Saturday, 31 August 2019

புகழ்ச்சோழ நாயனார் \ Pugal-Cholar


பெரியபுராணம் \ புகழ்ச்சோழ நாயனார் \ Pugal-Cholar \ 3982

சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 8.02. புகழ்ச் சோழ நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்பெரியபுராணம் \ புகழ்ச்சோழ நாயனார் \ Pugal-Cholar \ 3982


வெட்டிய சிவனடியார் தலை
 • அதிகன் நாட்டுச் செல்வம், மங்கையர், குதிரை, யானைகளைக் கைப்பற்றிக் கொண்டான். 3971 
 • வெற்றியோடு அமைச்சர்கள் கருவூர் திரும்பினர். 3972
 • கவர்ந்துகொண்டு வந்தவற்றைச் சோழன் முன் வைத்தனர். 3973 
 • கொண்டுவந்தனவற்றில் ஒரு சடைமுனியின் தலையைச் சோழர் கண்டார். 3974   
 • மனம் கலங்கினார். தன் கைகளைத் தலைமேல் வைத்து வணங்கினார். 3975 
 • “திருநீற்றின் நெறியைக் காப்பாற்றி நான் அரசோச்சுவது சால அழகு [?]” என்று அயர்ந்தார். 3976 
 • சிவனடியாரைக் கொன்ற பழியைத் தாங்கிக்கொண்டிருக்கிறேனே என்றார். 3977    
 • தன் மகனுக்கு முடியைச் சூட்டினார். 3978
 • திருநீறு பூசிக்கொண்டு சிவனடியார் ஆனார். 3979    
 • சிவனடியார் தலையை ஒரு மணித்தட்டில் ஏந்திக்கொண்டு, தீயை வலம்வந்தார். எரியும் அந்தத் தீயில் இறங்கினார். 3980   
 • வானில் சிவன் காட்சி அளித்தார். 3981  
 • இனி நரசிங்க முனையர் திறம் உரைப்பாம். 3982

பாடல்

3971 
அதிகன் படை போர் பொருதற்றதலை
பொதியின் குவை எண்ணில போயின பின்
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா
எதிரும் கரி பற்றினர் எண்ணிலரே 8.2.30

3972 
அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம்
இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர்
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்
தரணித் தலைவன் கழல் சார் உறவே    8.2.31

3973 
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்
முன் வந்த கரும் தலை மொய் குவைதான்
மின்னும் சுடர் மா முடிவேல் வளவன்
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர்    8.2.32

3974 
மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்
எண்ணில் பெருகும் தலை யாவையினும்
நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் அடுக்
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே  8.2.33

3975 
கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த
திண்டிறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளி
புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார்   8.2.34

3976 
முரசுடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி
உரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல்
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்துயான்
அரசு அளித்தபடி சால அழகி! தென அழிந்து அயர்வார்     8.2.35

3977 
தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார்
நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவரானார்
சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும்
பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார்   8.2.36

3978 
என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார்
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து
மன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்ப
வென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார் 8.2.37

3979 
அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அதற்றிக்
கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் கருத்து உடையார்
செம்மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப்
பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார்   8.2.38

3980 
கண்ட சடைச் சிரத்தினையோர் கனகமணி கலத்து ஏந்தி
கொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார்
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி
மண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்து அருளி உள் புக்கார்     8.2.39

3981 
புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழிய
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின்
அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார்    8.2.40

3982 
முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
நரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம் 8.2.41

திருச்சிற்றம்பலம்
சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 8.02. புகழ்ச் சோழ நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்

பெரியபுராணம் \ புகழ்ச்சோழ நாயனார் \ Pugal-Cholar \ 3970போர்க்களம்
 • யானையோடு யானை, குதிரயோடு குதிரை, வயவரோடு வயவர் – தாக்கினர். 3961 
 • வில்லாளர் வில்லாளரைத் தாக்கினர். 3962
 • குதிரை வீரர்கள் சூறைக்காற்று போல் சுழன்றனர். 3963    
 • உண்ட சோற்றுக்காகப் போரிட்டு உயிர் துறந்தனர். 3964   
 • குருதி ஆறு ஓடிற்று. பிணங்கள் மலை போல் குவிந்தன. 3965   
 • காக்கை, பருந்து, கழுகுகளுக்கு நல்ல உணவு. 3966  
 • வில், கதை, சக்கரம், வாள், சுரிகை, சத்தி, கழுக்கடை வேல் (ஈட்டி), முத்தலைக் கப்பணம், - கருவிகள் முரிந்தன. 3967   
 • அதிகன் படை மாள, சேரன் படை முற்றியது. 3968  
 • இது நொச்சிப்போர். 3969
 • நூழில் போரில் அதிகன் காட்டுக்கு ஓடிவிட்டான் 3970

பாடல்

3961 
கயமொடு கயம் எதிர் குத்தின
அயமுடன் அயமுனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர்
வியனமர் வியல் இடம் மிக்கதே   8.2.20

3962 
மலையொடு மலைகள் மலைந்தென
அலை மத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசைத் தெரு
கொலை மதக் கரிகொலை உற்றவே     8.2.21

3963 
சூறை மாருதம் ஒத்து எதிர்
ஏறு பாய் பரி வித்தகர்
வேறு வேறு தலைப் பெய்து
சீறி ஆவி செகுத்தனர்  8.2.22

3964 
மண்டு போரின் மலைப்பவர்
துண்டம் ஆயிட உற்று எதிர்
கண்டர் ஆவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே     8.2.23

3965 
வீடினார் உடலில் பொழி
நீடுவார் குருதிப் புனல்
ஓடும் யாறென ஒத்தது
கோடு போல்வ பிணக் குவை 8.2.24

3966 
வானிலாவு கருங்கொடி
மேனிலாவு பருந்து இனம்
ஏனை நீள் கழுகின் குலம்
ஆன ஊணொடு எழுந்தவே   8.2.25

3967 
வரிவில் கதை சக்கரம் உற்கரம் வாள்
சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல்
எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல்
முரி உற்றன உற்றன மொய்க் களமே    8.2.26

3968 
வடிவேல் அதிகன் படைமாள வரைக்
கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக்
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர்
முடி நேரியனார் படை முற்றியதே 8.2.27

3969 
முற்றும் பொரு சேனை முனை தலையில்
கற்றிண் புரிசைப் பதி கட்டு அழியப்
பற்றும் துறை நொச்சிப் பரிந்து உடையச்
சுற்றும் படை வீரர் துணித்தனரே  8.2.28

3970 
மாறுற்ற விறல் படை வாள் அதிகன்
நூறுற்ற பெரும்படை நூழில் படப்
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு
ஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே     8.2.29

சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 8.02. புகழ்ச் சோழ நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்

பெரியபுராணம் \ புகழ்ச்சோழ நாயனார் \ Pugal-Cholar \ 3960


அதிகனைத் தாக்கிப் போர்
 • சிவனடியார்களைச் சிவன் கோயில்களுக்கு அழைத்துப் பேணினார். 3951
 • கொங்கரிடம் திறை பெற்று வரக் கருவூர் வந்தார். 3952    
 • ஆனிலையப்பரை வணங்கினார். 3953    
 • அரச மண்டபத்தில் தங்கியிருந்தார். மன்னர்கள் பொன்னைத் திறையாக நல்கினர். 3954    
 • பகையரசர் யாரேனும் உளரா என வினவினார். 3955 
 • சிவன் மாலைக்குக் கொண்டுவந்த மலர்களைச் சிதைத்த பட்டத்து யானையைச் சிவகாமியார் வெட்டி வீழ்த்தியபோது, தன் யானை செய்த குற்றத்துக்காகத் தன்னையும் வெட்டி வீழ்த்தும்படி வேண்டிய சேரர் கூறினார். திறை அளிக்காதவன் ஒருவன் உளன் என்றார். யார் அவன் என்று சோழர் வாளை உருவினார். 3956  3957 
 • அதிகன் என்று கூறினர். அவன் கோட்டையை அழிக்குமாறு சோழர் ஆணையிட்டார். 3958 
 • போர் மூண்டது. 3959  
 • சோழர் படை வஞ்சி மலரும், அதிகன் படை காஞ்சி மலரும் சூடிப் போரிட்டன. 3960    

பாடல்

3951 
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம்
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக்
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார் 8.2.10

3952 
அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்று இருந்து
கொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத்
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில்
மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றம் உடன் வந்து அணைந்தார்   8.2.11

3953 
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ்
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி
சிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆன்நிலைக் கோயில்
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார்  8.2.12

3954 
மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன்
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த
ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம்
நீளிடைவில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார் 8.2.13

3955 
திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளி
முறை புரியும் தனித் திகரி முறைநில்லா முரண் அரசர்
உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள்    8.2.14

3956 
சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம்
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும்
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என
வென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார்   8.2.15

3957 
விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்று இருந்து பார் அளிக்கும்
துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் முறைமை நெறி அமைச்சர்
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார் 8.2.16

3958 
ஆங்கவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்தாக
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப
ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ படை எழுந்த
பாங்கரணம் துகளாகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார் 8.2.17

3959 
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து
கடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார்
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக
மிடல் உடை நால் கருவியுற வெஞ்சமரம் மிக விளைத்தார் 8.2.18

3960 
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற
அளவில் அரண் அக்குறும்பில் அதிகர் கோன் அடல் படையும்
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக்
கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால் <  8.2.19

சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 8.02. புகழ்ச் சோழ நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்

பெரியபுராணம் \ புகழ்ச்சோழ நாயனார் \ Pugal-Cholar \ 3950


உறையூர்
 • தமிழ்ச்சோழர் வளநாட்டில் உள்ள மூதூர் உறையூர். 3942  
 • இது மாளிகைகள் நிறைந்த மறுகுகளைக் கொண்ட ஊர். 3943    
 • இது வரம்பில்லா வளப்பொருள்களைக் கொண்டது. 3944   
 • தெருக்களில் படையானைகள். 3945
 • நுரை தள்ளும் படைக்குதிரைகள். 3946    
 • யானை, குதிரைகள் கடல் போல் முழங்கும் 3947    
 • தேரோடும் தெருக்களில் கோபுரங்கள். 3948
 • இப்படிப்பட்ட ஊரில் இருந்துகொண்டு அனபாயன் குலத்தில் தோன்றிய புகழ்ச்சோழர் ஆண்டுவந்தார். 3949   
 • மன்னர் தொழில் கேட்ப, சைவம் தழைக்க, செங்கோலோச்சி வந்தார். 3950

பாடல்

3942 
குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதி
நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்
உலகில் வளர் அணிக்கெல்லாம் உள்ளும் உறையூராம் உறையூர் 8.2.1

3943 
அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும்
இள வெயிலின் சுடர்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க்
கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர் ஆற்றுக் கொடு கெழுவும்
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம்  8.2.2

3944 
நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய்
மாக நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும்
ஆகரம் ஒத்து அளவில் ஆவண வீதிகள் எல்லாம்    8.2.3

3945 
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும்
போர் முக வெம் கறை அடியும் புடையினம் என்று அடையவரும்
சோர் மழையின் விடு மதத்துச் சுடரு நெடுமின் ஓடைக்
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைகள் எல்லாம்     8.2.4

3946 
படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவி
நெடு நிரை முன் புல்லுண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்ப
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால்
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம்  8.2.5

3947 
துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும்
விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோத
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பரூர்
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலரக் கிடங்கு    8.2.6

3948 
கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர்ச் சோலை
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண்
பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர் அரிதால்   8.2.7

3949 
அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்
மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும்
சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழி முதல்வோர்
பொன்னி நதிப் புரவலனார் புகழ் சோழர் எனப் பொலிவார்  8.2.8

3950 
ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்து
பருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப
திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்ப
அருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில்   8.2.9

சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 8.02. புகழ்ச் சோழ நாயனார் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி