
 5. எல்லாத் துன்பங்களும் இதற்குள் வரும் 
 6. நல்லது சொன்னாலும் நல்கூர்ந்தார் சொல் எடுபடாது 
 7. இல்லாதவனைத் தாயும் பிறன் போலப் பார்ப்பபாள் 
 8. நேற்று போல் இன்றும் வருமோ என்று இல்லாதவன் நடுங்குவான் 
 9. அனல் காற்றில் கூட வாழலாம். வறுமையில் வாழ முடியாது 
 10. இல்லாதவன் வாழ்க்கை, சோற்றுக்குக் கேடு.  


106 இரவு (கேட்டு வாங்கலின் மேன்மை) 1. கொடுப்பவரிடம் கேட்டல் பழி அன்று. கொடுக்காமல் மறத்தல் பழி 
 2. கேட்டது கிடைத்துவிட்டால் இன்பம் 
 3. கொடுப்பவரிடம் கேட்பதிலும் ஓர் அழகு இருக்கிறது 
 4. மறைக்காமல் தருபவரிடம் இரத்தலும் ஈவது போன்று நன்று
 5. கொடுப்பவர் இருப்பதால்தான் கேட்பவர் இருக்கிறார் 
 6. மறைக்காமல் கொடுப்பவரைக் கண்டால் வறுமை தீரும் 
 7. கொடுப்பவரைக் கண்டால் இரப்பவர் உள்ளம் மகிழும் 
 8. கேட்டுப் பெறுபவர் இல்லை என்றால் உலகுக்கு உயிரோட்டம் இல்லை
 9. கேட்பவர் இல்லாவிட்டால் கொடுப்பவர் இருக்க முடியுமா 
 10. கடவுளே! வறுமை என்பதே இல்லாமல் செய் 


107 இரவச்சம் 1. கொடுப்பவரிடமும் கேட்காமல் இருத்தல் கோடி பெருமானம் உடையது  
 2. பிச்சை எடுத்து வாழ் என்று யாரும் படைக்கப்படவில்லை
 3. வறுமையைக் காட்டிலும் பிச்சை எடுத்தல் கொடியது 
 4. வறுமையிலும் பிறரைக் கேட்காத சால்பு உலகம் கொள்ளாப் பெரிது 
 5. தன் உழைப்பால் வந்தது புல்லுணவு என்றாலும்  அதுதான் இனிது 
 6. பசுவுக்கு நீர் வேண்டும் என்று கேட்டாலும் இழிவுதான் 
 7. கேட்டால் மறைப்பர். அதனால் எதையும் கேட்காதீர் 
 8. இரவு என்னும் தோணி, கரவு என்னும் பாறையில் மோதி உடையும் 
 9. இரக்கும்போது கரத்தலை நினைத்தால் உள்ளம் வெடித்துவிடும் 
 10. கரப்பவர் பேசும்போது அவர் உயிர் எங்கே மறைந்திருக்குமோ  

108 கயமை 1. கயவர் மக்கள் போல் தோன்றும் ஒப்பற்ற போலிகள் 
 2. அவர் நெஞ்சில் துன்பம் என்பதே இல்லை 
 3. தேவர் போல், ஆனால், விரும்பும் தீயதைச் செய்வர் 
 4. இழிந்தோரிடம் அவரினும் இழிவாக நடந்துகொள்வர் 
 5. அவர்களின் ஆசாரம் (ஒழுக்கம்) அச்சந்தான் 
 6. மறைக்க வேண்டியதைத் தூற்றுவர் 
 7. பல்லை உடைப்பவர்களுக்கு மட்டும் கொடுப்பர் 
 8. கரும்பு போல் மென்றால்தான் அவர்கள் பயன்படுவர் 
 9. நன்கு உண்பவர், உடுப்பவர் மேல் குறை சொல்வார்கள் 
 10. தன்னை விற்பதற்கே கயவர் பயன்படுவர்  


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி