Wednesday, 24 July 2019

பெரியபுராணம்-திருநாவுக்கரசர்-Tirunavukkarasar1670


அப்பர் பாண்டிய நாடு செல்ல விரும்புதல்
  • நாவுக்கரசர் யாருக்கும் தெரியாமல் ஞானசம்பந்தர் ஏறிவந்த பல்லக்கைச் சுமந்து இன்புற்றார். \ 1661 \ 5.1.395
  • “அப்பர் எங்கே போனார்” என்று ஞானசம்பந்தர் வினவினார். “உம் அடிகள் தாங்கி வரும் பேறு பெற்றேன்” என்றார், நாவுக்கரசர். \ 1662 \ 5.1.396
  • அது கேட்ட பிள்ளையார் பதைபதைத்து இறங்கி அப்பரைத் தொழுதார். பிள்ளையார் தொழாமுன் அப்பர் தொழுதார். தொண்டர்கள் எல்லாரும் இருவரையும் தொழுதனர். \ 1663 \ 5.1.397
  • இருவரும் பூந்துருத்தி இறைவனை வழிபட்டனர். \ 1664 \ 5.1.398
  • அமணரை வாதில் வென்றது, பாண்டிய நாட்டில் திருநீற்றின் பெருமையை நிலைநாட்டியது – பற்றி பிள்ளையார் சொல்லக் கேட்டு அப்பர் மகிழ்ந்தார். \ 1665 \ 5.1.399
  • பாண்டிமா தேவியின் பரிவும், குலச்சிறையார் பெருமையும் பிள்ளையார் சொல்லக் கேட்டு அப்பர் அவர்களைக் காண விரும்பினார். \ 1666 \ 5.1.400

பாடல்
1661 
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்து அருளி வரும் மணி முத்தின்
சந்த மணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன் தாங்கிச்
சிந்தை களிப்புற வருவார் தமை யாரும் தெளிந்து இலரால்    5.1.395

1662 
திரு ஞான மாமுனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்கு
அருகுகாக எழுந்து அருளி எங்கு உற்றார் அப்பர் என
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்
பெரு வாழ்வு வந்து எய்தப் பெற்று இங்கு உற்றேன் என்றார்    5.1.396

1663 
பிள்ளையார் அது கேளாப் பெருகு விரைவு உடன் இழிந்தே
உள்ள மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்கத்
துள்ளு மான் மறிக் கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்    5.1.397

1664 
கழுமலக் கோன் திருநாவுக்கு அரசருடன் கலந்து அருளிச்
செழு மதியம் தவழ் சோலைப் பூந்துருத்தித் திருப்பதியின்
மழுவினொடு மான் ஏந்தும் திருக்கரத்தார் மலர்த் தாள்கள்
தொழுது உருகி இன்புற்றுத் துதி செய்து அங்கு உடன் இருந்தார்     5.1.398

1665 
வல் அமணர் தமை வாதில் வென்றதுவும் வழுதி பால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண்பொருநைப் புனல் நாட்டில்
எல்லை இலாத் திரு நீறு வளர்த்து அதுவும் இருந் தவத்தோர்
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர்  5.1.399

1666 
பண்புடைய பாண்டி மா தேவியார் தம் பரிவும்
நண்புடைய குலச்சிறையார் பெருமையும் ஞானத் தலைவர்
எண் பெருக உரைத்து அருள எல்லையில் சீர் வாகீசர்
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்   5.1.400
  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி