Monday, 22 July 2019

அமணர் சிவ விமானம் மறைத்தது -Tirunavukkarasar 5.1.300


  • சிவன் கோயில் விமானம் அமணர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்று நாவுக்கரசர் கண்டார். \ 1561 \   5.1.295
  • “உன்னை வணங்கி அல்லது போகமாட்டேன்” என்று சொல்லி உண்ணாமல் பாடு கிடந்தார். சிவன் மன்னன் கனவில் தோன்றி நிலைமையை உணர்த்தினார். \ 1562 \   5.1.296
  • தான் மறைத்து வைம்மப்பட்டிருக்கும் இடத்தை மன்னனுக்கு அடையாளமிட்டுக் கனவில் காட்டினார். மன்னனும் சிவனை வணங்கினான். \ 1563 \ 5.1.297
  • அரசன் அமைச்சர்களுக்கு அறிவித்து, குறி வழிச் சென்று, விமானத்தை வெளிப்படுத்தி, நாவுக்கரசை வணங்கி, மறைத்த அமணர்களைக் கொன்றான். \ 1564  \ 5.1.298
  • யானைக் காலால் மிதிக்கச் செய்து 1000 அமணர் கொல்லப்பட்டனர். விமானம் புதுப்பிக்கப் பட்டது. கோயிலுக்குப் பூசைகள் நடைபெற நிவந்தங்கள் வழங்கினான். \ 1565 \ 5.1.299
  • தலையில் மயிரை பறித்துக் கொள்பவர் அமணர். அவர்கள் மறைத்தாலும் உன்னை மறைக்க முடியுமா – என்று திருக்குறுந்தொகை பாடினார். \ 1566 \ 5.1.300

இங்கு 4 பாடல்கள் விடுபட்டுள்ளன
எதனால் என்பது விளங்கவில்லை

பாடல்
1561 
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்திக்
கந்தம் மலரும் கடிக் கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார்   5.1.295

1562 
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன் என்று
எண்ணம் முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ணமாக மன்னனுக்குக் கனவில் அருளிச் செய்கின்றார்     5.1.296

1563 
அறிவில் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாளக்
குறிகள் அறியச் செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமை அழித்து நீக்கிப் போக்கு என்று அருள் புரிய
செறிவில் அறிவுற்று எழுந்து அவனும் செங்கை தலைமேல் குவித்து இறைஞ்சி 5.1.297

1564 
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பிக் கூடக் கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சணையைக் குறித்து வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கித் தொக்க அமணர் தூர் அறுத்தான்  5.1.298

1565 
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின்
ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்  5.1.299

1566 
தலையின் மயிரைப் பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை இல் வாய்மைக் குறும்தொகைகள் விளம்பிப் புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூலப் படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்   5.1.300
  • சேக்கிழார் தமிழ் \ தமிழ் நாட்டுச் சைவம் - பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 5.01. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் - 12 ஆம் நூற்றாண்டு நூல்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி