Wednesday, 24 July 2019

கயிலை காட்சி-Tirunavukkarasar 5.1.384


 • திருநாவுக்கரசர் கண் முன் கயிலைக் கோயில் காட்சி தோன்றிற்று. மால் அயன் இந்திரன் முதலானோர் போற்றும் ஒலி கேட்டது. \ 1641 \ 5.1.375
 • தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர் மாதவர் முனிவர்கள் நிறைந்திருந்தனர். அரம்பையர் முழவு இசைத்துக்கொண்டு அடிப் பாடினர். \  1642 \ 5.1.376
 • கங்கை ஆறு ஓடிற்று, கணநாதர்கள், பூத வேதாளங்கள் “போற்றி” என்று இசைத்தன்னர். \ 1643 \ 5.1.377
 • வெள்ளிமலை இரண்டு என்பது போல் தோன்றிற்று. திருமால் சிவன் ஏறும் விடையாக நின்றார். நந்தி நடுவில் ஆடினார். \ 1644 \     5.1.378
 • மரகதக் கொடி பவள மலையில் படர்ந்திருப்பது போல, மலைமகளுடன் சிவன் நிற்பதைக் கண்டார். \ 1645 \ 5.1.379
 • கண்டு ஆடினார் பாடினார் அழுதார். \ 1646 \ 5.1.380
 • தாண்டகங்கள் பாடினார். \ 1647 \ 5.1.381
 • நாவுக்கரசு திருவையாற்றில் இருப்பதை உணருமாறு கயிலைக் காட்சிகளைத் தொலைவில் தோன்றும்படிச் செய்தார். \ 1648 \ 5.1.382
 • கண்டது சிவன் அருள் எஎன உணர்ந்தார். \ 1649 \ 5.1.383
 • மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி” என்று தொடங்கிப் பாடினார். \ 1650 \ 5.1.384

பாடல்

1641 
காணும் அப் பெருங்கோயிலும் கயிலை மால் வரையாய்ப்
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெருந்தேவர்
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்கத்
தாணு மா மறை யாவையும் தனித் தனி முழங்க  5.1.375

1642 
தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள் புடையெலாம் மிடையக்
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
தாவில் ஏழ் கடல் முழக்கினும் பெருகொலி தழைப்ப     5.1.376

1643 
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும் கணநாதர்கள் இறைஞ்சப்
பொங்கு யங்களால் பூத வேதாளங்கள் போற்ற    5.1.377

1644 
அந்தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்
சிந்தை செய்திடச் செங்கண் மால் விடை எதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக 5.1.378

1645 
வெள்ளி வெற்பின் மேல் மரகதக் கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளிப் பவள வெற்பு என இடப் பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்று இருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார் 5.1.379

1646 
கண்ட ஆனந்தக் கடலினைக் கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்  5.1.380

1647 
முன்பு கண்டு கொண்டு அருளினார் அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு இலா ஆர்வம் முன் பொங்கப்
பொன் பிறங்கிய சடையாரைப் போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லையில் தவத்தோர் 5.1.381

1648 
ஆய று மற்று அவர் மனம் களிப்பு றக் கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்று இருந்து அருளித்
தூய தொண்டரும் தொழுது எதிர் நிற்க அக் கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்தமை திகழ 5.1.382

1649 
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடித் தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்குச்
செய்ய வேணியர் அருள் இதுவோ எனத் தெளிந்து
வையம் உய்ந்திட, கண்டமை பாடுவார் மகிழ்ந்து   5.1.383

1650 
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோதறு தண்தமிழ்ச் சொல்லால் குலவு திருப் பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணை ஒடும் கூடக் கண்டேன் எனப் பாடி நின்றார்     5.1.384
 • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி